குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, March 26, 2022

புதிய கல்விக் கொள்கை - தமிழர் விரோத பத்திரிக்கையாக மாறுகிறதா தினமணி?

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்.

வேறு எந்த உதவியையும் மனிதன் மறக்கலாம் ஆனால் செய் நன்றியை மறந்த ஒருவனுக்கு வாழ்வில் உயர்வென்பதே இல்லை என்கிறார் தமிழ் புலவர் திருவள்ளுவர்.

இன்றைய 26.03.2022 தினமணி தலையங்கத்திலே ’அஸர் 2021’ அறிக்கை பற்றிய கவலையைத் தெரிவித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டாக பங்கு பெற்று மாணாக்கர்களின் கல்வியை உயர்த்திட வேண்டுமென்று அக்கறையுடன் முடித்திருக்கிறது.

தலையங்கத்தின் இறுதியில் ஒரு பத்தி இப்படி இருக்கிறது.”கரோனா இல்லாத சமயத்திலேயே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) என்பதால் 5ம் வகுப்பு மாணவர்களால் கூட 2ம் வகுப்பு பாடங்களைக் கூட சரியாகப் படிக்க முடியவில்லை என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி உள்ளன. மாணவர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 64.5 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை ’அஸர் 2021’ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது” 

தினமணி ஆசிரியரே....!

மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்பதற்கான முக்கியமான காரணம் முதலில் ஆசிரியர் தான். அடுத்து அவனது சூழல் அல்லது அவனது உறவினர்களாக இருக்கும். எந்த மாணவன் எப்படி படிப்பான் என்பதை ஆசிரியர் கண்டுணர்ந்து கல்வி புகட்ட வேண்டியது அவர் பணி. அனைவரும் பாஸ் என்றால் மாணவர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆசிரியர்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். முற்றிலும் இது சால்சாப்பு. எந்தப் பெற்றோரும் தன் மகன் படிக்க கூடாது என்று விரும்ப மாட்டார்கள். 

ஆல் பாஸ் என்றால் கல்வி இடை நிற்றல் குறையும் என்றும், மாணவனுக்கு திடீரென்று நன்கு படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வந்து விட்டால் போதும் என்பதற்காகத்தான் அரசு அனைவரும் பாஸ் என்றுச் சொல்கிறது. ஆரம்ப காலங்களில் சரியாகப் படிக்காத பல மாணாக்கர்கள் ஒரு சில வருடங்களில் நன்கு படிப்பார்கள் என்பதை ஆறேழு வருடம் ஆசிரியப் பணி செய்து வந்த எனக்கு நன்கு தெரியும். புதிய கல்விக் கொள்கை தேர்வு வைக்கச் சொல்கிறது. 

தேர்வில் தோல்வி அடைந்தால் இன்றைய பாஜக ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இந்தியாவில் அடுத்த வேளை சோற்றுக்கு வேலை செய்யச் சென்று விடுவார்கள். 30 சதவீதம் விலைவாசி உயர்ந்து விட்டது. நல் உணவு என்பது எட்டாகனியாகப் போனது ஏழைகளுக்கு. விலை வாசி உயர்வால் ஜி.எஸ்.டி வரிவசூல் அதிகரிக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் இன்றைக்கு நான்காயிரம் ஆகிறது. அதே வருமானம், ஆனால் செலவினம் கூடுகிறது. இந்த நிலையில் மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு மாணாக்கன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பான் என எதிர்ப்பார்ப்பது அறிவீனம். பெற்றோர்களும் சடைந்து போவார்கள். மேற்படிப்புக்கு எவனும் வரக்கூடாது என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் மறைமுக திட்டம் என்பதைக் கல்வியாளார்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மிக நன்றாக பாடம் நடத்தக் கூடிய அனுபவம் பெற்றவர்கள். தனியார் பள்ளி வரும் முன்பே அரசால் நடத்தப்பட்டப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் இன்றைக்கும் உலகை ஆள்கிறார்கள். அவர்களால் தான் உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அதை விடுத்து 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எழுதுவது கயமைத்தனம்.

ஆளும் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதியக் கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. அதற்காக மக்களிடம் பொய்யை விதைக்க தங்களின் அறிவை கயமைத்தனமாகப் பயன்படுத்துவது கொடூரம்.

5ம் வகுப்பில் தேர்வு, 8ம் வகுப்பில் தேர்வு, 10ம் வகுப்பில் தேர்வு, 12ம் வகுப்பில் தேர்வு, கல்லூரிகளில் படிக்க நுழைவுத் தேர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திலே தரத்தினை சோதிக்கும் படி மனிதர்களைச் சோதிப்பது என்பது மனித குல வரலாற்றில் இல்லாத கொடூரம்.

பாஜகவின் பிரதமர் மோடி எந்தக் கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு நாட்டை ஆளுகிறார்? ஆசிரியர் அவர்களே?

நீங்கள் என்ன கல்வித் தகுதியில் தினமணிக்கு ஆசிரியராக இருக்கின்றீர்கள்?

கல்வி என்பது அறிவு தேடலுக்கானது. அது மனிதனின் தரம் அல்ல.

உங்களின் பத்திரிக்கையில் வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரையும், தலையங்கமும் தமிழருக்கு விரோதமாக இருக்கிறது. 

கடவுள் என்பது கற்பிதம் என்ற பெரியாரின் சொற்களால் விளைந்தவை தான் பகுத்தறிவு. 

தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். வீரம் மிக்கவர்கள், அறம் வாழ்வு வாழ்பவர்கள். அவர்களால் உணவு உண்ணும் நீங்களும் உங்கள் பத்திரிக்கையும் தொடர்ந்து தமிழர் விரோத செய்திகளை பொய்யாகப் புனைந்து மக்களை மாக்களாக மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்காதீர்கள்.

உங்களுடைய நோக்கம் புதிய கல்விக் கொள்கை மிக மிக நல்லது. அதை திமுக அரசு எதிர்க்கிறது என்று மக்களிடம் பொய்யைப் பரப்புவது மட்டுமே.

சமீபத்திய சட்டசபை நிகழ்வில் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றும் உத்திரப் பிரதேசம் பீகாருடன் ஒப்பிடக்கூடாது என்று மட்டும் தான் சொன்னார். 

தமிழகத்தில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் என்றார். அதற்கு உடனே சங்கி மீடியாக்களும், சங்கி போலிகளும் செல்போன் வைத்திருப்பதால் தமிழகம் பணக்கார மா நிலம் என்றுச் சொல்வதாக திரித்து சங்கி தளம் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் போலிச் செய்தியை புரட்டுச் செய்தியைப் பரப்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையை போலிச் செய்திகளை அடையாளம் கண்டு, எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அமைப்பு ஒன்றினை உருவாக்கி இருக்கிறது.

தமிழர்கள் சீரழிய வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் நடத்தப்படும் பத்திரிக்கைகள் காலப் போக்கில் என்னவாகும் என்பதை அறம் வழி வாழ்வியல் கொண்ட தமிழகம் உங்களுக்கு புகட்டும்.

வாழ்க வளமுடன்...!


Monday, March 21, 2022

மாப்பு தரு சாமி - விதை

’மனமது செம்மையானால் மந்திரம்’ தேவையில்லை என்பதால் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரினை படித்து அதன் வழி நடப்பவன். 

’நீயே கடவுள்’ என்ற திருமூலரின் வார்த்தையின் மீது பிடிப்புக் கொண்டவன். 

வள்ளலாரின் ‘ஜீவகாருண்யத்துக்கு’ மேலானது வேறில்லை என்று நினைப்பவன்.

’அன்பே கடவுள்’ என நம்புபவன். 

உருவ வழிபாடுகள், பூஜைகள், ஆரத்திகள், மந்திரங்கள் ஓதுவது போன்றவற்றில் எனக்கு ஈடுபாடு இருக்காது. 

கோவிலுக்குச் செல்வேன், வணங்குவேன். அவ்விடங்களில் என் மனமானது சலனமற்று இருக்கும். அமைதியாக இருப்பேன். உள்ளத்தில் வேறேதும் சிந்தனைகள் கிளம்பாது. மனம் இறந்த நிலையில் அமைதியாக அமர்ந்திருப்பேன். கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் கூட இங்கணம் அமர்ந்திருப்பேன். எந்த இடம் மன அமைதியைத் தருகிறதோ, மனதில் சலனமற்ற தன்மையை உருவாக்குகிறதோ அந்த இடத்தில் இருப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும்.

சமீப காலமாக நானொரு செயலைச் செய்து வருகிறேன். எனக்கு அது நல்ல பலன்களைத் தருகிறது.

எம் குரு சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆலய வாசலில் ’பேச்சைக் குறைத்து மூச்சை கவனி” என்ற வாசகம் இருக்கும். 

அதன் அர்த்தம் எனக்கு தெரிந்தாலும் அதை நான் பயன்படுத்திப் பார்த்தது இல்லை. 

திடீரென்று ஒரு நாள் மூச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன். மூச்சை நன்கு உள் இழுத்து வெளியில் விடுவேன்.அதைக் கவனிப்பேன். அப்போது வேறு எந்தச் சிந்தனையும் இறாது. அங்கணம் செய்யும் போது மனம் அதன் சிந்தனை அல்லாது போகும். இதனை வாடிக்கையாக செய்து வந்தேன். எப்போதெல்லாம் படுக்கையில் படுத்திருப்பேனோ அப்போதெல்லாம் மூச்சைக் கவனிப்பது எனக்கு வழக்கமாகியது.

இரவுகளில் தூக்கம் வராத நாளில் இங்கனம் செய்யும் போது சட்டென்று தூக்கம் வந்து விடும். 

இப்படியான ஒரு நாளில் ஒரு மாலை நேரம், சிதார் இசை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூச்சைக் கவனிக்க ஆரம்பித்த போது விழிப்பு நிலையில் உடலில் இருந்து எதுவோ வெளியேறியது போல தோன்றியது. அடுத்த நொடியில் நான் என் உடம்பைப் பார்ப்பது போல தோன்றியது. சட்டென்று பயமேற்பட உதறி எழுந்தேன். 

பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன்.

ஜோதி சுவாமிகளிடம் இது பற்றிக் கேட்ட போது, ’தொடர்ந்து அப்படியே செய்து வாருங்கள், சரியான வழியில் தான் செல்கின்றீர்கள்” என்றார்.

சென்ற நாட்களுள் ஒரு நாள் மாலையில் ஆசிரமத்தில் இருந்து வீட்டுக்கு வந்த கோதை படபடப்பாக அருகில் வந்து அறைக்கதவைச் சாத்தினார்.

முகம் பார்த்தேன்.

“ஏங்க, அன்னபூரணி அம்மாவைப் பார்த்தேன், போதுங்க, என் பிறப்பு முழுமையடைந்து விட்டது” என்று சொல்ல எனக்கு ‘ஞே’ என்று தோன்றியது. 

’என்ன சொல்றா?’ என்று குழம்பினேன்.

விபரம் கேட்டேன். சொல்ல ஆரம்பித்தாள்.

மாலை நேரம், மங்கிய பொழுதில், ஜோதி சுவாமி அறைக்குள் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது ’ஜல்,ஜல்’ என்ற ஒலியுடன் ஒரு அம்மா வந்திருக்கிறார். அவரின் முகம் மஞ்சள் வண்ணமாக தேஜஸுடன் ஜொலித்திருக்கிறது. 

அறை வாசலில் நின்று கொண்டு “ஜோதி, சவுக்கியமா?“ என்று கேட்டவுடன்,  அவரைப் பார்த்த சுவாமி அப்படியே பேச்சு மூச்சன்றி மயங்கி விழுந்து விட பதட்டத்துடன் கோதையும் அருகில் இருந்த இன்னும் சிலரும் முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சையை தெளிவிக்க, சுவாமி ”அம்மா! அம்மா!” என்று கோதையிடம் சொல்ல விதிர்த்து நின்ற கோதை அந்த அம்மாவைப் பார்த்து வணக்கம் சொல்ல சிறிது நேரத்தில் வெளியே வந்த அந்த அம்மா காணாமல் போய் விட்டார் எனச் சொன்னார்.

இச்சம்பவம் நடந்தது ஆசிரமத்தில்.

சொல்பவர் மனைவி. 

சுட்டிக் காட்டியவர் ஜோதி சுவாமி. 

நம்பித்தான் ஆக வேண்டும். 

எனக்குள் ஒரு கேள்வி முளைத்து விட்டது. 

”என்னால் புரிந்து கொள்ள முடியாத, உணர்ந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது போலும். அது என்ன?”

மனமற்ற நிலைக்குச் செல்வதைத்தானே யோகிகள் சொல்லி இருக்கின்றார்கள். அந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் பிரபஞ்சத்துடன் இணைந்து விடலாம். ’நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்’ என்ற நிலையில் இயற்கையில் ஆழப் புதைந்து போய் விடலாம் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் கோதை என்னிடம் சொல்லியது வேறொன்றாக இருக்கிறதே எனக் குழப்பமானது.

ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தா காளி கோவிலில் இருக்கும் தெய்வமான காளியுடன் பேசுவார் என்று மகேந்திர நாத் குப்தா ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்” நூலில் எழுதி இருப்பது நினைவுக்கு வந்து விட்டது.

கேள்வி துளிர்த்து.

தளைந்தது.

செடியாகி நின்றது.

சுவாமி திடீரென்று அழைத்து, ”கேரளா போயிட்டு வர்றேன் ஆண்டவனே” என்றுச் சொல்லி விட்டு அக்கா ராஜேஸ்வரியுடன் சென்று விட்டார்.

மாலை நேரத்தில் அவரிடமிருந்து போன் வரவில்லை. 

எனக்குள் சிறு பதட்டம் வந்து விட்டது. 

ஏனென்றால் ரித்திக் முதன் நாள் காரில் சிட் லைட்டை அணைக்காமல் விட்டு விட்டான். காரின் பேட்டரி டவுன். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. விடிகாலையில் கார்கேர் மதன் வீட்டிற்கு வந்து வேறு பேட்டரியை வைத்து காரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டிருந்தார். 

பின்னர் மறுபடி கார் ஸ்டார்ட் ஆனது. பாட்டரியினால் சுவாமியின் பயணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டதோ என்று தோன்றியது.

மறுநாள் காலையில் அழைத்தேன். அழைப்பை எடுக்கவில்லை. அக்காவுக்கு அழைத்தேன் அக்காவும் எடுக்கவில்லை. 

சிறிது நேரம் சென்ற பின்னாலே, சுவாமி அழைத்தார்.

“ஆண்டவனே..! மாப்பு தரு சாமி” என்ற வார்த்தையினைச் சொன்னார்.

எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும் என்பதால் மாப்பு என்றால் மன்னிப்பு என்று தெரியும். 

அந்த வார்த்தையை ஏன் சுவாமி என்னிடம் சொன்னார்?

விரைவில்... 

Thursday, March 17, 2022

ரிலையன்ஸ் பிக்பஜார் தில்லுமுல்லு அமேசான் அலறல் தொடர்ச்சி

 16.,03.2022ம் தேதி எழுதிய பதிவினைக் கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

https://thangavelmanickadevar.blogspot.com/2022/03/blog-post_16.html

இன்றைய 17.03.2022 பிசினஸ் ஸ்டாண்டர் செய்திதாளில் வெளியான தலைப்புச் செய்தி கீழே இருக்கிறது. படத்தின் மீது சொடுக்கி படித்துக் கொள்ளவும். சட்டத்தின் ஓட்டைகளை எவ்வாறு தன் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று பாருங்கள். ரிலையன்ஸ் தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்ட செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

(17.03.2022 - பிசினஸ் ஸ்டாண்டர் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி மேலே)

உச்ச நீதிமன்றம் ஃபியூச்சர் குரூப்பிடமும், அமேசானிடமும் என்ன சொல்லி இருக்கிறது என்று கட்டமிட்ட செய்தியில் படித்துக் கொள்ளுங்கள். வழக்குதாரர்களின் ஒப்பீனியன் கேட்கிறது உச்ச நீதிமன்றம். எல்லோருக்கும் தெரிந்த விஷயம், ‘ரிலையன்சும் ஃபியூச்சர் குரூப்பும்’ அமேசானை ஏமாற்றுகிறது என. ஆனால் பாருங்கள் எந்தப் பத்திரிக்கையும் அதைப் பற்றி எழுதவில்லை. நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனால் என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.

சும்மா கதை விடாதீர் என்று நினைத்தவர்களுக்கு மேலே இருக்கும் படமே என் பதிவுக்கு ஆதாரம்.

அடுத்து சவுக்கு ஆன்லைன் இணையதளத்தில் வெளியான நியூஜெ நிறுவனம் பிஜேபிக்கும், ரிலையன்ஸ் மக்களை எப்படி முட்டாளாக்கி பிஜேபிக்கு நமோஸ்காரம் செய்து வருகிறது என்பதையும் படித்துக் கொள்ளுங்கள். மக்கள் கூட்டம் ஆட்டு மந்தைகள் என கருதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தினை தர்மமும் அறமும் - பிஜேபியின் தலையெழுத்தினை அயோத்தி ராமரும் முடிவு செய்வார்கள் என நம்புகிறேன்.


மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறார்கள் சமீபகாலமாக. அதிலொன்று சித்ரா -சுப்ரமணியம் கள்ளக்காதல் - ஷேர்மார்கெட் விவகாரம். 

மைலாப்பூர் மாமி சித்ராவின் கள்ளக்காதல் மர்மச் சாமியார் சுப்ரமணியம் கதை சாட்சியங்கள் இல்லாத சுமார் ஐந்து லட்சம் கோடி மோசடி ஊழல். இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் எல்லாம் பெரிய ஊழலை மைலாப்பூர் நிகழ்த்தி இருப்பதை வரலாற்றில் பதிவு செய்வோம்.

மைலாப்பூர் மாமி சித்ராவின் ஐந்து லட்சம் கோடி ஊழல் மூடி மறைக்கப்பட்டும் விடும். அதை செவ்வனே செய்வார் பத்திரிக்கை குள்ளநரி.

Wednesday, March 16, 2022

ரிலையன்ஸ் பிக்பஜார் தில்லுமுல்லு அமேசான் அலறல்

இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் பத்தாயிரம் லட்சம் என்பதோடு கனவுகள் முடிந்து போகின்றன. அதற்கும் மேல் வருமானத்தினை உருவாக்குவது என்பது பற்றிய சிந்தனைகள் குடும்பச் சூழலாலும், செய்யும் தவறுகளாலும் வருவதில்லை. 

சிக்கலாக்கிய வாழ்க்கையில் கோடிகளில் வருமானம் வரும் தொழில் செய்வது என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

எனக்குத் தெரிந்த ஒருவரின் தொழில் கொரானாவில் முடங்கிப் போனது. வேறு வழி இன்றி உலக மனிதர்களின் ஒரே கைத்தொழிலான உணவுத்துறையில் இறங்கினார். 

குறைந்த முதலீடு, பெருத்த லாபம் என்ற கணக்கில் மசாலா பிசினஸ் ஆரம்பித்தார். இப்போதெல்லாம் பிரபல மசாலாக் கம்பெனிகளின் இடை விடாத விளம்பரத்தினால் சாம்பாரில் இருந்து அனைத்து உணவுகளும் ஒரே சுவையுடைவையாக இருக்கின்றன. எங்குச் சென்றாலும் சாப்பிட்டாலும் ஒரே சுவை. ஹோட்டல்களிலும் கூட அதே கதை. என்னைப் போன்ற உணவு விரும்பிகளுக்கு மசாலா கம்பெனிகளை கண்டாலே ஆகாது. உண்மை என்னவென்றால் தமிழக மசாலா மார்க்கெட்டின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள். அதில் நாமும் இணைந்து விடலாம் என்ற கற்பனையில் நண்பரும் திட்டமிட்டார். 

