குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, July 13, 2008

முனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் - திரைவிமர்சனம்

கேண்டீன் வைத்து நடத்தும் பொன்வண்ணனின் மகனாக பரத். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறையில் படிக்கிறார். ஊர் பெரிய தாதாவின் பெண்ணுடன் காதல் வருகிறது. கதா நாயகியின் அறிமுகம் அவரது காலில் தொடங்குகிறது. என்ன ஒரு டைரக்டோரியல் டச் தெரியுமா இந்த சீன். இந்த சீனுக்கு பின்தான் படம் பார்க்க விருப்பமே வருகிறது. பரத் கல்லூரியில் பாடும் ஒரு பாட்டு. இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுவது போல அமைந்துள்ளது இப்படத்தின் சிறப்பு. பொன்வண்ணனின் வேஷம் இதுவரை தமிழ் சினிமாவில் எவரும் போடாத வேஷம் என்பது இப்படத்தின் சிறப்புக்கு இன்னும் ஒரு காரணம். முடிவெட்ட கடைக்குச் செல்லும் பரத்திற்கு, பொன் வண்ணன் அட்வைஸ் சொல்லும் காட்சிகள் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். கல்லூரி தேர்தலை சாக்காக வைத்து இரு ஜாதிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் இதுவரை ஹாலிவுட்டில் கூட எடுக்கப்படாத அளவுக்கு மயிர்க்கூச்செரியும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் திருமுருகன் இதற்காக மெனக்கெட்டு இருப்பது அவரின் சின்சியர் உழைப்பினை காட்டுகிறது. தமிழ் சினிமாவுக்கு உலகில் சிறந்த படைப்பினை வழங்க வேண்டுமென்ற அவரது எண்ணம், ஆர்வம், உழைப்பு வேறு எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒன்று.

கதா நாயகி பரத்தை கேவலப்படுத்த பரத் செருப்பால் அடித்து, தென்னந்தோப்பை கொளுத்தி விடுகிறார். இந்தக் காட்சி படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வரவழைக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. நாயகி தன் அப்பாவிடம் இந்த விஷயத்தை மறைத்து விடுவதால் பரத்தைக் காப்பாற்றுகிறார். கதை என்றால் இது தான் கதை. திருமுருகன் வைத்திருக்கும் இந்தத் திருப்பம்தான் கதையின் சுவாரசியமான போக்கிற்கு உறுதுணையாக இருப்பது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

பொன்வண்ணனின் மூத்த மகனை நாயகியின் அப்பா கொன்று விடுவது கதையில் இருக்கும் மர்ம முடிச்சு. இதுவரை எத்தனையோ சினிமாக்கள் வந்து இருக்கிறது. எந்தச் சினிமாவிலும் இதுவரை சொல்லப்படாத மர்ம முடிச்சு இந்தப் படத்தில் தான் இருக்கிறது. நாயகி அப்பாவின் எதிரி இன்னொரு ஜாதிக்காரன் தான் பரத்திடம் இந்த உண்மையினைப் போட்டு உடைக்கிறார். அதைக் கேட்ட பரத், நாயகியின் அப்பாவை புரட்டி எடுக்கும் காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. விசில்களின் சத்தம் வின்னை முட்டுகிறது.

கதையின் முடிவாக மாணவர்களின் கூட்டத்தில் பரத் ஆற்றும் உரை, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையினை ஞாபகப்படுத்துகிறது. இப்படி ஒரு சீனை வைத்த திருமுருகன் தமிழ் சினிமாவில் எவரும் அசைக்க முடியாத , தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது கண்கூடு.

கதையில் பரத்திற்கு நண்பனாக முடியில் மணி கட்டி, இடுப்பில் மணிகளை தொங்க விட்டு வருபவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் பெயரைக் போட்டார்கள். ஆனால் வடிவேலுவைக் காணாமல் தியேட்டரில் படம் பார்த்த அனைவரும் வடிவேலு எங்கே, வடிவேலு எங்கே என்று சத்தம் போட்டார்கள். பின்னர் தான் தெரிந்தது இடுப்பில் மணி கட்டி நடித்தவர் தான் வடிவேலு என்று. ஹாலிவுட் தரத்திற்கு மேக்கப் கலை உயர்ந்து இருப்பது தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு முன்னேறியுள்ளது கண்டு வியப்புதான் மேலிட்டது.

படத்தின் முடிவும், பாடல்களும் சொக்க வைக்கும் ரகம்.. இந்த விமர்சனத்தில் பாதிக் கதையினைத் தான் சொல்லி இருக்கிறேன். மீதியை நீங்கள் தொலைக்காட்சியில் சாரி சாரி... தியேட்டரில் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டுகிறேன்.