குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வாழ்வில் சில தருணங்கள். Show all posts
Showing posts with label வாழ்வில் சில தருணங்கள். Show all posts

Monday, April 27, 2009

குடி !

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த இச்சம்பவம் ஒரு உண்மைச் சம்பவம். எனது நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். பிறந்த நாள் என்றால், தஞ்சாவூர் சென்று படம், ஹோட்டல், தண்ணீர் என்று கொண்டாடுவார்கள். வழக்கம் போல புது துணி உடுத்தி கம கமவென மணக்கும்படி வாசனை திரவியங்கள் பூசி நண்பர்கள் புடை சூழ ஒரு சேஞ்சுக்காக தஞ்சாவூர் செல்லாமல் அம்மாப்பேட்டைக்கு சென்றார்கள். நான் அவர்களோடு செல்லவில்லை.

நன்கு குடித்து விட்டு, சாப்பிட்டு விட்டு போதையில் பஸ் ஏறி இருக்கிறார்கள். பஸ்ஸின் பின் புறப் படிக்கட்டில் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன். ஏதோ ஒரு வளைவில் பஸ் வேகமெடுக்க, தடுமாறி பஸ்ஸின் படி வழியாக கீழே விழுந்து விட்டான். நண்பர்கள் பதறியடித்துக் கொண்டு பஸ்ஸை நிறுத்தி அவனைத் தூக்கி வந்து சீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
“எனக்கு ஒன்றுமில்லையடா” என்று சொல்லி சிரித்திருக்கிறான்.

சற்று நேரத்தில் அவனை அணைத்துப் பிடித்திருந்த மற்றொரு நண்பனின் தோளில் ஈரமாக உணர, என்னவென்று பார்த்திருக்கிறான். பின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடி சட்டையை நனைத்திருக்கிறது.

”ரத்தம்டா“ என்று மற்றொரு நண்பன் கூவ,

“ ஆ.. ரத்தமா” என்று பதறியபடி பின் தலையைத் தொட்டுப் பார்த்தபடி, ”அய்யோ” என்று அலறி இருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன்.

“டேய்... என்னை எப்படியாவது காப்பாற்றி விடுடா. வீட்டில என் அப்பாவும், அம்மாவும் எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்கடா, எப்படியாவது காப்பாற்றி விடுடா” என்று சொல்லியபடியே இவனது கையை இறுக்க பிடித்தவாறு மயங்கி போனான்.பஸ்ஸை வேகமாகச் செலுத்தி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.

ரத்தத்தையும் நிறுத்த முடியவில்லையாம். ஆல்கஹால் அவனது ரத்தத்தில் கலந்து இருந்ததால் ரத்தம் ஏற்ற முடியவில்லையாம். மயக்கத்திலேயே பிறந்த நாள் அன்று தன் இன்னுயிரை இழந்தான் என் நண்பன்.

காரில் அவனை எடுத்துக் கொண்டு சென்று அவர்களது வீட்டை அடைந்த போது நடந்ததை எழுதினால் படிக்கும் நமக்கு உயிரே போகும் படியாக இருக்குமென்பதால் விட்டு விடுகிறேன்.

நண்பன் கேக் வாங்கி வருவான், சாக்லெட் கொண்டு வருவான் என்று நண்பர்களுக்காக காத்துக் கிடந்தபோது போன் வந்தது. நண்பன் இறந்ததைச் சொன்னார்கள். இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து நின்றது.

தேவையா இந்தக் குடி !

குறிப்பு : தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் மகன் (வெகு அழகானவர்) நான் படித்த கல்லூரியின் மாணவர். இன்று அவரின் நினைவாக பஸ் நிறுத்துமிடம் கட்டி இருக்கிறார்கள். காரணம் பைக் ஆக்சிடென்ட்.