கணவனைக் கைக்குள்
போட்டுக் கொள்வது எப்படி என்ற பதிவினைத் தொடர்ந்து எனக்கு பல பெண்கள் போனில் அழைத்தார்கள்.
ஏன் இன்னும் அந்தத் தொடரை எழுதவில்லை எனக் கேள்விகள். எழுதலாம் என்று தான் நினைத்தேன்.
ஆனால் மனசு வரவில்லை. ஏனென்றால் ஒரு மாமியார் என்னை அழைத்தார்.
“தம்பி, நீங்க
என்ன எழுதப் போறீங்கன்னு எனக்குத் தெரிந்து விட்டது. நான் பட்ட துன்பத்தை பிறர் அனுபவிக்க
வேண்டாம். ஆகவே எழுதாதீர்கள். அதை இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் சுய நலத்துக்காகப்
பயன்படுத்துவார்கள். எளிதில் ஆண்களை பைத்தியம் பிடித்தலைய வைப்பார்கள். கலிகாலம் அப்பா.
வேண்டாம் எழுதவே எழுதாதீர்கள்” என்றார்.
அவர் என்ன துன்பம்
அடைந்தார், எப்படி என்றெல்லாம் எனக்கு கேட்கத் தோன்றவில்லை. ஆனால் இது பிரச்சினைக்கு
வழி வகுக்கும் எனத் தெரிந்து கொண்டேன். பெரும்பாலும் என்னைத் தொடர்பு கொண்டவர்கள் மத்திம
வயதுப் பெண்கள். ஆகவே அலர்ட் ஆறுமுகமாகி விட்டதால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
இன்றைக்கு ஃபேஸ்புக்கில்
ஒரு பதிவைப் பார்த்தேன், என் பெயரைக் கொண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை வெகு சுருக்கமாய்
எழுதி இருந்தார் சிவராஜ் என்பவர்.
”மனிதன் ஒரு மகத்தான
சல்லிப்பயல்” என்பாராம் ஜி நாகராஜன்.
அடியேனுக்கு ”மனிதன்
தீராக்காமந்தகன்” என்றுதான் தோன்றும்.
ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா கதையை நான் படிக்கவில்லை. கீதாப்பிரியன் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்ததைப் படித்து,
அப்படியே செந்தில் ஜகன்நாதனைப் பிடித்து, பார்த்தால் வேறு உலகத்திற்கு கொண்டு சென்று
விட்டார்கள். நன்றி கீதாப்பிரியன்.
செந்திலுக்கு படம்
கிடைத்து, அவரின் இயக்கத்தில் ஒரு படம் பார்க்கணும் என ஆவல். பார்க்கலாம், காலம் என்ன
சொல்லப் போகிறது என.
காமம் மனிதனிடத்தில்
இருந்து மறைந்து விட்டால், அவன் மண்ணில் வாழ பிடிப்பில்லாமல் போய் விடும். காமம் இல்லா
வாழ்க்கை வெற்று வாழ்க்கை. சாமியார்கள், சூஃபிக்கள், ஃபாதர்களை விட்டு விடலாம்.
மனதை வெகுவாகப்
பாதித்த அந்த உண்மையின் அடிவேர் ஒரு பெண்ணின் காமம். அமைதியான குளத்தின் நடுவில் வீசும்
கல் ஒன்று உருவாக்கும் அலையைப் போல, காமத்தின் பால் வீசப்பட்ட தவறான பார்வை, செயல்
உருவாக்கும் அபத்தத்தின் துயரம் அந்த தங்கவேல் வாழ்க்கையில் மீளவே முடியாத அவலத்தை
உருவாக்கி இருந்ததைக் கண்டு மனிதர்கள் தீராக்காம நோயுடையவர்கள் என்ற எனது எண்ணத்திற்கு
வலுச் சேர்த்தது.
அடூர் கோபால கிருஷ்ணனிடம்
உதவி இயக்குனராக இருந்த தங்கவேல் அண்ணின் கதை இனி, சிவராஜ் எழுதியது. (நன்றி சிவராஜ்)
சுருக்கமாக எழுத
விரும்பவில்லை. சிவராஜ் சிலாகித்து எழுதிய அப்பதிவு மறக்கவே முடியாத ஒன்றாகி விட்டதால்,
அதை இங்கு பதிவு செய்து வைக்கிறேன். அவர் எனது பிளாக்கைப் படித்தால் என்னைத் தொடர்பு
கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை திரு.சிவராஜ்.
