குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label RUDOS. Show all posts
Showing posts with label RUDOS. Show all posts

Saturday, January 11, 2025

ரூடோஸ் - நினைவில் நீங்காத பாசக்காரி

2025 ம் வருடம் முதல் பதிவு. வேறு பதிவு எழுதி விட்டு, தொடரலாமா என நினைத்தேன். ஆனால் நிதர்சனம் அதுவல்லவே. தினம் தோறும் ஒரு நாளை இழந்து கொண்டே தான் பயணிக்கிறோம் வெற்றியை நோக்கி?!  நாளை நம் நாளே என்பதெல்லாம் வெற்று வார்த்தை அல்லவா? ஒவ்வொரு நாளும் நம்மை விட்டுப் பிரியும் போது, இழப்பைத்தான் சந்திக்கிறோம்.

ஆகவே இனி...!

அவள் வீட்டுக்கு வந்த நாள் நினைவிலிருக்கிறது. 

ரித்திக் நந்தா கையில் ஒரு சிறு அழுக்கான குட்டியுடன் வீட்டு வாசலில் நின்றிருந்தான். 

”அப்பா..! கேட்டைத் திறந்தேன். வீட்டுக்குள் வந்தது. வளர்க்கலாம்பா...!”

இளம் பிராயத்தில் ஆவணம் கிராமத்தில் செவலையனும், கருப்பனும் என்னுடன் வளர்ந்தார்கள். செவலையனை பக்கத்து வீட்டு மல்லிகாக்கா (இந்தக்கா செத்துப் போச்சு) கருவாட்டில் வெங்காய வெடியை வைத்து - அவன் அதைக் கடித்த போது இடது வாய் கிழிந்து போய் பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தன. புழு வைத்து, என் கண் முன்னாலே செத்து போனான். கருப்பன் என்ன ஏதுவென்று தெரியாமல் செத்துக் கிடந்தான். நினைவிலாடியது. மறுத்தேன்.

“அப்பா...! ப்ளீஸ்” என்றான். பிள்ளைகள் கேட்டு எந்தத் தகப்பனால் மறுக்க முடியும்? வேண்டா வெறுப்பாய் தலையாட்டி வைத்தேன்.

கோதை மூன்று மாத குழந்தையான, தத்தி நடை போட்டு வந்த, அவளை நன்கு குளிப்பாட்டி, மறுநாள் கால் நடை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு வந்தாள். ஜோதி சுவாமியிடம் சொன்னேன். அவர் தான் அவளுக்கு “ரூடோஸ்” எனப் பெயரிட்டார். 

அவளின் கண்கள் மஞ்சள் வண்ணமாய் இருக்கும்.  அவளின் கண்களில் ஒரு சோகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். 

மறுநாள் கோதை ஐஸ்கிரீம் வாங்கி வந்தாள். வாசலோரம் நின்று கொண்டிருந்தவள் வீட்டுக்குள் வந்தாள். அவளுக்கு ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் கொடுத்து விட்டு, இனி மேல் வீட்டுக்குள்ளே வரக்கூடாது என்று சொன்னேன்.

உங்களால் நம்பவே முடியாது. அவளின் இறப்பு வரை வீட்டு வாசப்படியைத் தாண்டி உள்ளே வந்ததே கிடையாது. என் வார்த்தைக்கு அவள் கொடுத்த மரியாதை.

மனைவியும், பிள்ளைகளும் என்றேனும் ஒரு நாள் சொல் பேச்சு கேட்கமாட்டார்கள். அவள் கடைசி வரை அந்தச் சொல்லைக் காப்பாற்றி வந்தாள். அது அவளால் மட்டுமே முடியும். வேறு எதுவாலும் முடியவே முடியாது.

விடிகாலையில் கோதை எழுந்து, முகம் திருத்தி அடுக்களைக்கு வந்த உடன் ரூடோஸுக்கு குக்கரில் சோறு வேக வைப்பாள். 

அவளுக்கு தான் முதல் உணவு தயாரிப்பாள்.

கடந்த ஒரு மாதம் முன்பாக அவள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டாள். அன்றிலிருந்து எனக்கு உணவு இறங்கவில்லை. கோதை சோகத்தில் பீடித்து விட்டாள். எனக்குள் சொல்லொண்ணா வலியும் வேதனையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. எங்கே இருந்தாலும் அவள் நினைப்பு வர மனம் கனத்து விடும். 

