குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமூக நீதி. Show all posts
Showing posts with label சமூக நீதி. Show all posts

Sunday, February 1, 2026

சமூக நீதியற்ற ஒன்றிய கல்வி நிறுவனங்கள் - துணை போகும் உச்ச நீதிமன்றம்

UGC 2026 புதிய விதிகளை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது மிகவும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

இந்த விதிகள் திடீரென வந்தவை அல்ல. உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெறும் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக மாணவர்கள் பல ஆண்டுகள் போராடியதின் விளைவாகவே இவை உருவானவை. உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஒன்றிய அரசு உருவாக்கியது. ஆனால் அதே நீதிமன்றம் ஒரு சிறிய உயர்சாதி கும்பலின் போராட்டத்துக்கு இவ்வளவு கவலை கொள்வது உச்ச நீதிமன்றம் மக்களுக்கானதா இல்லை வேறு எவருக்கானது என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என பலரும் மீடியாக்களில் பேசி வருகிறார்கள்.

தீக்கதிர் செய்திதாளில் வெளியான தலையங்கத்தை வாசித்தேன். அதில், ரோஹித் வெமுலா, பயல் தத்வி போன்ற மாணவர்களின் மரணங்களுக்கு பிறகு உருவான நீண்ட ம் மாணவர்களின் போராட்டங்களும், கல்வி நிறுவனங்கள் உயர்சாதி மாணவர்களால் பாதிக்கப்பட்ட இதர சாதி மாணவர்களுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு கூட வழங்காத அலட்சியமும் இந்த விதிகளுக்கான பின்னணியாக இருப்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக வளாகங்களில் சாதி பாகுபாடு இன்னும் அன்றாட வாழ்க்கையாகவே இருக்கிறது. அதற்குத்தான் இந்த விதிகள் வகுக்கப்பட்டன.

தொழில்நுட்ப காரணம்” என்று சொல்லி இந்த விதிகளை நிறுத்துவது தவறான செய்தியை மக்களுக்கு சொல்லுகிறது. இந்த விதிகள் பொது வகுப்பினருக்கு எதிரானவை, பொய்ப் புகார்கள் வரும் என்று சிலர் பயப்படுகிறார்கள். 

ஆனால் அந்த பயம், தினமும் அவமானத்தையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கும் மாணவர்களின் அனுபவத்தைவிட முக்கியமாக பார்க்கப்படுகிறது. பாகுபாடு கற்பனை அல்ல; அது அதிகாரம் உள்ள இடங்களில் நடக்கும் உண்மை.

இந்த இடைக்காலத் தடை, பாகுபாட்டைத் தடுக்கவே முடியாத 2012-ல் வந்த பலவீனமான விதிகளுக்கு மீண்டும் நம்மை கொண்டு போகிறது.

இருந்தாலும் ஒரு சின்ன நம்பிக்கை தெரிகிறது. மாணவர் அமைப்புகள் இந்த 2026 விதிகளை ஒரு முதல் படியாக வரவேற்றுள்ளன. அதே நேரத்தில், இதில் குறைபாடுகளும் உள்ளன என்பதையும் அவர்கள் சொல்கிறார்கள். விசாரணைக் குழுக்களை துணைவேந்தர்களே நடத்தினால், நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்தக் குழுக்கள் சுயாதீனமாகவும், தன்னாட்சியுடனும், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இப்போது மிகவும் தேவையானது வலுவான சட்டம். சாதியப் பாகுபாடு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். இந்த விதிகள், ஐஐடிகள் உட்பட எல்லா உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில், ஒரு முழுமையான “ரோஹித் சட்டமாக” மாற்றப்பட வேண்டும்.

ஒரு கசப்பான உண்மையையும் சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால், உடனே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சமத்துவ சீர்திருத்தங்களுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடினால், கைது நடப்பது அரிது. இதுதான் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

பல்கலைக்கழகங்கள் சமூக நீதியை காக்கும் ஜனநாயக இடங்களாக இருக்க வேண்டும். சமத்துவ நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் சாதி படிநிலைகளையே காப்பாற்றும். இந்த விதிகள் உண்மையில் செயல்படும் வலுவான சட்டமாக மாறும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும். இப்படியாக அந்தத் தலையங்கம் விவரிக்கிறது.

நீதிக்கான் குரல்களை தொடர்ந்து எழுப்பி வரும் தீக்கதிர் தினசரிக்கு மனப்பூர்வமான நன்றி.

சாதிய படி நிலைகளை இது  நாள் வரை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு சில சிறிய குழுக்களின் மீதான சட்ட நடவடிக்கை எடுக்காத போது, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்குழுவிலிருந்து உயர் பதவிக்குச் செல்லும் நபர்கள் - இந்தச் சாதிய படிமங்களை தங்கள் சுய நலத்துக்காக தொடர்ந்து பேணி வருகின்றனர். இவர்களைப் பொதுச் சமூக மக்கள் உதாசீனப்படுத்தி, விலக்கி வைக்காத வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.