குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, September 24, 2010

நக்கீரன் புகழ் ஆத்மானந்தா பற்றிய சில நினைவுகள்

கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் நான்கு வருடம் பணிபுரிந்தேன். ஆஸ்ரமத்தின் தலைவரான திரு ஆத்மானந்தா என் மீது ப்ரியம் கொண்டவர். நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான பெண்களுடன் கும்மாளம் என்ற கட்டுரையினைப் படித்ததும், வருத்தப்பட்டவன் அவரிடம் பேசினேன். அதைப் பற்றிய எந்த ஒரு சலனமும் இன்றி இருந்தார். எனக்குரிய தொடர்புகள் மூலம் நக்கீரன் பத்திரிக்கையினரைத் தொடர்பு கொண்டேன். ஆதாரங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். அதை ஏன் நக்கீரன் வெளியிடவில்லை என்பது புரியவில்லை.

நான் அவருடன் இருந்த நான்கு வருட காலத்தில், நக்கீரனில் சொல்லப்பட்டிருப்பது போன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் பார்க்க வில்லை. கட்டுரையைப் படித்ததும் மறக்க முடியாத ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

சாமியாருடன் காண்டசா காரில் கல்லூரிக்குச் செல்வேன். சர்வீஸ், அசெம்பிள், நெட்வொர்க்கிங் அனைத்தும் அடியேன் தான் கவனித்து வந்தேன். ஆரம்பத்தில் தனியாரிடம் கணிப்பொறிகளை வாங்கினோம். அதன் பிறகு நானே தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன். ஒரு கம்யூட்டருக்கு கிட்டத்தட்ட 10,000 ரூபாய் மிச்சமானது. 200 கம்யூட்டருக்கும் மேல் அசெம்பிள் செய்திருப்பேன்.

எனக்கும் கணிணித்துறையின் ஹெச் ஓடிக்கும் ஆகாது. ஏனென்றால் அவர் பேசிக் லாங்குவேஜ் மட்டுமே படித்தவர். எந்த ஒரு திறமையும் அற்றவராயிருந்தார். அதை நான் அங்கு பணி புரிந்த போது கண்டுகொண்டேன். அதனால் அவர் என்மீது உள்ளூர வெறுப்பில் இருந்தார். என்னைக் கேட்காமல் அங்கு ஒன்றும் நடக்க முடியாது. அந்த எரிச்சல் வேறு.

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண்களுக்கு வெளியில் சென்று வர அனுமதி கிடையாது என்பதால் நான் அவர்களுக்கு புரோகிராமிங்க் கற்றுக் கொடுத்தேன். அதற்கு அப்பெண்கள் தனிக்கட்டணம் செலுத்தினார்கள். அக்கட்டணத்தையும் ஆஸிரம் வசூலித்துக் கொள்ளும். நான் அங்கிருந்த நான்கு வருட காலத்தில் சாப்பாடு, தங்குமிடம் கொடுத்தார்கள். சம்பளமெல்லாம் ஏதும் இல்லை. ஊருக்குச் செல்லும் போது இரண்டாயிரம் தருவார். அவ்வளவுதான். ஏனென்றால் நான் அப்போது குடும்பப் பிரச்சினையின் காரணமாய் வீட்டை விட்டு வெளியில் வந்திருந்தேன்.

ஆசிரமப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புக்கு வாத்தியார் வேலை வேறு பார்த்தேன். சாமியாரிடம் வெள்ளைக் கலர் காண்டசா கார் இருக்கிறது. அதில் தான் பயணம் செய்வார். நானும் அக்காரில் தான் சென்று வருவேன். சில நேரங்களில் கல்லூரியில் இருந்து அவசர அழைப்பு வரும். சாமியார் உடனடியாக பள்ளிக்கு காரை அனுப்பி வைப்பார். சாமியார் வந்து விட்டாரென்று பிரின்ஸிபல் அலறியடித்துக் கொண்டு வருவார். ஆனால் அக்கார் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிந்தவுடன் சிரித்துக் கொண்டு சென்று விடுவார். அவரிடம் சொல்லி விட்டு, கல்லூரிக்குச் செல்வேன்.

கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவிகள் என்னிடம் படித்தார்கள். அவர்களுக்கு சில புரோகிராம் டெக்னிக்குகளை கற்றுக் கொடுத்து வந்தேன். இதை எப்படியாவது ஒழித்து விட வேண்டுமென்ற சதியை என்னை வெறுத்தவர்கள் அரங்கேற்றினார்கள். ஏனென்றால் ஹெசோடி தனியாக செண்டர் வைத்து இருந்தாராம். எனக்குத் தெரியாது. பின்னர் தெரிய வந்தது.

