குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, November 8, 2008

வாழ்வில் சில தருணங்கள் – 1

மெட்ரிக் பள்ளியில் வேலையில் சேர்ந்த புதிது. ஒரே ஒரு கணிப்பொறி மட்டும் தான் இருந்தது. அதற்கென்று தனியாக ஆசிரியர் ஒருவர் இருந்தார். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே கணிப்பொறி பயிற்சி. அதுவும் வாரத்தில் இரண்டு முறை மட்டும் தான். மற்ற நேரங்களில் பள்ளிக்குத் தேவையான அனைத்து விபரங்களையும் கணிணியிலேயே செய்து கொடுக்க ஆரம்பித்தேன். கணிணியில் வேலை செய்கிறேன் என்பதால் எல்லோருக்கும் என் மீது ஒரு கிரேஸ். பிரின்ஸிபால், வைஸ் பிரின்ஸிபால், அசிஸ்டண்ட் பிரின்ஸ்பால் அனைவரும் பெரும்பாலும் என்னோடுதான் இருப்பார்கள். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன.

ஒரு நாள் கல்லூரி புரபஸர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் கணிணி அறைக்கு வந்தார்.. அருகில் வந்து, “உங்க பேர் என்ன?”

“தங்கவேல் சார்”

“ ஓ நீங்க தான் புதிதாக வந்தவரா, சரி எனக்கு கல்லூரி வேலைகள் இருக்கின்றன. கம்ப்யூட்டரைத் தருகின்றீர்களா “ என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன்பு இவரைப் பார்த்ததும் இல்லை.
ஆனால் கல்லூரி என்றதும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு அவரிடம் கணிப்பொறியினை ஒப்படைத்து விட்டு பிரின்ஸிபால் அறைக்குச் சென்றேன்.

சின்ன இடைச்செருகல் ஒன்று.

நான் வேலை செய்த பள்ளியுடன் சேர்த்து இரண்டு பெண்கள் கல்லூரிகளையும், பல ஊர்களில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளையும் நிர்வாகம் செய்து வந்த தாளாளர் சுவாமிகள் என்னைப் பற்றி அவரது சக சாமியாரிடம் சொல்லியது.

நமக்கு கிட்டத்தட்ட எவ்வளவு சொத்து இருக்கும் என்று தாளாளர் கேட்க,80 கோடி இருக்கும் என்று சக சாமியார் சொல்லி இருக்கிறார். இப்போ வந்துட்டு போறானே தங்கவேலு, இவனுக்கு நம்ம சொத்தை விடவும் அதிக மதிப்பு உண்டு என்றாராம். அதற்கு என்ன காரணம் சொன்னார் என்று அவர் சொல்லவில்லை. அந்தச் சாமியார் என்னிடம் பர்ஸனலாக சொல்லியது மட்டுமல்லாமல் எல்லாரிடமும் சொல்லி விட்டார். இப்படிப்பட்ட சொற்களை சொல்லும் அளவுக்கு நானெப்பெடி உயர்ந்தேன் என்பதினை வரும் தொடர்களில் தொடர்ந்து எழுதுவேன்.

சரி விசயத்துக்கு வருகிறேன்.

”சார், என்னாச்சு, ஏன் கஸ்டப்படுறீங்க. ஆயாம்மாக்கிட்டே சொல்லி விட்டா நானே உங்க அறைக்கு வந்திருப்பேனே“ என்றார் பிரின்ஸிபல்.

விஷயத்தைச் சொன்னேன்.

”தங்கவேல், நான் சொல்லாமல் யாரிடமும் இனிமேல் கம்ப்யூட்டரில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது” என்று சொன்னார்.

மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ஆயாம்மாவை அழைத்து ”அந்த புரபஸர் சென்றவுடன் வேறு பூட்டினைப் போட்டு பூட்டி சாவி ஒன்றினை தங்கத்துக்கிட்டே கொடுத்து விடுங்க” என்றார்.

மனசு கஸ்டத்தோடு ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டேன். இப்படியே சில நாட்கள் சென்று கொண்டிந்த போது ஒரு நாள்,

பனிரெண்டாம் வகுப்புக்குரிய பிராக்டிக்கல் தேர்வு மறுநாள் என்பதாலும் முதல் நாளே கேள்விகளை எல்லாம் தொகுத்துப் பிரிண்ட் அவுட் எடுத்து வைக்க வேண்டும் என்பதாலும் கேள்விகளை விரைந்து அடிக்கும் பொருட்டு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தேன்.
மறுநாள் எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் வந்து கேள்விகளைச் சரி பார்த்து விடைத்தாளில் ஒட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுப்பார்.

மிகச் சரியாக அந்த நேரத்தில் கல்லூரி புரபஸர் உள்ளே வந்தார்.

