குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, June 21, 2011

தன் மகளுக்காக மிரட்டிய வக்கீல்

ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த போது நடந்த ஒரு சம்பவம் இது. நான் பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு கம்யூட்டர் கிளாஸ் எடுத்து வந்தேன். மாணவர்களுக்கு நெருங்கிய தோழனாய் இருந்து போதித்து வந்தாலும் கொஞ்சம் டெரர் ஆக நடந்து வந்தேன். அது அந்த வயதிற்கே உரித்தான வேகம் என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது. மணிப்பிரம்பு என்ற கம்பொன்றினை வைத்திருப்பேன் நான்கடி நீளம் இருக்கும் அது. எண்ணெய் போட்டு வழு வழுவென்று பாம்பு போல இருக்கும். படிக்கவில்லை என்றால் கம்பு விளையாடி விடும். பசங்க கதறி விடுவான்கள். பெண் பிள்ளைகளையும் விடுவதில்லை. பாராபட்சம் பார்ப்பதில்லை என்று நானே எனக்குள் கற்பிதம் வேறு கற்பித்துக் கொண்டேன். பெண் பிள்ளைகள் கையில் அடி வாங்குவார்கள். கணிணி அறைப்பக்கம் வருவதாக இருந்தாலே பசங்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும்.அந்தளவுக்கு கண்டிப்பு உடையவனாய் இருந்தேன்.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மிகச் சரியாகப் படிக்க வேண்டுமென்பதில் படு கறாராய் இருந்த போது ஒரு மாணவியை அடிக்க வேண்டிய சூழ் நிலை வந்து விட்டது. கைகளில் இரண்டடி கொடுத்தேன். உடனே அவள் அப்பாவை அழைத்து வந்து பிரின்ஸ்பலிடம் புகார் கொடுத்து, என்னை என்ன செய்கிறேன் பார் என்று குதித்திருக்கிறார். அம்மாணவியின் தந்தை ஒரு புகழ் பெற்ற கிரிமினல் வக்கீல். 

பிரின்ஸ்பல் என்னை அழைத்து விசாரிக்க, நானோ படுகேஷுவலாக, ”சார் எல்லோரையும் தான் அடித்தேன், அப்பெண்ணையும் அடித்தேன், இதிலென்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றேன்.  ”அந்தப் பெண் இதுவரை என்னிடம் அடி வாங்கவே இல்லையா?” என்று எதிர் கேள்வி வேறு கேட்டு விட்டு கிளாஸுக்குப் போய் விட்டேன். விட்டாரா அந்த வக்கீல். மேனேஜ்மெண்ட்டிடம் என்னைப் பற்றிய பெரிய புகார் பட்டியலை வாசித்திருக்கிறார். நானோ மேனேஜ்மெண்டின் செல்லப் பிள்ளையாக இருந்தேன். என்னிடம் மேனேஜ்மெண்ட் கேட்க, விபரத்தைச் சொல்லி விட்டேன். ”பெண் பிள்ளையப்பா, பார்த்து தண்டனை கொடு” என்றுச் சொல்லி விட்டார்.

மாணவியை அழைத்தேன். ”உன் இஸ்டப்படி நான் பாடமெடுக்க வேண்டுமென்பதிலும், தவறு செய்யும் பட்சத்தில் பிறரைப் போல உனக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று நீ சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், இனிமேல் நீ என் வகுப்பிற்கு வர வேண்டாம்” என்று மாணவியை வகுப்பிலிருந்து வெளியே போகச் சொல்லி விட்டேன். மாணவி பிரின்ஸ்பலிடம் சென்று கம்ப்ளைண்ட் செய்ய, சிபாரிசுக்கு வந்தார். அவரிடம் ”என் வேலையில் நீங்கள் குறுக்கிடுவீர்கள் என்றால், வேலையை ராஜினாமா செய்கிறேன் சார்” என்றுச் சொல்ல, அவர் பேசாமல் சென்று விட்டார்.

