குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, December 2, 2011

கொடுத்தல் பெறுதல்

பெண்ணுரிமைப் போராளி ஒருவருடன் எதேச்சையாக பேச நேர்ந்தது. ஆண்கள் மீது அவர் தீராத வெறியுடன் இருப்பதை அவரின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். சம்பாதிப்பது ஒன்றைத் தவிர வேறென்ன தெரியும் ஆண்களுக்கு? என்றார். பெண்கள் சமையலறையில் கிடந்து உழல்கிறோம், நெருப்போடு வெந்து சாகிறோம் என்றார் தொடர்ந்து. எனக்கு அவரின் பேச்சினைக் கேட்கக் கேட்கவே ஆண்களின் மீது வெறுப்பு வர ஆரம்பித்து விட்டது.

ஒரு பெண் டோட்டல் டிபடெண்டாக ஆணை நம்புவது தவறு என்கிறார் அந்தப் பெண்ணுரிமைப் போராளி.


என்ன டிபன் என்பதிலிருந்து, என்ன செய்ய வேண்டுமென்பது வரை ஒரு பெண் கணவனை மட்டுமே நம்பி இருக்கிறாள் என்றால் அவள் என்ன அடிமையா? இப்படியான பெண்களிடம் பேசிப்பார்த்தால் தெரியும். அவர்களின் ஒரே பதில் “அதில் ஒரு சுகம்” என்பார்கள். திருமண வாழ்வு என்பது கொடுத்தலும் பெறுதலுமான ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். அது சமூகக்கட்டுப்பாட்டால் கணவனும் மனைவியும் ஒருங்கிணைக்கப்பட்டு, குடும்பம், மரியாதை, மானம் என்கிற காரணிகளால் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கிறது. கணவன் யாருக்காக உழைக்க வேண்டும்? சொல்லுங்கள் பார்ப்போம். அவன் தந்தைக்காக, தாய்க்காக, மனைவிக்கா, மகனுக்காக, மகளுக்காக, உடன் பிறந்தோர்களுக்காக உழைக்கிறான். 

குடும்பம் என்றால் என்ன என்பதற்கு ஒரு உண்மைச் சம்பவத்தைக் கீழே எழுதுகிறேன். படித்துப் பாருங்கள்.

ஊரிலிருந்து வரும் சகோதரியை அழைக்க விடிகாலைக்கும் முன்பாக அதாவது மூன்று மணி அளவில் காந்திபுரம் சென்று கொண்டிருந்தேன். அப்போது சிங்கா நல்லூர் தாண்டி பெட்ரோல் பங்க் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். காவி உடை. தோளில் பை. செருப்புக்கூட இல்லை. அவருக்குக் கிட்டத்தட்ட 55 வயது இருக்கும். பனி பரவி, சில்லென்று இருந்தது. சாதாரணக் காவிச் சட்டை, வேஷ்டி அணிந்திருந்தார். கண்ணில் கண்ணாடி வேறு போட்டிருந்தார். சரியான குளிர் அடிக்கும் இந்த நேரத்தில் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டு, லிப்ட் கொடுக்கலாம் என்று அருகில் சென்று வண்டியை நிறுத்தி, ”காந்திபுரம் போகிறேன் வருகின்றீர்களா?” என்று கேட்டேன். 

உடனடியாக மறுத்து விட்டார். “வேண்டுதல் அய்யா” என்றா.”இந்த வயதான காலத்தில் ஏன் அய்யா இப்படி உங்களை வருத்தப்படுத்திக் கொள்கின்றீர்கள்?” என்று விசனத்துடன் கேட்டேன். ”என் மகளுக்கு குழந்தைப் பிறக்கவில்லை அய்யா, முருகனிடம் வேண்டிக் கொண்டேன். மறு வருடம் குழந்தை பெற்றுக் கொண்டாள் அய்யா. வேண்டுதலை சரிசெய்ய, கால் நடையாக சென்று கொண்டிருக்கிறேன் அய்யா ”என்றார். 

”எப்படி அய்யா உங்களை உங்கள் குடும்பம் அனுமதித்தது?” என்றேன். 

”நான் கிளம்பும் போது என் மகளின் அழுத முகம் இன்னும் என்னுள்ளே அப்படியே பதிந்து போய் கிடக்கிறது அய்யா. பேரனின் சிரித்த முகம் என்னை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது அய்யா. என் மகள் நல்வாழ்வுக்காக நான் செத்துப்போவதில் தான் அய்யா இன்பம் இருக்கிறது” என்றார். கேட்ட எனக்கு கண்கள் பனித்து விட்டன.

”என் மகள் முகத்தினை மீண்டும் பார்ப்பேன் அய்யா, இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தால் போதும், மீண்டும் தயாராகி விடுவேன்” என்றார்.

உங்கள் வேண்டுதல் நிறைவேறவும், நீங்கள் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமாக இருக்கவும், எல்லா வல்ல இறைவன் முருகனிடம் வேண்டுதலைச் செலுத்துகிறேன்” என்றுச் சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.

பெண்ணுரிமைப் பேசும் வாதிகள் பலபேர் பிழைப்பிற்காக, குடும்பம் என்கிற கட்டமைப்பை உடைக்க முயல்கின்றனர். இன்று தனித்தனியாக அபார்ட்மெண்டுகளில் வாழும் பல குடும்பப் பெண்கள் “மன நோயாளிகளாய்” இல்லையென்றால் முழு நோயாளியாய் மாறி வாழ்க்கையை பெரும் அவதிக்குள்ளாக்கி அவஸ்தைப்படுகின்றனர்.

நல்லது கெட்டது சொல்ல முதியோர் இன்றி, படாதபாடு படுகின்றனர். அதுமட்டுமில்லை தன் இன்பமே முக்கியம் என்று கருதும் நிலைக்குப் பெண்களைச் சில சமூகத் துரோகிகள் செய்கின்றார்கள். பெண்களைத் தனிமைப் படுத்தி, தன் இச்சைக்கு அவர்களைப் பயன்படுத்தி பின்னர் சக்கையாய் தெருவில் வீசுகின்றனர். சக்கையான பின்பு என்ன செய்து என்ன புண்ணியம் ? பெண்கள் உரிமை பேசி தன் வாழ்க்கையினை வீணாக்கிக் கொள்கின்றனர். குடும்ப வாழ்க்கை என்பது அன்பினைக் கொடுத்தலும் பெறுதலுமான ஒரு பரிமாற்றம். இது மனித வாழ்விற்கு அடி நாதம். பாதுகாப்பைத் தரும் பந்தம். குடும்ப அமைப்பே தவறானது என்று எவர் பேசினாலும், அவரிடமிருந்து விலகி இருக்க முயற்சியுங்கள். உறவுகளையும், நட்புக்களையும் நேசியுங்கள். அதனால் நீங்கள் இழக்கப்போவது எதுவுமே இல்லை.

நான் சந்தித்த எத்தனை எத்தனையோ பெண்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட உண்மையை எழுதி இருக்கிறேன்.

- கோவை எம் தங்கவேல்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பதிவு.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:

"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.