குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 28, 2012

தர்மம் பேசுகிறது - ஒன்று



அம்புஜம் என்றொரு பெண்மணி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு ஒரு பெண், சற்றே பெருத்த சுமாரான அழகுடைய பெண். அம்புஜத்தின் கணவர் இருக்கும் இடம் தெரியாது. தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடினார்கள். அவர் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர். நல்ல குடும்பம். வெகு சுமாரான குடும்பத்தினைச் சேர்ந்த அம்புஜம் மகள் அப்பெரிய இடத்திற்கு மருமகளாய் சென்றார். வாழ்க்கை வெகு அழகாய்ச் சென்று கொண்டிருக்கிறது. அம்புஜமும், அவள் கணவனும் மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்புஜம் எங்குச் சென்றாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அம்புஜத்தின் கணவரோ பேசுவது என்றால் என்ன என்று கேட்பவர். அதிர்ந்த சத்தம் வராது. அந்தளவிற்கு மென்மையானவர். அம்புஜத்தினால் அவர்கள் உறவினர்கள் வீட்டில் ஒரு பிரச்சினையும் வராது. சென்ற தடம் கூட தெரியாமல் வீடு திரும்பும் வழக்கமுடையவர் அம்புஜம்.

இப்படியான அம்புஜத்தின் வாழ்விலே துன்பத்தின் சாயல் கொஞ்சம் கூட படியவில்லை. சாதாரண குடும்பத்தினைக் கட்டிக் காத்து, வேறு எவர்களின் கோபத்திற்கோ, வேறு எந்த வித பிரச்சினைக்கோ ஆளாகாமல் வாழ்ந்து வரும் அம்புஜம் எப்போதும் மகிழ்வாகத்தானே வாழணும்? அவர் அப்படித்தான் வாழ்கிறார்.

தர்மம் என்பது சத்தியம். சத்தியம் என்பது உண்மை. உண்மை என்பது நன்மை. நன்மை என்பது பிறருக்கு தீங்கு நினையாமை.

மகாபாரதத்திலே தண்ணீர் என்று கருதி தரையில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் பாஞ்சாலி. ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அரசவையிலே பலர் பார்க்க அவளை அவமானப்படுத்தினான் துரியோதனன். ஒரு சாதாரண கேவலச் சிரிப்பிற்கே கடவுள் இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்கின்றான் என்றால் பெரிய தவறுகளுக்கு கடவுள் எத்தனை பெரிய தண்டனைகளைக் கொடுப்பான்?

இப்படித்தான் ஒருவர் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தார். அவரின் கதை என்ன? ..... ( அடுத்த பகுதியில் )

Monday, November 26, 2012

இயல்பாய் இருங்களேன்

மனித சமூகம் ஈகோவினால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை எந்த வித முன் யோசனையின்றி தற்போதைய மனித குலம் முடிவெடுக்கிறது. பிறகு அவஸ்தைப் படுகின்றார்கள்.

சாலைகளில் பாருங்கள். வேடிக்கையாக இருக்கும். புதுச் சட்டை போட்டாலோ, ஹேர் ஸ்டைல், செல்போன், கார், பைக் வாங்கினால் என்னவோ உலகே அவர்களையே உற்று உற்றுப் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்து கொண்டுச் செல்வார்கள். அவரவருக்கு அவரவர் வேலை. நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களாவது இவர்களைப் பார்ப்பதாவது? இதாவது பரவாயில்லை.

ஒரு கோடி கொடுத்து கார் வாங்குபவன் எதற்கு வாங்குகிறான் என்று நினைக்கின்றீர்கள்? அவனைச் சுற்றி இருப்போர் அவனைப் பார்த்து பொறாமைப் பட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் அந்தக் காரை வாங்குகிறான். பிறர் தன்னை உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பான்மையான மனிதர்கள் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த் ஈகோவினால் தான் பிராண்டட் கம்பெனிக்காரர்கள் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் என்ன டிவி இருக்கிறது? எங்கள் வீட்டில் எல் ஈ டி டிவி இருக்கிறது என்று பெருமையடித்துக் கொள்வார்கள். அந்த எல் ஈ டி கொஞ்ச நாள் கழித்து குப்பையாகி வேறு ஒரு டிவி மார்க்கெட்டில் வந்து விடும். டிவி கம்பெனிக்காரர்கள் புதிய புதிய பொருட்களாய் விற்று சம்பாதிப்பார்கள். வாங்குபவர்களுக்கு காசும் போய்  எல்லாம் போய் விடும்.

