குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, January 9, 2012

ஹீரோ செலக்‌ஷனும் இயக்குனரின் பகீர் அனுபவமும்உயிர் எழுத்து பத்திரிக்கையில் மிஸ்டர் செழியன் அவர்கள் எழுதிய ஒரு பத்தியைப் படித்து விட்டு, இயக்குனர் நண்பர் ஒருவரை போனில் அழைத்து “ நீங்கள் எப்படி ஹீரோ செலக்‌ஷன் செய்கின்றீர்கள்? “ என்று கேட்டேன். தன் படத்திற்கு சில புதுமுக நடிகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். எங்களது ஃபெமோ மாடலிங் நிறுவன வெப்சைட்டிலிருந்து ஆண் மாடல்களைப் பார்த்து விட்டு ஒன்றும் சரியில்லை என்று கமெண்ட் வேறு சொல்லி இருந்ததால், அவர் மீது எனக்கு லேசான கடுப்பு வேறு உள்மனதில் இருந்தது. அதை ஒரு பக்கமாய் வைத்து விட்டு, எப்போதும் போல இருவரும் பேசிக் கொண்டிருப்போம். அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதுதான் மேற்கண்ட கேள்வியைக்  கேட்டேன்.

“தங்கம், நீங்களே ஒரு ஐடியா சொல்லுங்களேன் ! “ என்றார்.

செழியன் தன் பத்தியில் எனது இதே கேள்வியை உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குனர் மக்மல்லஃப்பைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் ”தன்னிடம் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் நபர்களிடம் தெருவில் சென்று பிச்சை எடுத்து வாருங்கள் என்றுச் சொல்லுவாராம். யார் அதிகப் பிச்சை எடுத்து வருகின்றார்களோ அவருக்கு சான்ஸ் கொடுப்பாராம். ஏனென்றால் பிறரின் மனதில் இடம்பிடித்தால் தானே அதிகப் பிச்சை கிடைக்கும். அப்போது அவர் நல்ல நடிகர் தானே” என்றாராம் மக்மல்லஃப்.”தங்கம், ஐடியா சூப்பரா இருக்கே” என்றுச் சொல்லிய இயக்குனர், ”இதைக் கான்சப்ட்டாக வைத்து செலக்‌ஷன் செய்து விடுகிறேன்” என்று குதூகலமாய்ச் சொன்னார்.

இரண்டு நாட்கள் சென்று அதிகாலையில் எனது பர்சனல் போனுக்கு அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தால் இயக்குனர் நண்பர். போனை எடுத்து, ஹலோ சொன்னதுதான் பாக்கி. மனிதர் புலம்பித்தள்ளி விட்டார். தயாரிப்பாளரிடமிருந்து வேறு திட்டு கிடைத்திருக்கிறது என்று வேறு சொன்னார். எங்கே சொன்னார், அழுகாத குறைதான் போங்கள்.

”என்ன விஷயம்?” என்று மெதுவாக கேட்டேன்.

”இவரிடம் நடிப்பு சான்ஸ் கேட்டு வந்தவர்களிடம் தெருவில் சென்று யார் அதிகம்  பிச்சை எடுத்து வருகின்றீர்களோ, அவருக்குத்தான் சான்ஸ் கொடுப்பேன்” என்று சொல்லி இருக்கிறார்.

வந்தவர்களில் பலர் இவரை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். சிலர் சார் நிச்சயம் சான்ஸ் கொடுப்பீர்கள் தானே என்று மீண்டும் நிச்சயப்படுத்திக் கொண்டு எங்கெங்கோ சென்று பிச்சைக்கார வேஷமெல்லாம் கட்டிக் கொண்டு வந்து, இயக்குனரிடம் காட்ட வந்திருக்கின்றார்கள். திடீரென்று வாசலில் பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகமாகி விட்டதைக் கண்டு உதவி இயக்குனர்கள் அவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் சொல்லித்தான் பிச்சைக்காரர்களாய் வந்தவர்கள் வேஷம் கட்டி வந்திருக்கிறோம் என்றுச் சொல்லியும், நம்பாமல் இயக்குனரிடம் சென்று விசாரித்து, அது உண்மைதான் என்று அறிந்து கொண்டு ஆஃபீஸ் உள்ளே விட்டிருக்கிறார்கள்.

