குரு வாழ்க ! குருவே துணை !!

For Property Consultation (All Work) ::::: Phone : 9600577755 ::::: Email :covaimthangavel@gmail.com
Showing posts with label வாழ்வில் சில தருணங்கள். Show all posts
Showing posts with label வாழ்வில் சில தருணங்கள். Show all posts

Monday, April 27, 2009

குடி !

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த இச்சம்பவம் ஒரு உண்மைச் சம்பவம். எனது நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். பிறந்த நாள் என்றால், தஞ்சாவூர் சென்று படம், ஹோட்டல், தண்ணீர் என்று கொண்டாடுவார்கள். வழக்கம் போல புது துணி உடுத்தி கம கமவென மணக்கும்படி வாசனை திரவியங்கள் பூசி நண்பர்கள் புடை சூழ ஒரு சேஞ்சுக்காக தஞ்சாவூர் செல்லாமல் அம்மாப்பேட்டைக்கு சென்றார்கள். நான் அவர்களோடு செல்லவில்லை.

நன்கு குடித்து விட்டு, சாப்பிட்டு விட்டு போதையில் பஸ் ஏறி இருக்கிறார்கள். பஸ்ஸின் பின் புறப் படிக்கட்டில் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன். ஏதோ ஒரு வளைவில் பஸ் வேகமெடுக்க, தடுமாறி பஸ்ஸின் படி வழியாக கீழே விழுந்து விட்டான். நண்பர்கள் பதறியடித்துக் கொண்டு பஸ்ஸை நிறுத்தி அவனைத் தூக்கி வந்து சீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
“எனக்கு ஒன்றுமில்லையடா” என்று சொல்லி சிரித்திருக்கிறான்.

சற்று நேரத்தில் அவனை அணைத்துப் பிடித்திருந்த மற்றொரு நண்பனின் தோளில் ஈரமாக உணர, என்னவென்று பார்த்திருக்கிறான். பின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடி சட்டையை நனைத்திருக்கிறது.

”ரத்தம்டா“ என்று மற்றொரு நண்பன் கூவ,

“ ஆ.. ரத்தமா” என்று பதறியபடி பின் தலையைத் தொட்டுப் பார்த்தபடி, ”அய்யோ” என்று அலறி இருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன்.

“டேய்... என்னை எப்படியாவது காப்பாற்றி விடுடா. வீட்டில என் அப்பாவும், அம்மாவும் எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்கடா, எப்படியாவது காப்பாற்றி விடுடா” என்று சொல்லியபடியே இவனது கையை இறுக்க பிடித்தவாறு மயங்கி போனான்.பஸ்ஸை வேகமாகச் செலுத்தி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.

ரத்தத்தையும் நிறுத்த முடியவில்லையாம். ஆல்கஹால் அவனது ரத்தத்தில் கலந்து இருந்ததால் ரத்தம் ஏற்ற முடியவில்லையாம். மயக்கத்திலேயே பிறந்த நாள் அன்று தன் இன்னுயிரை இழந்தான் என் நண்பன்.

காரில் அவனை எடுத்துக் கொண்டு சென்று அவர்களது வீட்டை அடைந்த போது நடந்ததை எழுதினால் படிக்கும் நமக்கு உயிரே போகும் படியாக இருக்குமென்பதால் விட்டு விடுகிறேன்.

நண்பன் கேக் வாங்கி வருவான், சாக்லெட் கொண்டு வருவான் என்று நண்பர்களுக்காக காத்துக் கிடந்தபோது போன் வந்தது. நண்பன் இறந்ததைச் சொன்னார்கள். இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து நின்றது.

தேவையா இந்தக் குடி !

குறிப்பு : தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் மகன் (வெகு அழகானவர்) நான் படித்த கல்லூரியின் மாணவர். இன்று அவரின் நினைவாக பஸ் நிறுத்துமிடம் கட்டி இருக்கிறார்கள். காரணம் பைக் ஆக்சிடென்ட்.

Tuesday, November 18, 2008

வாழ்வில் சில தருணங்கள் இறுதிப் பகுதி

நிர்வாகத்தில் தலைவராகப்பட்டவர், தனது நிர்வாகத்தின் கீழ் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் பொருட்டு தனக்கென சில அடிப்பொடிகளை நியமித்து வைப்பார். அந்த அடிப்பொடிகளின் வேலை உளவு பார்ப்பது. தான் என்ன செய்கிறோமென்று அறியாமலே தலைவரிடம் அவ்வப்போது நிர்வாக உறுப்பினர்களின் நடவடிக்கைகளை அவரவருக்குத் தெரிந்த முறையில் சொல்லி வைப்பார்கள். உன்னால் தான் நிர்வாகம் சிறப்புற நடக்கிறது. நீதான் நிர்வாகத்தின் அச்சாணி என்று நிர்வாகி சொல்லி வைக்க, அந்த வார்த்தைகளே அவர்களுக்குப் போதுமானதாய் இருக்கும். இது ஒரு முறை. அனைத்து இடங்களிலும் நடக்கும் முறையும் கூட.

