குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, November 21, 2023

ஆன்மீகம் என்றால் என்ன?

தெளிவான அறிவு பெற இருபது வருடங்கள் ஆகி விட்டன. அதற்குள் எத்தனை தவறான புரிதல்கள். அதனால் உண்டான இழப்புகள். இழந்தால் தான் பெற முடியும்.

வாழ்வின் மத்திய வயதில், மனிதர்களின் தேடல்கள் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம். இதை வைத்து தான் பல பிசினஸ் சாமியார்கள் கோடிகளாய் குவிக்கின்றார்கள். 

வேறு வழி பற்றி யாருக்கும் தெரியாது. 

யோகா நோய் தீர்க்கும் என்பார்கள். முயற்சித்துப் பார்ப்போம்.

மனம் நிம்மதி அடைந்தால் நோய் தீரும் என்பார்கள். டைனமோ தியானம் செய்வோம்.

நடந்தால் போதும் ஆரோக்கியமென்பார்கள் வியர்க்க வியர்க்க நடப்போம்.

பேலியோ டயட் என்பார்கள். 

காய்கறி மருத்துவம் என்பார்கள். 

காயகல்ப பயிற்சி என்பார்கள்.

சித்தா மருத்துவமென்பார்கள். 

ஆயுர்வேதம் மட்டுமே என்பார்கள். 

இல்லை இல்லை, இது அக்குபஞ்சர் மூலமே சரியாகும் என்பார்கள். 

அடடே, இது ஹோமியோ பதிக்கு மட்டுமே சரியாகும் என்பார்கள். 

இப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்த தேடல்கள் ஒருபுறம்.

அடுத்து குடும்ப பிரச்சினை.

மன நிம்மதி, திருமணம், பிள்ளைகள் பிரச்சினை, மாமியார் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, கள்ளக்காதல்கள், குடிப் பிரச்சினை, மாமனார் பிரச்சினை, சொத்து விற்க முடியவில்லை, வீடு கட்ட முடியவில்லை, கடனாகி விட்டது என பல பிரச்சினைகள்.

ஜோதிடம் வந்து விடும்.

ஒன்றாமிடத்து அதிபதி நான்காமிடத்தினைப் பார்ப்பதால் வரும் கிரகக் கோளாறு. பரிகாரம் செய்தால் போதும். உடனடியாக கோவில் பயணம். அது இல்லைங்க இது கர்ம வினை, அனுபவித்துதான் ஆக வேண்டும். என்ன கொஞ்சம் எளிதில் கடக்கலாம். அந்தக் கோவிலுக்குச் சென்று வாருங்கள் சரியாகி விடும்.

எல்லாம் பார்த்தாச்சு. சரியாச்சா? இன்னும் இல்லைங்க.

கடவுளே என்னைக் கைவிட்டு விட்டாயே என்று புலம்பல்.

கடவுள் எப்போ கையைப் பிடிச்சாரு கையை விட. 

ஆனாலும் புலம்பல்.

ஆக்சுவலா யாரும் எந்தப் பிரச்சினையையும் சரி செய்வதில்லை. 

அவரவர் தான் சரி செய்து கொள்கிறார்கள். சமாதானமாகிறார்கள். அடங்கிப் போகிறார்கள். விதியேன்னு வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

இதுதான் எதார்த்தம். 

இதற்குள் எத்தனை ஜோசியம், கோவில்கள், செலவுகள், இழப்புகள்.

இந்த அறிவு வரும் போது வயது போய் இருக்கும்.

மறுபடியும் மனசு இதான் விதி என்று முனங்கலோடு புலம்பும்.

ஹோமம் செய்கிறவர்களுக்கு லாபம் - பிரச்சினை தீர வேண்டுபவனுக்கு மனப்பிராந்தி. 

இந்த பிராந்தி தெளிவற்ற மனதில் எப்போதுமே ஒட்டிக் கொள்ளும். 

சாராயம் பிராந்தி அயிட்டங்கள் உடம்பு நோகுதுன்னா விட்டு விடலாம். 

ஆனால் மனப்பிராந்தி செத்தா தான் போகும். அப்படி ஒரு போதைப் பிராந்தி அது.

அது பாட்டுக்கு சிந்திக்கும். ஒன்னோடு ஒன்னு முடிச்சு போடும். அழும். கதறும். சிரிக்கும். இப்படி பாடாய் படுத்தும்.

இந்தப் பிராந்தியை எப்படி விடுவது? 

தியானம்? யோகா? 

மண்ணாங்கட்டி. 

ஒரு எழவும் நடக்காது. 

அதுக்கு வழி இருக்கா? இருக்கு. 

ஒவ்வொருவருக்கும் ஒரு வழி உண்டு. 

நீங்களே கண்டுபிடிங்க.

மனப்பிராந்தி போய்டுச்சுன்னா, ஆன்மீகமே இல்லை. 

செத்தசவமாய் இருன்னா, சவத்து மேல தியானம் பண்ணும் பயித்தியக்காரத்தனம் ஆன்மீகம் என்றால் நம்பிக் கொள்வதில் பிராந்திக்கு எப்போதும் பிரச்சினை இல்லை. 

அதாங்க மனப்பிராந்திக்கு.





Thanks to Artist Mr.Himansu Srivatsava and Photo Providers