குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, December 13, 2013

பூவினால் பூகம்பம்

மகள் நிவேதிதாவிற்கு சிண்டு போடும் அளவுக்கு முடி வந்து  விட்டது. அவர் படிக்கும் பள்ளியில் வெள்ளிக்கிழமை மட்டுமே பூ வைத்துக் கொள்ள அனுமதி என்பதால் நேற்றைக்கு முதல் நாள் இரவு என்னிடம் “அப்பா ! பூ வாங்கி வருகிறாயா?” என்று கேட்க நானும் சரி என்றுச் சொல்லி விட்டேன்.மகளுக்குனெறு முதன் முதலாய் ‘பூ’ வாங்கும் சந்தோஷம் எனக்கு. அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நேற்று மாலையில் அலுவலகம் செல்லும் முன்பு மனையாளிடம் ”பணம் கொஞ்சம் கொண்டு வந்து தா” என்றேன்.

“எதற்கு?”

“பூ வாங்கனும்”

ஒன்றும் சொல்லாமல் கொண்டு வந்து கொடுத்தார்.

இரவில் வீடு திரும்பிய போது வாசலில் மகள் நின்று கொண்டிருந்தார். பூவை எடுத்துக் கொடுத்தேன். 

இன்று காலையில் மகள் பூ வைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்ற பிறகு மனையாள் அருகில் வந்து அமர்ந்தாள்.

”கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட 13 வருடம் ஆகி விட்டது, என்றைக்காவது எனக்கு இப்படி ஒரு சந்தோஷத்துடன் ஒரு முழம் பூ வாங்கி வந்து கொடுத்தீர்களா?” என்றார்.

திக்கென்றது. 

சாப்பாட்டில் உப்பு, புளி,காரம் என்று இனி ஒரு வாரத்திற்கு எதுவும் இருக்காது. 
என்ன சொல்லி சமாளிப்பது, யோசித்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை.

”என்னதான் சொல்லுங்கள் ! என் அப்பா அப்பாதான்” என்றார் மனையாள் தொடர்ந்து. நான் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தேன்.

பூவினால் பூகம்பம் வந்து விட்டது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.