இன்னொரு முறையும் இருக்கிறது. இதில் அதிக ரிஸ்க் இருக்கிறது. இம்முறையில் உடனுக்குடன் தகவல்கள் சேகரிக்கப்படும். நிர்வாகி இரண்டு விதமான அதிகாரமிக்க பதவிகளை ஒரு பதவிக்காக உருவாக்குவார். ஒருவருக்கொருவர் பிடிக்காதவர்களை அப்பதவிகளில் நியமிப்பார். பிரச்சினை முடிந்தது. ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுக்கும் வேலையினைச் செய்வர். இதில் என்ன பிரச்சினை என்றால் இருவரும் இணைந்து விட்டால் நிர்வாகிக்கு ஆப்பு அடித்து விடுவர். அப்படி இணைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் பணி செய்த இடத்தில் நடந்து வந்த முறைதான் இரண்டாவதாக நான் சொன்னது. தாளாளர் என்னைப் பற்றி குறை சொல்வோரிடம் அவன் இங்கு சரிப்பட்டு வரமாட்டான் போல இருக்கே, அவனை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்று சொல்லி வைப்பார். குறை சொல்லுபவன் மகிழ்ச்சியில் துள்ளுவான். ஆனால் மறு நாளே இருவரும் சென்னைக்கு கிளம்பி விடுவோம்.

என்னிடம் ஏம்பா, பள்ளியில் ஏதாவது நடந்ததா என்று கேட்பார். நான் சிரித்துக் கொண்டே, அவரவருக்குத் தெரிந்ததை அவரவர்கள் செய்கிறார்கள் என்றுச் சொல்லி முடித்து விடுவேன். மற்றவர்களைப் பற்றிய குறைகளை அவரிடம் என்றுமே சொன்னது கிடையாது. ஆனால் வெளியில் இருந்து பார்பவர்களுக்கு, நான் மற்றவர்களைப் பற்றி போட்டுக் கொடுத்து விட்டு வருகிறேனென்று தோன்றும். ஆனால் அதைப் பற்றிய கவலை எனக்கு எப்போதுமே வந்தது கிடையாது.

பிரின்ஸ்பல் என்னை எப்படியாவது அவ்விடத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டுமென்றும், அப்படி நான் அவ்விடத்தில் நீடித்தால் அவரை எவரும் மதிக்கமாட்டார்கள் என்றும் எண்ணி விட்டார். எனது சக ஆசிரியர்களுடன் நேருக்கு நேர் துவேஷத்தை வளர்க்கும் வேலையினையும், எனது அறைக்கு எவரும் வரவே கூடாது என்ற உத்தரவினையும் இட்டார். ஆனால் என்னை நேரில் பார்க்கும் போது உருகுவார். என் வாழ்வில் சந்தித்த மிக மோசமான நபராக இந்தப் பிரின்ஸ்பல் இருந்தார். அவர் தற்பொழுது அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மனிதர்களில் மகா மட்டமான மனிதன் எவரென்றால் என் வாழ்வில் இவரைத்தான் உதாரணம் காட்டுவேன்.

மாதம் ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை வேலை. மனதுக்குள் மருகிக் கொண்டே வேலைபார்க்கும் ஆசிரியர்களை இவர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அது ஹிட்லர் யூதர்களுக்குச் செய்த கொடுமையினை விடக் கொடியதாகும். அடிமையினைப் போல நடத்துவார் இந்தப் பிரின்ஸ்பல். பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் தொடர ஆரம்பித்த வேளையில் ஆசிரியர்களைக் குறைக்கிறேன் பேர்வழி என்று எனது நண்பன் ஒருவனை வேலையில் இருந்து நீக்கி விட்டார். இவ்விஷயம் எனக்குத் தெரியாது. தாளாளரிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை. அவரும் தலையாட்டி விட்டார்.

நண்பன் என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். தாளாளரிடம் நேரில் அழைத்துச் சென்றேன். விஷயத்தைச் சொன்னேன். தாளாளர் கொதித்து விட்டார். யார் வேலை கேட்டு வந்தாலும் வேலை கொடுக்கும் நிறுவனத்தில் வேலையினை விட்டு துரத்துவதா என்று கோபத்தில் கத்தி விட்டார். பிரின்ஸ்பல் அழைக்கப்பட்டார். அறிவிருக்கா உனக்கு என்று அனைவரின் முன்னிலையில் தாளாளர் பிரின்ஸ்பலைக் கேட்க ஆள் நடுங்கி விட்டார். பயந்து நடுங்கி கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. பிரின்ஸ்பலுக்குத் திக்கு வாய். இச்சம்பவத்தில் பேசவே முடியாமல் திணற, என் நண்பனுக்கு மீண்டும் வேலையும், வேலையினை விட்டு நீக்கிய அனைவருக்கும் திரும்பவும் வேலை கொடுக்கப்பட்டது. அச்சம்பவத்தில் இருந்து தங்கவேல் சொல்வதைக் கேட்டு நட என்று வாய் மொழி உத்தரவும் இடப்பட்டது.

சமயம் பார்த்து வைத்த ஆப்பில் ஆடிப்போய்க் கிடந்தார் பிரின்ஸ்பல். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வாழ்வில் எதனையோ தொலைத்து விட்டது போல திரிந்து கொண்டிருந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு அவருக்கு அரசு வேலை வாய்ப்பு வர ராஜினாமா செய்துவிட்டார். பாவம் இப்போது யார் யாரெல்லாம் அவரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கின்றார்களோ தெரியவில்லை.

இப்படி எழுத இன்னுமெத்தனையோ சம்பவங்கள் என் வாழ்விலே நடந்திருக்கின்றன. நடந்து கொண்டுமிருக்கின்றன.

வாழ்வில் சில சம்பவங்கள் பதிவில் நான் சுட்டிக் காட்ட விரும்புவது ஒன்றுமில்லை. மேனேஜ்மெண்ட் எப்படி நடத்துகிறார்கள் ? நாமெல்லாம் எப்படி மேனேஜ்மெண்டினால் பந்தாடப்படுகிறோம் என்பதைப் பற்றித்தான்.

மனிதர்களில் குறையொன்றுமில்லாதவர் எவருமில்லை. குறையே இல்லாத மனிதர்கள் இருந்தால் வாழ்வில் சுவாரசியங்கள் அற்றுவிடும். எனது வாழ்வில் வந்து சென்ற மனிதர்களில் இவர்களைப் போன்றோரும் உங்கள் வாழ்விலும் வருவர்.