விளாங்குறிச்சி வீட்டில் மாலை நான்கு மணி ஆனதும் கேட்டைப் பார்த்து உட்கார்ந்து விடுவாள். பிள்ளைகள் இருவரும் பள்ளியிலிருந்து வரும் நேரம் அது. அவர்களுக்காக காத்திருப்பாள். அவர்கள் வந்ததும் ஒரு ஆட்டம், துள்ளல். இருவருடனும் வாக்கிங்க் சென்று வருவாள். காருண்யா வீட்டில் நான்கு மணி ஆனால் போதும். வாசலுக்கும் வீட்டுக்குமாக ஓடிக் கொண்டிருப்பாள். வாசல்படியில் தலை வைத்து கல்லூரி நோக்கி பார்த்துக் கொண்டிருப்பாள். ரித்திக் வந்ததும் அவனுடன் வெளியில் ஒரு வாக்கிங்க் சென்று விட்டு வருவாள்.

அவள் தூய்மையானவள். ஒன்றுக்கு இரண்டுக்கு போகும் இடம் வெகு சுத்தமாக இருக்க வேண்டும். சாப்பிடும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும். நிதானமாகச் சாப்பிடுவாள்.

அடுக்களையில் அவளுக்கு என தனிப் பாத்திரத்தில் உணவு எடுக்கும் போது, எங்கனம் தெரியுமோ தெரியாது. குலைக்க ஆரம்பித்து விடுவாள். கோதை கேட்டுக்கு வெளியில் நின்று எவரோடும் பேசி விடக்கூடாது. அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

என்னுடன் எப்போது உரசிக் கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு. கைகளுக்குள் நுழைந்து, கைகால்களை நக்கி விட்டு, அவளைத் தடவிக் கொடுக்கச் சொல்வாள். 

புத்திசாலி அவள். இரண்டு துண்டு கேக் கொடுத்தால், இரண்டையும் எச்சில் செய்து வைத்து விட்டு, பிறகு நிதானமாக சாப்பிடுவாள். வேறு எவரும் தொட்டு விடக்கூடாது அல்லவா?

எங்கே சென்று வந்தாலும் அவளுக்கு உணவும், எலும்பும் வாங்கி வருவது எனது வாடிக்கை. எலும்பை நிதானமாகச் சாப்பிடுவாள்.

ஞாயிறு தோறும் ரித்திக்கும், நிவேதிதாவும் குளிப்பாட்டி விடுவார்கள். நடுங்கிக் கொண்டிருப்பாள். அவளுக்காக ஃபேன் போட்டேன். அவளுக்காக படுக்கை வாங்கி வந்து போட்டேன். பவுடர் மற்றும் இன்னபிற அயிட்டங்களை வாங்கி வந்து கொடுத்தேன். 

வீட்டின் இளவரசியாக எங்களுடன் வாழ்ந்து வந்தாள்.

அவளுக்காக மணி வந்தான். அவனுடன் அவள் விளையாடினாளே ஒழிய, அவனை அவளுடன் சேர்த்துக் கொள்ளவே இல்லை. பெரியவனாக வளர்ந்து விட்டான். அவனைச் சமாளிக்க முடியவில்லை. அவனை தெரிந்தவர் ஒருவர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஒன்றரை வருடம் முன்பு கிட்னி ஃபெயிலிராகி இறந்து போனான்.

ரூடோஸுக்கு குட்டி போட முடியவில்லை. கர்ப்பப் பையில் கோளாறு. சுமார் 25000 ரூபாய் செலவு செய்து ஆபரேசன் செய்து கர்ப்பப்பையை நீக்கினேன். தினம் தோறும் மருத்துவர் வீட்டுக்கு வந்து குளுகோஸ் போட்டு, மருந்திடுவார். பிள்ளைகள் என்னை அவளருகில் அணுக விடமாட்டார்கள். கோதை அவளை தன் பெண் பிள்ளை போல கவனித்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல வயிற்றுப் புண் ஆறியது. பழையபடி ஆனாள்.

அவள் முகம் வாடினால் போதும். எனக்கு சுத்தமாக ஆகாது. உடனடியாக மருத்துவர், மருந்து என ஆரம்பித்து விடுவேன். பிள்ளைகள் தான் கவனித்துக் கொண்டார்கள். 

அவளுக்கும் கோதைக்கும் ஒரு பிணைப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வாசல்படியில் உட்கார்ந்திருப்பாள். கோதை சமையலறையில் நடமாடிக் கொண்டிருப்பாள். கோதையின் கால் கொலுசின் ஒலிக்கேற்ப அவளின் முகமும், காதுகளும் நடனமாடும். பார்க்கப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். முன்னறைக்கு வந்தால் கோதையின் முகத்தினைப் பார்ப்பதும், அவள் சமையலறைக்குள் சென்றதும் உள்ளே பார்ப்பதும், கண்களுக்குத் தென்படவில்லை எனில் கோதையின் கால் கொலுசொலியைக் கேட்டு அதற்கேற்ப காதுகளும், கண்களும், தலையும் அசைந்து கொண்டிருக்கும். அவளின் கவனம் முழுவதும் கோதையின் மீதே இருக்கும்.

