குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 14, 2018

ஞானயோகமா? கர்மயோகமா? எது சரி


(சேலம் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் தாளாளரும், சுவாமி சித்பவானந்தரின் உண்மை சீடரும், எனது குருவும் ஆன ஸ்ரீ மத் சுவாமி ஆத்மானந்தாவுடன் - ஆனந்தனும், நிவேதிதையும்)

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் ஒரே ஒரு முறை சுவாமியை கோவையில் இருக்கும் பள்ளப்பாளையம் விவேகானந்தர் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அனாதைச் சிறார்கள் ஆஸ்ரமத்தில் சந்தித்தேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் நிவேதிதைக்கு பள்ளியில் ’நிவேதிதா பற்றி’ பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. என்னிடம் மகள் நிவேதிதா பற்றிக் கேட்டதும், அவருக்கு சுவாமியின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சுவாமியைத் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்த வாரத்தில் நிவேதிதைக்கு காரைக்குடி ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரியிலிருந்து நிவேதிதை பற்றிய புத்தகங்களும், சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகங்களும் வந்திருந்தன. சுவாமி அவருக்கு புத்தகங்களை அனுப்பி இருந்தார். என்னிடம் பேசிய போது குழந்தைகள் இருவரையும் அழைத்து வரும்படியும், ஆசிரமத்தில் தங்கி இருந்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற உள்ளூர ஆவல். ஐந்தாறு வருடங்கள் அவருடனே இருந்தவன். அவருடன் உண்டு, உறங்கி, பேசி, தொண்டு செய்து வாழ்ந்தவன். என் மீது அவருக்கு ப்ரியம் அதிகம். 

தீபாவளி மறுநாள் சந்திப்பதாகச் சொன்னேன். சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இருப்பதாகச் சொன்னார். சேலம் ஓமலூர் வழியாக கல்லூரியைச் சென்றடைந்தோம். குடும்பத்துக்கே உடைகள் எடுத்து தந்தார். குழந்தைகளுடன் உரையாடினார். இருவருக்கும் அனேக புத்தகங்களைப் பரிசளித்தார். எனக்கும், இல்லாளுக்கும் ஆசீர்வாதங்களையும் புத்தகங்களையும் பரிசளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பனிரெண்டு மணி ஆரத்தியில் பங்கெடுத்தேன். மனசு நிறைவாக இருந்தது.  உணவருந்தி விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். 

எனக்குள் அமைதியாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஞான யோகம் பற்றிப் பேசினேன். அவர் உடனே,” மனிதப் பிறவி எடுத்து யாருக்கும் உபயோகமின்றி யோகத்தில் அமர்ந்து தன்னை மட்டும் உயர் நிலைக்குக் கொண்டு சென்று முக்தி அடைவதில் என்ன பயன்? ஒரே ஒருவருக்கு மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். ஆனால் இவ்வுலகில் பிறந்து பலரின் உதவியால் உயிர் பெற்று வாழ்ந்து விட்டு, தான் மட்டுமே உய்ய முனைவது சரியல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தப் பூமியில் ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் மீண்டும் மீண்டும் மனிதனாகப் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுச் சொல்லி இருக்கிறார்” என்றார். 

தொடர்ந்து, ”எனக்கு இன்னும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன. கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மடங்களைக் கட்டி அன்னதானம் செய்ய வேண்டும். பகவான் ராமகிருஷ்ணருக்கும், சாரதா தேவியாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் மூன்று கோவில்கள் கட்ட வேண்டும், ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து அவர்களை வாழ்வில் உயர வைக்க வேண்டும்” என்றார்.

அந்த 81 வயது இளைஞரின் பேச்சைக் கேட்ட எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவரின் உயர்ந்த நோக்கம் எங்கே? எனது தனி மனிதச் சிந்தனை எங்கே? உள்ளம் வெம்பி வெதும்பியது. அவரின் கனவுகளுக்கு சிறிய அணில் போன்றாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆவல் மேலோங்கியது. 

