குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, July 25, 2011

பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோரின் கன்சல்டேஷன் பகுதி இரண்டு


டீலரிடமிருந்து வரக்கூடிய சரக்குகளைக் கையாளும் இடத்திற்கு விடிகாலையில் சென்று விட்டேன். அங்கு சேர்மனின் மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் மேற்பார்வையில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அந்தக் குறிப்பிட்ட டீலரிடமிருந்து சரக்குகள் வந்திருக்கின்றனவா என்று பார்வையிட்ட போது ஒன்றையும் காணவில்லை. பார்கோடிங் எப்படி அடிக்கப்படுகிறது, விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, எத்தனை பர்சண்டேஜ் (ரகசியம் !!!!) கிடைக்கும் என்றெல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டு, நானும் அவரும் ஹோட்டலுக்குத் திரும்பி விட்டோம்.

அன்றைக்கு அதன்பிறகு வேலை இல்லை. சேர்மனிடம் சொல்லி விட்டு, பர்சனல் வேலையாக வெளியில் சென்று விட்டேன்.

அடுத்த நாள் காலையில் சேர்மனின் அறையில் அமர்ந்து கொண்டு, அன்று வந்த சரக்குகள் லிஸ்ட்டினை ஸ்டோர் திறக்கும் முன்பே எடுத்து பார்வையிட்டபோது, குறிப்பிட்ட டீலரிடமிருந்து பில் ஒன்று வந்திருந்தது. 100 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அன்று ஸ்டோருக்கு அனுப்பி இருந்ததாக பில் சொல்லியது.உடனே ஸ்டாக் வைத்திருந்த இடத்திற்கு நானும் சேர்மனும் சென்றோம். அங்குக் குறிப்பிட்ட அந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களின் எண்ணிக்கையை செக்கிங் செய்த போது, 20 பாட்டில்கள் குறைந்திருந்தன. சேர்மனின் முகம் அஷ்டகோணலாகியது. 

நான் வந்த வேலை முடிந்து விட்டதாக சேர்மன் சொல்ல, ”10% முடிந்திருக்கிறது” என்றேன். இதயத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியாய் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். பிரஷர் அதிகமாகி விட்டது. அவரை அப்படியே வெளியில் கொண்டு வந்து, அவரின் தனிப்பட்ட ஹெஸ்ட் ஹவுசிற்குள் வந்து விட்டோம். வரும் வரையிலும் “அவனா இப்படி????” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார். 

நாங்கள் செக்கிங் செய்த போது, அந்த உறவினர் வேறு வேலையாக வெளியில் சென்றிருந்தார்.

“தங்கம், மீதி 90% என்ன?”

“அவசரப்படாதீர்கள். இன்னும் ஒரு நாள் அவகாசம் வேண்டும் “

“சரி மெதுவாகச் செய்யுங்கள், யாரிடமும் சொல்லி விட வேண்டாம்”

“ நான் உங்களுக்காக வந்திருக்கிறேன்” என்றுச் சொல்லி சிரித்தேன். அன்று இருவரும் வெளியில் சென்று விட்டு, மாலையில் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

மறு நாள் காலையில் சாஃப்ட்வேர் செக்‌ஷனுக்குள் நுழைந்தேன்.

ஸ்டாக் எவ்வளவு இருக்கிறது என்பதை பில்லிங்க் போடும்போதே தெரியும் படி ஏன் சாஃப்ட்வேர் உருவாக்கவில்லை? என்ற கேள்வியைக் கேட்ட போது, சாஃப்ட்வேர் ஆள் நடு நடுங்க ஆரம்பித்தார். 

“அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை சார், உடனடியாக மாடிஃபிகேஷன் செய்தால் போதுமானது, உங்களுக்கு தரக்கூடிய சாஃப்ட்வேரில் இணைத்து விடுகிறோம்” என்றார்.

“ஓகே, அப்படியே செய்து விடுங்கள்” என்றுச் சொல்லி மேலும் சாஃப்ட்வேரில் இருக்கும் குறைபாடுகளை பார்வையிட ஆரம்பித்தேன்.