வாழ்க்கை என்பது சம்பவங்களால் கட்டமைக்கப்பட்டது. இச் சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவன் புத்திசாலி. புரியாதவன் வாழ்க்கையினை இழந்தவனாவான்.

Friday, November 14, 2008

வாழ்வில் சில தருணங்கள் – 3

அது அட்மிஷன் டைம். எல்கேஜிக்கு எண்டரன்ஸ் எக்ஸாம் வைத்துதான் தேர்வு செய்வார்கள். இதில் பிரின்ஸ்பாலுக்கு வேண்டியவர்கள், ஆசிரமத்துக்கு வேண்டியவர்கள் அவருக்கு வேண்டியவர்கள், இவருக்கு வேண்டியவர்கள் என்று வரும் ரெகமெண்டேஷன்களுக்கு அட்மிஷன் நிச்சயம் உண்டு. மேற்படி எவருக்கும் வேண்டாதவர்களுக்குத்தான் (சிபாரிசு இல்லாதவர்களுக்கு) எக்ஸாம் வைப்பார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமூகத்தில் ஐகானாக (முக்கிய பிரஜையாக) இருப்பவர்கள் அல்லது அப்படி இருப்பதாக நடிப்பவர்களின் உதவி இம்மாதிரி சமயங்களில் உதவும்.. ஆகையால் மக்களே நீங்களும் இப்படிப்பட்ட ஐகான் ஆக இருப்பவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒரு நாள் உதவும்.(சிபாரிசுக்கு அல்ல)

நான் தினமும் பள்ளியின் தாளாளருடன் ஒரு மணி நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருப்பேன். அடிப்பொடிகள், அல்லக்கைகளை மீறி தாளாளருடன் தனிமையில் நான் உரையாடிக் கொண்டிருப்பது அங்கிருக்கும் ஆசிரமவாசிகளுக்கு வயித்தெரிச்சலை உண்டு பண்ணும் என்பது எனக்குத் தெரியும். இதனால் எனக்கு உருவான பிரச்சினைகளை எல்லாம் எழுதத் துவங்கினால் கிட்டத்தட்ட பத்தாயிரம் பக்கங்களுக்கு வரும். தினமும் ஒரு பிரச்சினையைக் கிளப்புவார்கள். என்னைப் பற்றிய வதந்திகளும் குறைவில்லாமல் எழுப்பப்படும். தாளாளரிடம் அனைத்தும் பல வித ஜோடனைகளோடு பலப்பல விதமாகச் சொல்லப்படும். நான் ஆசிரம வாழ்க்கையினை விட்டு வெளிவரும் காலம் வரை வதந்திகளைப் பற்றி ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. அவருக்குத் தெரியும் என் மீது எரிச்சல் கொண்டவர்களால் உருவாக்கப்படும் வதந்திகள் அவைகள் என்று. ஆனாலும் என் மீது குற்றம் சுமத்தியவரின் முக்கியத்துவம் கருதி, ஒரு நாள் விசாரணையும் நடந்தது. அந்த நிகழ்ச்ச்சியும் எனது வளர்ச்சிக்கு உதவியதே தவிர குறையவில்லை.

இன்றைக்கு பள்ளியில் என்ன வகுப்பு எடுத்தீர்கள்? என்ன நீதிக் கதைகள் சொன்னீர்கள்? என்பது போன்ற பல விஷயங்கள், விவேகானந்தரின் ஆன்மீக உரை, ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கைச் சரிதம், சாரதா தேவியாரின் அருள் போன்றவற்றைப் பற்றிச் சொல்லுவார். ஆவலுடன் கேட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு நான் ஏதோ போட்டுக் கொடுக்கும் வேலை செய்து வருவதாக நினைப்பார்கள். அவரவருக்குத் தெரிந்த விஷயத்தைப் பற்றித்தானே நினைப்பார்கள்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் அட்மிஷன் நடந்த நாளன்று தாளாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பள்ளியில் நடந்த எண்டரன்ஸ் எக்ஸாமுக்கு கம்ப்யூட்டரில் அட்மிஷன் ஃபார்ம் தயார் செய்து அதை ஒன்று ஐந்து ரூபாய்க்கு விற்ற வகையில் 800 ரூபாய் வருமானம் வந்தது என்று சொன்னேன். செலவு 50 ரூபாய் இருக்குமென்றும், வருமானம் 750 ரூபாய் என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். புளகாங்கிதம் அடைந்தார். கணக்காள சாமியார் அந்த நேரம் பார்த்து அன்றைய கணக்கு நோட்டினைக் கொண்டு வர, அவரிடம் தங்கவேலால் ஆசிரமத்திற்கு 750 ரூபாய் இன்றைக்கு வருமானம் கிடைத்திருக்கிறது என்று சொன்னார். அவர் திரு திருன்னு விழித்தார். அந்தப் பணம் பள்ளிக் கணக்கில் வரவில் வந்திருக்கிறதா என்று பார்க்க, மிஸ்ஸிங்.

”எங்கே அந்த வரவுக்கான எண்ட்ரி?” என்று கணக்காள சாமியாரிடம் கேட்க அவர் விழிக்க, ”இது தான் நீங்க செய்யும் அட்மினிஸ்ட்ரேஷனா?” என்று கோபமாகக் கேட்க, அந்த நேரத்தில் இருந்து கணக்காள சாமியாருக்கு எதிரியாகி விட்டேன் அந்தப் பணம் வேறு எங்கேயோ சென்று விட்டது என்பதைப் புரிந்து கொண்டார் தாளாளர்.

