குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, November 14, 2008

வாழ்வில் சில தருணங்கள் – 3

அது அட்மிஷன் டைம். எல்கேஜிக்கு எண்டரன்ஸ் எக்ஸாம் வைத்துதான் தேர்வு செய்வார்கள். இதில் பிரின்ஸ்பாலுக்கு வேண்டியவர்கள், ஆசிரமத்துக்கு வேண்டியவர்கள் அவருக்கு வேண்டியவர்கள், இவருக்கு வேண்டியவர்கள் என்று வரும் ரெகமெண்டேஷன்களுக்கு அட்மிஷன் நிச்சயம் உண்டு. மேற்படி எவருக்கும் வேண்டாதவர்களுக்குத்தான் (சிபாரிசு இல்லாதவர்களுக்கு) எக்ஸாம் வைப்பார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமூகத்தில் ஐகானாக (முக்கிய பிரஜையாக) இருப்பவர்கள் அல்லது அப்படி இருப்பதாக நடிப்பவர்களின் உதவி இம்மாதிரி சமயங்களில் உதவும்.. ஆகையால் மக்களே நீங்களும் இப்படிப்பட்ட ஐகான் ஆக இருப்பவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒரு நாள் உதவும்.(சிபாரிசுக்கு அல்ல)

நான் தினமும் பள்ளியின் தாளாளருடன் ஒரு மணி நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருப்பேன். அடிப்பொடிகள், அல்லக்கைகளை மீறி தாளாளருடன் தனிமையில் நான் உரையாடிக் கொண்டிருப்பது அங்கிருக்கும் ஆசிரமவாசிகளுக்கு வயித்தெரிச்சலை உண்டு பண்ணும் என்பது எனக்குத் தெரியும். இதனால் எனக்கு உருவான பிரச்சினைகளை எல்லாம் எழுதத் துவங்கினால் கிட்டத்தட்ட பத்தாயிரம் பக்கங்களுக்கு வரும். தினமும் ஒரு பிரச்சினையைக் கிளப்புவார்கள். என்னைப் பற்றிய வதந்திகளும் குறைவில்லாமல் எழுப்பப்படும். தாளாளரிடம் அனைத்தும் பல வித ஜோடனைகளோடு பலப்பல விதமாகச் சொல்லப்படும். நான் ஆசிரம வாழ்க்கையினை விட்டு வெளிவரும் காலம் வரை வதந்திகளைப் பற்றி ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. அவருக்குத் தெரியும் என் மீது எரிச்சல் கொண்டவர்களால் உருவாக்கப்படும் வதந்திகள் அவைகள் என்று. ஆனாலும் என் மீது குற்றம் சுமத்தியவரின் முக்கியத்துவம் கருதி, ஒரு நாள் விசாரணையும் நடந்தது. அந்த நிகழ்ச்ச்சியும் எனது வளர்ச்சிக்கு உதவியதே தவிர குறையவில்லை.

இன்றைக்கு பள்ளியில் என்ன வகுப்பு எடுத்தீர்கள்? என்ன நீதிக் கதைகள் சொன்னீர்கள்? என்பது போன்ற பல விஷயங்கள், விவேகானந்தரின் ஆன்மீக உரை, ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கைச் சரிதம், சாரதா தேவியாரின் அருள் போன்றவற்றைப் பற்றிச் சொல்லுவார். ஆவலுடன் கேட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு நான் ஏதோ போட்டுக் கொடுக்கும் வேலை செய்து வருவதாக நினைப்பார்கள். அவரவருக்குத் தெரிந்த விஷயத்தைப் பற்றித்தானே நினைப்பார்கள்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் அட்மிஷன் நடந்த நாளன்று தாளாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பள்ளியில் நடந்த எண்டரன்ஸ் எக்ஸாமுக்கு கம்ப்யூட்டரில் அட்மிஷன் ஃபார்ம் தயார் செய்து அதை ஒன்று ஐந்து ரூபாய்க்கு விற்ற வகையில் 800 ரூபாய் வருமானம் வந்தது என்று சொன்னேன். செலவு 50 ரூபாய் இருக்குமென்றும், வருமானம் 750 ரூபாய் என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். புளகாங்கிதம் அடைந்தார். கணக்காள சாமியார் அந்த நேரம் பார்த்து அன்றைய கணக்கு நோட்டினைக் கொண்டு வர, அவரிடம் தங்கவேலால் ஆசிரமத்திற்கு 750 ரூபாய் இன்றைக்கு வருமானம் கிடைத்திருக்கிறது என்று சொன்னார். அவர் திரு திருன்னு விழித்தார். அந்தப் பணம் பள்ளிக் கணக்கில் வரவில் வந்திருக்கிறதா என்று பார்க்க, மிஸ்ஸிங்.

