குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, June 6, 2022

6000 கோடி நித்தி - இறைத்தூதர் பிஜேபி - திருமணப் பிரச்சினைபிஜேபி செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா

சாரு நிவேதிதாவின் இணையதளத்தில் 02.09.2009ம் தேதியன்று அவர் எனக்கு அனுப்பிய இமெயிலில் வந்த ’கடவுளைக் கண்டேன் வரம் தரும் கல்பதரு’ என்ற கட்டுரையை அப்லோடியிருக்கிறேன். கட்டுரையின் இறுதியில் நித்தியானந்தாவை ‘கடவுள்’ என்று முடித்திருந்தார். நித்தியானந்தாவின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவருக்காக தனியாக ஆறேழு கட்டுரைகள் எழுதி இருந்தார். 

அன்றிலிருந்து நித்தியானந்தாவை அவரது இணையதளம் மூலமாக தொடர்ந்து கவனித்து வருவதுண்டு. திடீர் திருப்பமாக சன் டிவி நித்தியானந்தா ரஞ்சிதா லீலைகளை வெளியிட்டு பரபரப்பாக்கியது. நக்கீரன் பல இதழ்களை வெளியிட்டு நித்தியானந்தா பரமஹம்சரை  நார் நாராகா கிழித்தது. 

சாரு நிவேதிதா எவரைக் கடவுள் என்றாரோ அவரை குமுதம் என்று நினைக்கிறேன் அந்த இதழில் ’சரசம் சல்லாபம் சாமியார்’ என்ற தலைப்பில் கிழித்துத் தொங்க விடும் தொடர் கட்டுரைகள் எழுதினார். குமுதம் இதழில் இதற்கு முன்பு ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தலைப்பில் நித்தியானந்தர் எழுதிய தொடர் வந்தது.

பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களும் இவ்வளவுதான். பத்திரிக்கை தர்மம் என்பது வியாபாரம். எழுத்தாளர்களின் தர்மம் என்பது பொருளாதாரம். படிப்பவர்கள் தமக்குள்ளாக சமாதானப்படுத்திக் கொள்வார்கள்.

நித்தியானந்தாவின் பிடதி ஆஸ்ரமத்தில் இருந்து சின்மயி புகழ் வைரமுத்து ஆண்டாளை தவறாக எழுதி விட்டார் என்றுச் சொல்லி ஆரேழு ஜில்லி சிட்டுகள் முழுமையான அலங்காரங்களுடன் பக்தி மனம் கமழ வீடியோ போட்டிருந்தார்கள். அன்றைக்கே தெரிந்தது நித்தியானந்தாவின் ஆசிரமத்தின் கல்பதரு காட்சிகள். 

முன் ஜென்மத்தில் ஆண்டாளின் பக்கத்து வீட்டில் பிறந்திருந்த ஜில்லு சிட்டுக்கள் பிடதி ஆசிரமத்தில் இருப்பதை சின்மையி புகழ் வைரமுத்துவுக்கு தெரியாமல் போனது காலக் கொடுமை. சிட்டுக்களின் வீடியோக்கள் மீடியாக்களில் மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவில் விலையேறும் பெட்ரோல் போல பற்றிக் கொண்டது.

அடுத்த காட்சியாக வீடியோ வெளியிட்ட பக்தை ஜில்லு சிட்டுவின் தந்தை ஜனார்த்தனசர்மா தன் மகள்களை மீட்டுக் கொடுங்கள் என்று காவல்துறையில் புகார் கொடுத்தார். முடிவில் நித்தியானந்தா கைலாசாவிற்கு பல ஜில்லு சிட்டுகளுடன் பறந்து போய் அமர்ந்து விட்டார்.

ஜனார்த்த ஷர்மா, ஜில்லு சிட்டுக்கள் ஆகியோர் பிராமணர்கள். ஆனால் நித்தியானந்தாவோ வேறு சாதி. நித்தியானந்தாவின் ஆசிரம சொத்து மதிப்பு சுமார் 6000 கோடி என விகடன்  என்ற கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் எம்.ஜி.ஆருக்கு ஒரு ஜெயலலிதா, ரஜினிகாந்துக்கு ஒரு லதா என்பது போல நித்திக்கும் நாலும் நாலும் நான்கே என்ற விடை வருவதைக் காணலாம். ஆகவே காலம் காலமாக தொடர்வதைப் போல நித்தியானந்தாவின் ஆசிரமத்து சொத்துக்கள் சேரும் இடம் சேரும். இனி  நித்தியாந்தாவின் கதி மோட்சத்தில் முடியும் என்று எதிர்பார்க்கலாம். பெண்கள் மிக மிக ஆபத்தானவர்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது உண்மைதானோ?