வெகு நேர்த்தியாக பாக்கெட் போடப்பட்டு தன் வீட்டினைச் சுற்றி இருந்த கடைகளுக்கு மசாலாக்களை சப்ளை செய்தார். அடுத்த வாரம் சென்றார் அனைத்துச் சரக்குகளும் விற்றுப் போயிருந்தன. ஆச்சரியம். கடைக்காரரும் மொத்த தொகையையும் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்சம் கூடுதல் சரக்கை இறக்கினார். சரக்குப் போட்ட கடைகள் அனைத்திலிருந்த சரக்குகள் விற்றுப் போயின. கனவுகளில் மிதக்க ஆரம்பித்தார்.

அடுத்த வாரமும் இதே கதை. அதற்கடுத்த வாரம் சரக்குகளை கடன் வாங்கி அதிகப்படுத்தினார். பாதி சரக்குகள் விற்கவே இல்லை. அதற்கடுத்த வாரம் எந்த சரக்கும் விற்கவில்லை. மூன்று மாதங்கள் இப்படியே போனது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

தேங்கி போன சரக்கு. வாடிக்கையாளர்கள் இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினார். சரக்குகள் திரும்பின. அதற்கடுத்த மாதம் பல கடைகளில் சரக்குகள் தீர்ந்து போயிருந்தன. அவருக்குள் ஏதோ உள்ளுணர்வில் தவறாகப் படவே ஆராய ஆரம்பித்தார்.

பிரபல மசாலாக் கம்பெனிகளின் உள்குத்து. கடைகளில் நல்ல தரமாக விலை குறைவாக வரக்கூடிய மசாலாக்களை மொத்தமாக வாங்கி வேறு வழியில் அவர்களின் பாக்கெட்டுகளில் இறக்கி விடுகின்றனர். மக்களுக்கு அப்படி ஒரு மசாலா இருப்பதே தெரியாது. இப்படியெல்லாமா செய்வார்கள் என்று அவருக்குத் திகில் பிடித்தது. அசுரத்தனமான பெரும் நிறுவனத்திடம் மோத முடியுமா? முடியாது. இன்றைக்கும் அதைத்தான் செய்கிறார். வருமானமோ ஆயிரங்களில் மட்டும். லட்சம் கோடி என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தமிழகத்தின் பிரபல மசாலா கம்பெனிகளின் வருமானம் வருடம் 1800 கோடிக்கும் மேல் என்கிறது டேட்டா. சாமானியன் தொழிலில் வெற்றி பெற முடியாத வியாபாரத்தினை ஆளும் பிஜேபி அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. 

சாமானியன் வாழலாம் அவனுக்கு அதற்கு மட்டுமே அனுமதி. லோன் கிடைக்கும் லட்சங்களில். வருமானமும் லட்சங்களில் தான். கோடிகள் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கெல்லாம் குஜராத்திகள் உள்ளனர்.

என்றைக்கு இந்தியாவின் சேல்ஸ் மார்க்கெட்டிங்க் தலைவர் பொறுப்புக்கு வந்தாரோ அன்றைக்கே சாமானியன் வாழ்வு திருடப்பட்டு விட்டது. கார்ப்பொரேட்டுக்கான வியாபார உத்திகள் தெளிவானவை. அவர்களுக்கு கிடைக்கும் அரசு நன்மைகள் சாமானியனுக்கு கிடைக்காது. 

வாழ்வதற்கு அனுமதி மட்டுமே கிடைக்கும். சாமானியன் வேலை செய்யலாம். பணம் சம்பாதிக்கலாம். அதுவும் லட்சங்களுக்குள் மட்டுமே. கோடிகள் குஜராத்திகளுக்கு மட்டுமே என்பது இந்தியாவின் விதியாக மாறி விட்டது.

இனிமேல் ஒரு அம்பானியோ அதானியோ உருவாகவே முடியாது. ஏனெனில் அவர்கள் உருவாகி விட்டார்கள். இனி எதற்கு இன்னொரு அம்பானி? இன்னொரு அதானி? வேலைக்கார்கள் மட்டும் தான் வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஃபியூச்சர் நிறுவனத்தின் பிக்பஜார் பிசினஸை அமேசான் சிங்கப்பூரில் விலை பேசி அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸாக 15,000 கோடியைக் கொடுத்தார்கள். அந்த அக்ரிமெண்டில் முதன்மையானது என்ன தெரியுமா? இந்த பிசினஸை எங்கள் நிறுவனம் மறுத்தால் ஒழிய வேறு எவரிடமும் விற்க கூடாது. அதுமட்டுமல்ல ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கவே கூடாது என்ற உப விதிகளும் இருந்தன.

பணம் வந்ததும் ஃபியூச்சர் நிறுவனம் அதை மொத்தமாக முழுங்கி விட்டு ரிலையன்ஸிடம் விலை பேசினர். ரிலையன்ஸ் முகேஷ் 22 ஆயிரம் கோடிக்கு ஆஃபர் கொடுத்தார். உடனே ஃபியூச்சர் நிறுவனம் ஒத்துக் கொண்டது.
 
அமேசான் தடுத்தது. நாங்களும் அதே விலைக்கு வாங்குகிறோம் என்றது. ஆனால் ஆசைப்பட்டது யார்? ரிலையன்ஸ் அல்லவா? இந்தியா யாருக்கு வேலை செய்யுமென்று உங்களுக்குத் தெரியுமே?

ரிலையன்ஸின் தலைமை மார்க்கெட்டிங்க் பணியாளரும், இந்தியாவின் தலைமை சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவிடம் தகவல் சென்றது. சில பல செட்டிங்குகள் நடந்த பின்னர் ஒரு துணைக் கட்டப்பஞ்சாயத்தில் சிங்கப்பூர் விதிகள் இந்தியாவிற்குப் பொருந்தாது என சொல்லி வழக்கினை தள்ளுபடி செய்தது.

உலக வர்த்தக ஒப்பந்தம் பற்றியெல்லாம் துணைக் கட்டப்பஞ்சாயத்துக்கு கவலை இல்லை. அதில் கையெழுத்துப் போட்டது யாராக இருந்தால் என்ன நம்ம எஜமான் ரிலையன்ஸ் என்ற செய்நன்றி மறவாத நிலை கடைபிடிக்கப்பட்டது. திருவள்ளுவரின் குறள் இங்குச் சட்டப்பட்டி நிலை நாட்டப்பட்டது.

இதற்கிடையில் ரிலையன்ஸ் ஒரு வேலை செய்தது. இதுதான் அக்மார்க் வேலை. அதான் ஒன்னாம் நம்பர் வேலை.

பிக்பஜார் இந்தியாவெங்கும் பல ஆயிரம் சதுரடிகளை வாடகைக்கு எடுத்து கடைகள் வைத்திருந்தன. இந்தப் பிரச்சினையில் வாடகை கொடுக்க முடியாமல் இருந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் சென்று வாடகை ஒப்பந்தத்தை எங்கள் பெயருக்கு மாற்றுங்கள் என்று கேட்டு மாற்றி விட்டார்கள். பிக்பஜார் இயங்கி வந்த வாடகை கடைகள் இப்போது ரிலையன்ஸ் வசம். வாடகை எவன் தருகின்றானோ அவனுக்கு நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்கிறார்கள் கடை உரிமையாளர்கள். 

எப்படி வேலை? 

அமேசான் கட்டபஞ்சாயத்து வழக்குப் போட்டது. சாமானியனுக்கும், முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே சட்டப்படி தீர்ப்பளிக்கும் கட்டப்பஞ்சாயத்து நிறுவனம் அமேசானிடமும், ஃபியூச்சர் நிறுவனத்திடமும் சமரசம் பேசச் சொல்லி இருக்கிறது. 

கட்டபஞ்சாயத்துச் செய்யும் ஆட்களுக்கு இதற்கெல்லாம் அனுமதி உண்டு.  ஆட்டக்காரி ஊழலே செய்யவில்லை என்று தீர்ப்பளித்த நீதிபதி நல்லவர் என்கிறது கட்டபஞ்சாயத்து நிறுவனம்.

உலகெல்லாம் வர்த்தகம் செய்யும் அமேசானின் ஒரு வருட பிசினஸ் ஒரு டிரில்லியன் டாலர்கள். ரிலையன்ஸின் மொத்த பிசினஸே 200 பில்லியன் டாலர்கள். எப்படி அமேசானுடன் மோதுகின்றார்கள்?

ஒருவருக்கு தைரியம் வருவது எப்படி எனில் ஒன்று பணம் அடுத்து கண்ணசைவில் வேலை செய்யும் வேலைக்காரர்கள். ரிலையன்ஸ் நல்ல வேலைக்காரர்களை வைத்திருக்கிறது. 

அமேசான் தட்ட வேண்டிய இடத்தில் தட்டும் என்றால், வெள்ளை மாளிகையிலிருந்து ஒரே ஒரு போன் வரட்டும் பாருங்கள். 

வடிவேல் பெண் பார்த்த கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் வர்த்தக உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. 

நாம் என்னவென்றால் நரலீலைகள் எழுதிக் கொண்டு, நடிகைகளின் தொப்பூள்களை உற்றுப் பார்த்துக் கொண்டு, சமந்தாவின் இடுப்பாட்டத்தின் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு அந்தக் கிளுகிளுப்பில் கிறங்கிப் போய் கிடக்கிறோம். 


கோடி குஜராத்திகளுக்கு, குட்டிகளின் கிளுகிளுப்பு தமிழர்களுக்கு என்று அல்லவா இருக்கிறது.

எடப்பாடி என்ற துரோகியை நாம் முதல்வராக வைத்திருந்தோம். மெய் வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்த கேடுகெட்ட சுய நலத்தின் பீடைகள் நாம். துரோகிகளால் தமிழ் நாடு எட்டு லட்சம் கோடி கடனாளி ஆகி கிடக்கிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்றைக்கும். 

