குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, June 23, 2024

மாணவர்களுக்கு மரணவலி தரும் மோடி

இந்தியர்கள் நோயில் சிக்கி சின்னாபின்னமாக போக வேண்டுமென்பதற்காக கொண்டு வரப்பட்ட சதித்திட்டத்தின் பெயர் நீட். நீட் மருத்துவக் கல்வியை கோடீஸ்வரர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் உரித்தாக்குகிறது. நீட் மூலம் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக் கனியாக்கி, ஏழைகளை பரம ஏழைகளாக, பஞ்சைப் பராரிகளாக வைத்திருக்க வேண்டுமென்பதில் எல்லையற்ற இன்பம் கொண்டிருக்கிறார்கள்.

ஏழைகள் இல்லாத இந்தியா உருவானால் உயர்ஜாதியினரைக் கேள்வி கேட்பார்கள் என்பதினால், நயவஞ்சகமாக கொண்டு வந்த நுழைவுத் தேர்வு தான் நீட். 

எந்த ஒரு ஏழையும் படிப்பின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேறி விடக்கூடாது. ஏழைகளுக்கு கல்வி எளிதாகக் கிடைத்தால் ஏழைகள் அற்றுப் போய் விடுவர் என்பதனால் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நயவஞ்சமாக திணித்து விட்டார்கள்.

பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெறாத ஒரு மாணவர் நீட் தேர்வில் 720 முழு மதிப்பெண் பெற்றிருக்கிறான். எய்ம்ஸில் இலவசமாய் படிக்க காசைக் கொடுத்து 720 மார்க் வாங்கி விட்டால் படித்து விடலாம் என பேஜேபி ஆளும் மாநிலங்களில் நீட் வினாத்தாளை விற்பனைக்கு விட்டுள்ளனர். ஒரு சில நீட் தேர்வு மையங்களில் தேர்வு கண்காணிப்பாளரே கேள்விகளுக்கான பதிலை டிக் அடிப்பதற்கு பணம் வாங்கி இருக்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றனர். நீட் தேர்வு அறைக்குள் தாலியைக் கூட பிடுங்கி வைத்துக் கொண்டு அனுமதித்திருக்கிறார்கள் என்ற செய்திகளையும் படித்தோம்

மத்திய சென்னையின் எம்.பி. தயா நிதி மாறன் அவர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல் தேர்வில் 1 மார்க் பெற்ற மாணவிக்கு நீட்டில் 720க்கு 720 மார்க் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது போல இன்னும் என்னென்ன மோசடிகளை பாஜக ஆளும் மா நிலங்களில் நடந்திருக்கிறதோ தெரியவில்லை. வெளியில் தெரிந்தவை இந்த மோசடிகள். தெரியாத மோசடிகள் எத்தனையோ?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடே நடக்கவில்லை என்றார். பின்னர் ஒப்புக் கொண்டார். அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024 பிப்ரவரியில் நிறைவேற்றபட்டது. தற்போது கூடுதல் இணைப்பாக 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம் என்று இணைத்து சட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.  நீட் முறைகேட்டை ஒப்புக் கொண்டிருக்கிறது அரசாங்கம் என்பதற்கு சாட்சி இதுவே.

எவனோ ஒருவன் கசிந்த கேள்வித்தாள் மூலம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் - ரேங்க் பட்டியல் முறைகேடானது அல்லவா? ஆனால் உச்சநீதிமன்றம் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்திருக்கிறது. கண் முன்பு சாட்சி இருந்தும் குற்றத்தைப் பார்க்காமல் அரசின் கொள்கைக்கு சாதுர்யமாக ஒப்புதல் அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தேசிய தேர்வாணையம் அக்கிரமமாக பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி இருக்கிறது. இதனை மட்டும் ரத்துச் செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மறுபடியும் அவர்களுக்குத் தேர்வாம். பின்னர் ரேங்க். இப்படி போகிறது நீட் தேர்வு முறைகேடு. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வளவு பெரிய விஷயத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு மூலம் மதிப்பெண் பெற்றவர்களை எங்கனம் கண்டுபிடிப்பார்கள் சிபிஐயினர்? அதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று தெரியாது. அதற்குள் மருத்துவக் கலந்தாய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது சரியல்ல என்று நீதிபதிக்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் நீதிமன்றம் வாய் மூடி மவுனமாக இருக்கிறது என்பது தான் வேதனை.

ஜார்கண்டில் ஐந்து பேரை நீட் முறைகேட்டுக்கென கைது செய்திருக்கிறார்கள். அதே போல ரவி அட்ரி கும்பல் உத்திரப் பிரதேசத்திலிருந்து ஜார்கண்ட் வழியாக பீகார் மாநிலத்திற்கும் கேள்வித்தாளை விற்பனை செய்திருக்கிறார்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

பள்ளியில் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்றாலும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சிக்கான மதிப்பெண்ணாக இருப்பது மாணவர்களுக்கு இழைத்திருக்கும் கொடூரம். எத்தனை நுழைவுத் தேர்வுகளை எழுதுவது? நுழைவுத் தேர்வுக்கென எத்தனை ஆயிரங்களை கட்டணமாக கட்டுவது? தேசிய நுழைத்தேர்வு முகமை கோடிகளில் ஏழை மாணவர்களிடமிருந்து பணம் பறித்துக் கொண்டிருக்கிறது. 