* * *

நேற்று பாஜகவின் அஃபீஷியல் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா (பிராமணர்) இஸ்லாம் மதத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தைப் பற்றி அர்த்தமற்ற வார்த்தைகளில் விமர்சித்தார். பிஜேபியின் செய்தி தொடர்பாளர் இப்படிப் பேசலாமா? வாய் தவறிப்பேசினாரா என்றால் நம்ப முடியவில்லை.

ஞானவாபி மசூதி பிரச்சினை பிஜேபியின் அடுத்த கட்ட மதக் கலவரத் திட்டம் என பல செய்திகள் வெளியாகி உள்ளன. அயோத்தி ராமர் பிரச்சினைக்குப் பிறகு குதுப்மினார், தாஜ்மஹால் என ஆரம்பித்திருக்கிறார்கள் என்றெல்லாம் மீடியாக்களில் பலர் பேசி வருகின்றார்கள்.

இந்தியாவின் மொத்த அன்னிய செலவாணி கையிருப்பு மே, 2022 மாதத்தில் 640 பில்லியன் டாலர்கள். இதில் சுமார் 70 சதவீதம் அன்னிய செலவாணி அரபு நாடுகளில் வேலை செய்யும் ஆட்களின் மூலமாக, பிசினஸ் மூலமாக வருகிறது என்கிறது புள்ளி விபரம்.

நுபுர் சர்மாவின் விமர்சனத்துக்குப் பிறகு ஓமன், குவைத், சவுதி அரேபிய நாடுகள் விளக்கம் கோரி இந்திய எம்பசிக்கு நோட்டீஸ் அனுப்புகின்றன. அரபு நாடுகளில் இந்தியப் பொருட்கள் விற்பனை நிறுத்தப்படுகிறது. 

ஒரு படி மேலே போய் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் விடுமுறையில் இந்தியாவிலிருக்கும் ஊழியரை இனி வர வேண்டாம் என்று ட்வீட் போடுகிறார். இனி பல அரபு நிறுவனங்களின் உரிமையாளருடன் பாகதாரராக இருக்கும் இந்தியர்களின் கதி என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.  

தென் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளில் பணியாற்றும் இந்துக்களின் வேலை என்னவாகுமோ தெரியவில்லை. மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் இருக்கும் போது இந்துக்களின் வேலைகள் என்னவாகுமோ என்ற திகில் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவிற்கு பெருமளவில் வரக்கூடிய அன்னிய செலவாணி என்னவாகும்? 

குருடு ஆயில் கொடுக்க கூடாது என்ற பல டிவீட்களை காண முடிகிறது. பிரதமர் மோடியின் படத்தினை குப்பைத் தொட்டியில் ஒட்டி அதன் மீது செருப்பு வரையப்பட்டிருக்கும் புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நுபுர் சர்மா பிஜேயிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். டிவிட்டரில் வெளியானஒ ட்வீட் வீடியோவில் பிஜேபி எனக்கு சப்போர்ட் செய்யும் என்று பேசியிருக்கிறார். பிஜேபி மசூதியை இடித்து விட்டு ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிறது. பிஜேபி வெளியிட்ட செய்தியோ நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை என்ற பச்சை பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறது.

நுபுர் சர்மாவின் பேச்சின் பின்னாலே பெரும் சதி திட்டம் இருக்குமோ என்று  பலரும் ஐயப்பட ஆரம்பித்திருக்கின்றார்கள். தமிழகத்தில் லூலூ நிறுவனம் ஒரு செங்கலைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஜோக்கர் ஆடு பேசிக் கொண்டிருந்தது. ஆனால் பிரதமரும், யோகி ஆதித்திய நாத்தும் லூலூ வணிக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் லூலூ நிறுவனம் வணிகம் செய்யக்கூடாது என்கிறார் பிஜேபி ஜோக்கர் ஆடு. தென்னிந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் அரபு நாடுகளில் (கீழ்சாதி என்றழைக்கப்படும் மனுதர்மத்தின்படியான) இந்துக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் விமர்சனத்தை பிஜேபி பிராமண செய்தி தொடர்பாளர் பேசி பெரிய பிரச்சினை ஆக்குகிறார். 

கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிஜேபி பல ஆயுதங்களை வைத்து திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வர முனைகிறதோ என்ற எண்ணம் எழும்புவதில் ஆச்சரியமில்லை.

* * *

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின் விளைவு உண்டு என்பார்கள். அறுபது எழுபதுகளில் தென்னிந்திய மக்களிடம் வரதட்சிணைக் கொடுமை பெரிய ஆட்டம் ஆடியது. 

