குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, December 15, 2021

துரோகத்தின் நிழலில் டி.ஆர் - மாநாடு திரைப்படம் நடந்தது என்ன?

 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

அறத்துப்பாலில் 37வது குறள். திருவள்ளுவப் பெருந்தகையாளர் திருக்குறளில் அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பில் பத்துக் குறள்கள் எழுதி இருக்கிறார்.  இதன் அர்த்தம் என்னவென்றால் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவர் அற வழி நடப்பவர் என்றும் பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்கள் அறவழி மாறியவர்கள் ஆவர் என்பதாகும்.

எந்த இடர் வறினும் அறவழியாளர்கள் இறைவனால் எப்போதும் கைவிடப்படார். ஆனால் அறமற்றவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும் அப்பாவம் பல்லக்கைப் போல அவர்களால் சுமக்கப்படும்.

சினிமா அறம் சார் தொழில் இல்லை என்றார் என் சினிமா நண்பர் ஒருவர். ஏனென்றால் கருப்பு பணம் புழங்கும் சினிமாவில் வெறும் வெள்ளைச் சீட்டுக்களில் எழுதப்படும் கணக்குகள் தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சாட்சியமாகும்,  இதுதான் சினிமா கணக்கு என்றார். சினிமா இப்படித்தான் இயங்குகிறது என்றார் தொடர்ச்சியாக.

டி.ராஜேந்தர் அவர்கள் தன் திரை உலக வாழ்க்கையை துரோகத்தின் வழியாகத்தான் ஆரம்பித்தார். 1980களில் வெளியான அவரின் படைப்பான ஒரு தலை ராகம் இன்றும் துரோகத்தின் சாட்சியாகத்தான் நிற்கிறது. ஒருவனின் குழந்தைக்கு இன்னொருவனின் இனிஷியல் என்பதன் வலியை ஏற்கனவே அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

கிட்டத்தட்ட 20 படங்கள் இயக்கி நடித்திருக்கும் அஷ்டாவதானி இயக்குனர் அவர். அந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே டஃப் கொடுத்த படங்களை தந்தவர். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரிடமும் அரசியல் பழகியவர். எம்.எல்.ஏவாக இருந்தவர். சிறுசேமிப்புத்துறை இயக்குனராக இருந்தவர். 

இவை எல்லாவற்றையும் விட பெண்களைத் தொட்டு நடிக்காத ஒரே ஒரு சினிமாக்காரர். எந்த வித கிசு கிசுவிலும் பேசப்படாதவர். 

நல்லவர்களுக்கு உலகம் துரோகத்தினை வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவர் தான் நம்பும் இறைவனிடம் எல்லாவற்றையும் விட்டு விடுகிறார்கள். டி.ஆர் நம்புகின்ற இறைவனும், அவர் நம்பும் அறமும் தான் சுமார் 41 வருடங்களாக இன்றைக்கும் அவரை சினிமாவில் வைத்திருக்கிறது. 

மாநாடு திரைப்பட வெளியீட்டின் போது என்ன நடந்தது? 

தகப்பனும் தாயும் அன்றிரவு தூங்கவே இல்லை.

மாநாடு திரைப்படத்தின் நெகட்டிவ் மற்றும் சாட்டிலைட் உரிமையை பிரபல சினிமா ஃபைனான்சியர் உத்தம் சந்த் வைத்திருந்தார்.  

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்திருந்தார். திடீரென்று திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினைத் தள்ளி வைப்பதாக டிவீட்டினார்.

ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். அண்ணாத்தே திரைப்படத்தின் போது மாநாடு திரைப்படத்தை வெளியிட விடாமல் சதி நடக்கிறது என டி.ஆர் அவர்களும் உஷா அவர்களும் பேட்டி கொடுத்தார்கள்.  

அண்ணாத்தே காரணமாக படத்தின் வெளியீட்டு தள்ளி வைக்கப்பட்டு, மீண்டும் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து தள்ளி வைப்பு அறிவிப்பினை தயாரிப்பாளர் வெளியிட்டுருப்பது கண்டு சிம்பு, டி.ஆர் மற்றும் உஷா அவர்களுக்கும் மட்டுமல்ல ரசிகர்களுக்கும், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும் அதிர்ச்சியை உருவாக்கியது.

படம் மறு நாள் வெளியிடப்பட வேண்டும். அன்றைக்கு விடிகாலையில் டி.ஆர் அவர்களும், உஷா அவர்களும் ஃபைனான்சியர் உத்தம் சந்த் வீட்டில் அமர்ந்திருக்கின்றனர்.

