குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 6, 2013

புரியும் புதிர் ஒன்று


மனித வாழ்க்கையின் ரகசியம் 100 சதவீதம் என்றால் அதில் அரை சதவீதத்தைக் கூட அறிவியலாலும், பிற எந்த புற விஞ்ஞானத்தாலும் இது காறும் அறிந்து கொள்ள முடியவில்லை. இயற்கை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குள் தான் சக்தியே பிறக்கிறது. விலக்கல், ஈர்ப்பு சக்திகளிடையே பிறக்கிற மின்சாரம் மாயையிலிருந்து பிறக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் பொய் தோற்றங்களான ஏற்றம் இறக்கம், நன்மை தீமை, இன்பம் துன்பம், இரவு பகல் போன்ற மாயையிலிருந்து பிறப்பவை தான் மனித குல வாழ்வு. இந்த பொய் தோற்றங்கள் எப்போது ஒரு மனிதனை பாதிக்காது இருக்கின்றதோ அன்று அவன் படைப்பின் ரகசியத்தை அறிந்தவனாகின்றான். மனிதன் தன் வாழ்வு நிரந்தரமானது என்று நினைக்கிறான். ஆனால் அவனது வாழ்வு முடிதற்குரியது. அதை அவன் அறிந்திருந்தாலும் அவனைச் சுற்றி இருக்கும் மாயை அவனை அந்த உண்மையை அறியாவண்ணம் விலக்கி வைக்கின்றது.

வாழ்க்கை எனும் புதிரை விஞ்ஞானத்தால் விடுவிக்க முடியாது. இந்தச் செய்தி நம்பிக்கை இல்லாவிட்டால் உண்மையிலேயே பயங்கரமானதாகும். மனிதனின் எண்ணத்திற்கு முன்னால் இதுவரை வைக்கப்பட்ட நிலையான புதிர்களில் தலையானது வாழ்க்கை என்ற புதிரே - மார்கோனி

இந்திய ஆன்மீகப் பாரம்பரியத்தின் முக்கிய யோகியான பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை ஒன்று.

அவர் இந்தியாவில் வித்யாலயா நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய மான் குட்டி ஒன்றினை அவர் வளர்த்து வந்தார். அது அவருடனே வசித்து வந்தது. இப்படியான ஒரு நாளில் விடிகாலையில் பணி நிமித்தமாய் வெளியில் செல்லவதற்கு கிளம்பிய யோகியார், மான் குட்டிக்கு காலையில் உணவினைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். வித்யாலத்தில் பயின்று வந்த மாணவன் ஒருவன் அந்த மான் குட்டிக்கு மீண்டும் உணவளித்து விடுகிறான். அதன் காரணமாய் மான்குட்டி நோய்வாய்ப்பட்டு, படுத்தே இருந்திருக்கிறது. மாலையில் வித்யாலயாவிற்கு வரும் சுவாமி மான் குட்டியின் உயிர் ஊசலாடுவதைக் கண்டு வேதனையுறுகிறார். இறைவனிடம் வேண்டுகிறார். 

இறை அன்பின் காரணமாய் இறையின் மீது பற்றுக் கொண்டவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் உடனே செவி சாய்ப்பான் என்பது ஞானிகளுக்குத் தெரியும். “இறைவா, இம்மான் குட்டியின் உயிரைக் காத்து அருளுக” என்று பிரார்த்தித்த யோகியாரின் அன்றிரவு கனவில் அவருக்கு திருப்பம் ஒன்று ஏற்பட்டது.

அவரின் கனவில் வந்த அந்த மான் குட்டி, “சுவாமி, நான் இந்த உடலை விட்டு நீங்க விரும்புகிறேன், உங்கள் பிரார்த்தனை எனது விருப்பத்திற்கு இடையூறாய் இருக்கிறது” என்றது. திடுக்கிட்டு விழித்தெழுந்த யோகியார் மாபெரும் உண்மையை புரிந்து கொள்கிறார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? புரியாதவர்கள்  மீண்டும் படியுங்கள்.

இன்னும் வரும் ..... 
கட்டுரை ஆக்கத்திற்கு உதவி : ஒரு யோகியின் கதை ( நன்றி )

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையுட்பட்டு

நன்றி...

'பசி'பரமசிவம் said...

நல்ல முயற்சி.

ஆர்வத்துடன் படித்தேன்.

இன்னும் எழுதுங்கள்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.