மிகவும் திட்டமிட்டு, யாருக்கும் தெரியாத வண்ணம் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டிருந்தது. மேற்பார்வைக்கு எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு ஆஃப்சனை வைத்து, அட்ஜஸ்ட் செய்யும் படியான முறையில் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டிருந்ததை எளிதில் கண்டுபிடித்தேன்.

அதாவது டீலர்களிடமிருந்து வரக்கூடிய சரக்குகள் அக்கவுண்ட் செக்‌ஷனுக்குச் செல்லும் போது பில்லின் படியே சென்று சேரும். அதன்படியே டீலருக்கான பணம் செலுத்தப்பட்டு விடும். ஆனால் சரக்குகள் விற்ற பின்னர் அனைத்தும் மாற்றப்படும். எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

அங்குமட்டுமல்லாமல் காய்கறியை மொத்தமாக வாங்கும் போது மிக அதிக சரக்குகள் வாங்கப்பட்டதாகச் சொல்லப்படும். ஆனால் உண்மையில் வந்தது கொஞ்சம் மட்டுமே. அதே போல முந்திரி வகையறாக்கள். இதே போல இன்னும் வெளியில் சொல்ல முடியாதவாறு திருட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்தத் திருட்டினை ஒரு சாதாரண ஆடிட்டர் கண்டிபிடிக்கலாம். ஆனால் ஏன் செய்யவில்லை? பெரிய லிங்க்ட் நெட்வொர்க் ஆடிட்டர் வரையிலும் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறது. ஆடிட்டர் முதற்கொண்டு அனைவரும் திருடிக் கொண்டிருந்தனர். கொஞ்ச நஞ்சமல்ல. கோடிகளில் கொள்ளை நடந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் இரண்டு சேர்மன்களின் போர்டு மீட்டிங்கில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளையும், களைய வேண்டிய வழிகளையும் தெளிவாக எடுத்துரைத்தேன். கண்கள் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். படிப்படியாக மாற்றப்பட வேண்டியதையும் சொல்லி விட்டு, ஹோட்டலுக்கு வந்து விட்டேன். அன்று இரவு ஏழு மணி அளவில் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, சேர்மன் எனது ஃபீசைக் கொண்டு வந்து கொடுத்தார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ந்தது பற்றிய பிளாஷ் நியூஸ் டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.



* * *
இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். அன்றைக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு என்பது அதிகமாக இல்லை. காரணம் விலை. சாஃப்ட்வேர்கள் எல்லாம் மிக அதிக விலையாக இருந்தன. டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருந்த சமயம்.  அதனால் தான் இத்தகைய திருட்டுகளை நடத்த முடிந்தது. 

இன்றைக்கும் கூட, இந்தியா முழுவதும் பிரபலமான ஸ்டோர் ஒன்றில் என் கண் முன்னே ஸ்டோரின் மேனேஜர் ஒருவர் திருட்டுப் பிளானை செய்து கொண்டிருந்தார். 

படித்தவர்கள் தான் இன்றைக்கு பெரிய திருட்டுக்களைச் செய்து வருகிறார்கள்.படிக்காதவர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் திருட்டு வேலையைச் செய்து வருகிறார்கள்.ஏன் இந்த நிலைமை வந்தது? அதற்கும் இந்த கோடீஸ்வர முதலாளிகளே காரணம். மெட்டீரியலைஸ்டு வாழ்க்கையை மிகச் சிறந்த ஒன்றாக மக்களின் மூளைகளில் மீடியாக்கள் மூலம் பதிவு செய்கிறார்கள். அதனால் அதிகம் சம்பாதிக்க இயலாதவர்கள் திருட முற்படுகின்றார்கள்.

சும்மா இருப்பதற்காக கார்பொரேட் சாமியார்களிடம் சம்பாதிக்கும் சொத்துக்களை கொடுத்து பயிற்சி பெற வேண்டிய அவல நிலையில் மானிடம் இருக்கிறது. 