திரு.உத்தம் சந்த் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஐந்து கோடி ரூபாய் தொகை இன்னும் செட்டில் ஆகவில்லை. ஆகவே உத்தம் சந்த் கியூப் நிறுவனத்திற்கு தடையின்மைச் சான்று அளிக்கவில்லை.

சாட்டிலைட் விற்பனை தொகையாக ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி இருந்திருக்கிறார்கள். 

ஓடிடி வெளியீடு வேறு, சாட்டிலைட் உரிமை வேறு என்பதால் இரண்டுக்கும் வெளியீட்டு தேதியில் பிரச்சினை வந்து விட்டது. படம் வெளியிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு படத்தை டிவியில் வெளியிடுவதாக இருந்தால் தான் விலைக்கு வாங்குவேன் என்கிறார்கள் சாட்டிலைட்கார்கள். ஆனால் ஓடிடி விற்பனையின் போது 100 நாட்களுக்கு பிறகே தான் சாட்டிலைட்டில் படம் வெளியிடப்படல் வேண்டுமென்ற ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள். ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் விடிகாலையில் தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருக்கிறது.

வினியோகஸ்தர்கள் படம் வெளியானால் தான் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுப்பார்கள்.

இப்படியான ஒரு இக்கட்டான சூழல். ஃபைனான்சியர் வீட்டில் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.

படம் வெளியாகவில்லை என்றவுடன் தியேட்டர்களில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். 

பைனான்சியருக்கு ஐந்து கோடி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான் படம் தியேட்டரில் வெளியாகும். படம் வெற்றி அடையவில்லை என்றால் உங்களால் எனக்கு எவ்வாறு பணம் தர முடியும் என்று கேட்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியிடம் பதில் இல்லை. 

ஐந்து கோடிக்கு கியாரண்டி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் படத்திற்கான என்.ஓ.சி தருகிறேன் என்று உத்தம் சந்த் அவர்கள் சொல்ல, அந்த இக்கட்டான சூழலில் டி.ஆர் ஐந்து கோடி ரூபாய்க்குப் பொறுப்பேற்று கையெழுத்துப் போட்டு கொடுத்த பின்னால் தான் எட்டு மணி காட்சி வெளியாகி இருக்கிறது. 

அந்த ஒப்பந்தத்தில் நாங்கள் சேட்டிலைட் உரிமையை விற்ற பின்பு கிடைக்கும் தொகை குறைவாக இருப்பின் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டு அந்தக் குறைவுத் தொகையை தந்து விடுவதாக டி.ஆர். ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்குச் சாட்சியாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியும், திரு.சவுந்திரபாண்டியன் (தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்) கையொப்பம் செய்திருக்கின்றனர்.

ஆக சாட்டிலைட் உரிமை விற்பனை டி.ஆர் அவர்களின் அனுமதியின் பேரில் நடந்திருக்க வேண்டும். ஏனென்றால் சாட்டிலைட் விற்பனை தொகை எவ்வளவு என தெரிந்து கொள்ளும் உரிமை அவருக்கு அந்த அக்ரிமெண்டின் படி வந்து விட்டது.  

டி.ஆர் அவர்கள் கேரண்டி கையெழுத்துப் போட்ட உடன் தான் படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாக காரணம் டி.ஆர் என்பது உண்மை. 

படம் வெளியானது. தாறுமாறு ஹிட்.

இதற்கிடையில் மாநாடு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. தெலுங்கு சினிமா டப்பிங் ரைட்ஸ் விலை பேசப்பட்டு அதை வாங்கிய தயாரிப்பு நிறுவனமும், சிம்புவும் இணைந்து படத்தின் புரமோஷனுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயைச் செலவழிக்கின்றனர்.

திடீரென்று சுரேஷ்காமாட்சி அவர்கள் தெலுங்கு டப்பிங் உரிமையை ரத்துச் செய்து விட்டு, ரீமேக் ரைட்ஸ்க்கு விலை பேச ஆரம்பிக்கிறார்.

அதற்குள் படம் ஹிட் ஆனவுடன் ஒரு பிரபல சாட்டிலைட் சுமார் அதிக விலைக்கு டிவி உரிமையை விலை பேசுகிறது.

டி.ஆர் தனக்குத் தெரியாமலே நடந்த துரோகத்தினை ஏற்றுக் கொள்ள இயலாமல் வழக்குத் தொடுக்கிறார்.

அவர் வழக்குத் தொடுத்தது சரியா? இல்லையா? என்பதுதான் கேள்வி. 

