குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, November 18, 2008

வாழ்வில் சில தருணங்கள் இறுதிப் பகுதி

நிர்வாகத்தில் தலைவராகப்பட்டவர், தனது நிர்வாகத்தின் கீழ் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் பொருட்டு தனக்கென சில அடிப்பொடிகளை நியமித்து வைப்பார். அந்த அடிப்பொடிகளின் வேலை உளவு பார்ப்பது. தான் என்ன செய்கிறோமென்று அறியாமலே தலைவரிடம் அவ்வப்போது நிர்வாக உறுப்பினர்களின் நடவடிக்கைகளை அவரவருக்குத் தெரிந்த முறையில் சொல்லி வைப்பார்கள். உன்னால் தான் நிர்வாகம் சிறப்புற நடக்கிறது. நீதான் நிர்வாகத்தின் அச்சாணி என்று நிர்வாகி சொல்லி வைக்க, அந்த வார்த்தைகளே அவர்களுக்குப் போதுமானதாய் இருக்கும். இது ஒரு முறை. அனைத்து இடங்களிலும் நடக்கும் முறையும் கூட.

இன்னொரு முறையும் இருக்கிறது. இதில் அதிக ரிஸ்க் இருக்கிறது. இம்முறையில் உடனுக்குடன் தகவல்கள் சேகரிக்கப்படும். நிர்வாகி இரண்டு விதமான அதிகாரமிக்க பதவிகளை ஒரு பதவிக்காக உருவாக்குவார். ஒருவருக்கொருவர் பிடிக்காதவர்களை அப்பதவிகளில் நியமிப்பார். பிரச்சினை முடிந்தது. ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுக்கும் வேலையினைச் செய்வர். இதில் என்ன பிரச்சினை என்றால் இருவரும் இணைந்து விட்டால் நிர்வாகிக்கு ஆப்பு அடித்து விடுவர். அப்படி இணைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் பணி செய்த இடத்தில் நடந்து வந்த முறைதான் இரண்டாவதாக நான் சொன்னது. தாளாளர் என்னைப் பற்றி குறை சொல்வோரிடம் அவன் இங்கு சரிப்பட்டு வரமாட்டான் போல இருக்கே, அவனை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்று சொல்லி வைப்பார். குறை சொல்லுபவன் மகிழ்ச்சியில் துள்ளுவான். ஆனால் மறு நாளே இருவரும் சென்னைக்கு கிளம்பி விடுவோம்.

என்னிடம் ஏம்பா, பள்ளியில் ஏதாவது நடந்ததா என்று கேட்பார். நான் சிரித்துக் கொண்டே, அவரவருக்குத் தெரிந்ததை அவரவர்கள் செய்கிறார்கள் என்றுச் சொல்லி முடித்து விடுவேன். மற்றவர்களைப் பற்றிய குறைகளை அவரிடம் என்றுமே சொன்னது கிடையாது. ஆனால் வெளியில் இருந்து பார்பவர்களுக்கு, நான் மற்றவர்களைப் பற்றி போட்டுக் கொடுத்து விட்டு வருகிறேனென்று தோன்றும். ஆனால் அதைப் பற்றிய கவலை எனக்கு எப்போதுமே வந்தது கிடையாது.

பிரின்ஸ்பல் என்னை எப்படியாவது அவ்விடத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டுமென்றும், அப்படி நான் அவ்விடத்தில் நீடித்தால் அவரை எவரும் மதிக்கமாட்டார்கள் என்றும் எண்ணி விட்டார். எனது சக ஆசிரியர்களுடன் நேருக்கு நேர் துவேஷத்தை வளர்க்கும் வேலையினையும், எனது அறைக்கு எவரும் வரவே கூடாது என்ற உத்தரவினையும் இட்டார். ஆனால் என்னை நேரில் பார்க்கும் போது உருகுவார். என் வாழ்வில் சந்தித்த மிக மோசமான நபராக இந்தப் பிரின்ஸ்பல் இருந்தார். அவர் தற்பொழுது அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மனிதர்களில் மகா மட்டமான மனிதன் எவரென்றால் என் வாழ்வில் இவரைத்தான் உதாரணம் காட்டுவேன்.