* * *

Sunday, July 24, 2011

பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு கன்சல்டேஷன்

தமிழகத்தின் பிரபல நகரங்களில் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் உரிமையாளர்களில் ஒருவர் எனது நண்பர். திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து அழைப்பு. ”டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வேலையாக, உங்களது கன்சல்டேஷன் வேண்டி இருக்கிறது, வர இயலுமா ?” என்று கேட்டார். ஒத்துக் கொண்டேன்.

போர்டு மீட்டிங்கில் இரண்டு சேர்மன்களுடன் தனிமையில் உரையாடினேன். டிபார்ட்மென்ட் ஸ்டோரின் ஒரு நாள் கலெக்‌ஷன் 25 லிருந்து 35 லட்சம் வரை. அதுவே சனி, ஞாயிறு என்றால் அரைக்கோடிக்கும் மேல். சில சமயம் ஸ்டாக் செக்கிங் செல்லும்போது, ஸ்டாக் குறைவாக இருக்குமாம். ஆனால் ஆர்டர் போட்டது அதிகமாக இருக்கும் என்றும் விற்பனையானதும் குறைவாக இருக்கும் என்றும், அதன் பிறகு ரகசிய கேமராக்கள் வைத்து, கஸ்டமர் யாராவது திருடுகின்றார்களா என்றெல்லாம் பார்த்ததில் அப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என்றும் தெரிய வந்திருப்பதாகவும் சொன்னார். கணிணியில் செயல்படும் சாஃப்ட்வேர் இவர்கள் கம்பெனிக்காக ஸ்பெஷலாக தயாரித்தது என்றும் சொன்னார். எங்கு திருட்டு நடக்கிறது என்பதே புரியவில்லை என்றும், வருமானம் கொஞ்சம் கொஞ்சமாய சரிகிறது என்றும் சொன்னார். 

பெரிய விஷயம். நிர்வாகத்தாலே கண்டுபிடிக்க முடியாததை நம்மிடம் தள்ளுகின்றார்களே, நம்மால் முடியுமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். முயற்சி செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து, ”முயற்சிக்கிறேன்” என்று உறுதி கொடுத்து விட்டேன். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன். நான் என்ன செய்கிறேன் என்று கேட்கக் கூடாது என்றும், நான் சொல்வதை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டேன். “அப்படியே ஆகட்டும் தங்கம்” என்று இருவரும் கோரசாகச் சொல்லி விட்டனர். அவரின் கவலை தீர்ந்தது. ஆனால் எனக்குள் அந்தக் கவலைப் பரவி விட்டது.

பிரபல ஹோட்டலில் எனக்கான தனி அறை, சேர்மனின் வீட்டிலிருந்து சாப்பாடு, மாலைகளில் வெளியே சென்று வர தனி கார் மற்றும் உதவியாளர் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதல் நாள் சேர்மனின் அறையிலிருந்து கொண்டு அவருடன் பேசிக் கொண்டே அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்தேன். இரவு தனியாக நானும் சேர்மனும் ஸ்டோருக்குள் வந்து எங்கெங்கு என்ன வேலைகள் நடக்கின்றன என்று விசாரித்து அறிந்து கொண்டேன்.

மறுநாள் நான் சேர்மனின் நண்பர் என்றும், புதிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று வைப்பதற்காக, ஆலோசனை கேட்க வந்திருப்பதாகவும் செய்தி பரப்பப்பட்டது. அதன்பிறகு தான் ஆக்சன் பிளானே ஆரம்பமானது. 

