குரு வாழ்க ! குருவே துணை !!

Property Legal Consultation||Construction||Buy-Sale Property|| Phone : 9600577755 || Email :covaimthangavel@gmail.com

Click Banner to see Properties for Sale

Friday, June 27, 2008

பெண்கள் கல்லூரி

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஆத்மானந்த சுவாமிகளின் கார்(காண்டெசா கிளாசிக்) டிரைவர் முருகன்

“கம்ப்யூட்டர் சார் ( இப்படித்தான் அழைப்பார்கள் ). சாமி உங்களை அழைக்கிறார்” என்றான்.

“தங்கவேல் இன்று வேலை ஒன்றும் இல்லையே ? ”

”இல்லிங்க சாமி“

”காலேஜுக்கு போயிட்டு சாயந்திரம் வரலாமா?“

“சரிங்க சாமி. போலாம்“

”காரில போய் உட்கார்ந்துக்கப்பா”

காரில் பயணம். சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி, சாரதாபுரி.. என்ற போர்டை பார்த்தேன்.

”இது தான் நம்ம (!) காலேஜ், முருகா காரை நிப்பாட்டு” என்றார்.

காரின் இடது பக்கம் ஒரு பாறை செங்குத்தாக நின்றது.

”இதில் தான் விவேகானந்தர் சிலை வைக்கப்போகிறேன். கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தரின் சிலை போல, அல்ல அல்ல, அந்த சிலையினை யார் செய்தாரோ அவரையே செய்ய சொல்லி சாமியினை இங்கு ஸ்தாபிக்கப் போகிறேன்“ என்றார்.

கண்களில் வெளிச்சம் பரவி உணர்ச்சி வசப்பட்டார். கரூர் மக்கள் இந்த இடத்தைத் தான் கன்னியாகுமாரியிலிருக்கும் விவேகானந்தர் என்று கொண்டாட வேண்டுமென்றார். புன் முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கல்லூரியின் வாசலில் கார் நின்றது. சிஸ்டர் இருவர் வந்து வரவேற்றனர். சாமி கல்லூரியின் அலுவலக அறைக்கு சென்றார். சிஸ்டர் இருவரும் என்னை கணிப்பொறிகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். பல கேள்விகள். விசாரிப்புகள். இன்னும் பிற. அனைத்துக்கும் பதில் சொல்லி முடிக்கும் தருவாயில் சாமி சாப்பிட அழைப்பதாக சிஸ்டர் சொல்ல, சாமியின் அறைக்கு சென்றேன்.

சாப்பாடு ஆகிவிட்டது. கணிப்பொறிகள் இருக்கும் அறைக்குள் நுழைந்து கணிப்பொறியில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன்.

மாலை நேரம்... சாமியுடன் ஆஸ்ரமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சாமியிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

”சாமி.. பசங்களுக்கும் கல்லூரி வைத்திருக்கலாமே. ஏன் பெண்களுக்கு மட்டும்”

சிரித்தார்.

”பெண்கள் தான் சமூகத்தின் ஆணிவேர். அவள் மூலம்தான் சமூகம் தழைக்கிறது. அவள் தான் சமூக கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் காப்பாற்றுபவள். அவள் தன் குழந்தைகளுக்கு தான் கற்றதை சொல்லி கொடுத்து நல்ல குழந்தைகளை உருவாக்குவாள். ஆதலால் தான், அந்த வேருக்கு நல்ல கல்வியினையும், நல்ல போதனைகளையும் கொடுத்தால் சமூக ஒழுங்கு நிலைக்கு வருமென்று தான் பெண்களுக்கான கல்லூரியினை ஆரம்பித்தேன்“ என்றார்.

ஏசியின் சில்லிப்புடன் அவர் சொன்னதைக் கேட்டு சிலிர்ப்புற்றேன். காரணம் உண்டு. இரு நாட்களுக்கு முன்பு ஒருவர் இந்த சாமியார்கள் ஏன் பெண்கள் கல்லூரிகளை ஆரம்பிக்கிறானுங்க என்று எனக்குத்தான் தெரியும் என நக்கலாக சொன்னது நினைவுக்கு வந்தது அந்த நேரத்தில்.