மலையாளத்தின் மிக
முக்கியமான திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியரான அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம்
உதவி இயக்குநராக இருந்தவர் தங்கவேல் அண்ணன். எனக்கு, முதன்முதலாக அவர் ஒரு நூலகத்தில்
அறிமுகமானார். சென்னிமலை மலையடிவாரத்தின் கீழே அமைந்திருந்த சிறிய நூலகமது. முதன்முதலில்
அவரைப் பார்க்கையில் அவர் நூலகத்தில் அமர்ந்து, கையில் ஒரு நோட்டை வைத்து எதோ குறிப்பு
எழுதிக்கொண்டிருந்தார். நான், வேறொரு நண்பரை அங்கு சந்திக்கச் செல்கையில் எதேச்சையாக
அவரை அங்கு கண்டேன். அடுத்தடுத்து, வெவ்வேறு தருணங்களில் அந்நூலகதிற்குப் போகும்போதும்,
அவர் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது.
ஒருநாள் நானாகச்
சென்று என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். மெல்ல எங்களுக்குள் பேச்சு வளர்ந்தது.
இலக்கியத்தில் தீவிரமான வாசிப்பும், இசைகுறித்த ஆழ்ந்த நேசிப்பும் உள்ள மனிதர்தான்
தங்கவேல் அண்ணன். இசையமைப்பாளர்கள் குறித்தும், இசைகுறித்தும் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிற
அறிவுஞானத்தை அவர் பெற்றிருந்தார். நான் நேர்பழகிய முதல் இசைநேசர் அவர். ஒவ்வொரு இசைக்கலைஞர்கள்
பற்றியும் சொல்வதற்கு அவருக்குள் ஒரு கருத்திருந்தது. ஒரு குரல் இசையில் என்னவாக ஒலிக்கிறது
என்பதைப்பற்றிய துல்லிய விவரணைகளை எடுத்துரைக்கும் நபராக அவர் ஆளுமை அடைந்திருந்தார்.
அவர் ஒருமுறை சொல்லக்கேட்டதுண்டு,
“ரஹ்மானுடைய மியூசிக், இளையராஜா மியூசிக் என்ன வித்யாசம்ன்னா... ரஹ்மான் மியூசிக்ல
ஏகப்பட்ட இசைக்கோர்வைகள் (tracks) கலந்த இசையாக இருக்கும். இளையராஜாவோட இசை, ரொம்ப
சொற்பமான இசைக்கோர்வைகள் உள்ளதா இருக்கு”. எனக்கு மிக நன்றாக ஞாபகமிருக்கிறது. இசைகுறித்து
அவருக்கும் எனக்குமான ஒரு உரையாடலில் அவர், “நிறைய கொலைகளை தடுப்பதற்கு இளையராஜா இசைமாதிரியான
மெல்லிசைகள் காரணமாக இருக்கும். அதிகமான கற்பழிப்பு, வன்முறை எண்ணங்கள் வருவதற்கு இப்போதைய
நவீன இசை காரணமாக இருக்கும். ஏனென்றால், அவ்வளவு இசைக்கோர்வைகள் மனதுக்குள் போகும்போது,
அந்த அழுத்தம் ஒரு வன்முறையாக மாற வாய்ப்புள்ளது” என்று சொன்னார்.
தங்கவேல் அண்ணனும்
நானும் தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள் அடுத்தடுத்து வாய்த்தது. ஒருநாள்,
அவர் தங்கியிருந்த அவரது நண்பரின் அறைக்குச் சென்றோம். மிகவும் சிறிய அறை, ஆனால் அதில்
ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அதன்பிறகு, அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அங்கும் நிறைய
புத்தகங்கள் இருந்தன. எப்பவெல்லாம் சென்னையில் பணியில்லாமல், சொந்த ஊரில் அலைந்துதிரிகிறாரோ
அப்பவெல்லாம், ஊருக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்விடுவது
அவருடைய பழக்கமாக இருந்தது. எனக்கு முதன்முதலில் புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்தியது
அவர்தான். புதுமைப்பித்தன் மீது அவருக்கு அளவுகடந்த காதல் இருந்தது. ஒரே புத்தகத்தை
இருபது, முப்பது முறை தொடர்ந்து வாசிக்கிற ஒரு மனப்பழக்கம் உடையவராக அவர் கனிந்திருந்தார்.
அவரிடமிருந்த பெரும்பான்மையான
புத்தகங்கள் எல்லாம், ஏதோவொரு நூலகத்தில் திருடப்பட்டவையாக இருந்தது. ஒவ்வொரு புத்தகத்தின்
மீதிருந்த நூலக லட்சினை அதை உறுதிசெய்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு ஊர்களின் நூலகங்கள்.
புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமில்லாமல், அருகில் ஒரு நோட்டு வைத்து குறிப்பெடுப்பது
அவருடைய மாறாத பழக்கம். அப்படி அவர் வழக்கமாகக் குறிப்பெடுக்கையில், அவர் பக்கத்தில்
சின்ன ‘BPL வாக்மேன்’
ஒன்றை அருகில் வைத்திருப்பார். அதில் ஒரு பெண்குரல் கீதம் கேட்டுகொண்டே இருக்கும்.
