குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, December 23, 2020

கிருஷ்ணனும் இந்திய அரசும் விவசாயிகள் போராட்டமும்

விடிகாலையில் கோவையில் குளிர் இந்த வருடத்தில் கொஞ்சம் அதிகம். ஜில்லிடுகிறது. பற்கள் தந்தி அடிக்கின்றன. இருந்தாலும் மனையாள் விடிகாலை நான்கரைக்கு எழுந்து வாசல் தெளிக்கும் போது கூட உட்கார வேண்டியாகி விட்டது.

ரூடோஸுக்கு கோதை கேட்டை விட்டு வெளியில் சென்றால் டென்சனாகி விடுவாள். குரைக்க ஆரம்பித்தால் தெருவே எழுந்து விடும். மணி சாமியார் மாதிரி. அவனுக்குப் பிடிக்காதவர்கள் வந்தால் மட்டுமே தன் கர்ண கடூர குரைப்பை வெளிப்படுத்துவான். இவர்களைச் சமாதானப்படுத்த அடியேன் வாசலில் ஆஜராகி விடுகிறேன்.

இந்தக் குளிரில் எங்கே ஆண்டாள் பாசுரத்தைப் பாடி தெருவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவது? அதென்னவோ தெரியவில்லை கிருஷ்ணனுக்கு மட்டும் தான் மார்கழி மாதத்தில் படுகிராக்கி ஆகி விடுகிறது.

நம்ம குலதெய்வங்களுக்கு எல்லாம் இப்படியெல்லாம் பாசுரங்கள் எழுதலாமே? யாராவது தமிழ் படித்த, தொல்காப்பியம் நன்கு பயின்றவர்கள், முத்தமிழினையும் நன்கு அறிந்த தமிழ் அறிஞர்கள் நமது குல தெய்வங்களுக்கு பாடல்களை எழுதும்படி வேண்டுகிறேன். 

எனது குலதெய்வம் பத்திரகாளி அம்மன், வீரபத்திரர், நாடி மாரியம்மன், கோவையில் செல்வ நாயகி அம்மன். 

கடந்த எட்டு மாதங்களாக சலூன் செல்லவில்லை. இன்றைக்கு சலூன் சென்று வரலாம் என சலூன் கிருஷ்ணனுக்கு போன் போட்டேன்.

“அண்ணா, கடைக்கு வந்ததும் அழைக்கிறேன், வந்து விடுங்கள்”

கடைக்குச் சென்ற போது தனித்து இருந்தான். ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

முடியைத் திருத்தம் செய்யும் போது ’ரொம்பச் சிரமமாக இருக்கிறது அண்ணா, பாதி கூட வருமானம் வரவில்லை, கடன் வாங்கிச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது. இன்னும் சலூனுக்கு தைரியமாக வரமாட்டேன் என்கிறார்கள்’ என்றான்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு இண்டஸ்டரி வைத்துக் கொண்டிருக்கும் நண்பர் தன் அலுவலகத்தை மூடி, ஆட்களை அனுப்பி விட்டேன் என்றார். ஜி.எஸ்.டி மற்றும் இரும்பின் விலை படு உயர்வு. எதுவும் செய்ய முடியவில்லை என்றுப் புலம்பினார்.

உலகமே முடங்கிப் போய் கிடக்கிறது. ஆனால் பல பொருட்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது. எரிபொருட்கள் விலையோ விண்ணைத்தாண்டி பறக்கிறது. பிஜேபியின் தமிழக புது தலைவர் அண்ணாமலை, எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்படவில்லை என பேட்டி கொடுக்கிறார். மனச்சாட்சிக்குத் தெரியாதா? என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்று. ஒரு பத்திரிக்கையாளர் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். அதையும் கேட்டுக் கொண்டு இப்படிப் பதில் சொல்கிறார்.

மன்மோகன் சிங்கை எரிபொருள் விலையேற்றத்தினைக் கட்டுப்படுத்த முடியாது எனில் வீட்டுக்குப் போங்கள் என அன்றைய குஜராத் முதலமைச்சர் மோடி அவர்கள் கேட்டுக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

துவரம்பருப்பு ரூ.122, பாசிப்பருப்பு ரூ.120, உளுந்தம்பருப்பு ரூ.130, தட்டைப்பயிறு ரூ.90 இப்படி மக்கள் தினம் தோறும் பயன்படுத்தும் பருப்பு வகைகள் எல்லாம் நூறு ரூபாய்க்கும் மேல் சென்று விட்டது. இன்னும் குறைந்தபாடில்லை. எண்ணெய் விலையோ சொல்லும்படி இல்லை. அதிலும் கலப்படம்.

