குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பட்டா ரத்து. Show all posts
Showing posts with label பட்டா ரத்து. Show all posts

Thursday, August 26, 2021

நிலம் (87) - முறைகேடான பட்டா பத்திரப்பதிவினை நீக்குவது எப்படி?

அனைவருக்கும் இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிளாக்கைப் படித்து வரும் ஒரு வாசகி போன் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார்.

அவரொரு ஆசிரியை. சிவகாசி மாவட்டத்தில் கீழ திருத்தங்கல் கிராமத்தில் ஆசிரியையின் அப்பாவிற்கு பாக சாசனத்தின் மூலமும், சுயார்ஜித கிரைய வகையிலும் கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலம் அனுபோகத்தில் இருந்து வந்திருக்கிறது. இவரின் அப்பா இந்தச் சொத்துக்களைக் குறித்து எந்த ஒரு ஆவணமும் பதிவு செய்யாமல் காலமாகி விடுகிறார். 

இந்த நிலையில் இவரின் சகோதரர் (இவர்கள் மொத்தம் ஐந்து பேர்) ஒருவர் தனது தாயின் பெயரில் பட்டாக்களை மாற்றி பாக சாசனத்தை வைத்துக் கொண்டு பெரும்பாலான இடங்களை விற்பனை செய்து விட்டார். அதுமட்டுமின்றி அம்மாவிடமிருந்து தனக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து பட்டாக்கள் மாற்றி அனுபவித்து வருகிறார்.

இதர நான்கு சகோதர சகோதரிகளுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டப்படி பாகம் இருக்கும் சொத்தின் உரிமையை மாற்றம் செய்து, விற்பனை செய்தது மட்டுமல்லாமல், தன் பெயரில் தான செட்டில்மெண்ட்டும் பெற்று வைத்திருக்கும் தம்பியின் சட்டமீறல்களை எங்கனம் சரி செய்வது என்று கேட்டார்.

வழக்கறிஞரிடம் சென்றால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, ஸ்டாம்ப் கட்டணம் கட்டி, வழக்காடினால் எத்தனை வருடமோ? 

அது மட்டுமின்றி வயதான அம்மா, கூடப்பிறந்த தம்பி மீது நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்குமா? நீர் அடித்து நீர் விலகுவதில்லை. உறவுகளுக்குள் ஒன்றினைந்த மனம் இல்லையென்றால் அதை வைத்துக் கொண்டு சட்டமும், வக்கீலும் இன்ன பிற ஆட்களும் உறிஞ்சி விடுவார்கள். காலமும், பணமும் விரயமாகுமே தவிர பெரிதாக ஒன்றும் நடந்து விடாது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஆசிரியரை நேரில் பார்க்க வரும்படி அழைத்தேன்.

ஏகப்பட்ட கேள்விகள். ஏகப்பட்ட விசாரணைகள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் அளித்தேன். பின்னர் ஆவணங்களைப் பெற்று ஆராய்ந்தேன்.

ஒரு சில மூல ஆவணங்களைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. இதில் கீழத்திருத்தங்கல் கிராமத்தின் பதிவு ஆவணங்கள் வேறொரு பதிவு அலுவலகத்தில் பதிவாகி இருந்ததைக் கண்டுபிடித்தேன். ஆவணங்கள் அப்டேட் எரர். 

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் இவ்வகையிலான கணிணி தவறுகள் பலபேரின் வாழ்க்கையை அமைதியற்றதாக்கி விடும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. இது ஒரு பிரச்சினை. இருக்கட்டும் ஓரமாக.

பத்திர நகல்கள், வாரிசு, இறப்புச் சான்றிதழ்கள், வில்லங்கச் சான்றிதழ்கள் ஆகியவைகளை வைத்துக் கொண்டு முறையான புகார் மனுவை தயாரித்தேன்.

முதலில் பட்டாவை ரத்துச் செய்ய வேண்டும். பின்னர் இந்த சர்வே எண்களில் இருக்கும் நிலங்களின் தொடர்ச்சியான பத்திரப்பதிவினை நிறுத்த வேண்டும். அடுத்து, இதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கணும். அடுத்து பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டபோது பரிசீலித்த ஆவணங்களின் நகல்களைக் கோருதல் என்று திட்டமிட்டு அதற்கான விண்ணப்பத்தை தயாரித்து அனுப்பி வைத்தேன். தினசரியில் ஒரு பொது அறிவிப்பும் கொடுத்தேன். 