மாதம் ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை வேலை. மனதுக்குள் மருகிக் கொண்டே வேலைபார்க்கும் ஆசிரியர்களை இவர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அது ஹிட்லர் யூதர்களுக்குச் செய்த கொடுமையினை விடக் கொடியதாகும். அடிமையினைப் போல நடத்துவார் இந்தப் பிரின்ஸ்பல். பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் தொடர ஆரம்பித்த வேளையில் ஆசிரியர்களைக் குறைக்கிறேன் பேர்வழி என்று எனது நண்பன் ஒருவனை வேலையில் இருந்து நீக்கி விட்டார். இவ்விஷயம் எனக்குத் தெரியாது. தாளாளரிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை. அவரும் தலையாட்டி விட்டார்.

நண்பன் என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். தாளாளரிடம் நேரில் அழைத்துச் சென்றேன். விஷயத்தைச் சொன்னேன். தாளாளர் கொதித்து விட்டார். யார் வேலை கேட்டு வந்தாலும் வேலை கொடுக்கும் நிறுவனத்தில் வேலையினை விட்டு துரத்துவதா என்று கோபத்தில் கத்தி விட்டார். பிரின்ஸ்பல் அழைக்கப்பட்டார். அறிவிருக்கா உனக்கு என்று அனைவரின் முன்னிலையில் தாளாளர் பிரின்ஸ்பலைக் கேட்க ஆள் நடுங்கி விட்டார். பயந்து நடுங்கி கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. பிரின்ஸ்பலுக்குத் திக்கு வாய். இச்சம்பவத்தில் பேசவே முடியாமல் திணற, என் நண்பனுக்கு மீண்டும் வேலையும், வேலையினை விட்டு நீக்கிய அனைவருக்கும் திரும்பவும் வேலை கொடுக்கப்பட்டது. அச்சம்பவத்தில் இருந்து தங்கவேல் சொல்வதைக் கேட்டு நட என்று வாய் மொழி உத்தரவும் இடப்பட்டது.

சமயம் பார்த்து வைத்த ஆப்பில் ஆடிப்போய்க் கிடந்தார் பிரின்ஸ்பல். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வாழ்வில் எதனையோ தொலைத்து விட்டது போல திரிந்து கொண்டிருந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு அவருக்கு அரசு வேலை வாய்ப்பு வர ராஜினாமா செய்துவிட்டார். பாவம் இப்போது யார் யாரெல்லாம் அவரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கின்றார்களோ தெரியவில்லை.

இப்படி எழுத இன்னுமெத்தனையோ சம்பவங்கள் என் வாழ்விலே நடந்திருக்கின்றன. நடந்து கொண்டுமிருக்கின்றன.

வாழ்வில் சில சம்பவங்கள் பதிவில் நான் சுட்டிக் காட்ட விரும்புவது ஒன்றுமில்லை. மேனேஜ்மெண்ட் எப்படி நடத்துகிறார்கள் ? நாமெல்லாம் எப்படி மேனேஜ்மெண்டினால் பந்தாடப்படுகிறோம் என்பதைப் பற்றித்தான்.

மனிதர்களில் குறையொன்றுமில்லாதவர் எவருமில்லை. குறையே இல்லாத மனிதர்கள் இருந்தால் வாழ்வில் சுவாரசியங்கள் அற்றுவிடும். எனது வாழ்வில் வந்து சென்ற மனிதர்களில் இவர்களைப் போன்றோரும் உங்கள் வாழ்விலும் வருவர்.

வாழ்க்கை என்பது சம்பவங்களால் கட்டமைக்கப்பட்டது. இச் சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவன் புத்திசாலி. புரியாதவன் வாழ்க்கையினை இழந்தவனாவான்.

1 comments:

வனம் said...

வணக்கம் தங்கவேல்

\\
சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவன் புத்திசாலி. புரியாதவன் வாழ்க்கையினை இழந்தவனாவான். \\

மிகச்சரியாக எழுதியுள்ளீர்கள்

நன்றி

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.