”தங்கவேல், சாப்பாடு ஆயிடுச்சா” என்று என்னிடம் கேட்க, ”இன்னும் இல்லை” என்றேன். ”சரி,சாப்பிட்டு விட்டு தூங்குங்க நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொன்னார். புரிந்து கொண்டு வெளியில் வந்து விட்டேன்.

அன்றைக்கு விடிய விடிய கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டன. பிரின்ஸ்பால் அழைத்து வரப்பட்டார். இவ்விஷயம் ஆசிரமம் முழுவதும் பரவி விட்டது. மறு நாள் பள்ளிக்குச் சென்ற போது ஆசிரியர் எவரும் என்னிடம் பேசவே தயங்கினர். வைஸ் பிரின்ஸ்பல் ”என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க” என்றார். ”சார், நான் சாமியிடம் தினமும் பேசிக்கொண்டிருப்பேன். இன்றைக்குப் பள்ளியில் எத்தனை அட்மிஷன் என்று கேட்டார். அப்போது இந்த விஷயத்தைப் பற்றியும் சொன்னேன். இதில் தவறு நடந்திருப்பது உண்மையில் எனக்கு துளிகூட தெரியாது. நான் செய்தது தப்பா என்று நீங்களே சொல்லுங்கள்” என்றேன்.

நடந்ததைச் சொன்னேன். விளைவு. பிரின்ஸ்பாலின் ராஜினாமா. இதில் என் தவறென்ன இருக்கிறது. ஆனால் இருக்கிறது என்றார்கள் ஆசிரமத்தில் இருந்தோர். அதைப் பற்றிய கவலை எனக்கு கிஞ்சித்தும் கிடையாது. பிரின்ஸ்பல் ராஜினாமாவுக்கு அடுத்து எனக்கு வந்த பிரச்சினைதான் பெரியது. வைஸ் பிரின்ஸ்பலுக்கு பிரின்ஸ்பல் போஸ்ட்டின் மீது கண். பிரின்ஸ்பல் போஸ்ட் கிடைக்காவிட்டால் அவருக்குப் பிரஸ்டீஜ் பிரச்சினை வேறு என்றுச் சொன்னார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். விடிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எனது அறைக்கு வந்து விடுவார். நான் தாளாளரிடம் ரெகமெண்டேஷன் செய்தால் தான் அந்தப் போஸ்ட் கிடைக்குமென்று அவருக்கு எண்ணம். ஆனால் அது எனக்கு எவ்வளவு தர்ம சங்கடத்தைத் தந்தது என்பது எனக்குத் தான் தெரியும். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்க மாட்டேன் என்றுச் சொல்லி விட்டார். இரண்டு மாதங்கள் தொடர்ந்து விடிகாலையில் அறைக்கு எழுதருளி விடுவார். எனக்கு மிகச் சிரமமாக இருக்கும்.

நான் ஆசிரமத்தில் தான் வாழ்ந்தேன் என்றாலும் ஆசிரமக் கட்டுப்பாடுகள் என்னைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டேன். விடிகாலையில் பிரேயர், பஜன், மாலையில் ஆரத்தி, பஜன்ஸ் இவைகளில் நான் கலந்து கொள்வது கிடையாது. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. ஆன்மீகம் என்பது மற்றவர்களின் மீது பலன் எதிர்பாரா அன்பைச் செலுத்துவது என்று உறுதியாக இன்றும் நம்புகிறவன். அதன்படி நடந்து வருகிறவன் அடியேன். இந்தப் பஜனைகள், பாடல்கள், விபூதி அணிவது இன்னபிற மத அடையாளங்கள் ஏதுமின்றி மனிதனாக இருக்க விரும்புவதால் மேற்படி சமாச்சாரங்களில் விருப்பம் இல்லை. ஆனாலும் சில சமயங்களில் ஏற்றுக் கொள்வேன். நாம் விரும்பாவிட்டாலும் சிக்னலில் நிற்பது போன்ற சமாச்சாரம் இது.


தாளாளரிடம் வைஸ் பிரின்ஸ்பாலால் நான் அடையும் சிரமம் பற்றிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பேன். அவர் சிரித்து வைப்பார். எனக்கு தலை சுற்றும். திடீரென்று ஒரு நாள்,

“ஏம்பா, தங்கவேல், வைஸ் பிரின்ஸ்பாலை பிரின்ஸ்பாலாக பதவி உயர்த்தி விடலாமா” என்று கேட்டார்.

”உங்க விருப்பம் ” என்றேன்.

“உங்களைத் தினமும் தொந்தரவு செய்ய மாட்டார் பாருங்கள்” என்று சொல்லிச் சிரித்தார்.

அதற்குப் பிறகு சில தனிப்பட்ட உரையாடலை நிகழ்த்தினோம். முடிவில் அவருக்குப் பதவி உயர்வு தரலாமென்று முடிவு செய்தார்.

”நீங்களே அவரிடம் சொல்லி விடுங்கள்” என்றார் தாளாளர்.

மகிழ்ச்சியுடன் அதை வைஸ் பிரின்ஸ்பாலிடம் பகிர்ந்து கொண்டேன். வைஸ் பிரின்ஸ்பால் இப்போது பிரின்ஸ்பாலாக பதவி உயர்வு பெற்ற அடுத்த நாளில்,
எனக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளியில் நான் ஆசிரியர்களை அணி திரட்டி வருவதாகவும், பாலிடிக்ஸ் செய்வதாகவும் தினமும் தாளாளரிடம் ஓதிக் கொண்டிருந்தார் பிரின்ஸ்பல். தாளாளரிடம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என்னிடம் வந்து விடுமென்பது அவருக்குத் தெரியாது. எனக்கு படு பயங்கரமாக தொல்லைகள் செய்ய ஆரம்பித்தார் புது பிரின்ஸ்பல். இவை அனைத்தும் தாளாளரிடம் பகிர்ந்து கொள்வேன். அவர் தரும் தொல்லைக்கு எப்படி ரீயாக்ட் செய்வது என்று தாளாளர் சொல்லித் தருவார். இவருக்கு ஒரு என்கவுண்டர் கொடுக்கலாமென்று முடிவெடுத்தேன். அது எப்படி ?