ஜாதி வந்து விடுகிறது, மதம் வந்து விடுகிறது, உறவுகள் வந்து விடுகிறது. பொறாமை வேறு.  இவற்றை எல்லாம் மீறி சாதிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கின்றி நிற்கிறது தமிழர்கள் இனம்.

Monday, March 14, 2022

நீட் அவசியமில்லை - முன்னாள் துணை வேந்தர் கே.சாதிக்

தினமணியும், தினமலரும் இன்னபிற மீடியாக்களும் ஏழை மாணவர்களை, சமூகத்தில் எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கும் மாணாக்கர்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுக்கும் நீட் தேர்வுக்கு ஆதரவாக இல்லாத பொய் செய்திகளையும், பிரச்சாரங்களையும் தொடர்ந்து எழுதி வருகின்றன. 

ஒரே காரணம் தமிழ் நாட்டில் மருத்துவம் மிக உயர் நிலையில் இருக்க கூடாது என்ற எண்ணம் தவிர வேறொன்றும் இல்லை என்பது கண்கூடு. உலகெங்கிலும் இருந்து தமிழகத்துக்கு மருத்துவ சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். உயர் மருத்துவ சிகிக்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் ஊழல்வாதிகளுக்கு ஒரு கோடிக்கு இரண்டு ரூபாய் இட்லியும் விற்கப்படுகிறது என்பதையும் மறந்து விடக்கூடாது.

தமிழ் நாட்டினை முற்றிலுமாக அழித்து பீகார் போலவோ அல்லது உத்திரப்பிரதேசம் போலவோ மாற்றி விட வேண்டுமென்று மேற்படி பத்திரிக்கைகளும், அதன் நிறுவனர்களும் காலம் காலமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அதையும் மீறி தமிழகம் வீறு நடை போடுகிறது. 

துரோகிகள் மூலம் நினைத்ததை நான்காண்டு காலம் நடத்தினர். இப்போது முடியவில்லை என்கிற போது மீடியாக்கள் மூலம் போலிச் செய்திகளினால் அசுரத்தாக்குதல் நடத்துகின்றனர்.

உண்மையை செய்திகளை வெளியிட குறைந்த ஆட்களே உள்ளனர். உண்மையை உணர முடியா வண்ணம் அவர்கள் பொய்ச் செய்திகளை காலம் காலமாக மனித உலகத்தை அழிக்கும் துரோகிகள் வழியாக பயங்கர தீவிரமான தாக்குதல்களை நடத்துகின்றனர். மக்கள் பொய்களில் மனம் பிரண்டு விடக்கூடாது. தமிழ் நாட்டை முற்றிலுமாக சீரழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடம் இயங்கி வருபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

தினமணியில் ஈ.பாலகுருசாமி அவர்கள் எழுதிய கட்டுரைக்கு பதில் எழுதி இருந்தேன். இதோ விடுதலைப் பத்திரிக்கையில் முன்னாள் துணைவேந்தர் கே.சாதிக் அவர்களின் அறிக்கை என் பதிலுக்கு வலுச் சேர்க்கிறது. நன்றி : விடுதலை தினசர்.




நிலம் (93) - எஸ்சி-எஸ்டி நிலங்களை வாங்கியவர்கள் பட்டா பெறலாம்

தற்போதைய காலம் போல அன்றைக்கு கணிணி வசதி இருந்திருந்தால் பலப் பிரச்சினைகள் வந்திருக்காது. எவ்வளவோ பிரச்சினைகள் இல்லாது போயிருக்கும். கால தாமத தீர்ப்பு கூட குற்றம் தான் என்கிறார்கள். அதைப் போல காலதாமதமாகக் கிடைக்கும் விஷயங்கள் கூட பலனன்றிப் போய் விடுகின்றன.

ஓம் சரவணபவா யூடியூப் சானலில் நடிகர் ராஜேசுடன் குற்றபரம்பரைச் சட்டத்தின் மூலம் பற்றி உரையாடி வரும் பிரபல திரைப்பட இயக்குனரும், விரிவுரையாளருமான திரு.ரத்னகுமார் அவர்கள்,“வரலாறு ஜெயித்தவர்களால் எழுதப்பட்டது” என்றுச் சொன்னார்.

தோற்றவர்கள் அழிக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களால் வரலாறு எழுதப்படுவதில்லை. ஆகவே உண்மையை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது என்றார்.  நூறு சதவீதம் சரியானது. வரலாறு ஜெயித்தவர்களால் புனையப்பட்டிருக்கும் பொய்களின் கூடாரம் என்றே தோன்றுகிறது. 

ஏன் அவரின் கருத்தை இந்த இடத்தில் எழுதுகிறேன் எனில் காரணம் உண்டு. தொடர்ந்து படியுங்கள்.

பிரிட்டிஷ் அரசாங்கம் 1890களில் கொண்டு வந்த பஞ்சமி பூமி சட்டத்தினால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலமற்ற பூர்வ குடி மக்களுக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டது. 

ஏன் பஞ்சமி பூமி சட்டம் உருவாக்கப்பட்டது எனில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்க நிர்வாக அனுமதி கொடுக்கப்பட்ட நிலங்களை, பிரிட்டிஷ்ஷாருக்கு நெருங்கியவர்களாக இருந்த பலர் உரிமை பெற்றார்கள். ஒரு சொம்புத் தண்ணீர் நரலீலைகள் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் அதை விரித்துரைக்க உள்ளது. தொடர்ந்து படித்து வாருங்கள். 

அவ்வாறு நில உரிமை பெற்றவர்களிடம் அடிமையாக கிடந்து நிலங்களில் அடிமை வேலை செய்தும் சரியான கூலி கிடைக்காமல் பசியிலும் பஞ்சத்திலும் செத்துப் போன பூர்வ குடிமக்களின் வார்த்தைகளில் விவரிக்க இயலா கொடும் வாழ்க்கையை கண்ட ஒரு ஆங்கிலேயரின் முயற்சியால் பஞ்சமி நிலச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

மெக்காலே கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பு வேலையைச் செய்ய உடனடியாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட பிராமணர்களுக்கு அரசாங்கத்தில் எளிதில் வேலை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அன்று இந்தியா என்று பெயரிடாத நிலப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த ஆங்கிலேய அரசில் மொழி பெயர்ப்புச் செய்ய வேலையில் இருந்தவர்கள் செய்த செயல்களை திரு.ரத்தினகுமார் சொல்லக் கேட்டுக் கொள்ளுங்கள். கீழே இருக்கும் யூடியூப் லிங்கினை கிளிக் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.


இதற்கிடையில் நம் ஆளுநர் திரு.ரவி அவர்கள் வரலாற்றில் இல்லாத செய்திகளைப் பேசியிருக்கிறார். இந்தியாவை ஒன்றியம் அல்ல என்கிறார். பின்னர் ஏன் குஜராத்தில் திரு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தார்கள் என்று அவர்தான் சொல்ல வேண்டும். 

இந்தியா என்ற பெயரும், இந்து என்ற மதப் பெயரையும் உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிந்து கிடந்த பல்வேறு சமஸ்தானங்களை இந்திய நாட்டுடன் தன் சாமர்த்தியங்களால் ஒன்றாக இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள். அதற்காகத்தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. 

போகிற போக்கில் தன் பதவிக்கு அழகு சேர்க்காத வார்த்தைகளை பொது வெளியில் பேசி இருப்பது சரிதானா? என்பது அவருக்கே வெளிச்சம்.

பஞ்சமி நிலச்சட்டத்தின் வாயிலாக நிலமில்லா பூர்வ குடிமக்கள் நில உரிமை பெற்றார்கள். அவர்களின் ஏழ்மை நிலையின் காரணமாக,  அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பூமியை விற்று விடும் சூழல் இருந்ததால் கண்டிஷன்கள் போடப்பட்டன. அந்த கண்டிஷன்களில் முக்கியமானது தன் இனத்துக்கு உள்ளேயே பூமியை உரிமை மாற்றம் செய்யலாம் என்பது. வேறு இனத்துக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது அடுத்த விதி.

எனக்குத் தெரிந்த பலர் இப்படியான பஞ்சமி பூமிகளை விபரம் தெரியாமல் வாங்கி இதுவரை பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலாமலும், விற்பனை செய்ய முடியாமலும் அவஸ்தை பட்டு வருகின்றனர். நானும் கூட என் நண்பருக்கு பட்டா மாற்றம் செய்ய முயன்ற போது இதே பிரச்சினையில் சிக்கி நேரத்தையும், பொருளையும் இழக்க நேரிட்டது.

2019ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி கண்டிஷன் பூமிகளை வாங்கியவர்களுக்கு அதன் உரிமை அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது என்பது பலருக்கும்  நிம்மதியான செய்தி என்றாலும் அதிலும் ஒரு சில விஷயங்களை ஆய்வு செய்து பட்டாவுக்கு சரியான ஆவணங்களுடம் சமர்ப்பிக்க வேண்டும்.

யாரோ ஒருவரின் முயற்சியால் வழக்கில் பெற்ற வெற்றியானது பலருக்கும் உதவி செய்கிறது. வெற்றி என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். நீதிமன்ற வரலாற்றில் எழுதப்பட்டும் ஒவ்வொரு தீர்ப்புகளும் கூட ஆய்வுக்குரியவை என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.

இதோ சட்டம் இருக்கிறது, எனக்கு பட்டா மாற்றிக் கொடுங்கள் என்று விண்ணப்பம் செய்தால் கிடைக்காது. அதற்கென வழி முறைகள் உள்ளன. இது பற்றிய ஆலோசனைகள் மற்றும் ஆவணங்கள் விண்ணப்பம் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே என்னால் உதவி செய்ய இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். இலவச ஆலோசனை நிச்சயம் தரப்படாது என தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, March 12, 2022

நிலம் (92) - சத்தியமங்கலம் கோவை நான்கு வழிச்சாலை நிலமெடுப்பு

இந்திய அரசு சத்திய மங்கலத்திலிருந்து கோவை வரை நான்கு வழிச்சாலைக்கு நிலமெடுக்க அரசாணை வெளியிட்டிருக்கிறது.