”எங்கே அந்த வரவுக்கான எண்ட்ரி?” என்று கணக்காள சாமியாரிடம் கேட்க அவர் விழிக்க, ”இது தான் நீங்க செய்யும் அட்மினிஸ்ட்ரேஷனா?” என்று கோபமாகக் கேட்க, அந்த நேரத்தில் இருந்து கணக்காள சாமியாருக்கு எதிரியாகி விட்டேன் அந்தப் பணம் வேறு எங்கேயோ சென்று விட்டது என்பதைப் புரிந்து கொண்டார் தாளாளர்.

”தங்கவேல், சாப்பாடு ஆயிடுச்சா” என்று என்னிடம் கேட்க, ”இன்னும் இல்லை” என்றேன். ”சரி,சாப்பிட்டு விட்டு தூங்குங்க நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொன்னார். புரிந்து கொண்டு வெளியில் வந்து விட்டேன்.

அன்றைக்கு விடிய விடிய கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டன. பிரின்ஸ்பால் அழைத்து வரப்பட்டார். இவ்விஷயம் ஆசிரமம் முழுவதும் பரவி விட்டது. மறு நாள் பள்ளிக்குச் சென்ற போது ஆசிரியர் எவரும் என்னிடம் பேசவே தயங்கினர். வைஸ் பிரின்ஸ்பல் ”என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க” என்றார். ”சார், நான் சாமியிடம் தினமும் பேசிக்கொண்டிருப்பேன். இன்றைக்குப் பள்ளியில் எத்தனை அட்மிஷன் என்று கேட்டார். அப்போது இந்த விஷயத்தைப் பற்றியும் சொன்னேன். இதில் தவறு நடந்திருப்பது உண்மையில் எனக்கு துளிகூட தெரியாது. நான் செய்தது தப்பா என்று நீங்களே சொல்லுங்கள்” என்றேன்.

நடந்ததைச் சொன்னேன். விளைவு. பிரின்ஸ்பாலின் ராஜினாமா. இதில் என் தவறென்ன இருக்கிறது. ஆனால் இருக்கிறது என்றார்கள் ஆசிரமத்தில் இருந்தோர். அதைப் பற்றிய கவலை எனக்கு கிஞ்சித்தும் கிடையாது. பிரின்ஸ்பல் ராஜினாமாவுக்கு அடுத்து எனக்கு வந்த பிரச்சினைதான் பெரியது. வைஸ் பிரின்ஸ்பலுக்கு பிரின்ஸ்பல் போஸ்ட்டின் மீது கண். பிரின்ஸ்பல் போஸ்ட் கிடைக்காவிட்டால் அவருக்குப் பிரஸ்டீஜ் பிரச்சினை வேறு என்றுச் சொன்னார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். விடிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எனது அறைக்கு வந்து விடுவார். நான் தாளாளரிடம் ரெகமெண்டேஷன் செய்தால் தான் அந்தப் போஸ்ட் கிடைக்குமென்று அவருக்கு எண்ணம். ஆனால் அது எனக்கு எவ்வளவு தர்ம சங்கடத்தைத் தந்தது என்பது எனக்குத் தான் தெரியும். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்க மாட்டேன் என்றுச் சொல்லி விட்டார். இரண்டு மாதங்கள் தொடர்ந்து விடிகாலையில் அறைக்கு எழுதருளி விடுவார். எனக்கு மிகச் சிரமமாக இருக்கும்.

