குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, July 9, 2008

என் முதல் மனைவி

மீண்டும் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி. பள்ளியில் 11 மணி வாக்கில் லட்சுமி என்ற 55 வயது ஆயாம்மா ஆசிரியர்கள் அனைவருக்கும் தினமும் டீ கொண்டு வந்து கொடுப்பார்கள். சின்ன டம்ளர். நான்கு சிப் தான் வரும். எனக்கும் தினமும் கொண்டு வந்து கொடுப்பார்கள். திடீரென்று ஒரு நாள் , கம்யூட்டர் சார் நாளைக்கு வரும்போது டீக்கு காசு கொண்டு வந்து தாருங்கள் என்று சொன்னார். காசா ? எதுக்கு என்று கேட்டேன். அப்போது தான் சொன்னார்கள் விஷயத்தை. பார்ஸல் டீ வாங்கி வந்து அதைச் சின்ன டம்ளரில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பாராம். ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்கும். எனது முறை வருவதற்கு 20 நாட்கள் ஆகுமாம். சரி ஆயாம்மா. நாளைக்கு கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

நான் தங்கியிருக்கும் ஆஸ்ரமத்தின் கணக்காளர் ஒரு சாமியார். அவருக்கும் எனக்கும் அறவே ஆகாது. ஏனெனில் நான் நேரடியாக தலைமைச் சாமியாரிடம் தான் தொடர்பு கொள்வேன். தினமும் தல சாமியாரிடம் இரண்டு மணி நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருப்பேன். அது இவருக்குப் பிடிக்காது. தல சாமியாருக்கு அடுத்த பொசிஷன் இந்த கணக்காளர் சாமியார்தான். ஆஸ்ரமத்திற்கு வரும் அனைத்துப் பெரிய மனிதர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இவரைச் சந்தித்து, அனுமதி வாங்கிய பின்னர் தான் தல சாமியாரை பார்க்க இயலும். என்னிடம் சொல்லிவிட்டுதான் பெரிய சாமியை ( தல சாமியை இப்படித்தான் அழைப்பார்கள்) சந்திக்கனும் என்று பலமுறை சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி பெரியசாமியிடம் சொல்லியபோது, அவருக்கு வேறு வேலை இல்லை. நீ எப்போது வேண்டுமானாலும் எனது அறைக்கு வரலாம் என்று சொல்ல, கணக்காள சாமியாரிடம் பெரிய சாமி இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று சொல்ல அவருக்கு என் மேல் சரியான கடுப்பு. அந்தக் கடுப்பை என்னிடம் காட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் போல.

லட்சுமி டீக்கு காசு கேட்கும்போது பெரிய சாமி வெளியூரில் இருந்தார். அந்த நேரம் பார்த்து என்னிடம் பைசா கிடையாது. வேறு வழி இல்லாமல் கணக்காள சாமியிடம் சென்று இப்படி இப்படி என்ற விபரத்தை சொல்லி காசு கேட்டால், அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. வேனுமென்றால் டீ குடிக்காமலிரு என்று சொல்லிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த லட்சுமி அதைக் கேட்டபடி நின்றிருந்தார். நான் தர்மசங்கடமாக அறைக்கு திரும்பி விட்டேன்.

மறு நாள் காலையில் கிச்சாவிடம் காசு வாங்கி வைத்திருந்தேன். லட்சுமி வந்தார். டீ கொடுத்தார். வடை ஒன்றினையும் கொடுத்தார். என்ன ஆயாம்மா கவனிப்பு பலமா இருக்கு என்றேன். ஒரு முறை முறைத்தார். அந்த மொட்டை சாமிகிட்டே எதுக்குபோய் காசு கேட்டீங்க. எனக்கிட்டே சொல்ல வேண்டியது தானே என்றார். பெரியசாமி இல்லை ஆயாம்மா. அதான் என்றேன். அவனும் அவன் மூஞ்சியும் என்று கண்டபடி திட்டினார். வேண்டாமென்று தடுத்தேன். எனக்கும் அவருக்குமிடையில் இருக்கும் அரசியல் எனக்கு மட்டும்தானே தெரியும். லட்சுமிக்கு எங்கே தெரியும் என்று நினைத்துக் கொண்டு விடுங்க ஆயாம்மா, இந்தாங்க காசு என்று கொடுக்க முறைத்து விட்டு காசு வாங்காமல் சென்று விட்டார். நான் பலமுறை வற்புறுத்தியும் வாங்க மாட்டேன் என்றார்.

