குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 22, 2020

நான்கு படங்களால் மாறிய ரசனையும் வாழ்க்கையும்


உருப்படவே உருப்படாத தமிழ் சினிமாவின் ரசிகனாய் இருப்பதன் பலனை நாமெல்லாம் இதுகாறும் அனுபவித்தோம். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என சினிமாக்காரர்களை முதலமைச்சராய் ஆக்கிய பெருமையை தமிழ் சினிமா உருவாக்கியது.

தமிழகத்தின் விதியோ வேறு மாதிரியாக இருந்தது போல. மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படாதவர் மூன்றாண்டு காலம் முதலமைச்சராய் இருக்கும் மாபெரும் ஜனநாயகம் இது. இந்தக் கொடுமையெல்லாம் இந்தியாவில் சாத்தியமோ சாத்தியம். ஆட்சித்திறன் இருக்கிறதா? ஊழல் செய்யாதவர்களா? என்றெல்லாமா பார்த்தோம்? நம் கையில் எதுவும் இல்லை. வேடிக்கை மட்டும் பார்க்கலாம். தற்போதைக்கு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் எழுதலாம். அதுவும் வலிக்காமல். இல்லையெனில் கும்மி விடுவார்கள் கும்மி. உண்மையைச் சொன்னால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் நெருப்பில் எரிவதாக நம் தலைவர்களும், அடிப்பொடிகளும் கோபம் கொள்கிறார்கள்.

யாருக்கு ஓட்டுப் போட்டோமோ அவர் போய்ச் சேர்ந்தார். யாரோ ஒரு ஆள் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார். ஏன் இந்த மாற்றம்?

இதை நான் தமிழகத்தின் தேவை எனப் பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு தமிழன்னை சுட்டிக்காட்டி இருக்கும் ஒப்பற்ற ஒரு உண்மை எனப் பார்க்கிறேன். சினிமா தொடர்பு இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பது நல்லது. ஆனால் அவர்களின் ஆட்சித்திறன் மீதும், வளைந்து நெளிந்து செல்லுவதும், தமிழகத்தின் நலனை தன்னைக் காத்துக் கொள்வதற்காக இழக்க வைப்பதும் நல்லதல்ல. ஒரு கட்சி நடத்தி, தலைவராகி, பிரச்ச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்திருந்தால் மக்களின் தேவை என்ன? தமிழகத்தின் நலன்கள் என்ன? எப்படி ஆட்சி நடத்த வேண்டுமென்று அறிய நேர்ந்திருக்கும். இன்ஸ்டண்ட் ஊறுகாய் மாதிரி ஆட்சிக்கு வந்தால் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல தான் இருக்கும். அரசியல் பயங்கரத்தில் நிலைத்து நிற்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும் சினிமாக்காரர் அல்ல என்பது ஒரு சிறிய மகிழ்ச்சிதான். ஆனால் துரோகம் எல்லா நல்லனவைகளையும் தூக்கி விடும்.

அரசியல் குப்பை போதும். பேசித் தீரப்போவதில்லை. மக்களின் மனத்தில் மாற்றம் வேண்டும். எது உண்மை, எது போலி என அறியும் திறன் வேண்டும். இனி வரும் காலங்களில் இந்தியாவில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

மிகச் சிறந்த இளைஞர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஊழல்வாதிகளின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்து கஜானாவில் சேர்த்து விடுவார்கள். இனி எந்த மந்திரவாதியும், எந்த யாகமும் பலன் தரப்போவதில்லை.

காலம் காலமாய் சிவாஜி, எம்.ஜி.ஆர், சிவகுமார், ரஜினி, கமல், மோகன், ராஜேஷ், ராஜா, சூரியா, கார்த்தி, சிம்பு, தனுஷ் வகையறாக்கள் காதல் செய்வதை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனது. ஹீரோக்கள் ஒருவரே. ஆனால் பல ஹீரோயின்களுடன் அவர்கள் காதல் செய்வதை எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது? ஏ படங்களில் கூட பலதரப்பட்ட ரசனையான படங்கள் வந்து கலக்குகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் இவர்களின் காதலும், பாடலும், சண்டைக்காட்சிகளும், உஷ், படா சத்தங்களும் மட்டும்தான் நமக்கு காணக்கிடக்கின்றன. இதில் சூர்யா, கார்த்தி அண்ணன் தம்பிகள் இருவரும் ஒரே நடிகையைக் காதல் செய்வதையெல்லாம் பார்த்து எரிச்சல்தான் வரும். இன்ஸெஸ்ட் காதல் அல்லவா அது. கன்றாவி. நேர்மை, நியாயம், தர்மம் பற்றி எல்லாம் பேசும் சிவகுமார் அய்யாவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதா? இந்தக் கொடுமையையெல்லாம் எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரா? சங்கட்டமாக இருக்காதா?