அதற்கு ஒரு உதாரணமாக சி.சி.சுப்ரமணியம் 1962களில் எழுதிய ஒரு கவிதை சாட்சி.

என்று வருவானோ

பாடாத பாட்டாக 

மவுனத்துள் கம்முகிறேன்.

பேசாத சொல்லாகி

சுவடிக்குள் நொறுங்குகிறேன்

உணராத பொருளாகி

சொல்லுக்குள் புழுங்குகிறேன்

ஆளாத பாண்டமாகி

சேந்தியில் மழுங்குகிறேன்

கவிதையைப் படித்து விட்டீர்களா? இது ஒரு முதிர் கன்னி சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. முதிர் கன்னி என்னவென்றால் திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள். அந்தக் கால கட்டங்களில் முதிர்கன்னிகளாக வாழ்ந்து மடிந்தனர் பல பெண்கள். ஒரே காரணம் வரதட்சிணைக் கொடுமை. பெண் பிள்ளைகள் பிறந்த போதே உசிலம்பட்டி  போன்ற கிராமங்களில் கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்டார்கள். படம் கூட வெளியானது.

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பார்கள்.  ஒரு டிவி டாக்‌ஷோவில் ஒரு ஆண் எட்டு ஆண்டுகளாக பெண் தேடிக் கொண்டிருப்பதாக புலம்பினார். பூமராங்க்

சாதி பிரச்சினை, தகுதி, அழகு, பணம், பொருளாதாரம் இன்றி உற்றார் உறவினர்களின் அப்ரிஷியேசன் போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி அதுவும் வெகு முக்கியமாக பெண் சுதந்திரத்தினை ஒப்புக் கொண்டால் ஒழிய எந்த திருமணமும் இப்போதும் நடப்பதில்லை.

காலத்தின் கொடுமை என்னவென்றால் தனக்கான தகுதியான வரன் தேடித் தேடி பெண்களும் முதிர் கன்னிகளாக மாறிக் கொண்டிருப்பதுதான். அதுவுமின்றி கட்டற்ற சுதந்திரத்தின் வாயிலாக பாலியல் இன்பங்களை திருமணத்துக்கு முன்பே அனுபவித்து விடும் ஆண்களும், பெண்களும் திருமணத்தின் மீது கொண்டிருந்த ஈர்ப்பினை இழந்து விடுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் திருமணம் என்பது இப்போது பூதாகரமானதொரு பிரச்சினையாக மாறி விட்டது. பிள்ளைகளை மருத்துவமனைகள் உருவாக்கிக் கொடுக்கின்றன. அதுமட்டுமின்றி விஜய் டிவியில் அக்கார்டு ஹோட்டல் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தால் குழந்தை பிறக்கும் என்று வேறு சொல்லி மருத்துவமனைகளின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறார்.

இந்தக் காலகட்டமானது எதிரும் புதிருமான வாக்குவாதம் சண்டைகள் சச்சரவுகளை சூழலாகக் கொண்டது. நயவஞ்சகமே உருவெடுத்த ஒரு சில சுய நல கூட்டத்தாரின் புரிந்து கொள்ளவே முடியாத வலைகளில் சிக்கி மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்பது மட்டுமே உண்மை.

* * *

மதுரை ஆதீனத்தின் உண்மையான தலைவர் கைலாசாவின் அதிபர் சுவாமி நித்தியானந்தா அவர்கள். ஆனால் மதுரையில் இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி ஆதீனமாக வந்து உட்கார்ந்து கொண்டு, ஆதீனங்கள் என்ன வேலை செய்யனுமோ அதைச் செய்யாமல் இஷ்டத்துக்கு அரசியல் பேசிக் கொண்டலைகின்றார்கள். 

பிரதமர் மோடியிடம் பேசினேன், அப்படி இப்படி என்று பேசி வருகிறார். தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர் முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் அவர்கள் என்பதை மறந்து விட்டு வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். காலம் சென்ற மதுரை ஆதீனத்தை உட்கார வைத்தவர் கலைஞர் என்பதை மறந்து போனார் போலும். இப்போது இருக்கும் ஆதீனம் பொறுப்பில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்தே தீரும்.ஆதீனம் அவர்களே, அரசியல் பேசுங்கள். பொறுத்திருந்து பாருங்கள். கடவுற்பணி ஆற்ற வந்து விட்டு அக்கிரமமா செய்து கொண்டிருக்கின்றீர்கள்? அறமும் தர்மமும் வேடிக்கை பார்க்காது. 

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.