பதிவு விரைவில் வரும்.....

Saturday, November 8, 2008

வாழ்வில் சில தருணங்கள் – 2

பிரின்ஸிபல் அறையில் ஒரு சாமியார் (தாளாளர் சுவாமிக்கு அடுத்த பொசிஸனில் இருப்பவர் என்று சொன்னார்கள் அப்போது) அவருடன் ஒரு பிரதர் (சாமியாராகும் முன்பு பயிற்சியில் இருப்போரைச் சொல்லும் வார்த்தை) ஒருவரும் உட்கார்ந்திருந்தார்கள். பிரின்ஸிபல், வைஸ் பிரின்ஸிபல் மற்றும் சில ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

அந்த சாமியார், என்னைப் பார்த்தார். கருப்புகலரில் வெள்ளைக் கோடுகள் போட்ட சட்டை அணிந்திருந்தேன்.

”ஏம்பா, நீ எங்கு இருக்கிறாய் என்று தெரிகிறதா“ என்று கேட்டார்.

“ஏன் சார்? ஆஸிரமத்தில் இருக்கிறேன்” என்றேன்

“சாருன்னு கூப்பிடக்கூடாது. சாமின்னுதான் சொல்லனும். கருப்புக் கலரிலெல்லாம் சட்டை போடக்கூடாதுன்னு தெரியுமா உனக்கு?” என்றார்.

”தெரியாதுங்க” என்றேன்.

அந்த நிமிடத்தில் இருந்து அவர் எனக்கு அலர்ஜியாகி விட்டார். முதல் விதை. மரமாகிவிட்டது மனதுக்குள். நான் ஆஸிரமத்தில் இருந்து வெளிவரும் வரையில் அவரும் என்னை வெறுத்தார். நான் அவரை பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்.
எனது எதிர்ப்பு என்பது அவர் சொல்வதைக் கேட்பதில்லை என்பது மட்டும் தான். ஆனால் அவரின் எதிர்ப்பு என்னை எப்படியாவது ஆஸிரமத்தில் இருந்தும், தலைமைச் சாமியாரின் மனதில் இருந்தும் விரட்டுவது என்பது தான். அதை அவர் பொழுது போக்காக செய்தார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அசராமல் என்னை மட்டம் தட்டுவார். ஆனால் அடுத்த நொடியில் ஏமாற்றமடைவார். அம்மாதிரி இடங்களில் சரியான பதிலடி கொடுப்பேன். மேலும் அவர் என்னைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என் காதிற்கு வந்து விடுமென்பது பாவம் அவருக்குத் தெரியாது. அப்படிப்பட்ட அரசியல் கொண்டது ஆசிரம வாழ்க்கை.

இப்படி என்மேல் வன்மம் கொண்ட சாமியாருக்கே ஒரு தடவை மதிப்பும் மரியாதையும் பெற்று கொடுத்த சம்பவம் பற்றி விரைவில் எழுதுகிறேன். அதன் பிறகும் அவர் திருந்துவதாயில்லை. ஆனால் அவரின் எனக்கெதிரான எந்தச் செயலும் என்னைப் பாதிப்பது இல்லை.

சரி விசயத்துக்கு வருகிறேன். மற்றவன் சுதந்திரத்தில் தலையிடுபவருக்கு எவனுக்கும் தகுதியும் இல்லை அருகதையும் இல்லை. அதை தவறு என்று நினைப்பவன் நான். ஆனால் அவர் சொன்ன கருப்புச் சட்டை விசயத்தில் எனக்கு உடன்பாடு இருந்தது. இருக்குமிடம் தெரிந்து அதற்கேற்ப வாழக்கற்றுக் கொள்பவன் தான் ஆறறிவு படைத்த மனிதன். உடனடியாக சட்டையினை வேறு யாருக்காவது கொடுத்து விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நான் போட்டிருந்த சட்டையின் கலரில் மத எதிர்ப்பு உணர்வினைக் கண்டார் போலும் அந்தச் சாமியார்.

அவர் ஒரு தீவிரமான இந்துத்துவவாதி என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். அந்த இந்துத்துவ அடையாளம் அவர் வயிற்றுக்குச் சாப்பாடும், இந்துச் சமுதாயத்தில் சாமியார் என்ற பெயரினை மட்டுமே பெற்றுத் தந்ததையும் மட்டுமே அவர் பலனாகக் கண்டார் என்பதையும் எனக்கு அவரின் சில வருட வாழ்க்கை உணர்த்தியது.

”புரபஸரை நீ (மரியாதையைக் கவனியுங்கள்!!) என்ன சொன்னாய்?” என்று கேட்க, நடந்ததை விபரமாகச் சொன்னேன்.

”நீ அவரை அவமரியாதையாகப் பேசியும், பிரின்ஸிபாலிடம் அவரைப் பற்றி தவறாகச் சொல்லி அவருடன் சண்டைப் போட வைத்ததாகவும் அல்லவா பெரிய சாமியிடம் (டிவோட்டி)புரபஸர் சொல்லி இருக்கிறார்” என்றார்.

