குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, October 18, 2016

தர்மத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்

தினமும் காலையில் பத்திரிக்கைச் செய்திகளோடு நண்பர்களின் பிளாக்கைப் படிப்பதுண்டு. 2008களில் பலருக்கு இருந்த எழுத்தார்வத்தை ஃபேஸ்புக் வந்து தின்று விட்டது. படைப்பாளிகள் இரண்டு வரிக்குள் திறமையைக் காட்ட வேண்டிய சிரமத்திற்குள்ளாகி விட்டனர். 

அதுதான் ஃபேஷன் என்கிறார்கள் மீடியாக்காரர்கள். யாராவது ஒரு நடிகர் நடுவிரலை வெட்டிக் கொண்டு ஃபேஷன் காட்டினால் நம்மவர்களும் நடுவிரலை வெட்டிக் கொள்கின்றார்களா இல்லையா பாருங்கள்? மீடியாவும் சினிமாக்காரர்களும் எது சொன்னாலும் தன் இங்கே பற்றிக் கொள்கிறதே?

ஃபேஸ்புக், டிவிட்டர் அக்கவுண்ட் இருக்கிறதா என்கிறார்கள். வாட்ஸ்அப் இருக்கிறதா என்கிறார்கள். காலத்திற்கேற்ப மாறியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாறவில்லை என்றால் சமூகத்தில் வாழவே முடியாத நிலைக்குப் போய் விடக்கூடிய ஆபத்து அதிகம் என்கிறார்கள் படித்தவர்களும் படிக்காதவர்களும்.

மீடியாக்கள் இண்டர்நெட்டில் எது உசத்தி என்கிற அளவுக்கு மூளைச்சலவை செய்கிறது. ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரும் கோடிகளில் சம்பாதிக்க நாமெல்லாம் நம் காசைப் போட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். தினமும் ஃபேஸ்புக் வருபவர்களில் பலர் சிறைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். 

காலம் மாற மாற நம்பிக்கைகள் கூட சிதைந்து போகின்றன. அந்தக் காலத்தில் வாக்கு கொடுத்திட்டேன் என்பார்கள். உலகில் முதன் முறையாக வாய்மொழியில் பட்டாக்கள் வழங்கப்பட்ட நாடு நம் தமிழ் நாடு. கிராமக் கணக்காயரிடம் என் நிலத்தை இவருக்குக் கொடுத்திட்டேன் அவரு பெயரை எழுதிக்கோ என்றுச் சொல்லி விடுவார்கள். அப்பேர்பட்ட மாமனிதர்கள் இருந்த தமிழ் நாடு இன்றைக்கு கபாலிகள் சாரி சாரி காவாலிகளால் நிரம்பி வழிகிறது. திருடர்களை வழிபடும் மக்கள் நிரம்பிக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆன்மீகம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய வியாபாரமாக கடவுள்கள் மாறி விட்டார்கள். இப்போதெல்லாம் பிராண்டட் பெயர்களை கடவுளுக்குக் கொடுத்து விட்டார்கள். காசு வேணுமா அந்தக் கோவில், உடல் நோவு தீர வேண்டுமா இந்தக் கோவில் என்று கோவில்கள் கூட மாறி விட்டன. வியாபார தந்திரங்கள் பெருகப் பெருக கடவுள் மீதான பிடிப்பு மனிதர்களுக்கு குறைந்து கொண்டே வருகின்றன. குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. குற்றக்காரியங்கள் தவறான பழக்க வழக்கங்கள் இன்று ஃபேஷனாகி விட்டன. அப்பாவுடன் மகன் அமர்ந்து தண்ணியடிப்பது தப்பில்லை என்றுச் சொன்ன ஷங்கர் இன்று மாபெரும் இயக்குனராகி விட்டார்.

ஒழுக்கங்கள் மாறுகின்றன. நம்பிக்கைகள் சிதைகின்றன. பணமும் புகழும் அதிகாரமும் எல்லாவற்றையும் சிதைக்கின்றன. தர்மத்தின் கோடுதனை தாண்டும் போது அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டுமென்ற சிந்தனைகள் இப்போது எவரிடத்திலும் கிடையாது. ஆனால் இன்றைக்கும் தர்மம் தன் செயலைச் செய்து கொண்டே இருக்கிறது. 

ஒரு மறைந்த மாபெரும் இசைக்கோர்வையாளரின் மகன் குவார்ட்டருக்கு கையேந்தி நிற்கின்றார் இன்று. இருந்த வீடும் போய் விட்டது. பணக்கார அரசியல்வாதியின் பையன் தீரா நோயில் விழுந்து கிடக்கிறார். வாரிசுகளோ சுரோண்ணிதத்தில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.

எத்தனை கோடி பணமிருந்தாலும், புகழ் இருந்தாலும் என்ன பயன்? பல சினிமா பிரபலங்களின் வாரிசுகள் இறந்து போனார்களே அப்போதெல்லாம் இவர்களால் என்ன செய்ய முடிந்தது. தான் செய்த பாவம் தங்கள் குழந்தைகளைத் தண்டித்து விட்டது என்று காலம் போனபின் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகின்றது?  ரியாலிட்டி ஷோக்களில் இப்போது அழுது என்ன நடந்து விடப்போகிறது. இரட்டைத் தண்டனை அல்லவா கிடைத்திருக்கிறது.