ஐந்து வருடம் அவருடன் இருந்து தொண்டாற்றினேன். திருமணப் பந்தத்தில் இணைந்து தனி மனித வாழ்க்கைத் தொடரில் மூழ்கி விட்டேன். இருப்பினும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற முடிவு செய்தால் எவ்வழியிலேனும் அதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

கர்ம யோகமே மிகச் சிறந்த யோகம். பிறருக்குப் பணி செய்தலே மனிதப் பிறவிப் பயன். அதை விடுத்து தனி மனித சுகத்திற்காக, உள்ளொளிக்காக இந்த உடம்பைப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் சொன்ன அந்தக் கருத்து, எனது உள்ளத்தில் தராசு தட்டு உயர்வது தாழ்வது போல ஆடிக் கொண்டிருந்தது. நீண்ட மனசின் துணை கொண்டு ஆராய்ச்சி செய்த பிறகு, ஒரு  வழியாக இரண்டும் தேவை என்று அறிந்து கொண்டேன்.

உள்ளத்தைச் செம்மைபடுத்திட ஞான யோகமும், ஊருக்கு உழைத்திட கர்ம யோகமும் அவசியம். கர்ம யோகத்தில் திழைத்திட்ட பக்தை நிவேதிதாவும், அன்னை தெரசாவும், மூவரின் பிம்பமான சுவாமி ஆத்மானந்தரும், எனக்குப் பிடித்த இன்றைய மனிதர் வ.மணிகண்டனும் என்றென்றும் மனித குல வரலாற்றில் உதாரண புருஷர்களாய் இருப்பார்கள், இருந்து கொண்டிருமிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றிப் பேசும் இந்த உலகம், சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில்லை.

இந்தப் புண்ணியத்தை விட வேறென்ன பெரிதாய் வேண்டும் அழியப்போகும் நாற்றமெடுக்கும் உடம்புக்கு? ஞான யோகத்தில் மனதைச் செம்மைப்படுத்தி, கர்மயோகத்தில் உழைத்திடுவதைத் தவிர இந்த மனித உடம்புக்குச் சாலச் சிறந்த வேறு எதுவும் இல்லை.

சரி எனக்குப் பிடித்த ஒரு சிவபெருமானைப் பற்றிய திருவாசகப் பாடலைப் பற்றி கொஞ்சம் படியுங்களேன். எப்போதாவது உங்களுக்குள் அது ஒரு மலர்ச்சியை உருவாக்கலாம்.

கண்க ளிரண்டு மவன்கழல்
கண்டு களிப்பன வாகாதே
காரிகை யார்கடம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படு மாகாதே
மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப் பாத
மிரண்டும் வணங்குது மாகாதே
பண்களி கூர்தரு பாடலொ
டாடல் பயின்றிடு மாகாதே
பண்டிநன் னாடுடை யான்படை
யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படு மாயிடிலே

இந்தப் பாடல் பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டது.

மேற்கண்ட பாடலைப் பதம் பிரித்து எளிதில் படிக்க முடியாது. திருப்பராய்த்துறையில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்தை நிறுவியவரும், மிகச் சிறந்த எழுத்தாளரும், சுவாமி ஸ்ரீமத் ஆத்மானந்தர் அவர்களால் பெரியசாமி என்று அழைக்கப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் அவர்கள் கீழ்கண்டவாறு மேலே இருக்கும் பாடலை தனது திருவாசகம் நூலில் விரித்து எழுதி இருக்கிறார். அது கீழே.

கண்கள் இரண்டும் அவன் கழல்
கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள் தம் வாழ்வில்
என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திரும் ஆறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களி கூர் தரு பாடலோடு
ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான்
படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது ஓர் வேதகம்
வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படும் ஆயிடிலே


இதன் அர்த்தம் கீழே !

மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன் எழுந்தருளினால், இரண்டு கண்களும் அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை, மகளிரோடு கூடி வாழ்வதில் முடிவு பெற்று விடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தினை மறத்தல் ஆகாதோ போகுமா? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன் ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளக்கூடிய தன்மைகளை பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் வந்து தோன்றுதல் ஆகாது போகுமோ?

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் எனது சிற்றறிவுக்கு எட்டிய இந்தப் பதிவில் ஏதாவது பிழை இருப்பின் மன்னித்தருள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

1 comments:

நிகழ்காலத்தில்... said...

மிகப் பொருத்தமான பதிவு. பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் விளக்கம் மற்றும் உரை..பாராட்டுகள்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.