அதற்குள் மேல் வீட்டிலிருந்து வீட்டுக்கார அம்மா, கீழே பிச்சைக்காரர்களைப் பார்த்து விட்டு, பிச்சை போடுவதற்கு கீழே வந்திருக்கிறார். அவரை வேறு சமாளிக்கும் பொறுப்பு உதவி இயக்குனர்களுக்கு வர, அவர்கள் வெறுத்துப் போய் விட்டார்களாம்.

ஒரு வழியாக எல்லாம் சமாளித்து, மதியம் சாப்பிட்டு விட்டு சற்றே கண் அயர்ந்திருக்கிறார் இயக்குனர். நான்கைந்து காரில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேல் ஆட்கள் வந்து பட படவென்று கதவைத் தட்டி இருக்கின்றார்கள். உதவி இயக்குனர்கள் எல்லோரும் பயந்து நடுங்கிக் கொண்டு மூலையில் நின்றிருக்கின்றார்கள். கதவைத் திறந்து கொண்டு வந்த இயக்குனரை ரிச்சான ஒருவர் அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அதற்குள் சிலர் வந்து விலக்கி விட்டிருக்கிறார்கள்.

அந்த ரிச் மேனின் பையன் இயக்குனரிடம் நடிக்க சான்ஸ் கேட்டிருக்கிறான். பையன் சான்ஸ் கேட்டு வந்திருக்கும் போதே இயக்குனர் அவனைக் கவனித்திருக்க வேண்டும். பையன் எண்டவரில் வந்திருக்கிறான். அதைக் கவனிக்காமல் எல்லோரிடம் சொல்லியது போல சொல்ல, பையனும் படு சின்சியராய் பிச்சைக்கார வேஷம் கட்டி, தன் அப்பாவிடமே பிச்சை கேட்க, வழக்கம் போல ரிச் மேன் பிச்சைகாரரை அடித்து தொரத்தி இருக்கிறார். கடைசியில் பார்த்தால் அவரின் பையன். ஆளுக்கு திகீர் என்றாகி விட்டது. காலையில் பையன் நன்றாகத்தானே இருந்தான், அதற்குள் இப்படியாகி விட்டானே என்று அதிர்ச்சியில் மயக்கமாகி, வேதனை தாளாமல் தரையில் விழுந்து அழுது புரண்டு அரற்றி இருக்கிறார்.

“ ஆஹா, நம் வேடம் அப்பாவை கதிகலங்க அடித்து விட்டதே” என்று பையனும், விடாமல் பிச்சைக்கார வேஷத்திலேயே நடிக்க அங்கு ஒரு பெரிய ரகளை நடந்திருக்கிறது.

ஒரு வழியாக உண்மையைக் கண்டுபிடித்த பையனின் அப்பா, எழும்பிய படுபயங்கர கடுப்பில் காரை எடுத்துக் கொண்டு வந்து இயக்குனரை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். ஒரு வழியாக அவரைச் சமாதானம் செய்து வழி அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர்.

எல்லாம் கேட்ட எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

”தங்கம், இங்கேயெல்லாம் நீங்கள் சொன்ன கதை எடுபடாது. பதினைந்து லட்ச ரூபாய் செலவில் எடுக்கும் படங்கள் உலகப் புகழ் பெறுகின்றன. 150 கோடி ரூபாய் செலவில் எடுக்கும் படம் குப்பைக் கூடைக்குப் போகின்றது. சினிமா கலைஞர்கள் என்ற பெயரில் வியாபாரம் தான் செய்கின்றார்களே ஒழிய,  நடிப்புக்கலையை யாரும் இங்கே மதிப்பதும் இல்லை. மக்களும் அதை கண்டு கொள்வதும் இல்லை. இங்குள்ளவர்கள் எல்லோரும் நடிகர்கள், இயக்குனர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எவரும் நடிகர்களும் இல்லை,இயக்குனர்களும் இல்லை. இவர்கள் எல்லாம் அக்மார்க் வியாபாரிகள். சினிமா என்கிற கலையை எவரும் நேசிப்பது இல்லை. புகழையும், பணத்தையும் தான் நேசிக்கின்றார்கள். இவர்களின் படங்களுக்கு கலைமாமணி விருதுதான் கிடைக்கும்.” என்றார்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.