அது, பாம்பே ஜெயஸ்ரீயின் குரல்!
முதன்முதலில்,
எனக்கு பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அறிமுகமானது அங்குதான். எப்பவுமே அந்தக்குரல் மட்டும்தான்
அந்த வாக்மேனில் ஒலித்துக் கொண்டிருக்கும். வேறு எந்தப் பாடலையும் அவர் கேட்டு நான்
பார்த்ததில்லை. ‘மாலைப் பொழுதின் வேனிலிசையே...” என்ற பாடல் திரும்பத் திரும்ப அவர்முன்
ஒலித்தபடியே இருக்கும். பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் ‘அக்னி’ ஆல்பத்தில் வெளிவந்த
பாடல் என நினைக்கிறேன்.
ஒருநாள், அவர்
மிதமான போதையில், “நான் ஆறாவது படிக்குறப்ப என்னோட அப்பா, எங்க வீட்டு மரத்தூண்ல என்னோட
ரெண்டு கையையும் கட்டிபோட்டுட்டு, சில வார்த்தைகள அம்மாவ பத்தி சொல்லிட்டு, என் கண்ணு
முன்னாடியே உத்திரத்துல தூக்குமாட்டித் தொங்கி தற்கொலை செஞ்சுகிட்டாரு. ஆனா, அதுக்குப்
பின்னாடியும் நான் என் அம்மாவோட சேர்ந்து வாழக்கூடிய சூழல்தான் இருந்துச்சு. என் கண்ணு
முன்னாடி நடந்த அந்த மரணமும், எனக்குள்ள இருந்த வெறுப்பும் என்னைய எதிர்மறையா பயணிக்கவிடாம,
ஏதோவொருவகையில நேர்மறையான திசையில பயணிக்கிறேன்னா... ஒரு நாள்ல நாலஞ்சு காட்சிகள என்னால
புதுசா யோசிச்சு எழுத முடியுதுன்னா... அது எல்லாத்துக்குக்கும் கண்டிப்பா காரணம் இந்த
அம்மாவோட குரல் தான். நீ திரும்பத் திரும்ப கேளு!” என்று என்னிடம் சொன்னார். அப்படித்தான்
பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரல் எனக்குள் அணுக்கமாகியது. அப்படித்தான் நான் அவர்களின்
மீட்பிசையை கண்டடைந்தேன்.
காலங்கள் நகர நகர,
பத்து வருடங்கள் கழித்து ஒருநாள் அதிகாலை அந்தத் தகவல் என்னை வந்ததடைந்தது, ‘தங்கவேல்
அண்ணன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்’ என. அவருக்கு மிக நன்றாக நீச்சல் தெரியும்
என்பதை நான் நன்கறிவேன். நன்றாக நீச்சல் தெரிந்த ஒருவன், தண்ணீரில் மூழ்கி உயிரைவிடுகிறான்
என்றால்... அவன் எவ்வளவு விரும்பி வழியச்சென்று தன் மரணத்தை உள்வாங்கி இருப்பான் என
நினைக்கும்போதே எனக்குள் அழுகைவந்துவிடுகிறது. சிறுவயதில் கண்முன்னே நிகழ்ந்த தன் தந்தையின்
தற்கொலையின் காட்சிநினைவு, தானும் சாகும்வரை மண்டையைவிட்டு அகலாத தங்கவேல் அண்ணனுக்கு,
இடைக்கால மருந்தாக எது அவரது உயிரை அத்தனைக் காலம் தள்ளிப்போட்டிருக்கும் என யோசித்தால்,
அவை இரண்டே இரண்டுதான். ஒன்று இலக்கியம், மற்றொன்று பாம்பே ஜெயஸ்ரீயின் இசைக்குரல்!
அதன்பிறகு, நான்
சென்னைக்கு வந்து வெவ்வேறு சூழல்களில் அலைந்து திரிந்தபோதும்... பத்திரிக்கை, சினிமா
என எல்லாவற்றிலும் தோற்றுவிட்டேன் என்கிற மனநெருக்கடியில் நானிருந்தபோதும்... என்னை
மெல்லத் தேற்றியது, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் அதே ‘அக்னி’ ஆல்பம் தான். வருடங்கள்
ஓடி, பிரார்த்தனைகளின் நற்பயனாக குக்கூ காட்டுப்பள்ளி எனும் கனவு நிறைவேறத் தொடங்கியது.