சுமார் 96 கிலோ மீட்டர் தூரம் நிலமெடுப்பு நடக்க உள்ளது. ஆகவே அந்தச் சாலை எங்கிருந்து தொடங்குகிறது? நிலமெடுப்புக்கு உள்ளாகும் நிலங்கள் யாவை? போன்ற விபரங்களை சரியான அலுவலரிடம் சென்று விண்ணப்பம் கொடுத்து பெற்று வைத்துக் கொள்ளவும்.

மேலும் நான்கு வழிச்சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் அதாவது 600 அடி தூரம் வரை நிலம் வாங்காதீர்கள்.

இதைப் பற்றிய விபரங்களை நேரில் சென்று தொடர்புடைய அரசு அலுவலரிடம் பெற்றுக் கொள்ளுங்கள். 

எந்தெந்த கிராமங்களில் நிலமெடுப்பு நடக்கிறது என்ற விபரம் கீழே. சர்வே நம்பர்கள் மற்றும் பிளான்களை நேரடியாக அலுவலரைச் சந்தித்து பெற்றுக் கொள்ளவும். 

என்னிடம் தகவல் வேண்டுமெனில் கட்டணம் கட்ட வேண்டும். இலவச ஆலோசனை நிச்சயம் தர இயலாது.

கிராமங்கள் வரிசை கீழே :

  • Guthiyalathur  
  • Hassanur  
  • Chikkarasampalayam  
  • Pattavarthi ayyampalayam  
  • Rajan Nagar  
  • Ikkarainegamam  
  • Konamoolai  
  • Shenbagapudur  
  • Vinnappalli  
  • Kurumbapalayam  
  • Pungampalli  
  • Thatchaperumapalayam  
  • Nallur  
  • Madampalayam  
  • Punjaipuliampatti  
  • Velamundi(R.F.)  
  • Kottuveerampalayam  
  • Sathyamangalam  
  • Ariappampalayam  
  • Ellappampalayam  
  • Shenbagapudur A  
  • Shenbagapudur B  
  • Reserve Forest  
  • Hassanur  
  • Sellapam palayam 
  • Karapadi  
  • Kanuvakkarai  
  • Vilankurichi  
  • KUNNATHUR  
  • Kattampatty  
  • Kuppepalayam  
  • Kariampalayam  
  • Karegoundenpalayam  
  • Odderpalayam  
  • Annur  
  • Annur Mettupalayam  
  • Pasur  
  • Ambodi  
  • Sarkar Samakulam  
  • Kondayampalayam  
  • Kalapatti  
  • Pogalur  
  • Keeranatham  
  • Vadakkalur  
  • Kalapatti West  
  • Saravanampatti  
  • Pongalur  
  • Alathur  

Monday, February 28, 2022

மாதுரி தீட்சித்தின் தி ஃபேம் கேம் - கன்னி வலை

கல்லூரியில் படிக்கும் போது சக மாணவர்கள் மூலமாக தெரிய வந்த ”ச்சோலி கீ பீச்சே கியா கை” பாடல் மூலம் மாதுரி தீட்சித்தின் அழகும், வசீகர முகமும், உடலும், அவரின் நடனமும் என்னையும் அவரின் ரசிகனாக மாற்றியது.

மாணவர்கள் மத்தியில் மாதுரி தீட்சித் பிரபலம். வார்ட் ரோப்புகளில் அவரவருக்கு கிடைத்த மாதுரியின் படங்களை ஒட்டியிருந்தார்கள். 

ஒரே பாடல் உச்சத்துக்குச் சென்றார். அது மட்டுமல்ல அவரின் ’தக் தக் கரினே லக்கா’ என்ற பாடல் ரசிகர்களை கிளர்ச்சியடைய வைத்தது. 

இடுப்பின் வளைவுகளும், கச்சிதமான கடைந்தெடுத்த மார்புகள் கச்சைக்குள்ளிலிருந்து வெளியே வரவா என்று அவஸ்தைப்படுதலையும் கண்டு மோகத்தில் முக்குளித்து அவரின் கண்களும், முகமும் ஒருங்கே சிரிக்கும் சிரிப்பும், அவரின் சிணுங்கல்களும், காமத்தோடு அனில் கபூரை தழுவும் காட்சிகளும் காமக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டு எழும் காம நெருப்பில் வொயிட் பெட்ரோலை ஊற்றும்.

மாதுரியின் தொப்பூள் குழியைக் கண்டதும், அடச்சே பேசாமல் புதை பொருள் ஆராய்ச்சி படிக்காமல் போனோமே என்று தோன்றும். 

காதலுங்க. காதல்.

பிராமணியக்கவிஞன் பாரதி கூட பாடினானே

காதல் காதல் காதல் – காதல் போயின் சாதல் சாதல் சாதல் என. 

நம்புங்கள் இந்து நாடு, கற்பு வழி பெண்கள் நிரம்பிய புனித நாடு நம் இந்தியாவென்று.

இந்திய அரசு மாதுரிக்கு அவார்டு கொடுத்திருக்கிறது. மிகச் சிறந்த நடிகை என்று பல்வேறு அவார்டுகளை உலகம் அள்ளிக் கொட்டியது. மாதுரி தீட்சித் அள்ளித் தெரித்த நடிப்புக் கலைகளை உலகமே ரசித்தது. சுமார் முப்பது ஆண்டுகாலம் இந்திய சினிமாவில் பலரை ரசிகர்களாய் நட்டுக்க வைத்தார். சாதாரணமான வேலையா இது? 

சோனாகச்சி நினைவுக்கு வரவே கூடாது. அது வேறு, இது கலை. இன்னும் உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் - சரோஜாதேவி செக்ஸ் புத்தகங்கள் - அரசு தடை - இலக்கிய நாவல் - கலை - அவார்டு. புரிஞ்சுக்கோங்க.

காமவறட்சி கொண்ட தமிழகத்தில் வயதுப் பருவ மாணவர்களின் காம கிளர்ச்சிகள் இப்படியான பாடல்களினால் தூண்டப்படுகின்றன. மனம் உணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறது. அறிவோ ’அங்கிட்டு போய்’ ஓரமாக உட்கார்ந்து விடுகிறது.

மனமெல்லாம் நெக்குருகிப் போய் நெளிவுகளும், சுளிவுகளும் மனதுக்குள் காய்ந்த சவுக்கு கட்டை எறிவது போல எரிய ஆரம்பிக்கும். என்னவென்று தெரியாத உணர முடியாத அதை, உடலும் மனசும் ஒன்றாக நேர்கோட்டில் அந்த அறியா சுகத்தின் மீதும் படிந்து விடுகிறது. தேடுதல் ஆரம்பிக்கிறது.

காமத்தின் வழியாக காதல் புனையப்படுகிறது. காதல் வாழ்க்கையின் உன்னதமான ஒன்று எனக் காவியங்கள் காட்சிகளை விரிக்கின்றன. 

காதல் கவிதைகளைத் தேடி மனம் ஓடும். கவிஞர்கள் கடவுள்களாய் தெரிவார்கள். சுரதா, வைரமுத்து வகையறாக்களின் கவிதைப் புத்தங்களின் பக்கங்கள் கிழியும்.

வாய் தானாகவே காதல் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பிக்கும்.

பவுடர் டப்பாக்கள் விரைவில் காலி ஆகும். கண்ணாடி முன் காதல் விரியும். காணும் பெண்களின் மீதோ ஆண்களின் மீதோ கவனம் திரும்பும். தேடித்தேடிக் காதல் படங்களாய் பார்க்க வைக்கும். காதலியைத் தேர்ந்தெடுக்க ஹீரோக்கள் பேசிய வசனங்கள் நினைவில் பதியும்.

காதலியைத் தேடி அலைய ஆரம்பிக்கும். படிப்பின் கவனம் சுக்கு நூறாய் சிதறும். மனம் சமாதானத்துக்கு தயாராகும். இப்படித்தான் ஆரம்பிக்கும் காதல்.

இதன் கிளைமேக்ஸ் என்னவாகும்?

இதற்கு இரண்டே இரண்டு முடிவுகள் தான்.

ஒன்று காதலிக்கிறேன் பேர்வழி என நாசமாய் போவது.

இன்னொன்று அது என்னவென்று கண்டு விட்ட பின்னாலே, ’அடச்சே இவ்ளோ தானா’ என தெரிந்ததும் விலகி விடுவது.

இந்த இரண்டாம் வாய்ப்பு 99 சதவீதத்தினருக்கு கிடைக்காது. 

ஆனால் எனக்கு இரண்டாம் வாய்ப்பு கிட்டியது. 

தஞ்சாவூரில் கிடைக்காத ஒன்றா? காதல் விளையாட்டினை ஆடி முடித்தேன். 

ஒழுக்கம் அது இதுவென்று ஆரம்பித்து விடாதீர்கள். 

இதுவெல்லாவற்றுக்கும் காரணம் மாதுரி தீட்சித் மட்டுமே. தூண்டி விட்டது அவர். செயலின் மூல காரணம் அவர். நானோ வேலைக்காரன்.

ஆனால் பாருங்கள், என் நண்பன் சிக்கிக் கொண்டான். நான் வெளியேறி விட்டேன். 

அவன் மொத்தமாக முடிந்து போனான்.

என்னைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்பது ஒரே ஒரு பெண்ணுடன் காதல் செய்து கலவி கொள்வது இல்லை. அதேதான் பெண்களுக்கும். ஒழுக்கம் என்பதின் விரிவாக்கம் பல காரணிகளைக் கொண்டது. அது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்களை எழுதும் போது படித்துக் கொள்ளுங்கள்.