சார், பிரின்ஸிபாலிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் கணிணியைத் தர முடியும் என்று சொல்லும்படியும், அப்படி அனுமதி தந்தால் தான் கம்ப்யூட்டரை உங்களிடம் ஒப்படைக்கும் படியும் பிரின்ஸிபால் சொல்லி இருக்கிறார். அதுவுமின்றி நாளைக்கு பனிரெண்டாம் வகுப்புக்கு அரசுத்தேர்வு வேறு இருக்கிறது. கேள்விகளைத் தயார் செய்ய வேண்டுமென்பதால், எனக்கு வேலை இருக்கிறது என்றும் சொல்லி தர மறுத்து விட்டேன்.

அடுத்த நொடி, ”ஏய்.. நான் யார் தெரியுமா ? என்னையா நீ பகைச்சுக்கிறே.. ஒரு வார்த்தை சாமியிடம் (தாளாளர்) சொன்னால் உன்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார். ஜாக்கிரதையாக இங்கிருந்து ஓடிப்போயிடு“ என்றார்.

மனதுக்குள் ”இவனெல்லாம் ஒரு புரபஸராம், வந்துட்டான் ஆட்டிக்கிட்டு. போடா ஙொய்யா” என்று நினைத்துக் கொண்டு,

”சார், நீங்க சொல்வது சரி. ஆனால் சாமி என்னிடம் பிரின்ஸிபால் என்ன சொல்றாரோ அதை மட்டும் தான் செய்யனும் என்று சொல்லி இருக்கிறாரே “ என்றேன் சிரித்துக் கொண்டே (ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் புரபஸரின் கோபத்தில் ஆர்டிஎக்ஸ் மருந்தினை கொஞ்சூண்டு போட்டு வைத்தேன் சிரிப்பென்னும் வடிவில்)

”ஏய், நான் யார் தெரியுமா? என் பவர் என்னான்னு தெரியுமா? நான் போயி அவனுக்கிட்டே அனுமதி வாங்கனுமா” என்று கோபமாக கத்த ஆரம்பித்தார்.

அதன் பின்னர் அவரைக் கவனிக்கவே இல்லை. நான் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

கோபமாக அறையிலிருந்து சென்று விட்டார். நேராக தலைமைச் சாமியாரிடம் சென்று, ”தங்கவேலு என்னை நமது கல்லூரிக்குத் தேவையான அனுமதி மற்றும் இதர விபரங்களை டைப் செய்வதற்கு விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்” என்பது போலவும் மற்ற போட்டுக் கொடுக்கும் வேலையினையும் செய்து விட்டுச் சென்று விட்டார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் புரபஸராக இருந்தார்.

அவ்வப்போது டிவோட்டி (ஹீ..ஹீ... பெருமாளே பிச்சை எடுக்குமாம். அதைப் பிடுங்கித் திங்குமாம் அனுமாரு என்ற பழமொழிக்கு ஏற்ப, அவர் வீட்டில் சிலிண்டர் முடிந்து விட்டால் ஆஸிரமத்தில் இருந்து சிலிண்டரை எடுத்து செல்வார் அதிகார தோரணையோடு மனசே கூசாமல்) என்ற பெயரில் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேனென்று வந்து நல்லா கொட்டிக்கிட்டு, மற்றவர்களை அதிகாரமும் செய்து விட்டுச் செல்லும் ஒரு சில மஹாத்மாக்களில் இவரும் ஒருவர் என்று பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். அதுவுமின்றி பெண்கள் கல்லூரியிலும் கைவைத்த கதையினையும் காற்றோடு காற்றாக கேள்விப்பட்டேன். இவ்விஷயத்தை நானும் நம்பாமல் இருந்தேன். ஆனால் பின்னாட்களில் அந்தக் காதல் கனிரசங்களையும் நேரில் கண்டேன்.

அன்றைய இரவு சாமியாரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் மேற்படி விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க, நான் ஒன்று விடாமல் சொல்லி வைத்தேன்.

”பார்த்து நடந்துக்கப்பா. யாரும் உன்னைப் பற்றி குறை சொல்லக்கூடாது” என்றார்.

தலையைத் தடவிவிட்டு ஒரு தேங்காய் லட்டுவைக் கொடுத்தார்.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு விடைபெரும் சிறு விழாவை நடத்தினர். நானும் சென்றேன். சுவீட், காரம், காபி கிடைத்தது. சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து விட்டேன்.

ஆறு மணி இருக்கும். பள்ளியில் இருந்து ஓலை வந்தது. கருப்புக் கலரில் கோடு போட்ட சட்டை ஒன்றினைப் போட்டுக் கொண்டு, பிரின்ஸிபல் அறைக்குச் சென்றேன். ஏதோ பெரிய பிரச்சினை என்று சொன்னார்கள்.

தொடரும் விரைவில்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.