என்றைக்கு பிஜேபி அரசு பதவிக்கு வந்ததோ அன்றிலிருந்து சாமானியனுக்கு எளிதில் கிடைக்க வேண்டிய - ஒரு அரசு செய்ய வேண்டிய கட்டாயப் பணியைச் செய்யாமல் - எதிர்கால இந்தியாவின் சந்திதகளை - அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி அழிக்கும் திட்டத்தினை வெகு நாசூக்காக - பதவிக்காக கூக்குரலிடும் நயவஞ்சகப் பேராசை பிடித்த நரிகளின் உதவியினாலும் - காசுக்காக சட்டத்தை விற்கும் - குரைக்கும் பல எச்சைகளின் உதவியாலும் மாணவர்களுக்கு மரணவலியைக் கொடுக்கிறார்கள்.

கல்வி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டிய அரசாங்கம் மாணவர்களைப் படிக்க விடாமல் செய்யும் கொடுமையை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியாவில் மட்டுமே இப்பேர்பட்ட எமர்ஜென்சி போன்ற சட்டங்களைப் பார்க்கலாம். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி அரசியல் தொடர்பானது. ஆனால் இதுவோ இந்தியர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எதிரான கல்வி எமர்ஜென்சி.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக நீட் மோசடிகள் தொடர்கின்றன. நயவஞ்சகர்களின் நரித்தனத்தை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நரிகள் பல்வேறு வழிகளில் நுழைவுத் தேர்வுகளை நியாயப்படுத்தி வருகிறார்கள். 

இந்தியாவெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவ போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இதைத்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆரம்பகாலத்திலிருந்து சொல்லி வந்தார், போராட்டம் செய்தார், சட்ட மசோதா நிறைவேற்றினார். ஆனால் ஆளுநர் ரவி - பாஜகவின் சேவகராக நம் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, பாஜகவின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அப்போதெல்லாம் வாய் மூடி கிடந்தவர்கள்,  ஒன்றிய அரசின் நரித்தனத்தை தற்போது உணர்ந்து போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

மாணவர்களின் கல்விக்குத் தடை போடும் அரசைக் கேள்வி கேளுங்கள். மணிப்பூரில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போதும், வாய் மூடி மவுனியாக இருப்பவர்களால், மக்கள் கேட்கும் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு 9000 கோடி விமானம் இருக்கிறது. செலவழிக்க மக்களின் வரிப்பணம் இருக்கிறது. கேள்விக்கு பதில் தர வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.

இ.வி.எம் இருக்கும் வரையில் - ஆட்சித் திருடர்களால் மக்களிடமிருந்து பறிக்கப்படும் மக்கள் உரிமைகள் இனி கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஆட்சிகளைப் பறித்தார்கள் பாஜகவினர். அதை ஆளு நர் அங்கீகரித்திருக்கிறார்கள். மக்கள் போட்ட ஓட்டு எங்கள் கால் தூசுக்குச் சமம் என பாஜகவினரும், ஆளுநர்களும் கொக்கரிக்கின்றார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எமர்ஜென்சியை ஏவி விட்டிருக்கின்றார்கள்.

மருத்துவக் கல்வியும், உயர் கல்வியும் ஏழைகளுக்கு கிடைக்கவே கிடைக்காது. எந்தப் போராட்டமும் ஆட்சித் திருடர்களை ஒன்றும் செய்யாது. அவர்கள் அறம் அற்றவர்கள். ஆட்சியும் அதிகாரமும் வேண்டுமென்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். நீதிமன்றத்திலும் நுழைந்து விட்டார்கள். இனி இந்தியர்கள் இன்னொரு 500 வருடம் அடிமைகளாக வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பது கொடுமை.

தற்போதைய செய்தி என்னவென்றால், சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்து பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஜூன் 23 காலை நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை “ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” ஒத்திவைப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது. 

நீட்-யுஜி தேர்வு மற்றும் அது நடத்தும் பிற தேர்வுகளில் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விமர்சனத்திற்கு உள்ளான தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து சுபோத் குமார் சிங் நீக்கப்பட்டடார். 

கேபினட் நியமனக் குழு, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலாவுக்கு, வழக்கமான பதவியில் இருப்பவரை நியமிக்கும் வரை, என்.டி.ஏ-வின் கூடுதல் பொறுப்பை அளித்து அறிவிப்பை வெளியிட்டது. தற்போதைய DG திரு. சிங், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் "கட்டாயக் காத்திருப்பில்" வைக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, மே 5-ம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் முறைகேடு மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கடந்த ஒரு மாதமாக, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பாதித்த இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான NEET-UG-யில் முறைகேடுகள் தொடர்பான வரிசை தொடங்கி, ஏஜென்சி தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.  ஒரு லட்சம் மருத்துவப் படிப்புகளுக்கு 23 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் முறைகேட்டினை உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை.

கூடுதல் செய்தி : அயோத்தியில் ராமர் கோவிலில் ராமரைப் பிரதிஸ்டை செய்த அர்ச்சகர் ஆச்சார்ய லட்சுமிகாந்த் தீட்சிதர் செத்துப் போய் விட்டார். அது மட்டுமல்ல 1800 கோடி ரூபாய் செலவழித்த ராமர் கோவில் கூரை ஒரே ஒரு மழையில் ஒழுகிக் கொண்டிருக்கிறது என அர்ச்சகர் கூறியிருக்கிறார்.





நன்றி : தீக்கதிர்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.