அண்ணா பெண்களின் சொத்துக்களைப் பற்றியும் அதன் வாரிசுரிமைகளைப் பற்றியும் தங்களது பிளாக்கில் எழுத முடியுமா? - வனிதா, ஃப்ரான்ஸ்.
அன்பு வனிதாவிற்கு வணக்கங்கள். உங்கள் அம்மாவின் சொத்திலோ அல்லது பாட்டியின் சொத்திலோ ஏதாவது பிரச்சினைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரிந்தால் உங்களுக்கு உதவலாம். இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்வியானது பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதால் இந்தப் பதிவினை எழுதுகிறேன். இந்தப் பதிவு பொதுவான நடைமுறையில் ஒரு சில வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை முன் வைத்து எழுதப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
அனைவருக்குமான பொதுக் குறிப்பு: ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வரலாறு என்பதையும், சொத்தின் தன்மை, ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆவணங்கள், வாரிசுகள், மதம் போன்றவற்றினையும் பொறுத்துதான் சட்டப்பிரிவுகளின் வழியாக தீர்வைப் பெறலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
ஒரு இந்துப் பெண் தன் கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்துக்கள் பெற்று அனுபவித்து வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெண் தன் அனுபோகத்தில் இருக்கும் சொத்தினைக் குறித்து எந்த வித உயிலும் எழுதவில்லை என்றால், இந்தப் பெண்ணுக்கு வாரிசுகள் இல்லை என்றால் மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் அந்தப் பெண்ணின் கணவர் வழி உறவினருக்குதான் சேரும். அந்தப் பெண்ணின் அக்காவிற்கோ அல்லது அம்மா, அப்பாவிற்கோ சேராது.
ஒரு இந்துப் பெண்ணின் சுய சம்பாத்தியச் சொத்து, அந்தப் பெண் எந்த வித உயிலும் எழுதி வைக்காத போது அவளின் வாரிசுகளுக்குத்தான் சேரும்.
மேற்கண்ட இரண்டு விஷயங்களும் உதாரணம் தான். இது தவிர பல்வேறு சிக்கல்களுக்கு தகுந்த பல்வேறு தீர்ப்புரைகள் உள்ளன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.