தர்மம் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது. நாம் தான் தர்மமாவது புண்ணியமாவது என்று பேசிக் கொண்டு திரிகிறோம்.

நேற்று மாலை நேரம். நண்பரும் நானும் முக்கியமான விஷயமாக சிறுவாணி வரைக்கும் செல்ல வேண்டியிருந்தது. சுற்றிலும் மலையரசி தன் கரும்பச்சை பட்டாடையால் போர்த்திக் கொண்டிருந்தாள். மலை மீது மேக மூட்டம் தழுவியபடி தியானத்தில் இருந்தன. ஆங்காங்கே மலையருவிகள் தலைமுடியில் எட்டிப்பார்க்கும் வெள்ளை முடி போல தண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. காரின் ஏசியை நிறுத்தி விட்டு கண்ணாடியை இறக்கி விட்டேன். 

கோவையின் பீளமேடு ஏரியாவின் காற்று முற்றிலும் மாசடைந்து விட்டது என்றது டைம்ஸ் ஆஃப் இந்தியா. அந்தப் பக்கம் வசிப்பதால் சுத்தமான காற்றை இந்தப் பக்கமாய் வரும் போது சுவாசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

நண்பரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பகிர கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர் ஆன்மீக வாழ்க்கையில் நிரம்ப ஈடுபாடு கொண்டவர். ஒரு பிரபலமான சாமியாரின் பேக்கேஜிங்கில் பணத்தை இழந்த அனுபவம் கொண்டவர்.

அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் இது.

நண்பரின் அப்பாவுக்கு உடல் நலிவுற்றதால் மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தார்கள். ஆரம்ப கட்டச் செலவே சுமார் இரண்டு இலட்சம் கேட்டிருக்கின்றார்கள். நண்பரோ சிறிய தொழில் செய்பவர். அவ்வளவு பணத்தைப் புரட்ட முடியாத நிலை. கடன் வாங்க வேண்டிய நிலை. பெற்று வளர்த்த தகப்பனா? காசா? என்று வரும் போது தகப்பனாருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நண்பரின் சகோதரரின் நண்பர் இரண்டு இலட்ச ரூபாயைக் மருத்துவச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்திருக்கிறார். கும்பிடப் போன தெய்வமே என நினைத்து பெற்றுக் கொண்டு மருத்துவக் கட்டணத்தை செலுத்தி இருக்கிறார். 

விதி தான் வேறு மாதிரி யோசிக்குமே. அப்பா காலமாகி விட்டார். அத்தோடு கடன் வேறு. காரியங்கள் முடிந்து சகோதரரின் நண்பரைப் பார்க்கச் சென்றிருக்கின்றார். அவரிடம் ஒரு வருடம் டைம் தாருங்கள். வட்டியோடு செலுத்தி விடுகிறேன் என்றுச் சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் நான் வட்டிக்குப் பணம் கொடுக்கவில்லை என்றுச் சொல்ல நண்பர் இப்படியெல்லாம் மனிதர்கள் இந்த உலகில் இருக்கின்றார்களா என்று பிரமித்திருக்கிறார்.

கொஞ்ச நேரம் தான் அந்தப் பிரமிப்பு. அடுத்து வரப்போவது அணுகுண்டு எனத் தெரியாமல் கண்களில் கண்ணீர் ததும்ப அவரைப் பார்க்க அவரோ என் மனைவிக்கு உங்கள் வீடு ரொம்பவும் பிடித்திருக்கிறது. நீங்கள் வேறு எவரிடமாவது வீட்டை விற்று விடுவீர்களோ என்பதால் தான் நான் அட்வான்ஸாக கொடுத்த பணம் தான் அது. ஆகவே உங்கள் வீடு எனக்கு வேண்டும் என்றிருக்கிறார்.

பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டை இப்படி ஒரு சூழலில் சிக்கி இருக்கிறோம் என்று தெரிந்தும் கேட்கின்றாரே என்ற அதிர்ச்சியில் ஒன்றும் பேசாமல் இருந்திருக்கிறார். முடிவில் மார்க்கெட் விலையை விட முக்கால்வாசிக்கு கிரையம் செய்து கொடுத்து கடனைக் கட்டி விட்டு, மீதமுள்ள தொகையோடு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் நண்பர். கடவுளின் மீது நம்பிக்கையே போய் விட்டது என்றார் அவர் தொடர்ந்து.

பெருத்த மகிழ்ச்சியுடன் வீட்டை வாங்கியவர் குடியேறிய கொஞ்ச நாட்களில் அவரின் மனைவிக்கு பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது. அதன் காரணமாக அந்தப் பெண் பைத்தியமாகி விட இவரும் ஒரு பைக் ஆக்சிடெண்டில் போய் விட்டார். இப்போது அந்த வீடு மூடிக் கிடக்கிறது என்றார் நண்பர்.

”தர்மத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்றேன் அவரிடம்.

பேரூரில் டோப்பாஸ் டிபன் கடையில் சூடாக ஒரு காஃபியைப் பருகி விட்டு வீடு வந்து சேர்ந்தேன். வெளியில் குளிர் அதிகமாயிருந்தது. வீட்டுக்குள் கதகதப்பாய் இருந்தது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.