குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, September 19, 2016

செட்டியார் ஹோட்டல் மதியச்சாப்பாடு

பத்தாம் வகுப்பு படித்தாகி விட்டது. இனி பதினொன்று படிக்க வேண்டும். வேங்கடக்குளத்தில் சேர்த்து விடலாம் என்று நினைத்து அங்கு சென்றோம். கம்யூட்டர் வகுப்பில் சேர்க்க முடியாது என்றார்கள். பின்னர் தஞ்சாவூர் சென்றோம். அங்கு ஆட்டோவில் அமர்ந்திருந்த போது எதிரில் இருந்த விளையாட்டு மைதானத்தில் இண்டர்வெல் விட்டு வந்திருந்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ ஒரு பையனால் உதை வாங்கிய பந்தொன்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பையன் மீது விழ அவன் மல்லாக்க விழுந்தான். அம்மா ஓடிப்போய் அவனைத் தூக்கி விட்டார்கள். அவ்வளவுதான் விஷயம். என்னை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

ஒரு வழியாக கீரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் வேமங்குடிக்காரர் வேலை செய்யும் பள்ளி என்பதால் முதல் குரூப்பில் சேர்த்து விட்டார்கள். கணிணி படிக்க வேண்டுமென்ற ஆசையெல்லாம் ஓடியே போனது. தினமும் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் சைக்கிளில் நண்பர்கள் அழைத்துச் செல்வார்கள். சில பல காரணங்களால் பைங்கால் சித்தி வீட்டில் தங்கிப் படிக்க ஆரம்பித்தேன். சித்தியின் பெரிய கொழுந்தனாரின் பையன் நடராஜன் தான் சைக்கிளில் அழைத்துச் செல்வான். எனக்குத் தம்பி.


மதியச்சாப்பாடு பள்ளியின் வலதுபுறமிருந்த செட்டியார் ஹோட்டலில்தான். எனக்கு மாதம் 50 ரூபாய் பட்ஜெட் தான். முழுச்சாப்பாடு 1 ரூபாயும் 25 பைசாவும் எனப் பேசி தினமும் எனக்கு சாப்பாடு போட்டார் செட்டியார். ஆள் கொஞ்சம் குண்டு. வெள்ளைக் கைத்தறி பனியன் மாதிரி அழுக்கான உடை உடுத்தி இருப்பார். கசங்கி பழுப்பு மண்டிய வேட்டி முக்கால் கால் வரைக்கும் தொங்கும். ஹோட்டலில் மீன் வறுவல் பிரபலம். குடல் கறியும் அவித்த முட்டையும், ஆம்லேட்டும் அதிகம் விற்பார்கள். பின்னால் இருந்த கரும்புகை மண்டிய அடுக்களைக்குள் இருந்துதான் அவையெல்லாம் வரும். நடந்து கொண்டே இருப்பார். காசு வாங்கிப் போடுவதில் இருந்து இலைகளுக்கு உணவு வைத்து குழம்பு விடுவது வரை திருவாரூர் தேர் அசைந்து வருவது போல அசைந்து கொண்டிருப்பார். 

எனக்கு சாப்பாட்டுக்கு மட்டும் தான் ரூ.1.25. பிற உணவுகளுக்கெல்லாம் தனியாகக் காசு உண்டு. ஒரு வாரம் சாம்பார், கருவாட்டுக்குழம்பு, மீன் குழம்பு என்று சாப்பிட்டு வந்தேன். நான் வேறு சைடு டிஷ்ஷுகளையும் கேட்பது இல்லை. ஏனென்றால் மீன் குழம்பு, மீன் வறுவல் என்றால் அது அபூர்வம் சித்தியின் கைப்பக்குவம் தான். இறால் வறுவல் என்றாலும் நண்டுக் குழம்பு என்றாலும் சித்தியின் கைப்பக்குவத்திற்கு நிகர் வேறு எவருமில்லை. என் அப்பாவின் தங்கை மகள் தான் சித்தி. ஒரு வகையில் சித்திக்கு நான் தாய்மாமன் மகன். அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருப்பார். சித்தியின் அக்கா பாப்பாத்தி சித்தியின் வீடும் அருகில் தான் இருந்தது. அடிக்கடி ஸ்பெஷல் ஐட்டம் ஏதாவது செய்தால் கிண்ணத்தில் வந்து விடும். எச்சில் ஊற ஊற அசைவங்களைச் சாப்பிட்டு வந்ததால் செட்டியாரின் அசைவ ஐட்டங்களை நான் கண்டு கொள்வதே இல்லை.

ஒரு நாள் செட்டியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஒரு அவித்த முட்டையை இலையில் வைத்து விட்டார். அன்றைக்குப் பார்த்துக் காசு கொண்டு போகவில்லை. செட்டியாரிடம் எனக்கு முட்டை வேண்டாமென்றேன். அவர் கேட்கவில்லை. ”சாப்பிடுப்பா” என்றுச் சொல்லி விட்டார். அன்றிலிருந்து முட்டையோ, மீனோ, கருவாட்டு தொக்கோ அல்லது குடல்கறியோ ஏதாவதொன்றினை இலையில் வைத்து விடுவார். வேண்டாமென்றாலும் கேட்பதில்லை.

வெள்ளிக்கிழமையோ அல்லது சனிக்கிழமோ அவருக்கு பணம் கொடுப்பேன். சைடு டிஷ்ஷுகளின் கணக்கைப் போட்டு கூடுதலாகப் பணம் கொடுத்த போது சிரித்துக் கொண்டே மறுத்து விட்டார். விடாது அவரிடம் காசைக் கொடுக்க முயன்ற போது கோபமாக எழுந்து உள்ளே சென்று விட்டார். நான்கு மாதங்கள் அவர் ஹோட்டலில் சாப்பிட்டேன். அந்த நான்கு மாதங்களும் எத்தனை முட்டையோ தெரியவில்லை. நான் கணக்கும் வைத்துக் கொள்வதில்லை. ஏதோ ஒரு நாளில் ஹோட்டலில் நான் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மட்டன் வறுவலும், அவித்த முட்டையையும் கொண்டு வந்து இலையில் வைத்து ”சோறு வேண்டாம், இதை மட்டும் சாப்பிடு” என்றுச் சொல்லி தலை முடியைக் கோதி விட்டபடி சென்று விட்டார்.

பரிட்சை முடிந்து கடைசி நாளில் சாப்பிட்டு விட்டு காசைக் கொடுத்தேன். பெற்றுக் கொண்டார். ”நல்லா படிப்பா” என்றுச் சொல்லி சிரித்தார். அன்று தான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. அதற்குப் பிறகு கீரமங்கலம் செல்லும் வாய்ப்பு ஏற்படவே இல்லை. 

ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படியான ஒரு சிலர் வந்து செல்வதுண்டு. ஒரு சிலர் மறக்கவே முடியாத நினைவுகளாய் பதிந்து விடுவர். ஒவ்வொரு கவளம் சோறு உண்ணும் போது  செட்டியார் நினைவில் வந்து செல்கிறார். மறக்கவே முடியாத முகம் !0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.