குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, January 13, 2014

அம்முவின் விடாமுயற்சியும் ஒரு கருத்தும்(அம்முவும் ரித்தியும் மாமா பிரவீனுடன் ஊட்டி தொட்டபெட்டா அருகே)

சனிக்கிழமை இரவு. ரித்திக் நந்தா ஒரு அழகான படத்தைக் கொண்டு வந்து காட்டினான். 

”அழகாய் இருக்கிறது ரித்திக், நீயா வரைந்தாய்?” என்றேன்.

”ஆமாம்பா” என்றேன். சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

அடுத்து அம்மு தான் வரைந்த படத்தைக் கொண்டு வந்து காட்டினார். 

”அம்மு சூப்பராக இருக்கிறதே?, நீயா வரைந்தாய்? “ என்றேன்.

அம்முவுக்கு ஒரே சிரிப்பு. 

“ஆமாம்பா !” என்றது.

படத்தை மீண்டும் வாங்கினேன்.

”அம்மு இது நீ வரைந்த மாதிரியே இல்லையே ? “ என்று கேட்க அம்மு அச்செடுத்து வரைந்திருப்பதைக் கண்டு கொண்டேன்.

“அம்மு படம் சரியில்லை, நீயாக வரைந்தால் தான் நன்றாக இருக்குமென்றேன்”

உடனே “அவன் மட்டும் அப்படித்தான் வரைந்தான், அவன் வரைந்த படம் மட்டும் நல்லா இருக்குன்னு சொல்றீங்க, நான் வரைஞ்சது நல்லா இல்லேங்கிறீங்க” என்றுச் சொல்லி கட்டிலில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

” படம் நல்லாத்தான் இருக்குன்னு சொல்லிடுங்களேன், புள்ளை அழுவறா” என்றார் மனையாள்.

மறுத்து விட்டேன்.

மணி இரவு பத்து ஆகி விட்டது.

 அம்மு பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது.

“அப்பா, இந்தப் படம் நான் இப்போ வரைந்தேன், இதோ பார் அச்செடுக்கவில்லை” என்றுச் சொல்ல, 

“அருமை அம்மு, அருமை. சூப்பராக இருக்கு” என்றேன்.

சிரித்துக் கொண்டே அவள் அறைக்குச் சென்று படுத்துறங்கி விட்டாள்.

”அப்பனைப் போலவே பிடிவாதம் பிடிச்சவ” என்றார் அம்மணி.

”அழுகிறாள் என்பதற்காக படியெடுத்து வரைந்ததை நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு விட்டால் இப்போது அம்மு படம் வரைந்திருக்குமா கோதை” என்றேன்.3 comments:

ராஜி said...

குழந்தையின் மனநலம் தெரிந்த அப்பா!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ஆழமான தேடல்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.