நான் ஆசிரமத்தில் தான் வாழ்ந்தேன் என்றாலும் ஆசிரமக் கட்டுப்பாடுகள் என்னைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டேன். விடிகாலையில் பிரேயர், பஜன், மாலையில் ஆரத்தி, பஜன்ஸ் இவைகளில் நான் கலந்து கொள்வது கிடையாது. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. ஆன்மீகம் என்பது மற்றவர்களின் மீது பலன் எதிர்பாரா அன்பைச் செலுத்துவது என்று உறுதியாக இன்றும் நம்புகிறவன். அதன்படி நடந்து வருகிறவன் அடியேன். இந்தப் பஜனைகள், பாடல்கள், விபூதி அணிவது இன்னபிற மத அடையாளங்கள் ஏதுமின்றி மனிதனாக இருக்க விரும்புவதால் மேற்படி சமாச்சாரங்களில் விருப்பம் இல்லை. ஆனாலும் சில சமயங்களில் ஏற்றுக் கொள்வேன். நாம் விரும்பாவிட்டாலும் சிக்னலில் நிற்பது போன்ற சமாச்சாரம் இது.


தாளாளரிடம் வைஸ் பிரின்ஸ்பாலால் நான் அடையும் சிரமம் பற்றிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பேன். அவர் சிரித்து வைப்பார். எனக்கு தலை சுற்றும். திடீரென்று ஒரு நாள்,

“ஏம்பா, தங்கவேல், வைஸ் பிரின்ஸ்பாலை பிரின்ஸ்பாலாக பதவி உயர்த்தி விடலாமா” என்று கேட்டார்.

”உங்க விருப்பம் ” என்றேன்.

“உங்களைத் தினமும் தொந்தரவு செய்ய மாட்டார் பாருங்கள்” என்று சொல்லிச் சிரித்தார்.

அதற்குப் பிறகு சில தனிப்பட்ட உரையாடலை நிகழ்த்தினோம். முடிவில் அவருக்குப் பதவி உயர்வு தரலாமென்று முடிவு செய்தார்.

”நீங்களே அவரிடம் சொல்லி விடுங்கள்” என்றார் தாளாளர்.

மகிழ்ச்சியுடன் அதை வைஸ் பிரின்ஸ்பாலிடம் பகிர்ந்து கொண்டேன். வைஸ் பிரின்ஸ்பால் இப்போது பிரின்ஸ்பாலாக பதவி உயர்வு பெற்ற அடுத்த நாளில்,
எனக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளியில் நான் ஆசிரியர்களை அணி திரட்டி வருவதாகவும், பாலிடிக்ஸ் செய்வதாகவும் தினமும் தாளாளரிடம் ஓதிக் கொண்டிருந்தார் பிரின்ஸ்பல். தாளாளரிடம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என்னிடம் வந்து விடுமென்பது அவருக்குத் தெரியாது. எனக்கு படு பயங்கரமாக தொல்லைகள் செய்ய ஆரம்பித்தார் புது பிரின்ஸ்பல். இவை அனைத்தும் தாளாளரிடம் பகிர்ந்து கொள்வேன். அவர் தரும் தொல்லைக்கு எப்படி ரீயாக்ட் செய்வது என்று தாளாளர் சொல்லித் தருவார். இவருக்கு ஒரு என்கவுண்டர் கொடுக்கலாமென்று முடிவெடுத்தேன். அது எப்படி ?

பதிவு விரைவில் வரும்.....

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.