அந்த நிலையில், அவளைப் பார்க்கும் போதெல்லாம் நெக்குருகி விடும் எனக்கு.

பெற்றால் தான் பிள்ளையா என்ன?

ஒருமுறை எவனோ ஒரு கொலைகாரன் கேட்டின் அருகில் கோதையுடன் நின்று கொண்டிருக்கையில் கடிக்க வந்து விட்டான். கால்களால் கோதையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாளாம் ரூடோஸ். அடுத்த நொடி மருத்துவரிடம் காட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்தாள்.

ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. கோசாலையில் ரூடோஸைக் கொண்டு போய் விட்டு ஊருக்குச் சென்று விட்டோம். ஜோதி சுவாமியுடன் காஞ்சிமா நதியில் ஆனந்தமாக ஆனந்தக் குளியல் போட்டுக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது சுவாமியைப் பார்க்க வந்த ரமேஷ் என்ற பக்தருடன் சுவாமி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ரூடோஸைக் காட்டி ரமேஷிடம் சுவாமி ஏதோ சொல்லி இருக்கிறார். மனைவியிடமிருந்து தனித்து வாழ்ந்தவர், அன்றிலிருந்து மனைவியுடன் பேசி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பித்து விட்டார். ரூடோஸை அவர் எனது வழிகாட்டி என என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.

அவள் எங்கே சென்றாலும் அப்படித்தான். மனதைக் கொள்ளை கொள்ளும் முகம், பாவமெனத் தோன்ற வைக்கும் கண்கள், அழகான நடை, நீண்ட முகம் எனப் பார்ப்போரை பரவசப்படுத்தி விடுவாள்.

ஆற்றில் நீச்சல் அடிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அக்கா ராஜேஸ்வரி மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு. அள்ள அள்ளக் குறையாத அன்பை அவள் எல்லோருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருந்தாள். என் நண்பர் பாஸ்கர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் பிஸ்கட்டுடன் வந்து விடுவார். அவரையே பார்த்துக் கொண்டிருப்பாள். வீட்டுக்குள் வரும் போது பிஸ்கட் - போகும் போதும் பிஸ்கட் போட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் ரகளை. 

சமீபத்தில் பின்காலில் ஒரு கட்டி வந்து விட்டது. அதற்காக மருத்துவம் பார்த்தோம். முடிவில் அது கேன்சர் என்று ரிப்போர்ட் வந்து விட்டது. அக்கட்டியை நீக்க முடியாது எனச் சொல்லி விட்டார் மருத்துவர். அவள் இருக்கும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் என்றுச் சொல்லி விட்டார். டிசம்பர் 18ம் தேதியிலிருந்து அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து கொண்டாள்.



(ரிப்போர்ட்)

கட்டியிலிருந்து புண் சீழ் பிடித்து வெளிவர ஆரம்பித்தது. சுத்தமாக இருந்தவளின் உடல் அழுக ஆரம்பித்தது. தோல் உறிந்து விட்டது. கால்களில் அது பரவி புண்கள் அதிகரித்தன. உடலெங்கும் நாற்றமெடுக்க ஆரம்பித்தது. அவள் படும் துயரத்தை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பையன் ரித்திக் நந்தாவிடம் கேட்டேன், அவளைக் கருணைக் கொலை செய்து விடலாமா என.

”இல்லையப்பா, நான் பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி விட்டான். 

முதலில் பால், தயிர், சோறு ஆகியவற்றை நிறுத்தினாள். நான் ஏதாவது கொடுத்தால் சாப்பிடுவாள். இட்லி சாப்பிட்டாள். அதையும் நிறுத்தி விட்டாள். பின்னர் பிரட் - அதுவும் நின்றது. உணவு முற்றிலுமாக குறைந்து விட்டது. நடமாட்டமும் குறைந்து விட்டது. ஒரு நாள் வாசல்படியில் வந்து படுத்திருந்தாள். பின்னர் அவளின் படுக்கையிலேயே படுத்திருப்பாள். தினமும் தண்ணீர் மட்டுமே குடிப்பாள்.

பையன் முகத்தில் மாஸ்க்கும், கையுறையும் மாட்டிக் கொண்டு தினமும் காலை, மாலை என இரு நேரமும் அவளைச் சுத்தம் செய்தான். அவளின் மலஜலத்தையும் சுத்தம் செய்தான். நிவேதிதா கல்லூரியில் இருந்து வந்த போது சுத்தம் செய்து கொண்டிருந்தாள். 

கேன்சர் அவளின் உடலெங்கும் பரவியது.

சமையலறைக்குள் செல்லும் கோதையிடம் குக்கர் கேட்டிருக்கும் போல. தினமும் கண்ணீரோடு அவள் முகம் கண்டு வேதனையில் உழல ஆரம்பித்தேன்.