மாலையில் கிச்சாவிடம் காசினை திரும்பக் கொடுத்தேன். என்ன தங்கம் விஷயம் என்று கேட்க லட்சுமி காசு வேண்டாமென்று சொல்லிவிட்டார் என்று சொன்னேன். படுபாவி கிச்சா அதன் பின் செய்த வேலைதான் பெரியது.

ஆசிரிய ஓய்வறைக்குள் டீ கொடுக்க சென்ற போது கிச்சா, லட்சுமி தங்கத்துக்கு கிட்டே மட்டும் ஏன் காசு வாங்க மாட்டேன் என்கிறாய். அவர் என்ன உன் வீட்டுக்காரரா என்று கேட்க , லட்சுமியும் ஆமா அப்படித்தான் வச்சுக்கங்க. என் உசிரு இருக்கும் வரைக்கும் அவரிடம் காசு வாங்க மாட்டேன் என்று சொல்ல கிச்சா பள்ளியில் இருக்கும் அனைவரிடமும் சொல்லி விட்டார். அன்றிலிருந்து பள்ளியிலிருக்கும் அனைவரும் என்னை லட்சுமி வீட்டுக்காரர் என்றழைக்க ஆரம்பித்து விட்டனர்.

லட்சுமி ஆயாம்மாளிடம் என்னைப் பற்றி உங்க வீட்டுக்காரர் எங்கே இருக்கிறார் என்று தான் விசாரிப்பார்கள். பிரின்ஸிபாலும் அப்படித்தான் விசாரிப்பாராம். என்னிடம் வந்து எங்கே தங்கம் உன் மனைவி என்பார்கள். நானும் சிரித்துக் கொண்டே சொல்வேன். பசங்ககிட்டே லட்சுமி ஆயாம்மாவை அழைச்சுட்டு வாங்கடா என்று சொன்னால் அவர்களும் உங்க வீட்டுக்காரர் கூப்பிடுகிறார் என்று போய் சொல்வார்கள். அந்த நேரத்தில் பிரின்ஸ்பால் ஏதாவது வேலை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அடித்துப் பிடித்துக் கொண்டு என் அறைக்கு ஓடி வருவார்கள். வீட்டுக்காரரே, இந்தாங்க டீ என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே கொண்டு வந்து தருவார்கள்.

இதற்கிடையில் பெரிய சாமி வெளியூரில் இருந்து திரும்பி வர, நான் அவரிடம் விஷயததைச் சொன்னேன். அன்றிலிருந்து ஆஸ்ரமத்தில் இருந்து ஐந்து பேர் குடிக்கும் அளவுக்கு சுத்தமான பாலில் பள்ளிக்கு டீ அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து விட்டார் பெரியசாமி. கணக்காள சாமிக்கு ஆப்பு அடித்தேன் அந்த விஷயத்தில். அதிலிருந்து கணக்காள சாமி என்னிடம் எந்தப் பிரச்சினையும் செய்வதில்லை.

ஒரு நாள் லட்சுமியைக் காணவில்லை. டீச்சர் ஒருவர் அவங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, லட்சுமி வீட்டுக்கு சென்றேன்.
அங்கு என்னைப் பார்த்ததும் ஓடி வந்தார். என்ன சாரு.. ஏன் இங்கேயெல்லாம் வந்தீங்க என்று கடிந்து கொண்டார். எங்க உன் வீட்டுக்காரர் என்றேன். அதான் நீங்க இருக்கீங்களே என்றார். அவருக்கு சின்ன வயதிலேயே கணவர் இறந்து விட்டதும் அவருடைய பையனும் நோயில் இறந்துவிட்டதும் பின்னர் தான் தெரிந்தது.

பெரிய சாமியும் நானும் காரில் சென்னை சென்று கொண்டிருந்த போது “உன் மனைவி எப்படிப்பா இருக்கிறார்கள்?” என்று கேட்க நான் விழித்தேன். சுதாரித்துக் கொண்டு ”நல்லா இருக்காங்க சாமி” என்றேன். ”என்ன ஒரு அன்பு” என்று உரக்கச் சொல்லியபடி சிரித்தார்.”ஆமாம் சாமி” என்றேன் நான்.

எனது மனைவி (காதலி) ஒருமுறை பள்ளிக்கு என்னைச் சந்திக்க வந்தபோது அவளிடம் என் முதல் மனைவி என்று லட்சுமியைத்தான் அறிமுகம் செய்து வைத்தேன். லட்சுமிக்கு எனது காதலியைப் பார்த்தவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி. என்னைப் பற்றி ஆகா ஒகோவென்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

முதல் மனைவி, எனது இரண்டாவது மனைவியாக வரப்போகிறவளிடம் கணவனைப் பற்றி புகழ்ந்துரைப்பதை எங்காவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா ?????