அதன்பின், கட்டிடக்கலை
பயிலும் பியேஷ் என்னும் தோழிக்கும், கற்களை அடுக்கி அடுக்கி கரையோரங்களில் சிற்பங்கள்
செய்து அவைகளை அப்படியே விட்டுவிட்டுப் பயணிக்கிற ஒரு சிற்பக்கலைஞனுக்கும் குக்கூ காட்டுபள்ளியின்
வனப்பகுதிக்குள் திருமணம் நிகழ்ந்தது. பியேஷ், தற்போது ஆப்ரிக்காவில் பழங்குடி மக்களின்
வீடுகளை ஆய்வு செய்கிறவராக இருக்கிறார். பியேஷ், முழுக்க முழுக்க பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின்
இசையை மனதுக்குள் கொண்டாடி மகிழ்பவர். எனவே, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் இசைக்குரல் காடெங்கும்
மெல்லியதாக ஒலிக்க, அந்திப்பொழுதின் சிறுஅகல் விளக்கொளியில் அவர்களது திருமணம் நிகழ்ந்தது.
என் மனதுக்குள்
சின்னதாக ஒரு விருப்பம் இருந்தது, குக்கூ திறப்பு விழாவின்போது, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களும்
வரவேண்டும் என்பது. ஆனால், அச்சமயத்தில் அகிலா அவர்கள்தான் மின்னஞ்சல் வழியாக அம்மாவிடம்
இதுகுறித்து பேசிவந்தார். அப்போது, அம்மாவுக்கென தனியாக திருவண்ணாமலையில் அறை ஒன்று
பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று மின்னஞ்சல் அனுப்பியபோது, அதற்கு அவர், “என்னுடைய குரலை
பிரார்த்தனையாக நினைக்கிற அந்த இடமும் ஒரு கோவில் தான? அங்கவந்து தங்குவதுதான் சரியாக
இருக்கும். அந்த இடம் எப்படியிருந்தாலும் நான் தங்கிக்கொள்கிறேன்” என்று பதில் அனுப்பியிருந்தார்.
திறப்புவிழாவுக்கு வருகைதர அம்மா ஒப்புக்கொண்ட பிறகும், ஏதோவொருவகையில் தேதி மாற்றம்
நிகழ்ந்ததால் அவர்களால் திறப்புவிழாவில் கலந்துகொள்ள இயலாத சூழல்.
பாம்பே ஜெயஸ்ரீ,
சஞ்சய் சுப்பிரமணியம், ‘பவுல்’ பார்வதி ஆகியோர்கள் என்றாவதொருநாள், குக்கூ
மலையடிவாரத்தில் கொஞ்சமாகக் குழுமியிருக்கும் மக்கள் திரளுக்கு அமர்ந்து பாடுவதாக எங்களுக்குள்
நாங்களே அடிக்கடி நினைத்துப்பார்த்துக் கொள்வதுண்டு. எங்கள் நீண்டகால இசைவிருப்பம்
இது. அவ்வகையில், நாங்கள் இசைத்துதித்து கைதொழும் அந்தத் தாயின் கீதக்குரல், தற்பொழுது
அருகில் கேட்பதாக நாங்கள் உணர்கிறோம். எங்கள் பயணத்தின் வெவ்வேறு சூழ்நிலைகளில், உள்ளுணர்வாக
உடனிருந்துப் பயணித்தது அம்மாவின் குரல்தான். அவருடைய இசைகேட்பது, ஒரு அனிச்சை செயலென
எங்களுக்குள் நிகழ்கிறது.
“கிராமத்தில்
வயதான பாட்டி கட்டுகிற மண்வீடு போலதான் அம்மாவோட குரல்... அதுல முழுக்கமுழுக்க வாழ்க்கை
இருக்கும்”
எனச்சொல்லும் கட்டிடக்கலைஞர் ‘மிரா’வையும், தங்களுடைய கர்ப்பகாலத்தில் அம்மாவின்
‘ஜெகதோ தாரனா’
பாடலை தினந்தோறும் சிசுவைக் கேட்கச்செய்த அருண்- ரேணுவையும், இணையவெளியில் அம்மாவின்
இசைக்குரலை தொடர்ந்து மலரச்செய்கிற பிராபகரன் சேரவஞ்சியையும், மின்மினி ராஜாராமையும்,
‘இரக்கம் வராமல் போனதென்ன காரணம்’ அருணிமாவையும்... இக்கணம் மனதில் நினைத்துக்கொள்கிறோம்.
குக்கூ நேரலை உரையாடலில்,
நாளை(14.04.2020 சித்திரை முதல்நாள்) மாலை 5 மணிக்கு, இசையன்னை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள்
உரையாடவுள்ளார். இருதயவுறவுகள் இதில் இணைந்துகொள்க!
இப்படிக்கு,
சிவராஜ்
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.