பில்லிங் போடும் கவுண்டரில் அமர்ந்து சில பில்களைப் போட்டேன். அது உடனே அக்கவுண்டிங் செக்‌ஷனுக்கு வருகிறதா என்று செக் செய்த போது, வரவில்லை. ஏன் என்று கேட்டால், ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை பில் டேட்டாவை அப்லோட் செய்தால் தான் அக்கவுண்ட் செக்‌ஷனுக்கு வரும் என்றுச் சொன்னார் சாஃப்ட்வேர் ஆள். ஓகே, பில்லிங்கில் ஏதும் டெலிட் ஆப்சன், அப்டேட் ஆப்சன் ஏதும் இருக்கிறதா என்று பார்த்த போது, அப்படியான ஆப்சனே இல்லாமல் இருந்தது. ஏதாவது தவறான எண்ட்ரி வர வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.பார்கோட் ரீடிங் மூலம் இன்புட் வாங்கப்பட்டது. சரி பில்லிங் செக்‌ஷனில் பிரச்சினை இல்லை. டேட்டா அப்லோடிங்கிலும் பிரச்சினை இல்லை என்று முடிவெடுத்தேன்.

அடுத்து, அக்கவுண்ட் செக்‌ஷனுக்குள் நுழைந்தேன். சில பொருட்களை மட்டும் லிஸ்ட் எடுத்து வரவு, விற்பனையை சரி பார்த்தேன். பெரும்பாலும் சரியாகவே இருந்தன. இப்படி ஒவ்வொரு பொருளையும் செக் செய்து கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆகி விடுமே என்று யோசித்துக் கொண்டே, ராண்டமைஸ்ஸாக செக்கிங் செய்யலாம் என்று முடிவெடுத்து, சில பொருட்களை லிஸ்ட் எடுத்தேன்.

ஒரே ஒரு பொருள் மட்டும் வரவு விற்பனையில் இடித்தது. அது 500 கிராம் ஹார்லிக்ஸ் பாட்டில். அது எந்த டீலரிடமிருந்து வாங்கப்படுகிறது என்ற விபரத்தை எடுத்து, அந்த டீலர் அனுப்பும் பொருட்களை லிஸ்ட் எடுத்து பார்த்த போது எனக்கு பிரச்சினை எங்கிருக்கிறது என்று புரிந்து விட்டது. எத்தனை ரூபாய் திருடப்பட்டது என்பதை எப்படித் திருடப்பட்டது என்பதைச் சொல்லி விட்டால் கண்டுபிடித்து விடலாம், மேலும் திருட்டையும் சரி செய்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு, அடுத்த பிளானை உருவாக்கினேன்.

மறு நாள் சேர்மனைச் சந்தித்த போது, ”தங்கம் கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கே?” என்றுச் சொன்னார். அவர் தான் பிசினஸ் மேன். முகத்தைப் படிக்கத் தெரிந்தவர். அதனாலல்லவா கோடிகளுக்கு அதிபதியாய் இருக்கிறார்.

”இன்னும் இல்லை சார், எனக்கு குழப்பமாய் இருக்கிறது எங்கு தப்பு நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்றே தெரியவில்லை. பாருக்குப் போகலாமா இன்று இரவு” என்று கேட்க,ஆள் அதிர்ந்து விட்டார். 

“தங்கம், நீங்கதான் ட்ரிங்க்ஸ் யூஸ் பண்ணமாட்டீங்களே, பின்னே பாருக்குப் போகலாமான்னு கேட்கின்றீர்களே, என்ன ஆச்சு, ஏதும் பிரச்சினை இல்லையே? “ என்று அதிர்ந்து போய் கேட்க, 

”நத்திங் சார், சும்மா ரிலாக்சேஷனுக்காக” என்றுச் சொல்லி சமாளித்தேன்.

* * *

அடுத்த பகுதியில் நான் சென்ற வேலையினை எப்படி வெற்றிகரமாக முடித்தேன் என்று பார்க்கலாம்.


Friday, July 22, 2011

ஆடி வெள்ளிக்கிழமையும் மாட்டுச் சாணியும்

வேலையில் மும்முரமாக இருந்தேன். கவனம் முழுவதும் வேலையில் இருந்தது. ”என்னாங்க....!!!” என்று குரல். கேட்ட குரல்தான், மனைவியின் முகத்தினைப் பார்த்தேன். ”நாளைக்கு ஆடி வெள்ளிக் கிழமை, மாட்டுச் சாணம் தேடினேன் கிடைக்கவில்லை” என்று இழுத்தாள்.