நான்கு மணிக்கு விழிக்கும் போதெல்லாம், தினமும் கோதையிடம் கேட்பேன். கதவைத் திறந்து பார்த்து விட்டு இருக்கிறாள் என்பாள். ஒரு நிம்மதி வரும். 

06.01.2025ம் தேதி - திங்கள் கிழமை இரவு 7 மணி இருக்கும். எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. திடீரென்று வியர்த்து ஊற்றியது. உடலெல்லாம் சிலீரிட்டது. அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனை ஐசியுவில் அட்மிட் செய்யப்பட்டேன். பிபி, சுகர், இசிஜி எல்லாம் நார்மல். நடு இரவு வீடு திரும்பினேன். 

ரூடோஸ் தலையைத் தூக்காமல் கண்களை மட்டும் அங்குமிங்குமாக அசைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மருத்துவமனை போகும் போது அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன். வீட்டுக்குத் திரும்பி வரும் போதும் அவளைப் பார்த்துக் கொண்டே வீடு திரும்பினேன்.

09.01.2025ம் தேதி - வியாழக்கிழமை - கோதையிடம் வழக்கம் போல இருக்கிறாளா என்று கேட்டேன். இருக்கிறாள் என்றாள் கோதை. ராஜேஸ்வரி அக்காவை ஆசிரமத்திற்கு கொண்டு விட்டு வந்த ரித்திக் ”அம்மா! அம்மா!” என அழைத்தான். 

”ரூடோஸ் செத்துப் போயிட்டாம்ம்மா...! “

காலை மணி மார்கழி மாதம் 7.50க்கு இயற்கையை நாடிச் சென்று விட்டாள். 

கோதை அழ ஆரம்பித்தாள். 

குடுகுடுவென ஓடிய கால்கள், கொலுசொலி கேட்டு அசையும் காதுகளும், கண்களும் மூடிக் கிடந்தன. வாய் திறந்து கிடந்தது. கடைசியாய் அவள் கழித்த சிறு நீர் ஈரம் காயவில்லை. அவளுக்காகவென போட்டிருந்த ஃபேன் நின்று போயிருந்தது.

அவளுக்கு திருநீறும், குங்குமமும் இட்டேன். கடைசியாய் அவளுக்கு கோடித் துணியைப் போர்த்தினேன். 

வழிந்து ஒடும் கண்ணீருடன் கோதையும் ரித்திக்கும் அவளை வெண் துணியால் மூடி காருக்குள் வைத்தனர். 

அவளின் வீட்டையும், அவளின் உயிரான என்னையும் விட்டு விட்டு சென்றாள். 

நான் வாசல்படியிலேயே உட்கார்ந்திருந்தேன். இனி அவள் திரும்பி வரப்போவதில்லை. இனி அவள் எக்காலத்தும் திரும்பி வரவே போவதில்லை. 

வீட்க்குள் வந்தேன். வெள்ளிங்கிரி சுவாமியிடம் சென்றேன். இதயம் வெடித்தது. என் அப்பா, அம்மா இறப்பின் போதும் அழாத நான் வெடித்து அழுதேன்.  சுவாமி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் எப்போதும் பெருமை மிக்கவளாய் இருந்தாள். அவள் கொடுத்து வைத்தவள்.

காஞ்சிமா நதிக்கரையில் துறவி ஜோதி சுவாமி அவளின் இறுதி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் தான் அவளுக்குப் பெயர் சூட்டியவர். ரித்திக்கும் சுவாமியும் அவளின் உடலை நதிக்கரையில் நல் அடக்கம் செய்தனர். 

மார்கழி மாதம் இறப்போர் சுவர்க்கம் செல்வர் என்பார்கள். ஏறு பொழுதான காலையில் இறந்தாள். ஒரு துறவியின் கையால், வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டாள். அவளுக்கு கிடைத்திருக்கும் இந்த பேரு வேறு எவருக்கேனும் கிடைக்காது. 

அவள் அப்படித்தான். 

அவளொரு இளவரசியாய் வாழ்ந்தாள். அவள் இறப்பும் வேறு எவருக்கும் கிடைத்திடா பேறு.

இதோ இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. மனம் கனத்துக் கொண்டிருக்கிறது.

இனி நான் எங்கே தூய்மையான அன்பைப் பெறுவேன்? யார் தருவார் எனக்கு? 

நான் நேசித்தவரெல்லாம் என்னை விட்டுச் சென்று விட - வெறும் கூட்டை வைத்துக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கையா? இந்த வெற்று வாழ்க்கையை வாழ்ந்தால் தான் என்ன? வாழாமல் போனால் தான் என்ன?

நான் பெறாமல் பெற்ற என் இளைய மகள் அவள். 

என்னைக் கண்ணீரில் தவிக்க வைத்து விட்டுச் சென்று விட்டாள். 

11.01.2025