‘அடப்பாவிகளா இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்’ என்று நினைத்துக் கொண்டு,

”அப்படியெல்லாம் நான் எதுவுமே பேசலைங்க. நீங்க பிரின்ஸிபாலிடம் கேட்டுக் கொள்ளுங்கள், அந்த (டிவோட்டி)புரபஸர் வந்து என்னிடம் சண்டை போடும் போது அருகில் இருந்த ஆயாம்மாவையும் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னேன்.

”நீ செய்தது உண்மையா என்று கேட்டு அறிந்து கொண்டு வாருங்கள் என்றும். அதன் பின் அந்தப் பையனை இங்கு இருக்கச் சொல்வதா வேண்டாமா என்று முடிவெடுப்போம் என்றும், ஏனென்றால் அந்தப் (டிவோட்டி) புரபஸர் புரபஸரால் நமக்கு பல நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் கல்லூரி கணிப்பொறி டிபார்ட்மெண்ட்டையும் அவர்தான் கவனித்துக் கொள்கிறார் என்றும் என்னிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்“ என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பேசாமல் இருந்தேன்.

பிரின்ஸிபாலிடம் பேசினார்கள். அப்போது தான் எனக்கு ஒரு விசயம் தெரிந்தது.

அந்த டிவோட்டி புரபஸர் திறந்து கிடந்த கம்ப்யூட்டர் அறைக்குச் சென்று யாரிடமும் சொல்லாமல் அவரின் மேற்படிப்புக்கான புராஜக்டை டைப் செய்து கொண்டிருந்திருக்கிறார். அந்த வழியாகச் சென்ற போது யார் உள்ளே இருக்கிறார்களென்று எட்டிப் பார்த்த பிரின்ஸிபாலுக்கு இவரைப் பார்த்ததும் உச்சத்தில் ஏறிவிட்டது.


யாரைக் கேட்டு உள்ளே வந்தீர்கள் என்று இவர் கேட்க, யாரைக் கேட்கனும் என்று இவர் பதில் கேள்வி கேட்க, என்னையல்லவா நீங்கள் கேட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இவர் சொல்ல, வார்த்தை தடிக்க, அடிதடி அளவுக்குப் பிரச்சினையாகி விட்டது. பிரின்ஸிபல் கோபமாகக் கத்த வேறு வழியின்றி வெளியில் வந்த (டிவோட்டி) புரபஸர் அந்தக் கோபத்தில் சாமியிடம் என்னைப் பற்றி ஏகத்துக்கும் போட்டுக் கொடுத்து விட்டு இனிமேல் ஆசிரமத்திற்கு வரவே மாட்டேன் என்று கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றதை அறிந்து கொண்டேன். ஆனால் நடந்தது வேறு (டிவோட்டி) புரபஸர் சொல்லியது வேறு என்பதை இந்தச் சாமியாரும், பிரதரும் தெரிந்து கொண்டார்கள். அதை நன்கு விசாரித்து உறுதி செய்து கொண்டார்கள்.


”ஆசிரமத்தில் இருந்து கொண்டு, கருப்புக் கலர் சட்டையெல்லாம் போடக்கூடாது” என்று மறுபடியும் சொல்லி அனுப்பினார் அந்தச் சாமியார். (மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ? அதான் ஒரு தடவை சொல்லிவிட்டாரே. திரும்பவும் சொல்லிச் சொல்லி கடுப்பேத்துறாரே என்று எண்ணிக் கொண்டேன். மிகக் கவனமாக அந்தச் சட்டையினை பாபுவிடம் கொடுத்து விட்டேன். அவன் போட்டுக் கொண்டு திரிந்தான். அதை அந்தச் சாமியார் பார்த்துக் கொண்டிருந்தார். அவனை ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு காரணமும் இருக்கிறது. அவர் ஒன்றும் சொல்ல இயலாமல் கோபத்துடன் அவனைப் பார்ப்பதை பார்த்ததும் எனக்குள் ஒரு நிம்மதி பரவியது இன்றும் அச்சாணியாய் பதிந்து இருக்கிறது. என்ன ஒரு குரூர மனப்பான்மை எனக்கு அப்போது இருந்தது என்று பாருங்கள். (என் அரசியல் எப்படி இருக்கிறது பாருங்கள். யாராவது ரெகமெண்ட் செய்தால் இப்படிப்பட்ட அரசியல் கூட செய்யலாமென்றிருக்கிறேன்) சரி இந்தப் பாபு யாரென்று தெரியவில்லையே என்று நினைக்கிறீர்களா? சொல்கிறேன். பெரிய சாமி பாசத்துடன் வளர்த்த புத்தி சுவாதீனமில்லாத அழகான பையன்)


கதை எங்கெங்கோ போய் விடுகிறது பாருங்கள். மகாபாரதம் படித்து வளர்ந்தவன் ஆதலால் அடிக்கடி கிளைக் கதைகளை இடையில் நுழைத்து விடுகிறேன். நுழைப்பது என்பதில் தான் இன்பம் என்று உணர்ந்திருக்கும் மானிட வம்சத்தில் பிறந்ததன் காரணமாகக் கூட இருக்கலாம்.


அன்று இரவு. பெரிய சாமியாரிடம் பேசிக் கொண்டிருந்த போது மேற்படி விஷயம் அவரிடம் தெளிவாகச் சொல்லப்பட்டதையும், ஏன் இந்தப் (டிவோட்டி) புரபஸர் என்மீது இவ்வளவு வன்மம் கொண்டிருக்கிறார் என்று சாமி கேட்டதையும் கேள்விப்பட்டேன்.


”என்னப்பா, (டிவோட்டி) புரபஸர் உன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி இருக்கிறார்” என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்டார்.