ஒழுக்கம் என்பது என்னவென்றால் தான் கொண்ட கொள்கைக்கு விரோதம் இல்லாமல் இருப்பது.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில் நம் பாரதப் பிரதமர் எப்படி தான் கொண்ட பிராமணிய சேவை கொள்கையில் இருந்து வெளி வராமல், தேசப்பற்று பேசியே பிராமணர்களை நிதி நிர்வாகத்தில் உட்கார வைத்து சுமார் 3.50 லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் வெகு நாசூக்காக யாருக்குமே தெரியாமல் அள்ளிச் சென்ற சித்ரா ராமகிருஷ்ணன், அரவிந் சுப்ரமணியைக் கண்டும் காணாதது போல இருக்கின்றாரோ அதுதான் ஒழுக்கம்.

நாடே நாசமானாலும், தனக்குத் தெரிந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காப்பதை தான் ஒழுக்கம் என்று சொல்கிறேன். 

இந்தியா நாசமாகப் போனாலும் பிராமணர்கள் கொள்ளையும், கொலையும் (மஹாத்மாவைச் சொன்னேனுங்கோ) செய்தாலும் பிராமணியக் கொள்கையிலிருந்து வெளியே வராமல் இருப்பதுதான் ஒழுக்கம்.

நம்புங்கள் ஒரு பைசா கூட திரும்ப வராது.

இந்த ஊழலினால் பங்குச் சந்தையில் கொல்லப்பட்டவர்களின் டேட்டாவை ப.சிதம்பரம் பாஷையில் ‘நோ டேட்டா கவர்ன்மெண்ட்’ வைத்திருக்காது. 

அப்படியே வைத்திருந்தாலும் கொரானா மரணம் என்று கூட பதிவு செய்திருக்காது. 

மூன்றரைக் கோடியாம் கொராணாவில் பரலோக மன்னிக்கவும் சிவபெருமானைத் தரிசிக்கவும், சொர்க்கத்தில் வசிக்கும் காம கோடி காஞ்சி ஜெயேந்திரரைப் பார்க்கச் சென்றவர்கள். நெட்டில் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

மற்றுமொரு உதாரணம் எடப்பாடி எப்படி துரோகத்துக்கு எந்த வித கேடும் செய்யா வண்ணம் துரோகத்தின் அத்தனை விதிகளையும் கடைபிடித்து ஆட்சி செய்தாரோ அதைப் போல. துரோகம் செய்வதும் ஒரு செயல்தான். 

துரோகம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் கொலை செய்ய வேண்டும். மினிமம் 13 அப்பாவிகளைச் சுட்டுக்கொன்றால் தான் துரோக மகுடத்தில் அது வைரமாய் ஜொலிக்கும். எடப்பாடியின் துரோகச் செயலின் மகுடத்தில் ஜொலிக்கும் வைரம் 13 பேரின் கொலை.

செய்யும் செயலைச் சரி வரச் செய்வதுதான் ஒழுக்கம்.

அது காதலாய் இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி. அதனதன் விதிகளுக்குள் உட்பட்டு ஒழுக்கமாய் இருப்பது எப்படி என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

விடாது கருப்பு போல மாதுரி தீட்சித் எனது இந்த வயசிலும் என்னைக் கீறி விட வந்து விட்டார்.

மாதுரி தீட்சித்தைக் கல்யாணம் செய்தது ஒரு அமெரிக்க மருத்துவர். மருத்துவர்கள் உடல்கள் மீதான பற்றில்லாது இருப்பார்கள். மாதுரிக்கு ஒரு மருத்துவர் கணவனாய் அமைந்ததுதான் சரியானது. மாதுரியின் துல்லியமான திட்டமிடல்.

எனக்குப் பிடித்த ஓப்பன் (#Open) (அந்த ஓப்பன் இல்லீங்கோ) பத்திரிக்கையில் தில்லாலங்கடி சித்ரா ராமகிருஷ்ணனின் இந்தியாவை நாசம் செய்த இமயலச் சாமியாரின் பெயரில் செய்த லீலா வினோதங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன்பாக ”The Return of the Queen” என்ற தலைப்பில் சுண்ணாம்பு அடித்த ஒரு வெள்ளைத் தோல்காரியைப் பார்த்தேன். அது யார்ரா என்று பார்த்தால், அட! நம்ம மாதுரி தீட்சித்.


நெட்பிளிக்ஸில் வெளியான The Fame Game – மாதுரியின் வெப் சீரிஸ் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். என்ன இருக்கப் போகிறது அக்கட்டுரையில்?

அவர் என்னென்ன படங்கள் நடித்தார், என்னென்ன பாடல்கள் பிரபலமானவை, அதனால் கிடைத்த புகழ், ரசிகர்கள் என்று ஒரு பிச்சைக்காரன் தட்டில் (பிச்சைக்காரர்கள் என்ற வகுப்பினை மோடி அரசாங்கம் புதிதாக விரைவில் பிரிக்கும்) கிடப்பதைப் போல கலவையாக ஒரு கட்டுரை. 

நெட்பிளிக்ஸில் சீரியலைப் பார்த்தேன்.

நொய்யாலே! 

அந்த மாதுரி தீட்சித்தா இது? 

பார்த்தவுடன் ஓட்டுக்குள் சுருங்கி விடும் நத்தை போல (உடனே ஆராய்ச்சிக்குப் போகக் கூடாது. சுருங்கிய மேட்டருக்கு செம டெம்ப்ட் மருந்துகள் - #சாருநிவேதிதாவின் புத்தகங்கள் அல்ல - அதை விட வீரியமானவைகள் இருக்கின்றன) மனசு சுருங்கிப் போனது.

கதை என்ன தெரியுமா?

கிளைமேக்ஸில் மகளை ஃபேம் அதான் ஹீரோயினாக ஆக்கணும் என்ற ஒரு நாட், அதற்கு தடையாக இருக்கும் சோம்பேறிக் கணவனைக் கூட ஜெயிலுக்கு அனுப்பும் ஒரு திகில் (அப்படித்தான் சொல்றாங்க) நிறைந்த கடத்தல் நாடக வெப் சீரிஸ் இது. 

கடத்தலுக்கு காரணமேஏஏஏஏஏ...... மாதுரி தீட்சித்தான்.  மாதுரியை யாரோ கடத்தி விட்டார்கள் என போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. 2016லிருந்து சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்ததே அதைப் போல.


படங்கள் உதவி : Open Magazine (Thanks to Open)

கதையில் ஒரு லூசு ஓல்ட் ஹீரோ. 

அனில் கபூரின் மீது மாதுரிக்குப் ’படா படா ஹை’ கோபம் போல. 

சும்மா இருந்த அந்த ஓல்ட் ஹீரோவைத் தூண்டி விட்டு, தற்கொலை செய்ய வைத்து, அனில் கபூரின் மீதான தன் வன்மத்தை வேறு நாசூக்காக காட்டி உள்ளார்.  தேவையே இல்லாத ஒரு கிளைக்கதை. செக்ஸ் காட்சியெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே இருந்தாலும் சவுக்கு சவுக்குன்னு வேகாத கறியை மெல்லுவது போல டென்சனாகும்)

மாதுரியின் நெட் பிளிக்ஸ் அவதாரம் ஏன்?

புகழ் என்பது போதை அல்ல அது ஒரு வலை. ரசிகன் மீது விரிக்கப்படும் மாய வலை. இன்றைக்கும் கட் அவுட்களில் பால் ஊற்றிக் கொண்டிருக்கும் மீன்களாய் ரசிகர்கள் மாறவே இல்லை. இவர்கள் மூலம் கிடைக்கும் பணம் பெரிது. அமெரிக்காவில் செட்டில் ஆன மாதுரிக்கு வெப் சீரிஸ் மூலம் மீண்டும் உறிஞ்சலை ஆரம்பிக்க வேண்டுமென்ற பிசினஸ் திட்டம். செயல்படுத்துகிறார்.

மாதுரி தீட்சித் தன் காம கிளர்ச்சியால் ரசிகர்களுக்கு உண்டாக்கிய கிளர்ச்சியை புகழாக மாற்றினார். அதை வலையாக விரித்தார். சிக்கியவர்கள் ரசிகர்கள்.

மாதுரி தீட்சித் கனவுக் கன்னி,  ரசிகர்களுக்கு விரிக்கப்பட்ட கன்னி வலை.

ரசிகர்களின் ஒவ்வொரு பைசாவும் வலைக்குள் சிக்க வைக்கப்படும். 

பிசினஸ், பணம் – மாதுரி தீட்சித். 

தி ஓப்பனில் ஏன் இப்படி ஒரு கட்டுரை?

ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் பத்திரிக்கைகள். நம்பிக் கொள்ளுங்கள். அது தான் நம் முன்பு இருக்கும் ஒரே சாய்ஸ். 

இந்தப் பதிவினைப் படித்ததும் பலருக்குள் பல்வேறு கேள்விகள் எழக்கூடும். யோசித்துப் பாருங்கள், வெளிச்சம் தெரியும்.

அடுத்த பதிவு என்ன தெரியுமா? 

பிளாக்கைப் பாருங்கள். சப்ஸ்கிரைப் செய்து வையுங்க.

* * *

Saturday, February 26, 2022

குரு – பக்தன் – குருசேவை



இடமிருந்து இரண்டாம் இடத்திலே நிற்பவர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்

குருநாதரின் ஆலயத்துக்கு அதாவது சற்குருவடிக்குச் சென்று வருவதில் எனக்கு எப்போதும் பேரானந்தம் உண்டாகும். வீட்டிலிருந்து சற்குருவடிக்குச் செல்லும் வழியில் குருநாதருக்கு பலகாரங்கள் கொஞ்சம் வாங்கிக் கொள்வேன். முன்பு விளாங்குறிச்சியிலிருந்து செல்லும் போது, வடவள்ளி சந்தையில் காய்கறிகள், பலகாரங்கள் வாங்கிச் செல்வதுண்டு.

