குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மகளுக்கு கடிதம். Show all posts
Showing posts with label மகளுக்கு கடிதம். Show all posts

Sunday, June 19, 2016

மகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016

என் பிரியத்துக்குரிய அன்பு மகளே!
எந்த வித கட்டளைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் கடந்து செல்லும் நாட்களின் ஊடே சில தருணங்கள் நெகிழ்வுகளை உண்டாக்கி விடும். மனிதர்களுக்கு அந்த தருணங்களே அனுபவங்களாக வாழ்க்கையின் அர்த்தங்களாக மனதோடு ஊடாடிக் கொண்டிருக்கும். இன்றைக்கு நீ விடிகாலையில் எழுந்த என்னிடம் கொடுத்த வாழ்த்து அட்டையைப் பிரித்த போது மீண்டும் உண்டானது.


(உனது வாழ்த்து அட்டை)


(வெள்ளிங்கிரி மலை யாத்திரையின் போது)


என் பாச மகளே! மருத்துவ மனையில் நர்ஸ் உன்னை சிறு குழந்தையாக என் கைகளில் கொடுத்தபோது நான் அடைந்த நெகிழ்வினை உனது பத்தாவது வயதில்  நான் மீண்டும் இன்று அடைந்திருக்கிறேன். அழகான அந்த வாழ்த்து அட்டையில் எனக்காக நீ எழுதி இருந்த அந்த வாசகங்கள் என்னை வெட்கம் கொள்ள வைத்தன. ஆமாம் நான் ஏதாவது வேலையில் இருக்கும் போது நீ என்னிடம் ஏதோ கேட்க வருவாய், நான் அப்புறம் பேசலாம் என்று மறுத்து விடுவேன். இது அடிக்கடி நடக்கும். அப்போது நான் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என்று எனக்கு ஆயாசமும் அசூசையும் ஏற்பட்டு விட்டது மகளே. இனி அவ்வாறு நடக்க இயலாமல் பார்த்துக் கொள்கிறேன்.

உன்னையும் உன் சகோதரனையும் நல்ல குழந்தைகளாக, சமூக பிரக்ஞை உடையவர்களாக, நல்ல திடமும், செயலூக்கமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, சக மனிதர்களிடையே அன்பு கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமென்ற நினைப்பின் காரணமாகவும்,  மனசாட்சிக்கு விரோதமாக எந்த விதக் காரியத்திலும் ஈடுபட்டு எவரின் சாபமும் பெற்று விடக்கூடாது என்ற எனது எண்ணத்தின் காரணமாகவும் தொழிலில் நான் சந்திக்கும் பிரச்சினைகளால் உண்டாகும் வலியினால் சில நேரங்களில் உனது வேண்டுகோளினை கேட்க முடியாமல் போய் விடுகின்றன. வேறொன்றும் காரணமில்லை மகளே!

தத்தி நடை போட்டு நடந்த நீ இன்றைக்கு தனியாக வெள்ளிங்கிரி மலைக்கு யாத்திரை செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாய். என்னைப் போலவே உனக்கு தண்ணீரும், பசுமையும் நிறைந்த இடங்கள் பிடித்தவை என்று எனக்குத் தெரியும். நானும், ரித்தியும் உன்னுடன் வெள்ளிங்கிரி மலையிலிருந்து வடியும் மூலிகை ஆற்றில் ஆனந்தமாகக் குளித்து, ஆற்றில் செல்லும் மீனைப் பிடிக்க முயன்று தோற்று மீண்டும் பிடித்து குழி செய்து அதில் மீனை நீந்த விட்டு விளையாடுவது எனக்கு இப்போது நினைவில் வந்து செல்கிறது.

உனக்கு ஒரு சில விஷயங்களைச் சொல்லி விட எனது மனது துடிக்கிறது. சொல்லி விடுகிறேன். நீ பெரிய பெண்ணாக வளர்ந்து வருகையில் இணையத்தில் எனது இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றால் படித்துப் பார்.

நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள் என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் கொடுத்துப் பெறுவதைதான் தான் அச்சாணியாக கொண்டு இயங்குகிறது. நண்பர்கள் என்று யாரும் இல்லை, உறவினர்கள் என்று எவரும் இல்லை. எல்லோரும் மனிதர்கள் என்பதை மறந்து விடாதே.

பணம் என்றொரு மாயத்தோற்றமும், பொறாமை என்றொரு மயக்கும் குணமும் மனிதர்களை விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவைகளில் சிக்கிக் கொண்டு இன்னும் விடுபட முடியாமல் அவர்கள் தன் சக மனிதனுக்கு துன்பங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆகவே உனக்குத் துன்பங்கள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் சக மனிதர்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். இது அவசியமா? இது தேவையா? என்று உன்னைக் கேட்டுக் கொள்,  முடிவெடு, பிறகு செயல்படு. சக மனிதர்களால் உனக்கு பிரச்சினைகள் வராத வண்ணம் நீ செயல்பட்டாய் என்றால் என்றைக்கும் சந்தோஷமாக வாழலாம்.

மகளே இப்போது மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லப் போகின்றேன். நீ இப்போது கல்வி என்ற பெயரில் படித்துக் கொண்டிருப்பதெல்லாம் பிறரால் உருவாக்கப்பட்ட அவர்களின் குப்பைகள். இந்தக் குப்பைகளை நீ உண்மை என்று நம்பி விடாதே. இது ஒரு பாதை என்றளவில் எடுத்துக் கொள்.

உனது வாழ்க்கைக்கு நீ பயிலும் கல்வி என்பது வழிகாட்டி மட்டுமே. அதை வைத்துக் கொண்டு உனக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள். நீ ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டுமா? முதலாளியாக இருக்க வேண்டுமா? என்பதை நீ வளர்ந்து வருகையில் முடிவெடுத்துக் கொள். வெற்றி என்பது இங்கு நிரந்தரமில்லை என்பதையும், தோல்வியும் நிரந்தரமில்லை என்பதையும் நினைவில் மறக்காமல் வைத்துக் கொள்.

வெற்றி என்பதும் தோல்வி என்பதும் குதிரைக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் புல் போன்றது மகளே. உனக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீ குதிரையாக இருக்க வேண்டாமென்பது எனது ஆசை. நீ அதை இயக்குபவராக இருக்க வேண்டும். புரிகிறதா?

உனது வாழ்த்துக்கு மிக்க நன்றி மகளே!

மிக்க அன்புடன் உனது அப்பா.