குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 17, 2024

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களின் கண்ணீர் வரலாறு


தாமிரபரணியில் நடந்த கொலைகள் - மாஞ்சோலை தொழிலாளர்கள்

1927ஆம் ஆண்டில் முதன் முதலாக இப்பகுதிக்கு வந்தபோது காட்டு மாமரங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், “மாஞ்சோலை” என்று பெயரிட்டனர் என்று சொல்லப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது கல்லிடைக்குறிச்சி. அங்கிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டினை கடந்து சுமார் 16 கிலோ மீட்டர் மலையேறினால் மாஞ்சோலை எஸ்டேட்டை அடையலாம். 

மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பட்டியலின மக்களும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும் தொழிலாளர்களாக, முதலாளிகளின் தரகர்களால் இங்கு அழைத்துவரப்பட்டனர். 

குறைந்த ஊதியம், அதிக வேலை என இருந்த எஸ்டேட்டில் அதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்கிறது மாஞ்சோலையின் தொழிலாளர்கள் வரலாறு.

1999ம் வருடம் சூலை மாதம் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 கூலியாக வழங்க வேண்டுமென போராடினர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் 17 பேர்  கொலை செய்யப்பட்டனர். 

மாஞ்சோலை வரலாறு என்ன?

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா சிறுபிள்ளையாக இருக்கும் போது, அவரது தாயார் உமையம்மை ஆகிய இருவரும் உறவினர்களிடமிருந்து உயிர் தப்பிக்க மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் மறைந்து வாழ்ந்தனர். அங்கு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் வாழ்ந்த சிங்கம்பட்டியார் என்பவரைச் சந்தித்து ஆதரவு கேட்டார்கள். அதன் பிறகு சிங்கம்பட்டியார் மார்த்தாண்ட வர்மாவுக்கு பல பயிற்சிகள் பயிற்று வித்து, அவர் வாலிப வயது அடைந்தவுடன் தன்னுடைய மகனுடன், படை ஆட்களை அனுப்பி, மார்த்தாண்ட வர்மனின் உறவினர்களை விரட்டி விட்டு, மீண்டும் திருவிதாங்கூர் அரியணை ஏற உதவி செய்தார். போரில் சிங்கப்பட்டியாரின் மகன் இறந்ததால் அதற்காக 18ம் நூற்றாண்ட்டில் 1706 மற்றும் 1758 ஆண்டுகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியையும், 5 கிராமங்களையும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உட்பட 8 கோவில்களையும், 5 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் தானமாக வழங்கினார் மார்த்தாண்ட வர்மா. இந்த நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்தனர்.

சிங்கம்பட்டி ஜமீன் இளவரசர் சிவசுப்ரமணிய சங்கர தீர்த்தபதி சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது கொலை வழக்கில் சிக்கினார். வழக்குச் செலவுகளுக்காக் 1929ம் ஆண்டில் சுமார் 8500 ஏக்கர் நிலத்தினை பி.பி.டி.சி நிறுனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கினார். 


பி.பி.டி.சி நிறுவனம் செய்த அபகரிப்பு செயல்கள் என்ன?

இந்த இடத்தினை பி.பி.டி.சி நிறுவனம் அபகரிக்கச் செய்த செயல்களைப் பற்றிப் பார்க்கலாம். 

BBTC நிறுவனம் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட நிறுவனமாகும். குத்தகைக்கு நிலத்தை எடுத்த BBTC நிறுவனம் குறிப்பிட்ட வனப்பகுதிகளை செம்மைப்படுத்தி தேயிலையைப் பயிரிட்டது. குத்தகை காலம் 2028 வரை அமலில் உள்ளது. அனுமதிக்கப்பட்ட 99 ஆண்டு குத்தகை காலத்தில் BBTC நிறுவனம் மாஞ்சோலை நிலத்தில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறது. 

1952 ஆம் வருடம்  குத்தகைக்கு விடப்பட்ட டீ எஸ்டேட் உட்பட அனைத்து சிங்கம்பட்டி 22000 ஹெக்டேர் ஜமீன் காடுகளை  ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்தின் மூலம் அரசு தன் வசம் எடுத்தது. ஆனால், பிபிடிசி நிறுவனம் தனது 99 வருடக் குத்தகையைத் தொடரலாம் என அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசு அனுமதித்தது. 1977 ஆம் வருடம் அரசு மேற்கண்ட 22000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி காட்டை காப்புக் காடாக மாற்றத் தமிழ் நாடு வனச்சட்டம் மூலம் அறிவிக்கை செய்தது. ஆனால் பிபிடிசி நிறுவனம் தன்னுடைய குத்தகை நிலத்தைக் காப்புக்காடாக மாற்றக் கூடாது எனவும் தனக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என்றும் பல்வேறு வகையில் கடிதங்கள் மூலமும், நீதிமன்றம் மூலமும் முட்டுக்கட்டை போட்டது. இதனால் இந்த வனப்பகுதியைக் காப்புக்காடாக மாற்ற முடியாமல் வன நிர்ணய அலுவலர், வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டார்கள். 