ஐந்து கோடி பணத்திற்கான உறுதி கிடைத்தவுடன் தான் படம் வெளியானது. ஹிட்டானது. ஆக படம் வெளியாக டி.ஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஐந்து கோடி மட்டுமே காரணம் என்பது தெளிவு.

படம் ஹிட் ஆனதால் சாட்டிலைட் அதிக விலைக்கு விற்பனை ஆனது. ஒரு வேளை ஹிட் ஆகவில்லை என்றால் ஐந்து கோடியை டி.ஆர். கொடுக்க வேண்டும். 

பட வெளியீட்டுக்கு பொறுப்பேற்றவரான டி.ஆரிடம் எதுவும் சொல்லாமல் தன்னிச்சையாக சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்து விட்டு அது என் உரிமை என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.

நஷ்டம் வந்தால் அது உமக்கு, லாபம் வந்தால் அது எனக்கு என்கிறார் சுரேஷ்காமாட்சி. 

இதுதான் சினிமா கணக்காம்.

தெலுங்கு டப்பிங் படம் வெளியாகி விட்டால் சிம்புவுக்கு மார்க்கெட் உச்சமாகி விடும் என்பதால், டப்பிங்க் உரிமையைக் கொடுத்து விட்டு, புரமோஷன் செலவு செய்த பின்னாலே எதன் காரணமாகவோ அதைக் கேன்ஷல் செய்து விட்டு, ரீமேக் அதாவது இதே கதையை வேறு ஹீரோவை வைத்து ரீமேக் ஷூட் செய்ய விலை பேசுகிறார் சுரேஷ்காமாட்சி.

பட வெளியீட்டுக்குப் பொறுப்பேற்றவருக்குத் தெரியாமலே சேட்டிலைட் விற்பனை செய்து விட்டு, தெலுங்கு டப்பிங்க் பட வெளியீட்டினையும் ரத்துச் செய்து விட்டு அறம் பேசுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அவர்கள்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் வழக்கம் போல வெள்ளுடை மனதோடு அவர் சங்கத்தைச் சேர்ந்த சுரேஷ்காமாட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். அன்றைக்கு இப்போது அறிக்கை விடும் இயக்குனர் இமயம் பாரதிராஜா கேரண்டிக் கையொப்பம் போட்டுக் கொடுக்கவில்லை. 

தயாரிப்பாளர் லாபம் அடைய வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் டி.ஆரின் கியாரண்டியைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்று விட்டு, அது என் பிசினஸ் என்றும், அதற்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்றும் பேசுவது எங்கணம் அறமாகும்? 

வங்கிகளில் கடன் வாங்குபவர்களின் கடன் செலுத்தப்படவில்லை எனில் அவர்களின் சொத்துக்கள் மட்டுமல்ல கேரண்டி கையொப்பம் போட்டவர்களின் சொத்தும் சேர்ந்து ஏலத்துக்கு வரும்.

லாபம் வந்தால் அது என்னோடு, நஷ்டம் வந்தால் அதில் உனக்கும் பங்குண்டு என்பது தர்மமா? அறமா? 

குறைந்தபட்சம் ஏதாவது ஒரு நன்மையை தயாரிப்பாளர் செய்திருத்தல் அவசியமல்லவா? ஆனால் அவர் செய்யவில்லை.

டி.ஆர் இப்படியான தொடர் துரோகங்களால் துவண்டு விடப்போவதில்லை.  

டி.ஆர் அவர்கள் போட்ட வழக்கு வெற்றி அடையுமா? அடையாதா? என்ற கேள்விக்கு இங்கு பதில் தேடவில்லை. நியாயம் எதுவோ தர்மம் எதுவோ அதை இங்கு எழுதி இருக்கிறேன்.

அறமற்ற செயல்களைச் செய்பவர்களும், துணை போகும் நபர்களும் தான் அதர்மத்தை பல்லக்கு தூக்குபவன் போல சுமக்க வேண்டும்.

1 comments:

ஆகாயமனிதன் said...

ஒழுங்கா சரியான நேரத்துக்கு வந்து நடிச்சு கொடுத்திட்டு படப்பிடிப்பு முடியறதுக்குள்ள மொத்த தொகையும் வர்ற மாதிரி எழுதி வாங்கிட்டு முதல் நாள் முதல் ஷோ' ரசிகர்களோட உக்கார்ந்து பார்க்கிறது அலாதி இன்பம்... அது சரி இதயெல்லாம் இங்க சொல்லி என்ன பிரோசனம்ங்கறீங்களா??!!

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.