ஆனாலும் நடிக்கிறார்கள் கூச்ச சுபாவம் ஏதுமின்றி.

அமேசான் பிரைம் இலவசமாக ஏர்டெல் போஸ்ட் பெயிடுக்கு வழங்குகிறார்கள். ஆகவே மலையாளப்படங்கள் பார்க்கலாம் என நினைத்து தேடினேன்.

நான் மூன்றே மூன்று படங்களைப் பார்த்தேன். தமிழ் சினிமாவின் தரம் குப்பையிலும் குப்பை என அறிந்தேன். தெலுங்கு சினிமாவோ சாக்கடை என புரிந்தது. மலையாளப் படங்களில் சாக்கடைகளும் உண்டு. ஆனால் பல படங்கள் உன்னதமானவையாக இருக்கின்றன. கதை இருக்கிறது. எதார்த்த வாழ்வியல் இருக்கிறது. படத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது. படத்தோடு மனசு பயணிக்கிறது.

டிரான்ஸ் (Trance), உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel), வாரிக்குழியிலே கொலபதகம் (Vaarkkuzhiyile Kolapathakam) & ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25 (Android Kunjappan Versio  5.25) ஆகிய படங்கள் என்னை இன்னொரு படைப்பு உலகத்துக்குள் கொண்டு சென்றது.

இது ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் - இனி வரும் காலத்தில் இப்படித்தான் ஆகுமோ என கவலைப்பட வைத்தது.



இது டிரான்ஸ் படம். கார்ப்பொரேட் பிசினஸ் பற்றிய அற்புதமான படம். அசந்து விடுவீர்கள் நிச்சயமாய்.

இது உஸ்தாத் ஹோட்டல் - தாத்தா பேரன் கதை என்றாலும் முக்கியமான பெற்றோரின் உளவியலை வெளிப்படுத்துகிறது.

வாரிக்குழியில் ஒரு கொலபதகம்
இந்தியாவில் ஏன் கிறிஸ்து மதம் பரவியது என்பதை இப்படம் சொல்லும். என்ன ஒரு படம் தெரியுமா? பாருங்கள். அசந்து விடுவீர்கள்

நேற்று ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25 எனும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மலையாளமும் கிட்டத்தட்ட தமிழ் மாதிரிதான். ஆரம்பத்தில் கொஞ்சம் டயர்ட் ஆக்குகிறது. ஆனால் போகப் போக படம் நம்மை உள்ளே இழுத்து விடுகிறது.

என்ன ஒரு பிரச்சினை வருகிறது என்றால், மலையாளத்தில் பேசுவது போல தினமும் கனவு வருகிறது. எனக்கு கேரளாவில் நண்பர்கள் அதிகம். அவர்களோடு மலையாளத்தில் வேறு பேச முற்படுகிறேன். வீட்டில் மனையாள் அடிக்கடி ஏங்க, என்ன ஒரு மாதிரியாகப் பேசுகின்றீர்கள் எனக் கேட்க ஆரம்பித்து விட்டார்.

இது எல்லாவற்றையும் விட என் பிள்ளைகளுடன் உட்கார்ந்து மலையாளப் படங்களைப் பார்க்கிறேன் எந்த வித சங்கோஜமும் இன்றி. தினமும் இரண்டு படங்கள் பார்க்கின்றோம். அருமையான பல படங்கள் கொட்டிக் கிடக்கின்றன மலையாளத்தில். ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடுகிறார்கள். உடனடியாக மலையாளம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது.

அன்பு நண்பர்களே, தமிழ் சினிமாவைப் பார்ப்பதை விடுங்கள். அற்புதமான படைப்புகள் பல கொட்டிக் கிடக்கின்றன மலையாள சினிமாவில். இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் கொரானா நம்மை விடுவிக்க. அதுவரை ஒரு மொழியைக் கற்றுக் கொண்டது போல ஆகும். நல்ல படைப்புகளைப் பார்த்தது போல ஆகும்.

தமிழ் சினிமா என்னைப் பொறுத்தவரை குப்பையிலும் சேர்க்க முடியாத அழுகல் ஒரு சில படங்களைத் தவிர.

தமிழ் சினிமாவின் ரசிக அரசியல் பற்றி எழுதுகிறேன். படித்துப் பாருங்கள். இதுவரை எந்த விமர்சகரும், எவராலும் சொல்லாத ஒரு உண்மையைச் சொல்லப் போகிறேன். உடைந்து விழும் பிம்பங்கள் உங்கள் மனதுக்குள் என்று நிச்சயம் நம்புகிறேன்.

இனி,

டிரான்ஸ், உஸ்தாத் ஹோட்டல், வாரிக்குழிக்குள் கொலபதகம், ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25 – அமேசானில் கிடைக்கிறது. 

அவசியம் பாருங்கள்.

வாழ்க வளமுடன்…!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.