குஜராத்தில் மோடி வெர்சன் என பத்திரிக்கைகள் அள்ளி விட்டன. எல்லாவற்றையும் நம்ப வைத்தார்கள். இதுவரையிலும் ஒன்றையும் செய்யவில்லை மோடி அரசு என ஊரார் பேசிக் கொள்கிறார்கள். 

இந்தியா கொரானாவில் முடங்கிக் கிடக்கும் போது சட்டங்களை இயற்றுகின்றார். அதை எதிர்த்து டெல்லியில் வயிற்றுக்கு உணவிடும் விவசாயிகள் நான்கு டிகிரி குளிரில் நடுங்கிக் கொண்டு போராடுகின்றார்கள். ஆனால் பாரதப் பிரதமரோ குருத்துவாரா சென்று வணங்கி வருகிறார். 

குஜராத்தில் 2000 பேர் கொல்லப்பட்ட போதும் அமைதியாக இருந்தவர் தானே நம் பாரதப் பிரதமர். குளிரில் விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும் போது அமைதியாக இருப்பது ஒன்றும் பெரிதில்லை. 

நான் மக்கள் சேவகன் என்று ரேடியோவில் பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் சேவகனான பிரதமருக்கு விவசாயிகள் விரோதிகளாகிப் போனார்களோ என்று தெரியவில்லை. 

இந்தியாவெங்கும் உணவுக் கிடங்குகளை அதானியும், அம்பானியும் உருவாக்கிய போதே தெரிந்து போனது இந்த மூன்று சட்டங்களும் அவர்களுக்கானது என. 

இடைத்தரகர்கள் இல்லாது போவார்கள் என்கிறார்கள். இடைத்தரகர்கள் தானே மக்கள் பிரதிநிதிகளும். மக்களின் இடையில் நின்று செயல்படுத்துபவர்கள் தானே அவர்கள்? ஷேர் மார்க்கெட்டில் இடைத்தரகர்கள் இன்றி இயக்க முடியுமா? இதெல்லாம் பேச்சு அல்ல. முட்டுக் கொடுப்பது.

விவசாயத்துறையில் விலை பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, இடைத்தரகர்களின் பதுக்கலைக் கட்டுப்படுத்த ஒரு மெக்கானிஷத்தைச் செயல்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு, வேறு ஏதோ கதை பேசுகின்றார்கள்.

எலக்‌ஷன் கமிஷனின் ஓட்டு இயந்திரத்தை மக்கள் புறக்கணிக்காத பட்சத்தில் எதுவும் பெரிதாக நடந்து விடாது. ஓட்டு இயந்திரம் ஆளும் ஆட்சியாளர்கள் சொல்லும் கணக்கை மட்டும் வெளியிடும். உண்மையான ஜன நாயகம் இப்போது இல்லை என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.

இதற்கிடையில் இன்னொரு அக்மார்க் அயோக்கியத்தனத்தினை மத்திய அரசு அரங்கேற்றி இருக்கிறது. அது சமஸ்கிருதத்தில் செய்தி. ஒரு சதவீதம் கூட இல்லாத ஒரு மொழிக்கு செய்தி அந்தஸ்து.

எல்லா மொழிகளையும் அழித்து ஆட்சி மொழியாக மாற்றி விடும் படுபயங்கர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள். 

ஒரே ஒரு மொழி மட்டும் சிறப்பானது என்கிறவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள். இது மிகவும் அக்கிரமமானது, அயோக்கியத்தனமானது. 

விலையேற்றம். மக்களிடம் கறார் வரி வசூல். எந்த வித உதவியும் செய்யாத அரசு. 

தமிழகத்தில் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடும் ஊழலைக் கண்டு கொள்ளாத அரசு.

இவற்றை எல்லாம் மனதில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கின்றார்கள். 

இன்னும் காலம் இருக்கிறது. பாஜக தமிழகத்தில் இறக்கி இருக்கும் அல்லை சல்லைகளின் வாயைக் கட்டிப் போட்டு, ஊழல் மீதான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏதாவது நடக்கலாம். ஆனால் இங்கு கு.மூ வகையறாக்கள் இருக்கும் வரை அதுவும் நடக்காது.

ஆட்சி என்பது பயங்கரவாதம் என்கிறார்கள் எழுத்தாளர்கள். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.