பதிவு தபாலில் அனுப்பி வைத்த விண்ணப்பங்களுக்கு பதில் வரவே இல்லை என ஆசிரியை போனில் அழைக்க ஆரம்பித்தார். கொரனா நேரம். முழு லாக்டவுனில் இருந்தது அரசு. பொறுமையாக இருங்கள் வந்து விடும் என்றுச் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆசிரியையைக்கு நம்பிக்கையே இல்லை. எதுவும் நடக்காது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

இதற்கிடையில் அவரின் தம்பி தன் அம்மாவை வைத்து இதர சகோதர சகோதரிகளிடம் பேச்சு வார்த்தை ஆரம்பித்து விட்டார். இருப்பினும் அவர் தான் செய்த தவற்றினை ஒப்புக் கொள்ளாமல், தன் அம்மா மூலம் கிரையம் பெற்றவர்களை தான் ஏமாற்றி இருக்கிறோம் என்ற ஒரு சிறு சங்கடமும் இல்லாமல் பேசி வருவதாக ஆசிரியை என்னிடம் போனில் சொன்னார்.

நான் பொறுமையாக இருங்கள். ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் உங்கள் மனு மீதான நடவடிக்கை எடுத்ததற்கான அறிவிப்பு வரும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு மனுவுக்குமான பதில் வர ஆரம்பித்து இருக்கிறது என்றுச் சொன்னார். தம்பியையும், தன் அம்மாவையும் விசாரணைக்கு அழைத்திருப்பதாகச் சொன்னார். அவ்வளவுதான் தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. இது  குடும்பப் பிரச்சினை. ஆசிரியையின் தம்பி சட்ட விரோதமாக தன் தாயுடன் கூட்டுச் சேர்ந்து,  நான்கு பேரின் சொத்துரிமையை சட்ட விரோதமாக நீக்கி சொத்துக்களை விற்பனை செய்திருக்கிறார். 

இது பற்றிய எந்த ஒரு தகவலும் இன்றி இந்தச் சொத்துக்களைக் கிரையம் பெற்றவர்கள் வாங்கி இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் ஆசிரியையின் அம்மா ஜெயிலுக்குப் போக வேண்டும். தம்பி தப்பித்துக் கொள்வார். 

அம்மா மீது நடவடிக்கை எடுக்க இதர மகன்களும் மகள்களும் விரும்பமாட்டார்கள். இனி அவர்களுக்குள் செட்டில்மெண்ட் ஆனாலும், முறைகேடான வகையில் கிரையம் வாங்கி ஏமாந்தவர்களின் கதி? அவர்கள் எப்படி இதைச் சரி செய்வார்கள்? தெரியவில்லை.

இதைத்தான் காலத்தின் கொடுமை என்பார்கள். ஒரு சொத்தினை வாங்கும் போது சரியான லீகல் அட்வசைரிடம் சென்று சொத்துரிமை ஆய்வு செய்யாமல் வாங்கினால் இப்படித்தான் நடக்கும்.

சொத்தில் ஒரு பிரச்சினை வந்து விட்டது என்றால் அதை எப்படி நீக்க வேண்டுமென்ற அனுபவ அறிவு இருக்கும் லீகல் அட்வசைரிடம் ஆலோசனை செய்தல் அவசியம். அது இல்லாமல் கோர்ட்டு வழக்கு என்றுச் சென்றால் எப்போது சரியாகும்?  நம் இந்திய கோர்ட்டுகளின் கதை தான் உங்களுக்குத் தெரியுமே? 

கீழே இருக்கும் ஆதாரங்களைப் பார்க்கவும். உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்தால் என்னை அணுகலாம். ஆலோசனைக் கட்டணம் உண்டு. 



 

மேற்கண்ட பொது அறிவிப்பினை தயார் செய்து கொடுத்தேன். மிகத் துல்லியமான புகார் விண்ணப்பத்தை சரியான ஆவணங்களுடன் சாட்சி இணைத்து ஒவ்வொரு துறையினருக்கும் அனுப்பி வைத்தேன். எந்த துறையினரும் புகார் மனுவைப் படித்தால் தெளிவான படம் போல முறைகேட்டினைக் கண்டுபிடிக்கும் வகையில் தயாரித்து இருந்தேன். இனி நான்கு பேரின் சொத்துரிமை சரி செய்யப்பட்டு விடும். 

ஆனால் இது பற்றி ஆராயாமல் கிரையம் பெற்றவர்களின் சொத்துரிமை ஆவணங்களின் கதி அதோகதியாகி விடும். யார் யார் என்னென்ன பிரச்சினைகளில் இருக்கின்றார்களோ தெரியவில்லை. அந்தச் சொத்துக்களில் பல வீட்டு மனைகளாக இருக்கின்றன. சுமார் 200 பத்திரங்களுக்கு மேல் உள்ளன. அந்த இரு நூறு பத்திரங்களின் கதி? அதன் லீகல்? எல்லாம் அவர்களாகச் சரி செய்து கொள்ள வேண்டும். என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை.

வாழ்க வளமுடன்...!