ஒரு வாரம் மாணவியை வகுப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதி மறுத்து விட்டேன். இவள் மட்டும் என்ன ஸ்பெஷலா? மற்ற பிள்ளைகள் மட்டும் வேறுமாதிரியா என்ன என்பதுதான் எனக்குள் அப்போது இருந்த கேள்வி. வக்கீல் எங்கெங்கோ சென்று ஏதேதோ சிபாரிசுகளைச் செய்ய, சக ஆசிரியர்கள் வேறு சமாதானத்திற்கு வந்தார்கள். நான் எதையும் ஒப்புக் கொள்ளவே இல்லை. அம்மாணவி சற்றே அகம்பாவம் கொண்டவர். என்னைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் அவளை தவறு செய்தால் தண்டிப்பதே இல்லை. காரணம் அப்பெண்ணின் அப்பா பிரபலமானவர் என்பதால். நான் எதற்கும் ஒத்துப் போவதாக இல்லை.
வேறு வழியின்றி அம்மாணவியும், வக்கீல் தகப்பனாரும் நேரடிச் சமாதானத்திற்கு வந்தனர். வக்கீலை வரவேற்று, உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தேன். பலதும் பேசிக் கொண்டிருந்தோம். அருகில் வந்த மாணவி, ”மன்னித்துக் கொள்ளுங்கள் சார், தப்புச் செய்து விட்டேன்” என்றாள். ”பரவாயில்லையம்மா, வழக்கம் போல வகுப்பிற்கு வா” என்றுச் சொல்லி விட்டேன். ”சார் மன்னித்து விடுங்கள் சார்” என்று வக்கீல் தகப்பனார் வேண்டிக்கொள்ள தலையசைத்து, சிரித்து வழி அனுப்பி வைத்தேன்.

பிராக்டிக்கல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு வந்த புரோகிராம் சற்றே சிக்கலானது. தவறாக எழுதிவிட்டாள். எக்சாமினர் அவளுக்கு முழு மதிப்பெண் போட இயலாது என்று கைவிரித்து விட, அவரிடம் நான் அவளுக்காக மன்றாடினேன். எல்லாம் முடிந்து வெளியில் வரும் போது, எக்சாமினர் அப்பெண்ணிடம் கேட்டிருக்கிறார்” சார் உனக்கு உறவா?  உன் மீது அவருக்கு அன்பு அதிகம் போல, உனக்கு மார்க் வாங்க பெரும் முயற்சி செய்தார்” என்று சொல்லிச் சென்றிருக்கிறார். 

கிளாசுக்காக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். அருகில் வந்த அப்பெண் மேற்படி விஷயத்தைச் சொல்லி நன்றி சொன்னார். ” நன்றாகப் படிம்மா” என்று சொல்லி அனுப்பி வைத்தேன். தெருவில் என்னைப் பார்த்த மாணவியின் தகப்பனார் என் கையைப் பிடித்துக் கொண்டு நன்றி சொன்னார்.  

பணமும், அதிகாரமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது பலரின் எண்ணம். அது எல்லா இடத்திலும் பலித்து விடாதே. நியாயப்படி நடந்து கொண்டால் கூட, பெரும் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி சூழ் நிலைகள் வருகின்றன. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத மன நிலை இருந்தால் மட்டுமே ஏதாவது சாதிக்க முடியும். இச்சம்பவத்திலிருந்து மாணவர்கள் என் மீது அதிக அன்பு காட்டடத்தான் செய்தனர். தண்டிப்பது என்பது நீ நன்றாக இருக்கத்தான் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை இக்கால ஆசிரியர்கள் மறந்து விடுவதாலே வரும் பிரச்சினைகள் ஏராளம்.

யாரோ ஒரு ஆசிரியரால் தான் திரு அப்துல்கலாம் உருவாகினார். அது போல, என்னிடம் படித்த எவராவது ஒரு மாணவர் மக்கள் பணியில் இருக்க வேண்டுமெனப்து என் ஆசை. அப்படி யாராவது ஒருத்தர் இருந்தார் என்றால் அதை விட சிறந்த சந்தோஷம் எனக்கு வேறில்லை.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.