நேற்றைய நீயா நானாவில் எதிர்கால சந்ததிகளுடன் பாக்கெட் மணி பற்றிப் பேசினார்கள். அதில் பேசிய எந்த ஒரு இளைஞனும், இளைஞியும் படிப்பைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நண்பர்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரிதாய் வேறு எதையும் சொல்லவில்லை.

எப்படிப்பட்ட இளைஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்த்த போது வேதனையாக இருக்கிறது.

நோக்கியா ஹெட் போன் வாங்கினால் அதைக் காதில் மாட்டிக் கொண்டு அலப்பறை செய்வது என்று பிறர் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இயல்பு மாறி விடுகின்றார்கள்.

இயல்பாய் இருந்தால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்?

பெரும்பான்மையான மக்கள் தனக்கென வாழாமல் பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காக வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கை முடிவில் வெற்று வாழ்க்கையைத்தான் தரும்.

பத்தாயிரம் ரூபாய் ஷூ போட்டால் தான் சமூகம் உங்களை மதிக்கும் என்று எவராவது நம்பினால் அதை விடக் கேனத்தனமானது எதுவும் இல்லை.

கீழே இருக்கும் இரண்டு படங்களில் உலகம் இன்றும் யாரை நினைவில் வைத்து வணங்கி வருகிறது என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நிதர்சனம் புரியும். பகவான் ரமணரிடம் ஒரு கோவணம் தான் இருக்கிறது. ஆனால் பாகவதரிடம்?

( ரமண மகரிஷி )


(தியாகராஜ பாகவதர்)


Wednesday, November 7, 2012

பாலத்தின் மீது வீடு கட்டாதே


“என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன். ஸ்திரீயானவள், சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்” - ஆதியாகமம் 3-12-13 பைபிள்




பாவம் செய்தோரே பரலோகப்பிதாவின் முன்னே மண்டியிட்டு பிரார்த்தியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் பலனாய் துன்ப உலகில் துயருரும் அனைவரையும் அவர் விடுவிப்பார். 

விடுதிகளின் அறைகளூடே தங்கிச் செல்லும் யாத்ரீகர்கள் போலே பிரசங்கங்களின் முடிவில் காசு மழை கொட்டும். கொட்டும். கொட்டும்.

பாவங்களை மன்னிப்பாரா பரிசுத்த ஆவியானவர்? சிலுவை பதில் சொல்கிறது. ஏனப்பா இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?

ஆதாம் - விவேகம், ஏவாள் - உணர்ச்சி. 

முதுகுத்தண்டை திருப்பி போட்டுப் பார்! 

மரத்தின் இலைகள் முதுகுத்தண்டின் பாதி வரை தொங்குகின்றது. கனியைப் பார். அதைப் புசிக்க விடாமல் செய்தது யார்? 

உணர்ச்சியின் பிடியிலே சிக்கிய ஏவாளா?

முள்ளம் தண்டினூடே ஓடும் ஆற்றல் அணுவை விட உச்சமானது. அக்கனியைப் புசித்தார்கள் புத்தரும் ஏசு நாதரும்.

ஏதன் தோட்டத்தின் வாயிலை அடைத்தது யார்? பாம்பு ! 

நெளியும் பாம்பின் பிடியிலே மனிதர்கள். பாம்பு தன் உடம்பால் சுற்றிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா உலகின் மாயையின் காலடியிலே கனியைப் பற்றிய புரிதல் இன்றி ஆப்பிளை வெட்டி வெட்டி முழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். கனி தொங்கிக் கொண்டே இருக்கிறது. தோட்டம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

அவன் காத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் எவரும் அவரிடம் எதுவும் கேட்பதும் இல்லை. அவரைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

பாலத்தின் மீது வீடு கட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். பாலம் என்பது கடக்கத்தானே ஒழிய தங்கி விடும் இடம் அல்ல.

- கோவை எம் தங்கவேல்