மீண்டும் விபரங்களைச் சொன்னேன். அவரிடம் சொல்லப்பட்ட விபரத்தோடு நான் சொல்லியவற்றையும் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொண்டார் போலும். அன்றிலிருந்து பெரியசாமியாரின் அன்பு என்மீது கொட்டத் துவங்கியதை நான் பர்ஸனலாக தெரிந்து கொண்டேன்.


“நீங்கள் பாட்டுக்கு எப்பவும் போல பணி செய்து வாருங்கள்” என்று சொல்லி தேங்காய் லட்டுவைத் தந்தார்.


சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அறைக்குத் திரும்பி விட்டேன்.


இச்சம்பவத்தில் இருந்து மிகப் பெரிய பாடமொன்றினைக் கற்றுக் கொண்டேன். என்எஸ்எஸ்ஸெசில் ஆசிரிய பணி செய்து வந்த ஒருவர், என்னை பிரின்ஸ் என்றுதான் அழைப்பார்.

இச்சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர் என்னிடம் சொல்லியது, ”ஆகட்டும், பார்க்கலாம் என்ற இரு வார்த்தைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருங்கள் பிரின்ஸ்” என்றார்.


இவ்விரண்டு வார்த்தைகளுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் தானே.

இந்தப் பிரச்சினையில் புரபஸரின் மற்றவரை மதிக்கத் தெரியாத இயல்பும் என்எஸ்எஸ் ஆசிரியர் சொல்லிய ஆழமான, நுட்பமான பார்வையும், அந்தச் சமயத்தில் நானெப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுருத்திய பாணியும், எனக்கு மிகப்பெரிய உயர்வினைத் தந்தது என்பதுதான் உண்மை.


எனக்குப் பிரச்சினை என்ற போது உண்மையைச் சொன்ன பிரின்சிபாலின் வேலைக்கு எனக்குத் தெரியாமலே வேட்டு வைத்தேன் என்பது அடுத்த பதிவு. அது எப்படி ?

விரைவில்.....

வாழ்வில் சில தருணங்கள் – 1

மெட்ரிக் பள்ளியில் வேலையில் சேர்ந்த புதிது. ஒரே ஒரு கணிப்பொறி மட்டும் தான் இருந்தது. அதற்கென்று தனியாக ஆசிரியர் ஒருவர் இருந்தார். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே கணிப்பொறி பயிற்சி. அதுவும் வாரத்தில் இரண்டு முறை மட்டும் தான். மற்ற நேரங்களில் பள்ளிக்குத் தேவையான அனைத்து விபரங்களையும் கணிணியிலேயே செய்து கொடுக்க ஆரம்பித்தேன். கணிணியில் வேலை செய்கிறேன் என்பதால் எல்லோருக்கும் என் மீது ஒரு கிரேஸ். பிரின்ஸிபால், வைஸ் பிரின்ஸிபால், அசிஸ்டண்ட் பிரின்ஸ்பால் அனைவரும் பெரும்பாலும் என்னோடுதான் இருப்பார்கள். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன.

ஒரு நாள் கல்லூரி புரபஸர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் கணிணி அறைக்கு வந்தார்.. அருகில் வந்து, “உங்க பேர் என்ன?”

“தங்கவேல் சார்”

“ ஓ நீங்க தான் புதிதாக வந்தவரா, சரி எனக்கு கல்லூரி வேலைகள் இருக்கின்றன. கம்ப்யூட்டரைத் தருகின்றீர்களா “ என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன்பு இவரைப் பார்த்ததும் இல்லை.
ஆனால் கல்லூரி என்றதும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு அவரிடம் கணிப்பொறியினை ஒப்படைத்து விட்டு பிரின்ஸிபால் அறைக்குச் சென்றேன்.

சின்ன இடைச்செருகல் ஒன்று.

நான் வேலை செய்த பள்ளியுடன் சேர்த்து இரண்டு பெண்கள் கல்லூரிகளையும், பல ஊர்களில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளையும் நிர்வாகம் செய்து வந்த தாளாளர் சுவாமிகள் என்னைப் பற்றி அவரது சக சாமியாரிடம் சொல்லியது.

நமக்கு கிட்டத்தட்ட எவ்வளவு சொத்து இருக்கும் என்று தாளாளர் கேட்க,80 கோடி இருக்கும் என்று சக சாமியார் சொல்லி இருக்கிறார். இப்போ வந்துட்டு போறானே தங்கவேலு, இவனுக்கு நம்ம சொத்தை விடவும் அதிக மதிப்பு உண்டு என்றாராம். அதற்கு என்ன காரணம் சொன்னார் என்று அவர் சொல்லவில்லை. அந்தச் சாமியார் என்னிடம் பர்ஸனலாக சொல்லியது மட்டுமல்லாமல் எல்லாரிடமும் சொல்லி விட்டார். இப்படிப்பட்ட சொற்களை சொல்லும் அளவுக்கு நானெப்பெடி உயர்ந்தேன் என்பதினை வரும் தொடர்களில் தொடர்ந்து எழுதுவேன்.

சரி விசயத்துக்கு வருகிறேன்.

”சார், என்னாச்சு, ஏன் கஸ்டப்படுறீங்க. ஆயாம்மாக்கிட்டே சொல்லி விட்டா நானே உங்க அறைக்கு வந்திருப்பேனே“ என்றார் பிரின்ஸிபல்.

விஷயத்தைச் சொன்னேன்.

”தங்கவேல், நான் சொல்லாமல் யாரிடமும் இனிமேல் கம்ப்யூட்டரில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது” என்று சொன்னார்.

மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ஆயாம்மாவை அழைத்து ”அந்த புரபஸர் சென்றவுடன் வேறு பூட்டினைப் போட்டு பூட்டி சாவி ஒன்றினை தங்கத்துக்கிட்டே கொடுத்து விடுங்க” என்றார்.

