குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, December 9, 2011

தர்மத்தின் தீர்ப்புகள் - எதிர் விளைவுகள்(காளான் வைத்த பிரட் துண்டுகள்)


(பில்லூர் அணை)

சமீபத்தில் குழந்தைகள், மனைவியுடன் எனக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இந்தக் காய்ச்சலின் அறிகுறி முதலில் தொண்டையில் அழற்சி ஏற்பட்டு, அதன் பிறகு காய்ச்சல் உண்டாகிறது. காய்ச்சல் சரியான பிறகு சளி ஏற்படுகிறது. சளி கொஞ்சம் கொஞ்சமாய் சரியான பிறகு வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவழியாக சரியாகிறது. இதற்குள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது ஒருவரைச் சந்தித்தேன். அவரைப் பற்றியதுதான் இப்பதிவு.

நர்ஸ் ஒருவரிடம் இதுபற்றி விசாரித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றார். நாங்கள் பயன்படுத்துவது பில்லூர் டேம் தண்ணீர். அதை பியூர் இட்டில் வடிகட்டி, நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறோம். இருப்பினும் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் மனது சிந்திக்க வைக்கிறது. எவராவது தண்ணீரில் ஏதாவது கலக்கின்றார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது. வேறு வழி இன்றி தற்போது மினரல் வாட்டர் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.  யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. மனிதனுக்கு மனிதனே அழிவு சக்தியாய் மாறிக்கொண்டிருக்கும் சம்பவங்களை நாம் தினம் தோறும் படித்துக் கொண்டு வருகிறோம்.

ஆனால் அன்பே கடவுள், எல்லாக்கடவுளும் அன்பை மட்டும் தான் போதிக்கிறது என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் எல்லாவற்றிலும் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனோ எதனாலும் மாறாமல் மீண்டும் மீண்டும் சக மனிதர்களை அழிக்க முயன்று கொண்டிருக்கிறான். படித்தவன் என்றால் பலபேரைக் கொல்ல முயல்கிறான். படிக்காதவன் என்றால் சில பேரைக் கொல்ல முயல்கிறான். கல்வி அறிவு மனிதனுக்குள் மிருக குணத்தை மீட்டெடுத்து தந்திருக்கிறது.

மருத்துவமனையின் சீஃப்பிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஹாஸ்பிட்டலின் வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த போது, பெரியவர் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார். சில விசாரிப்புகளைத் தொடர்ந்து அவரே பேசிக் கொண்டிருந்தார். “ தெய்வமே இல்லை தம்பி ! “ என்று ஆரம்பித்தார். நான் அவர் பேசுவதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

”மனைவிக்கு நோய், மகளுக்கு நோய், மருமகளுக்கு நோய், எனக்கு நோய்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். ”என் மனைவி எவ்வளவு நல்லவள் தெரியுமா? பசி என்று வந்தால் உடனே உணவு கொடுப்பாள், ரோட்டில் எவராவது பிச்சை எடுத்தால் அவர்களுக்கு 100 ரூபாய் கொடுப்பாள், மகளோ பிறரின் மீது கொள்ளை அன்பைப் பொழிவாள்” என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்.

”தினம் தோறும் ஹாஸ்பிட்டல் வர வேண்டி இருக்கிறது” என்று சோகத்துடன் தன் குடும்பத்துக் கதையை வேற்றார் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் எந்த ஒரு லஜ்ஜையும் இன்றி. செவனேன்னு கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் ”நீங்கள் எங்கே வேலை பார்க்கின்றீர்கள்?” என்று கேட்டேன். ”இன்னும் ரிட்டயர்ட் ஆக இரண்டு வருடம் இருக்கிறது. ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருக்கிறேன்” என்றார்.

நல்ல மனிதராய் இருப்பார் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு,  ஹெல்த் டிபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டிருக்கும் நண்பரைத் தொடர்பு கொண்டு இவரைப் பற்றி விசாரித்தேன்.

எவருக்கும் எதுவும் தானாக வருவதில்லை, அது அவரவர் செய்யும் வினையின் விளைவு என்பதை அன்று நான் உறுதியாய்ப் புரிந்து கொண்டேன்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமுள்ள பல உணவு சம்பந்தமான கடைகள் எதுவும் ’வாடிக்கையாளர்கள் நலனைக் கருத்தில் கொள்வதே இல்லை, கெட்டுப் போன பொருட்கள், காலாவதியான பொருட்கள், உடலுக்குத் தீங்கு தரும் பொருட்கள் இவற்றை எந்த வித மன உறுத்தல் இன்றியும் விற்பனை செய்து வருகின்றன’. இதனைக் கட்டுப்படுத்தும் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மாதா மாதம் “கையூட்டு” சென்று கொண்டிருக்கிறது. மேலே என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் கையூட்டுப் பெறுவதில் நம்பர் ஒன்னாம். நண்பர் சொன்னார் “இவரைப் போன்ற ஒருவரை இனிப் பார்ப்பது அரிது”.

அந்த நபர் ஏன் மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன். செய்த வினை நோயின் வடிவிலே வந்து கொண்டிருக்கிறது. சம்பாதிக்கும் பணமெல்லாம் மருத்துவமனைக்குச் செலவழிக்கிறார் அந்த நபர். ஆனாலும் இன்னும் அவர் திருந்தவே இல்லையாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மனைவியை இறக்கி விட்டு, வெளியில் நின்றிருந்தேன். அப்போது ஒரு பணியாள் இரண்டு பிரட் பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து, மேனேஜரிடம் காட்டிக் க் கொண்டிருந்தார். நான் அருகில் நின்றிருந்ததைக் கூடக் கவனிக்காமல், ”அந்த பூஞ்சையை எடுத்து விட்டு, விற்பனைக்கு கொண்டு போய் வை” என்றார். அந்தப் பையன் என்னைப் பார்த்தான். மேனேஜர் என்னைச் சங்கோஜத்துடன் பார்த்தார். என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம் ?

ஏதோ நம்பிக்கையுடன் நாம் வாழ வேண்டி இருக்கிறது. வேறென்ன சொல்ல முடியும். 

- கோவை எம் தங்கவேல்

3 comments:

bandhu said...

//”அந்த பூஞ்சையை எடுத்து விட்டு, விற்பனைக்கு கொண்டு போய் வை” என்றார். அந்தப் பையன் என்னைப் பார்த்தான். மேனேஜர் என்னைச் சங்கோஜத்துடன் பார்த்தார். என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம் ?//
இது போன்ற விஷயங்களை அமெரிக்காவிலிருந்து காப்பி அடிக்க மாட்டேன் என்கிறார்களே என்பது தான் என் வருத்தம். அங்கு இது போன்று நடந்திருந்தால் ஒரு கேஸ் போட்டு கடையே மூடியிருக்க முடியும். பெரிய கடை என்றால் சில மில்லியன் கறந்திருக்க முடியும்!

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் தான் எல்லாருக்கும் முக்கியமாகப் போய் விட்டது.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Suresh Subramanian said...

பணத்திற்க்கு அலையும் பிணம் தின்னும் கழுகுக்ள்... please read my tamil blog...www.rishvan.com

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.