குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, June 8, 2019

பானபத்திர ஓலாண்டியே உமக்கு ஒரு கடிதம்

பானபத்திர ஓலாண்டியே, 

அனேக நமஸ்காரங்களுடன் கோவையிலிருந்து தங்கவேல் எழுதுகிறேன். எனது இந்தக் கடிதம் உம்மை எட்டாது என்று எமக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை எமக்கு எழுந்த அறச்சீற்றத்தினால் எழுதுகிறேன். உம்ம சினிமா (மெல்லிசைப்பாடல்களை) எவர் பாடினாலும் காசு கொடுத்து விட்டுத்தான் பாட வேண்டுமாமே? நீதிமன்றத்தில் வழக்குப் போட்டீர்களாம். கோர்ட்டும் உமக்கு பணம் கொடுக்காமல் எவரும் பாட்டுப் பாடக்கூடாது எனத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறதாம். 

எதுக்கு உமக்கு காசு கொடுத்துப் பாட வேண்டும் என உம்ம காலை நக்கி வயிற்றை நிரம்பச் செய்து கொள்ளும் இசை அடிப்பொடிகளின் பேட்டிகளையும் அடியேன் கண்டேன். 

உம்மை, எம் தமிழர்கள் தங்கள் அறியாமையால் இசைக்கடவுள் என்றார்களே!  அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா?  இருக்கட்டும் பானபத்திரரே.

அமுதமாய்ப் பெருகு மான ந்தக் கடலாம்
இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி
உதித்த பிரணவத் தாலே யுருவாய்
ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய்
மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட
உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய்
மந்தாத் தொனியாய் மனத்திடைத் தோன்றி
மார்பு காண்டம் வரவரப் பெருத்து
மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம்
தாடையா மைந்தின் திறத்தல் மூடல்
விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல்
எனவிவ் வறு தொழிலாற் பிறந்து 
பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய்
நலந்தரு மறையாய் நாட்டிய கலையாய்
பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச்
சுற்றிய தாலே சூட்ச மறிந்து
ஓத முடியா வுயர்நாத மாச்சே
நாதமே முக்கலை நாதமூ வெழுத்து
நாதமே முக்குணம் நாதமே முப்பொருள்
நாதம் மூவுல காகி விரிந்து
நாதமாம் பரத்தில் லயித்தது பாரே

நாதம் பரத்தில் லயித்திடு மதனால்
நாத மறிந்திடப் பரமு மறியலாம்

சங்கீத சாஸ்திரத்தில் வழங்கி வரும் பன்னிரெண்டு சுரங்களையும், இருபத்து நான்கு சுருதிகளாகவும் நாற்பெத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்து கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் அனுபவித்திலிருக்கின்றன. 

பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாராமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும் நுட்பமாகச் சொல்கின்றன.

பூர்வ தமிழ் மக்கள், சுரங்களையும், சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக தொடர்ந்து வந்த தீட்சிதர்களும், பாகவதர்களும் இசைக்கோர்வைகளைப் பாடினார்கள் 

நன்றி : கருணாமிர்த சாகரம் - தமிழ் இசை நூல்

தமிழிசையிலிருந்து உருவான ஆதி இசைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றிப் போட்டு, எவர் எவரோ உருகி உருகி ரசித்து உருவாக்கிய வாத்தியங்களை வாசிக்க வைத்து இசைக்கோர்வையை உருவாக்கயவருக்கு காப்பிரைட் பேச என்ன தகுதி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆதி இசைக்கோர்வையை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் அதை இன்னொருவர் பாடக்கூடாது என்றுச் சொல்ல தகுதி வேண்டுமல்லவா?

நாதம் என்பது கடவுள். ஒலியிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பம். ’ஓம்’ என்ற நாதம் தான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்று அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த ’ஓம்’ இலிருந்து பிரிந்த இசையை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றுச் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எந்தச் சார்பும் இன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்.

பானபத்திர ஓலாண்டி அவர்களே, உமக்கும், உம்மை அணுக்கி, கழுவிக் குடிக்கும் இசைப்பண்ணர்களும் மேலே இருக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாரும். உம்மால் மிகச் சிறந்த மெல்லிசை மன்னர் என்று அழைத்தவர்களின் வாரிசின் நிலைமை இன்றைக்கு எவ்வாறாயிருக்கிறது என்று உமக்குத் தெரிந்திருக்குமே! இசையை விற்றவர்களும், சாராயக்கடை நடத்தியவர்களின் வாரிசுகளும் பிச்சை எடுத்து திரிகின்றனர். இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஆனானப்பட்ட விஜய் மல்லையா கதியையும், காந்தக்குரலால் தமிழர்களைக் கட்டிப் போட்ட தியாகராஜபாகவதரின் நிலையும் அறிந்திருப்பீர்களே....!

தமிழர்களின் பாடலைப் பாட்டமைத்ததிற்கு காசு வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு, போதாது போதாது என்றலையும் உம்மை பானபத்திர ஓலாண்டி என அழைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மதுரை இசைக்கடவுள் அந்தப் பானபத்திரனை ஓட ஓட விரட்டி அடித்தது போல இசைக்கடவுள் உம்மையும் அடித்து விரட்ட வேண்டாமென்று அந்த நாதச் சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்கிறேன். 

என் எதிர்ப்பை உமக்குத் தெரிவிக்க, இணையவெளியில் எழுதி இருக்கிறேன். எனது இந்தப் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.

என்னை வாழ வைத்த என் முன்னோர்களுக்காகவும், இனி வாழப்போகும் இளையோர்க்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்காக அல்ல. என்னை வாழ வைத்த சமூகத்தின் பிரதிநிதியாக எம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அதைத் தவிர எமக்கும் உமக்கும் எந்த வித வாய்க்கா வரப்புத் தகராறு இல்லை.

08/06/2019 6.03பி.எம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.