எனக்கு அவப்பெயர் தேடித்தர ஹெச்சோடி செய்த ஏற்பாடு என்ன தெரியுமா? கணிணி அறை ஏசி செய்யப்பட்டிருந்தது. நான் உள்ளே சென்றதும் ஏசியை ஆன் செய்து விடுவேன். கதவில் ஒரு கண்ணாடி வைத்திருப்பார்கள். உள்ளிருந்து வெளியில் பார்ப்பதற்கும், வெளியில் இருந்து உள்ளே பார்ப்பதற்கும் வசதியாய் இருக்கும். அந்தக் கண்ணாடியில் ஒரு பேப்பரை வைத்து மறைத்து விட்டு, தங்கவேல் பெண்களுடன் கும்மாளம் அடிக்க, பேப்பரை வைத்து மறைத்து விட்டார் என்று சாமியாரிடம் சொல்லி விட்டார்கள். அத்துடன் இல்லாமல் அவரை அழைத்து வந்து அந்தப் பேப்பரை ஆதாரமாக வேறு காட்டியிருக்கின்றார்கள். சாமியார் இதைப் பற்றி என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நான் சாமியாருடன் நெருக்கமாகப் பழகுகிறேன் என்பதால் என்னைப் பற்றிய வதந்திகள் பலதும் அவ்வாசிரமத்தில் உலா வந்து கொண்டே இருக்கும்.

மேற்படிக் குற்றச்சாட்டை, யார் மூலமாகவோ கேள்விப்பட்ட நான், கல்லூரிக்கு போக முடியாது என்று மறுத்து விட்டேன். நான் போகவில்லை என்றால் ஆயிரக்கணக்கில் அல்லவா செலவு செய்ய வேண்டும். சாமியாருக்கு கோபம் வந்து விட்டது. அவர் என்ன சொல்லியும் கேட்க மறுத்து விட்டேன். அதன்பிறகு ஒரு முடிவெடுத்து, என்னுடன் கண்டிப்பாக காரின் டிரைவர் இருந்தே ஆக வேண்டும் என்று சொன்னேன். ஒத்துக் கொண்டார். டிரைவரை அருகில் வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்கள் அசூயைப்பட்டார்கள். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. எனக்கொரு கேடயமாக டிரைவரைப் பயன்படுத்திக் கொண்டேன். என்னிடம் படித்த மாணவிகள் அதை எதிர்த்தனர். நான் அவர்களிடம் பனைமரமும், கள்ளும் என்ற விஷயத்தை விளக்கி, படிப்பதை மட்டும் பாருங்கள் என்று சொன்னேன். முன்பை விட நன்கு படியுங்கள், அதுவே நமக்கு கிடைக்கும் வெற்றி எனவும் சொன்னேன்.

ஏதாவதொரு பெண்ணுடன் பேசினாலே போதும், ஆசிரமவாசிகள் கதை கிளப்பி விடுவார்கள். அது ஆசிரம் முழுவதும் வதந்தியாய் வலம் வரும். அந்தளவுக்கு ஆசிரமத்தில் இருந்தவர்கள் வெகு மோசமானவர்களாய் இருந்தார்கள். பொறாமையும், பொய்யும், வேஷமும், முன் விட்டுப் பின் பேசுவதும் என்பதுவாய் அவர்களின் அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் அனைவரும் காவி உடுத்திய சாமியார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இது பற்றி ஆத்மானந்தாவிடம் வருத்தப்படுவேன். இவர்கள் மனிதர்களோடு இருந்தால் என்னாகும் என்று நினைத்துப் பாருப்பா என்பார். ஆகையால் தான் இவர்களை இன்னும் இங்கு வைத்திருக்கிறேன் என்பார். ஆனால் அது உண்மை அல்ல என்பது எனக்கு பின்னர் தெரிய வந்தது.

ஒரு வழியாக இரண்டு வருடங்களாக நடந்து வந்த கிளாஸ், காரைக்குடியில் புதிய கல்லூரி திறக்கப்பட்டவுடன் ஒழிந்தது. நான் அங்கு வேறு சென்று வர வேண்டியிருந்ததால், கல்லூரியில் கிளாஸ் எடுக்க முடியவில்லை.

நான் அவருடன் இருந்த நான்கு வருடகாலம், எனக்கு கிடைத்தது வாழ்க்கை எனும் கல்வி. அந்த ஆஸ்ரமத்தில் பாலியல் தொல்லைகள் இருந்தனவா என்று கேட்கத் தோன்றும். ஆம் நிச்சயமாய் இருந்தது என்று நான் அறிவேன். அதற்கான சம்பவங்களும், சாட்சிகளும் இன்றைக்கும் உயிரோடு உலாவந்து கொண்டிருக்கின்றார்கள். அது பற்றிய நிகழ்வுகளை எழுதப் போகிறேன் புதிய தளத்தில் விரைவில். அதுவரை காத்திருங்கள்.

1 comments:

Anonymous said...

பாலியல் பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஒத்துக்கொள்கின்றீர்களா இல்லையா?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.