குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, February 18, 2012

மதமும் மனிதனும் - மயிலிறகுகள்

ஒவ்வொரு மனிதனையும் கேட்டுப்பாருங்கள். ஆயிரமாயிரம் ஏமாந்த கதைகளைச் சொல்வான். அக்கா, தங்கை, மாமன், மைத்துனன், மாமியார், மாமனார், மகள், மகன், மனைவி என்றொரு தான் ஏமாந்த லிஸ்டை எடுத்து விடுவான். அதுமட்டுமின்றி தான் செய்த தவறாலே தான் சில துன்பங்களை அனுபவிக்கிறேன் என்று கூட வேதாந்தியாய் பேசுவான். மனிதனுக்கு துன்பங்கள் அவனது உறவுகளாலே, நட்புக்களாலே வரலாம். சில துன்பங்கள் சம்பந்தப்படாத பிறராலே வரலாம். இந்தத் துன்பங்கள் எல்லாம் விலகக்கூடியன. இப்படியான துன்பங்களிலிருந்து விடுபட அனுபவம் மட்டுமே உதவி செய்யும்.

மனிதனுக்கு வயது ஏற ஏறத்தான் உலகத்தின் மாயை மீதான உண்மைகள் புலப்படும். ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பார்கள். உலகத்தின் நியதி மனிதனை தனிமைப்படுத்தி விடுவது. ஆனால் மனிதன் தானொரு பெரும் கூட்டத்தினை உடையவன் என்று நம்பிக் கொள்கிறான். அது உண்மையல்ல. ஒவ்வொரு மனிதனும் தனிமையானவன்.

ஒரு நண்பர் பெரிய கம்பெனி ஒன்றில் மேலதிகாரியாய் இயங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கேட்காமல் முதலாளி ஒரு ஃபைலில் கூட கையெழுத்துப் போடமாட்டார். இவர் தான் அக்கம்பெனியின் முக்கியமான ஆதாரமாய் இருந்தார். அது உலகெங்கிலும் கிளைகள் பல கொண்ட கம்பெனியின் அத்துணை பணியாட்களுக்கும் தெரியும். அப்படியானவருக்கு திடீரென்று உடல் நோய் கண்டது. ஹாஸ்பிட்டலில் ஐசியூவில் ஒரு மாதம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. கம்பெனியிலிருந்து முதல் நாள் அனைவரும் வந்து விசாரித்துச் சென்றார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனி ஆட்களின் வரத்து நின்று விட்டது. நோயில் படுத்திருக்கும் போது கூட கம்பெனி நினைவாகவே இருந்தார். மனைவியோ பிரபல கல்லூரியின் முதல்வர். மகளும் மகனும் அமெரிக்காவில். பேரன் பேத்திகள் ஹாஸ்டல் கல்விக் கூடங்களில் படித்துக் கொண்டிருந்தார்கள். நாளாக நாளாக அவர் பரபரப்பான உலகத்தின் கவனிப்பில் இருந்து ஒதுக்கப்பட்டார். அவர் தனிமைப் படுத்தப்பட்டார். இதுவரையில் அவரின் நினைவுக்கே வராத “கடவுள்” அவரின் நினைவுகளில் நிழலாடினார். துன்பப்படுபவர்களை நோக்கி தன் கரங்களை நீட்டும் ஒன்று தான் மதம் என்கிற கடவுள். ஆதரவிற்கு யாருமின்றி தவிப்போருக்கு இதோ நானிருக்கிறேன் என்றுச் சொல்லி அரூபமாய், தோற்றமின்றி, கதைகளாய், கருத்துக்களாய்,வேதாந்தமாய், நிச்சயமற்ற பலவகை உருவங்களாய் தோற்றத்தினைக் காட்டி தன் இருப்பினை கடவுள் காட்டுவார். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை ஆராய்ச்சி செய்வதல்ல நோக்கம்.

எந்த மதமாக இருந்தாலும் சரி அது நோயுற்ற மனிதர்களை நோக்கி உங்களைக் குணப்படுத்துகிறேன் என்று அழைப்பு விடுக்கும். பிரச்சார கூட்டங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். யோகா முதற்கொண்டு பரிசுத்தமளிக்கும் கூட்டம் வரை நோயுற்றவர்களையே மதம் அதிகம் அழைக்கிறது. ஆரோக்கிய மனிதர்களுக்கு மதத்தின் தயவு தேவை இல்லை. ஆரோக்கியம்மற்றவர்களுக்கும், ஏழ்மையில் வாடுபவர்களுக்கும் மதம் வரம் தரும் ஒரு அற்புதமாய் தென்படுகிறது. கடவுளின் மீதான அதிகப்பட்ட நம்பிக்கையை நோயுற்ற மனிதனும், ஏழ்மை நிலையில் இருப்போரும் அதிகமாகக் கொண்டுள்ளனர். நன்றாக இருப்போர் எவராவது தினசரி வாழ்வில் கடவுளைப் பற்றி நினைப்பதுண்டா என்று கேட்டால் “சிரிப்பார்கள்”. அவர் ஒரு பக்கம் இருக்கட்டும், எனக்குத் தேவையென்றால் அவரிடம் செல்வேன் என்பார்கள்.

இது தான் உலகியலின் தன்மை. தேவையான போது பயன்படுத்திக் கொள்வதுதான் மனித இயல்பு. தேவையற்ற போது அது மூலையில் கிடைக்கும் ஏதோ ஒரு வஸ்துவாகிவிடும்.

ஒவ்வொரு மதமும் அன்பினைத்தான் போதிக்கின்றன. ஆனால் உலகில் ஒவ்வொரு நொடியும் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதன் பிறக்கும் முன்பே அவன் என்ன மதம் என்கிற முத்திரை குத்தப்படுகிறது. மதத்தினை அவன் தாய்ப்பாலுடன் சேர்த்து அருந்துகிறான். அப்பேர்ப்பட்ட மத போதனைகளால் மனிதன் தன் துர்குணத்தினை விட்டானில்லை. மீண்டும் மீண்டும் அவன் துர்ச்செயல்களைச் செய்து கொண்டே தான் இருக்கிறான். ஆக மதத்தின் பயன் தான் என்ன?

மதம் இருக்கிறது. அது இயலாதவர்களுக்குத் துணையாய் இருக்கிறது. இயன்றவர்களுக்கு மதம் பற்றிய கவலையோ கடவுள் பற்றிய பயமோ இல்லை. ஆக மதத்தின் இருப்பு என்பது ஒரு கேள்விக்குறியை நம்மை நோக்கி எழுப்புகிறது. விடை என்ன?

அது யாருக்குத் தெரியும்?


- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்


3 comments:

துரைடேனியல் said...

அருமையான பதிவு சார். உண்மைதான். துன்பத்திலும் கஷ்டத்திலும் இருப்பவர்களே கடவுளைத் தேடுகிறார்கள்.

Thangavel Manickam said...

ஊக்கத்திற்கு நன்றி டேனியல் சார் !

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! துன்பம் என்று வரும் போது தான் கடவுள் ஞாபகமே வருகிறது !

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.