இப்போது சற்குருவடியின் நேர் தெற்கே வீடு இருப்பதால் காய்கறிகள் இன்னபிற சமாச்சாரங்கள் எல்லாம் பெரும்பாலும் வாங்குவதில்லை. பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் குரு நாதரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு உணவும், நீரும் கிடைத்திடவும் அவர்களுடன் பேசவும் ஜோதி சுவாமிக்கு நேரம் போதவில்லை. கடந்த வாரம் அவருக்கு தொண்டை கட்டி விட்டது. 

குருநாதரையும், ஜோதி சுவாமியையும் பார்க்க வருபவர்கள் எங்கெங்கிருந்தோ பயணப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பக்தர்களும் தன் வீட்டிற்குச் செல்லும் போது ஏதாவது வாங்கிச் செல்வதைப் போல சற்குருவடிக்கு வரும் போது அவர்களால் இயன்றதை வாங்கி வருகின்றார்கள். ஆலயத்தினுள்ளே குருநாதரின் பாதமலர்களில் வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

கடந்த குருபூஜை விழாவிலே பெரும் பக்தர்கள் கூட்டம் வந்து விட்டது. வருடத்தில் இரண்டு நாட்கள் அதாவது கார்த்திகை மகா தீபம் மற்றும் குரு நாதரின் குருபூஜை விழாவிற்கு மட்டுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகும். பிற நாட்களில் தரிசனத்துக்கும், வியாழக்கிழமைகளில் வாசியோகப் பயிற்சிக்காக கொஞ்சம் அதிகமாக பக்தர்கள் சற்குருவடிக்கு வருகை தருவார்கள்.

காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே ஆலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

எதிர்பாரா வண்ணம் பக்தர்கள் அதிகரித்து விட்டதால் முள்ளங்காடு வரையிலும் கார்களும், இரு சக்கர வாகனங்களும் நிறைந்து விட்டன. பக்தர்கள் குருவின் ஆலயத்திலே பிரார்த்தனை செய்து விட்டு, உணவருந்தி விட்டு வருவதும் போவதுமாக இருந்தனர். 

சற்குரு ஆலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது கண்டு ஒரு சிலர் மனக்கிலேசம் கொண்டு பல்வேறு இன்னல்களை உருவாக்கி வருகின்றார்கள். லட்சக்கணக்கான பக்தர்களினால் பல்வேறு நன்மைகள் கிடைத்து சுகபோகத்தில் வாழ கனவு கண்டு அச்செயல்களை செய்யத் துவங்கி உள்ளார்கள். குருவானவர் தர்மமே உருவானவர். செய்த செயலின் பயனை அனுபவித்து தான் தீர வேண்டுமென்றும், வேண்டுமெனில் சிறிது துயரத்தை, துன்பத்தை ஆற்றுப்படுத்துகிறேன் எனவும் சொல்பவர். 

சற்குருவடி மிகுந்த ஆற்றல் மிக்கது. தர்மமற்ற எந்த ஒரு செயலும் இங்கு நடக்காது. அதர்மத்தை நிறைவேற்ற துணியும் நபர்களின் வாழ்வு முற்றிலுமாக சீரழிந்திருப்பதை கண்டிருக்கிறேன். 

சித்தர்கள் சற்குருவின் ஆலயத்தின் பின்னால் செல்லும் நொய்யல் ஆற்றில் நீராடி விட்டு, ஆலயத்தின் மேற்கு பகுதியிலே உலாவி விட்டு, பின்னர் ஆகாய மார்க்கமாக ஏழாம் மலைக்கு வெள்ளிங்கிரி நாதரை தரிசிக்கச் செல்லும் இடம் நம் குருவின் சற்குருவடி.

இந்த இடத்திலே அதர்மத்துக்கு எங்கே இடம்? அறம் செழித்திருக்கும் இடம் நம் குருவின் ஆலயம்.

பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் ஆலயத்தின்னுள்ளும் வெளியிலும் கூட்டி பெருக்கி சுத்தபடுத்துவதை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். அவர்கள் இருவரும் அக்காவும், தம்பியும் என்றும் வருவார்கள், தூய்மைப்படுத்துவார்கள், பிரார்த்தனை செய்வார்கள் சென்று விடுவார்கள் என்று ஜோதி சுவாமி சொன்னார்கள்.

எனக்கு மனம் எங்கோ சென்று விட்டது. 

ஆன்மீகத்தில் மூன்று வகை ஆனந்தங்கள் உள்ளன. அவைகள் பக்தி, பஜனை மற்றும் பிரம்மம் ஆகும். பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

கடவுள் எஜமான், பக்தன் பணியாளன் என்ற நிலையில் பக்தனொருவர் கடவுளின் மீது பக்தி கொள்வார். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்த்தோமென்றால் இறைவன் இன்பம் என்றால் பக்தன் இன்பத்தை அனுபவிப்பவனாக இருப்பான்.  அதாவது இறைவன் இனிப்பு என்றால் அதை சுவைப்பவன் பக்தன். பக்தர்கள் கொண்டிருக்கும் பக்தியானது இவ்வகையானது தான்.

இந்தப் பக்தியில் இறைவனுக்கான சேவை என்பதின் மூலம் பக்தன் பல்வேறு பலன்களை அடைகிறான். இறைச் சேவையின் போது மனம் ஒடுங்க ஆரம்பிக்கிறது. பக்தனின் நினைவில் சேவை மட்டுமே இருக்கும். இறைவனின் நினைப்பில் ஆழ்ந்து விடுகிறான்.

பக்தனின் ஒடுங்கிய மனத்தோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது அப்பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது. பக்தி யோகத்தின் சாரம் இதுதான். பக்தர்கள் இந்த நிலையில் இருப்பவர்கள். இவர்கள் இறைச் சேவைக்கும், இறைவனைக் கண்ணுற்று பிரார்த்தனை செய்வதின் மூலம் தங்களுக்கு வேண்டியவற்றை இறைவன் மூலம் அடைகிறார்கள்.

அந்த இரு உடன்பிறப்புகளும் சற்குருவடியில் செய்யும் சேவையின் மகத்துவத்தினை உணர்ந்தேன். சற்குருவடியிலே ஒரு சில பக்தர்கள் பிற பக்தர்களுக்கு உணவளிப்பார்கள். ஒரு சிலர் பாத்திரங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவார்கள். ஒரு சிலர் சற்குருவடி ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். பாட்டி ஒருவர் சற்குருவடியின் வெளியில் தூய்மைப் பணி செய்து கொண்டே இருப்பார். இப்படி சற்குருவடிக்கு வருகை தரும் பக்தர்கள் ஏதாவதொரு பணியைத் தங்களின் குருவின் மீது கொண்ட பக்தியாலே செய்து கொண்டே இருப்பார்கள்.

சற்குருவடியிலே ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சற்குரு எல்லோருக்குமானவர். பிற மதத்தினர் வாசியோகம் கற்றுக் கொள்ள வருவதைக் கண்டிருக்கிறேன். பிரார்த்தனைக்கு வந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.

சற்குருவடியிலே தர்மமும், பக்தியோகமும், பிரம்மயோகமும் ஆட்சி செய்கின்றன. நம் குருவானவர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் தன் பக்தர்களை பாதுகாக்கிறார் என்பதை இங்கு பக்தர்கள் நடந்து கொள்ளும் விதத்திலே அறிந்து கொள்ள முடிகிறது.

என்னையும் அவர் தன் பக்தனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதிலே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

குருவின் துணை இருப்பின் இந்த உலகத்தையே வெற்றி கொள்ளலாம் அல்லவா?

Tuesday, February 15, 2022

குருபூஜை விழா - கைலாயத்தின் காட்சிகள்

2022 பிப்ரவரி 13 - நமது குருவின் 37வது ஆண்டு குரு பூஜை விழா துவங்க இருக்கிறது. விடிகாலையில் எழுந்து குளித்து விட்டு குருவருளைப் பெற சற்குருவின் ஆலயம் நோக்கி சில்லென்ற காற்றினூடே வாகனத்தில் சென்றேன்.

சற்குருவின் ஆலயத்தின் முகப்பில் அலங்கார தோரணங்கள், குருவின் சீடர்களை வரவேற்க வரவேற்பு என பக்தர்கள் நிறைந்து இருந்தனர். 

சுமார் 120 பேர் சமையல் செய்து பக்தர்களுக்கு உணவளிப்பதற்காக சென்னை யிலிருந்து முதன் நாளே வந்து தங்கி விட்டனர். தன் சொந்தப் பணத்தினைச் செலவு செய்து கொண்டு குருவடிக்கு வந்திருந்தனர் என்று கேள்விப்பட்டேன். வருடா வருடம் அவர்கள் குருசேவைக்கு வருகை தருகின்றனர்.

காலையில் கிச்சடியுடன் தேங்காய் சட்னி பக்தர்களுக்கு அமுது படைத்துக் கொண்டிருந்தனர். காஃபி தனியாக கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்த விழாவுக்கு பத்திரிக்கை அடிக்கவில்லை. விளம்பரம் செய்யவில்லை. வாய் மொழியாகவும், மொபைல் மூலமாகவும் மட்டுமே குருபூஜை விழாவினை பக்தர்களுக்குத் தெரிவித்தோம்.

அடியேன் ஒரு டிஜிட்டல் பத்திரிக்கை தயார் செய்து யூடியூப்பில் போட்டிருந்தேன்.  பிளாக்கில் எழுதினேன் வழக்கம் போல. அவ்வளவுதான்.

எத்தனை பக்தர்கள் வருவார்கள் என்ற கணக்கெல்லாம் யாருக்கும் தெரியாது. சற்குருவிற்கே வெளிச்சம். எத்தனை பக்தர்கள் வருவார்கள், அவர்களுக்கான உணவு, வசதிகள் ஆகியவற்றை சற்குருவே கவனித்துக் கொள்வார் என்று ஜோதி சுவாமி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சன்னிதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சற்குருவின் திரு உருவத்தில் மாலைகளும் மலர்களும் குவிந்து கிடந்தன. சற்குருவடியின் சன்னிதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரிசையாக வந்து கொண்டிருந்தனர். 