ரயத்வாரி பட்டா என்றால் என்ன?

ஜமீன்தார் யாருக்கு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்திருக்கிறாரோ அந்தக் குறிப்பிட்ட நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது  அந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டிருந்தால் அந்த நிலங்களுக்குக் கொடுக்கப்படும் பட்டாவின் பெயர் ரயத்வாரி. 

இந்தப் பட்டாவை கேட்டுத்தான் வனத்துறைக்கு எதிராக BBTC நிறுவனம் வழக்குத் தொடுத்தது.  

2010 ஆம் வருடம் (6.1.2010) வன நிர்ணய அலுவலர் மேற்கண்ட 22000 எக்டர் (பிபிடிசி குத்தகை நிலம் உட்பட) காட்டைக் காப்புக்காடாக மாற்றலாம் என உத்தரவு பிறப்பித்தார். பிபிடிசி நிறுவனம் இந்த உத்தரவுக்குத் தடை ஆணை பெறாமல் கேவியட் மனுவை மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது வனத்துறை. ஆகவே அப்போது பிபிடிசி நிறுவனத்தால் தடை ஆணை ஏதும் பெறமுடியவில்லை. ஆனால், வன நிர்ணய அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிபிடிசி நிறுவனம் 2010 இல் மாவட்ட நீதிமன்றம் , திருநெல்வேலியில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2015ம் வருடம் மாவட்ட நீதிமன்றம் பிபிடிசி நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து  உத்தரவு பிறப்பித்தது. பிபிடிசி நிறுவனம் மதுரை உயர் நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு செய்தது. 01.09.2017ம் தேதியன்று அந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவில்  'குத்தகை  ஒப்பந்த காலம் முடியும்வரை, நிலத்தை நிறுவனம் அனுபவித்துக் கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடையும் வரை மனுதாரருக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. மனுதாரர் தற்போது அனுபவித்துவரும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சாகுபடி செய்யலாம். அதைத் தவிர்த்து, பரப்பளவை விரிவாக்கம் செய்யக் கூடாது. குத்தகை ஒப்பந்த விதிகளை மீறினால், அதை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மேற்கண்ட இந்த நிகழ்வு நடைபெற 40 வருடங்கள் ஆகியுள்ளது.

சமீபத்தில் பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை எஸ்டேட்டை மூடுவதற்கு முடிவு செய்து, எஸ்டேட்டில் இருந்து மக்களை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். இந்த எஸ்டேட்டின் குத்தகை 2028ம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு வர உள்ளது. 

மாஞ்சோலை எஸ்டேட்டில் 1959ல் “மீண்ட சொர்க்கம்”, 1974ல் “மன்னவன் வந்தானடி”, 1990ல் “நிலா பெண்ணே”, 1991ல் “சார் ஐ லவ் யூ”, 1996ல் “பூமணி”, “சுந்தர புருஷன்”, 2008ல் “பேராண்மை”, 2009ல் “ஆனந்த தாண்டவம்” போன்ற  திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

இந்த எஸ்டேட்டில் பிபிடிசி கம்பெனியின் மாஞ்சோலை குருப் ஆபீஸ், தேயிலைத் தொழிற்சாலை,  பெரிய மருத்துவமனை, மருத்துவர் இல்லம், கம்பெனியின் கண்காணிப்பாளர் இல்லம், தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாணவர் விடுதி, காவல் நிலையம், வாக்கி டாக்கி நிலையம், தபால் நிலையம், சிறந்த சுவையான டீ ரஸ்க் தயாரிக்கும் எஸ்டேட் பேக்கரி, இந்து, கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் எனப் பலவும் மாஞ்சோலையில் அமைந்துள்ளன. 

எஸ்டேட் மூடப்பட்டு அப்பகுதிகள் காப்புக்காடாக மாற உள்ளது. இதனால் அங்கு பல தலைமுறைகளாக தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து, வாழ்ந்து வந்த மக்கள் கனத்த இதயத்துடன் தங்கள் குடியிருப்புகள், கோயில்கள், வாழ்வாதாரங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு எந்த உலகத்திலும் நிரந்தரமான இடமுமில்லை, அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் இல்லை. இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேட்பார் யாருமில்லை. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக கொல்லப்பட்டனர். வரலாறு முழுக்க தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக உள்ளது. அதிகாரத்துக்கும் பணத்திற்கும் பேராசைக்கும் இடையில் சாமானிய தொழிலாளர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருப்பது காலம் காலமாக தொடரும் அவலம். மனிதன் மிருகத்தை விட கேவலமானவன் என்பதன் இன்னொரு வரலாறு தான் மாஞ்சோலை எஸ்டேட்டும் அதன் தொழிலாளர்கள். உழைப்பவனுக்கு இந்த உலகில் வாழ இடமில்லை என்பதே உண்மை. 

* * *