மனசு கஸ்டத்தோடு ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டேன். இப்படியே சில நாட்கள் சென்று கொண்டிந்த போது ஒரு நாள்,

பனிரெண்டாம் வகுப்புக்குரிய பிராக்டிக்கல் தேர்வு மறுநாள் என்பதாலும் முதல் நாளே கேள்விகளை எல்லாம் தொகுத்துப் பிரிண்ட் அவுட் எடுத்து வைக்க வேண்டும் என்பதாலும் கேள்விகளை விரைந்து அடிக்கும் பொருட்டு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தேன்.
மறுநாள் எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் வந்து கேள்விகளைச் சரி பார்த்து விடைத்தாளில் ஒட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுப்பார்.

மிகச் சரியாக அந்த நேரத்தில் கல்லூரி புரபஸர் உள்ளே வந்தார்.

சார், பிரின்ஸிபாலிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் கணிணியைத் தர முடியும் என்று சொல்லும்படியும், அப்படி அனுமதி தந்தால் தான் கம்ப்யூட்டரை உங்களிடம் ஒப்படைக்கும் படியும் பிரின்ஸிபால் சொல்லி இருக்கிறார். அதுவுமின்றி நாளைக்கு பனிரெண்டாம் வகுப்புக்கு அரசுத்தேர்வு வேறு இருக்கிறது. கேள்விகளைத் தயார் செய்ய வேண்டுமென்பதால், எனக்கு வேலை இருக்கிறது என்றும் சொல்லி தர மறுத்து விட்டேன்.

அடுத்த நொடி, ”ஏய்.. நான் யார் தெரியுமா ? என்னையா நீ பகைச்சுக்கிறே.. ஒரு வார்த்தை சாமியிடம் (தாளாளர்) சொன்னால் உன்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார். ஜாக்கிரதையாக இங்கிருந்து ஓடிப்போயிடு“ என்றார்.

மனதுக்குள் ”இவனெல்லாம் ஒரு புரபஸராம், வந்துட்டான் ஆட்டிக்கிட்டு. போடா ஙொய்யா” என்று நினைத்துக் கொண்டு,

”சார், நீங்க சொல்வது சரி. ஆனால் சாமி என்னிடம் பிரின்ஸிபால் என்ன சொல்றாரோ அதை மட்டும் தான் செய்யனும் என்று சொல்லி இருக்கிறாரே “ என்றேன் சிரித்துக் கொண்டே (ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் புரபஸரின் கோபத்தில் ஆர்டிஎக்ஸ் மருந்தினை கொஞ்சூண்டு போட்டு வைத்தேன் சிரிப்பென்னும் வடிவில்)

”ஏய், நான் யார் தெரியுமா? என் பவர் என்னான்னு தெரியுமா? நான் போயி அவனுக்கிட்டே அனுமதி வாங்கனுமா” என்று கோபமாக கத்த ஆரம்பித்தார்.

அதன் பின்னர் அவரைக் கவனிக்கவே இல்லை. நான் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

கோபமாக அறையிலிருந்து சென்று விட்டார். நேராக தலைமைச் சாமியாரிடம் சென்று, ”தங்கவேலு என்னை நமது கல்லூரிக்குத் தேவையான அனுமதி மற்றும் இதர விபரங்களை டைப் செய்வதற்கு விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்” என்பது போலவும் மற்ற போட்டுக் கொடுக்கும் வேலையினையும் செய்து விட்டுச் சென்று விட்டார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் புரபஸராக இருந்தார்.

அவ்வப்போது டிவோட்டி (ஹீ..ஹீ... பெருமாளே பிச்சை எடுக்குமாம். அதைப் பிடுங்கித் திங்குமாம் அனுமாரு என்ற பழமொழிக்கு ஏற்ப, அவர் வீட்டில் சிலிண்டர் முடிந்து விட்டால் ஆஸிரமத்தில் இருந்து சிலிண்டரை எடுத்து செல்வார் அதிகார தோரணையோடு மனசே கூசாமல்) என்ற பெயரில் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேனென்று வந்து நல்லா கொட்டிக்கிட்டு, மற்றவர்களை அதிகாரமும் செய்து விட்டுச் செல்லும் ஒரு சில மஹாத்மாக்களில் இவரும் ஒருவர் என்று பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். அதுவுமின்றி பெண்கள் கல்லூரியிலும் கைவைத்த கதையினையும் காற்றோடு காற்றாக கேள்விப்பட்டேன். இவ்விஷயத்தை நானும் நம்பாமல் இருந்தேன். ஆனால் பின்னாட்களில் அந்தக் காதல் கனிரசங்களையும் நேரில் கண்டேன்.

அன்றைய இரவு சாமியாரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் மேற்படி விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க, நான் ஒன்று விடாமல் சொல்லி வைத்தேன்.

”பார்த்து நடந்துக்கப்பா. யாரும் உன்னைப் பற்றி குறை சொல்லக்கூடாது” என்றார்.

தலையைத் தடவிவிட்டு ஒரு தேங்காய் லட்டுவைக் கொடுத்தார்.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு விடைபெரும் சிறு விழாவை நடத்தினர். நானும் சென்றேன். சுவீட், காரம், காபி கிடைத்தது. சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து விட்டேன்.

ஆறு மணி இருக்கும். பள்ளியில் இருந்து ஓலை வந்தது. கருப்புக் கலரில் கோடு போட்ட சட்டை ஒன்றினைப் போட்டுக் கொண்டு, பிரின்ஸிபல் அறைக்குச் சென்றேன். ஏதோ பெரிய பிரச்சினை என்று சொன்னார்கள்.

தொடரும் விரைவில்