பக்தர்களை வரிசைபடுத்தி, பிரார்த்தனைக்கு ஒழுங்குப்படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த இதர பக்தர்கள், பக்தர்கள் கொண்டு வரும் பிரார்த்தனை மலர்களை நடக்கவிருக்கும் சற்குருவின் திருவுருவ அபிஷேகத்துக்கு சேகரம் செய்து கொண்டிருந்தனர்.

பக்தர்கள் பூக்கள், அரிசி, தின்பண்டங்கள், பலகாரங்கள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள், எண்ணெய், பூஜை பொருட்கள் என உறவினர் வீட்டுக்கு பொருட்கள் வாங்கிச் செல்லுவதைப் போல வாங்கிக் கொண்டு குருவின் முன்னாலே வைத்து வணங்கிச் சென்றபடி இருந்தனர். பல பக்தர்கள் அரிசி மூட்டையினை தோளில் சுமந்து வந்து குருவின் சன்னிதியில் வைத்து வணங்கிச் சென்றனர். ஒரு சிலர் காய்கறிகளை மூட்டை மூட்டையாக தூக்கி வந்து வைத்து வணங்கினர். 

ஒரு பக்தர் கங்கா தீர்த்தம் கொண்டு வந்து தெளித்துக் கொண்டிருந்தார். பலர் மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் பூக்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் பக்தர்களாக தெரிந்தனர். 

கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. மோன நிலையில் பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு இசையினூடாகப் பரவி இருந்தனர். மிகவும் வித்தியாசமானதொரு குருபூஜை விழாவாக இருந்தது.

இந்த குருபூஜை விழாவை நடத்துவது சற்குருவின் பக்தர்கள் - சீடர்கள். 

சமையலுக்கு எனத் தனி பக்தர்கள் குழு, வரக்கூடிய பக்தர்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு குழுவினர், உணவு பரிமாற ஒரு குழுவினர், நீர் கொடுக்க ஒரு குழுவினர், பூஜைகளைக் கவனிக்க ஒரு குழுவினர், பக்தர்களை வரிசைப்படுத்தி வழிபாடும் பிரார்த்தனையும் செய்ய ஒரு குழுவினர் என தனித்தனியாப் பக்தர்கள் தாங்களாகவே பிரிந்து காலையில் இருந்து மாலை வரை ஓயாது சற்குருவின் விழாவை இனிதே நடத்திக் கொண்டிருந்தனர்.

பக்தர்கள் ஒவ்வொருவரும் தானாகவே அறிமுகம் செய்து கொண்டனர். ஒவ்வொருவரையும் விசாரித்து தெரிந்து கொண்டனர். 

சிறார்கள் அங்குமிங்கும் களிப்புடன் ஓடி ஆடிக் கொண்டிருந்தர். ஒரு சிறுவன் களிமண்ணால் சிவலிங்கம் செய்து கொண்டிருந்தான். இரு சிறார்கள் காவி உடையில் நெற்றி நிறைய விபூதி பூசிய வண்ணம் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

யாரையும் எவரும் ஒரு வார்த்தை கடிந்தோ, முகம் சுளித்தோ பார்க்க முடியவில்லை. 

சற்குருவிற்கு அபிஷேகம் ஆரம்பித்தது. கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. சங்கு முழங்கியது. எக்காளமும், குறும்பரந்தூம்பும், தாளமும், திமிலையும் ஒருங்கே இசைக்கப்பட்டது. எங்கும் ஓம், ஓம் என்ற சத்தம். 

“என்னப்பன் அல்லவா? பொன்னப்பன் அல்லவா? “ என்ற பாடல் இசையூனூடே பாடப்பட்டது. 


14.02.2022ம் தேதியன்று சற்குருவின் அபிஷேகம் காட்சிகள் 
நன்றி கார்த்திக்

சிவபெருமான் வெள்ளிங்கிரி மலையிலே எழுந்தருளி இருக்கும் ஏழாவது மலையின் நேர் கீழே அமைந்து இருக்கும் நமது சற்குருவின் சன்னிதியானது அன்றைக்கு சிவ கைலாயம் போன்றே தென்பட்டது.

கோபம், கடுஞ்சொல் இல்லா அன்பு பக்தர்கள் தமது குருவின் குருபூஜையை ஒன்றாக இணைந்து நடத்திக் கொண்டிருந்த காட்சியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. 

அரிசி, பருப்பு, உப்பு, புளி, காய்கறிகள், சமையல் பொருட்கள், எண்ணெய், மாலைகள், தட்டுகள் என இன்னும் என்னென்ன தேவையோ அத்தனையும் பக்தர்கள் குருவிற்காக கொண்டு வந்து சேர்த்தனர். அதுமட்டுமல்ல சற்குருவினைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முகம் கோணாவண்ணம் சேவைகளை கொஞ்சம் கூட புன்னகை மாறாமல் செய்து கொண்டே இருந்தனர்.

சற்குருவின் சன்னதியில் எல்லோரும் ஒன்றே. விதிகள் இல்லை, கட்டளைகள் இல்லை, சற்குரு எல்லோருக்குமானவர். அவரின் பக்தர்களும் அவ்வாறே இருக்கின்றனர். ஒரு குடும்பம் தங்களது வீட்டு விழாவினைச் செய்வது போல எங்கெங்கு இருந்தோ வந்த பக்தர்கள் ஒன்றாய் விழாவை நடத்தும் காட்சிகளை எங்கும் காணவியலாது.

கலந்து கொள்ள கட்டணம், உட்கார கட்டணம், வண்டி நிறுத்தக் கட்டணம், அங்கோ போகக்கூடாது, இங்கே போகக்கூடாது, இங்கே நிற்ககூடாது என்று சொல்ல இங்கு எவரும் இல்லை. 

சற்குருவின் சன்னிதியும், ஆலயமும் பக்தர்களுக்கானது. சற்குருவானவர் ஒவ்வொருவருக்கும் உரிமையானவர். அவர் உலக நன்மைக்காக மனிதர்களின் நலனுக்காக நொய்யல் ஆற்றங்கரையிலே தவமிருந்து கொண்டிருக்கிறார். பசிப்பிணியும், நோய்களையும் பக்தர்களிடம் அண்ட விடாது காத்தருளிக் கொண்டிருக்கிறார்.

எத்தனை எத்தனையோ பக்தர்களை நான் அங்கு கண்டிருக்கிறேன். தீரா நோயுடன் வந்தவர்களின் நோய் தீர்ந்ததைக் கண்டிருக்கிறேன். 

பராரியாக வந்தவர்கள் தற்போது செல்வ வளமும், பதவியும் கிடைத்து சமூகத்திலே உயர் நிலையில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

தீராப் பிரச்சினைகளுடன் வந்தவர்கள் இன்று நலமோடு வாழ்வதையும் கண்டிருக்கிறேன்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணமும், குழந்தைப் பாக்கியம் தேடி வந்தவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பெற்றதைக் கண்டிருக்கிறேன். 

கண் சிமிட்டுவது போல சற்குருவின் ஆசியாலே ஒவ்வொரு பக்தர்களின் பிரார்த்தனைகளும் நிறைவேறி இருக்கின்றன. சற்குருவிடம் பிரார்த்தனை என்பது தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதை விடவும் மேலானாது என்பார்கள் பெரியோர்கள். 

“என் பக்தன் வந்து நிற்கிறான் பார். அவனுக்கு உடனே தேவையானவற்றைச் செய்யுங்கள்” என்று இறைவனிடம் கோபித்துக் கொள்ளுபவர் குருவை விட வேறு எவராக இருக்க கூடும்?

”என்னைக் காப்பாற்றும்” என்று சரணாகதி அடையும் பக்தர்களை எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாத்திடும் குருவின் அருள் கிடைப்பது பாக்கியம் அல்லவா?

சக மனிதனை நேசிப்பதை விட வேறென்ன உயர் தத்துவம் இந்த உலகில் இருக்கிறது. எந்த வித பிரதியுபகாரமும் இன்றி பிறருக்குச் சேவை செய்வதை விட உயர்ந்த பணி வேறில்லை.

கடவுள் தன்மையை மனிதர்கள் எளிதில் அடைய வேண்டுமெனில் அன்பு கொள்ளும் உள்ளவும், பலனறியா சேவையும் செய்து வந்தாலே போதும். 

அணையா  தீயான பசியை ஆற்றுப்படுத்துதலை விட உயர்வான இறைப்பணி வேறொன்றும் எங்கும் இல்லை.  

நமது சற்குருவின் ஆலயத்திலே காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு வரை அன்னமளிப்பு தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 100 பேருக்கு அன்னம் அளிக்கப்படுகிறது. 

விழாவில் மதியம் பஞ்சாமிர்தம், பொறியல், கூட்டு, சாதம், சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர், அப்பளம், கார போண்டா, பாயாசம் ஆகியவை பாக்கு தட்டுகளில் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து உணவருந்தினர்.

அபிஷேகம் முடிந்து சற்குரு மீண்டும் சன்னதிக்குள் எழுந்தருளி தீபம் காட்டி பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

சற்குருவின் ஆலயத்தில் இருந்து முட்டத்து வயல் வரை கார்களும், இரு சக்கர வாகனங்களும் நிரம்பியிருந்தன.  தரிசனம் முடிந்து உணவருந்திய பக்தர்கள் இல்லம் நோக்கிச் சென்று  கொண்டிருந்தனர்.

சற்குருவின் அருளைப் பெற - அவரின் பக்தர்களால் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த விழாவினைப் போல ஒரு விழாவினை எங்கும் காண இயலாது. 

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் சற்குருவின் அருளும் ஆசியும் பெற்று வளமும் நலமும் பெற்று மகிழ்வோடு வாழ குருவினைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

எந்த ஒரு தீயனவும் அண்டாது விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாய் அவரவர் வீடு திரும்பியதை நேற்று அறிந்து கொண்டேன்.