வீட்டுக்கு அருகில் ஆப்பக்கடை உணவகம் ஒன்று இருக்கிறது. எப்போதாவது அந்தப்பக்கமாகச் செல்லும் போது இரண்டு ஆப்பமும், கொஞ்சம் கொண்டக்கடலைக் குருமாவும் சாப்பிட்டு வருவது வழக்கம். அந்த ஆப்பக்கடை அம்மாவிடம் ”என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்ட போது ”ஆயில்தான்” என்றார். ”என்ன ஆயில்?” என்றேன். ”ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறேன், நானும் அதைத்தான் சாப்பிடுகிறேன். பிரச்சினை இல்லை” என்றுச் சொன்னார்.
அதே போல மிட்டாக்கடையில் முருக்கு வாங்கிய போது அந்த அம்மாவிடம்,”என்ன ஆயில் பயன்படுத்துகின்றீர்கள்?” என வினவிய போது “ரீஃபைண்ட் ஆயில்தான், ஹோட்டல்களில் பயன்படுத்துகின்றார்களே அதே தான்” என்றுச் சொன்னார். லிட்டர் 65 ரூபாய் என்றார் அவர். ஹோட்டல்களில் கரண்டி கரண்டியாய்க் கொட்டுகின்றார்களே அதே ஆயில் தான் என்ற போது மனதுக்குள் ஃபாமாயிலைத்தான் சொல்கின்றார்கள் போல என நினைத்தேன்.
மூன்று மாதங்களுக்கு முன்பொருனாள் கவுண்டரின் தோட்ட வீட்டிற்குச் சென்றிருந்தேன். இளநீரைப் பருகிக் கொண்டிருந்த போது சமையல் எண்ணெய் பற்றிப் பேச்சு வந்தது. ஊரின் அருகாமையில் இருக்கும் செக்கில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், விலை குறைவாக இருப்பதாகவும் சொன்னார். ”விலை எப்படி குறைவாக கிடைக்கும்?” என்று கேட்டேன். ஆட்கள் கேட்க ஆட்டிக் கொடுக்கிறார்கள் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்து லிட்டர் கடலை எண்ணெய் வாங்கினேன்.
சமைக்கும் போது கடலை வாசனை வீசியது. நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் மனையாள். சாப்பிட்டவுடன் வயிறு மந்தமாக இருந்தது. சுத்தமான கடலை எண்ணெய் அல்லவா? அதனால் அப்படி இருக்கும் போல என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சரியாகவே இல்லை. இரண்டு நாட்கள் சமையலில் அந்த எண்ணெய் தான் பயன்படுத்தினார்கள். ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புரிந்தது.
எண்ணெய் பாட்டிலில் இருந்த நெம்பரைத் தொடர்பு கொண்டு “எப்படி விலை குறைவாக விற்க முடிகிறது?” எனக் கேட்டேன். ”வெகு சுத்தமான கடலை எண்ணெய் விலை அதிகம் சார். அதனால் கடலை எண்ணெயில் அரைவாசி காட்டன் சீட் எண்ணெய் கலந்து விற்பனை செய்கிறோம்” என்றார். அதாவது பருத்திக் கொட்டை எண்ணெய். ”வாங்குபவர்களிடம் சொல்லி விற்கின்றீர்களா?” என்றேன். ”ஆமாம்” என்றார். ஆனால் என்னிடம் அதுபற்றிச் சொல்லவே இல்லை. அது விற்பனைத்தந்திரம் என்று என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. பச்சை அயோக்கியத்தனம்.
பத்து வருடங்களுக்கு முன்பு ரைஸ்பிரான் ஆயில் என்று மார்க்கெட்டில் வந்தது. கொலெஸ்ட்ரால் இல்லை என்றார்கள். அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்து ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன். விவசாய வேலை முடிந்ததும் வயலில் எள்ளை விதைத்து, அறுவடை செய்து ஊரில் இருந்து நல்லெண்ணெய் வந்து கொண்டிருந்த போது எண்ணெய் பிரச்சினை எனக்கு வரவில்லை. விவசாயம் பொய்த்த பிறகு கடையில் எண்ணெய் வாங்க ஆரம்பித்த போதுதான் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆரம்பமாகின.
கடைகளில் பலகாரம் சுடவும், சிறிய ஹோட்டல்களில் பயன்படுத்துவதும் ரீஃபைண்ட் ஆயில் என்று அழைக்கக் கூடிய பருத்திக் கொட்டை எண்ணெய் தான் பயன்படுத்துகிறார்கள் போலும்.
யாரைத்தான் நம்புவதோ என்று தெரியவில்லை. உணவு என்கிற பெயரில் விஷத்தை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எண்ணெய் இல்லா சமையல் செய்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி வீட்டில் கொடுத்து விட்டேன். எதற்கு வம்பு? ஹாஸ்பிட்டல் பக்கம் சென்றால் சொத்தில் கால் வாசியைக் கட்டணமாக வசூலித்து விடுகின்றார்கள்.
தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் கிளைம் செய்ய முடியுமா? என்றால் அதெல்லாம் இங்கே ஆகாது என்கிறார்கள். எனக்காக கட்டப்படும் ப்ரீமியம் தொகை எங்குதான் போகின்றதோ தெரியவில்லை. கலப்படத்தைக் கூட கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறார்கள். தமிழகம் இந்தளவுக்கு கீழான நிலைக்குச் செல்லும் என நினைக்கவே இல்லை. வாக்குச் சுத்தம் என்று முன்பெல்லாம் சினிமாவில் பேசுவார்கள். இப்போது வாக்கு அசுத்தமாகி விட்டது.
4 comments:
எண்ணெய் பிரச்சனை பெரிதாய் இருக்கு நம்மூர்ல
நண்பரே,
ரீஃபைன்ட் ஆயிலில் 75 விழுக்காடு கலந்திருப்பது, பெட்ரோலியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் 'மினரல் ஆயில்' இந்த மினரல் ஆயில் பார்க்க கண்ணாடி போல மென்மையாக இருக்கும். இதில் எண்ணெய்க்குத் தகுந்தவாறு, தேவையான கலர் மற்றும் ஆயில மணத்தைக் கொடுக்கும் எஸ்சன்ஸ் கலந்து விற்கிறார்கள்.
Good post
Now our farmers are not cultivating normal cotton crop..they use GM (genetically modified) cotton crop,this may not suitable for food stuff.. beware of cotton seed oil and paruthipal
AgriMarruthu
Vedapatti
Coimbatore
அண்ணா நலமா.அண்ணி ரித்திக்,அம்மு நலம்தானே.தமிழ் எழுதகற்றுக்கொடுத்த உங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.தாம்தமாக பதிவுகளை படிக்க நேர்ந்தது.எண்ணை சிரிது மாரினாலும் உடம்புக்கு ப்ரச்சனைதான்.யாருமே சொன்னபடி நடப்பதில்லை.சிலரைத்தவிர.ஆஹா வீட்டில் நாய் வளர்கீர்களா.படம் போடவும்.நீங்கள் வளர்ப்பதை பார்த்து ஆறுதல் கொள்கிறேன். இங்கு வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை.வாழ்த்துக்கள்
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.