நண்பர்களிடம் விசாரித்தேன். சில இடங்கள் சொல்ல அங்குச் சென்றால் டிமாண்ட்டாம். என்னடா இது புதுசா ஒரு பிரச்சினை, கோவையில் மாட்டுச் சாணிக்கு டிமாண்டா என்று குழம்பி, வண்டியில் மனைவியை ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு தெருவாய் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு (அதான் அந்த வீட்டில் மாடுகீடு இருக்கிறதா என்று பார்ப்பது) சென்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேர அலசலில் ஒரு வீட்டில் மாட்டின் வாலைப் பார்த்து விட்டேன்.

ஆஹா, மகா லட்சுமியைப் பார்த்து விட்டேன் என்று மனசு ஒரு துள்ளு துள்ளியது. வண்டியை நிறுத்தி மனைவி வீட்டிற்குள் சென்றாள். ஒரு பை நிறைய மாட்டுச் சாணம் வாங்கிக் கொண்டு வந்தாள். ”நல்ல பெண்மணி அல்லவா?” என்று சொல்லி முடிக்கவில்லை, “இது ஐந்து ரூபாய்ங்க” என்றாள். “ஓ.. இப்படி ஒரு பிசினஸ்ஸா??” என்று வியந்து கொண்டே ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கினேன்.



பதினைந்து வருடம் ஓடி ஓடிக் களைத்த எல் எம் எல் டிரண்டி “ஏன்பா, இது உனக்கே ஓவரா இல்லை? “ என்று கேட்பது போல இருந்தது. மாட்டுச் சாணியை காசு கொடுத்து வாங்கி வருகிறாளே என்ற கோபத்தினை பின் யாரிடம் தான் காட்டுவது சொல்லுங்கள் பார்ப்போம். “போடா, போடா, இவன் வேற முக்கிக்கிட்டு” என்ற எரிச்சலில் மேலும் ஆக்சிலேட்டரை முறுக்க ஜிவுக்கென்று கிளம்பியது.

”ஏங்க, ஏங்க, நிப்பாட்டுங்க” என்றாள் பின்பக்கமாய் உட்கார்ந்திருந்த மனையாள். இரண்டு அடி தாங்க தள்ளி நிப்பாட்டினேன். அதுக்கு ”நிப்பாட்டுங்கன்னு சொல்லுறேன், இவ்வளவு தூரம் வந்துட்டீங்களே” என்று சொன்னாள். ஏதாவது பேச முடியுமா சொல்லுங்கள் பார்ப்போம்.

பெட்டிக்கடை ஒன்றிற்குச் சென்றவள் கடைக்காரரிடம் ஏதோ பேசினாள். அவர் ஏதோ ஒரு பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளுடன் ஒரு ஒத்தை ரூபாய் காசையும் கொடுத்தாள். வீட்டுக்கு வரும் போது, ”என்ன அது?” என்று விசாரித்தேன். ”சாணிப்பவுடருங்க” என்றாள்.

”எதுக்கு?”

“ சாணியோட கலக்கிறதுக்கு”

“கலந்து....... ???”

“ அட சும்மா நொச்சு நொச்சுன்னு கேள்வி கேக்காதீங்க. வீட்டுக்கு வந்து பாருங்க...”

பேச்சு வருமான்னு நீங்களே சொல்லுங்கள். வீட்டுக்கு வந்தாள். பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்து சாணியைக் கொட்டி, தண்ணீர் விட்டுக் கலந்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மு, 

“அய்யே, ஆய் ஆய் “ என்று சொல்லிக் குதித்தது.

“அடியே... பேசாம இருக்கிறாயா இல்லையா? ” என்று சொல்லி ஒரு முறை முறைத்தாள் அம்முவை.

அம்மு என் முகத்தைப் பார்க்க, நான் வழக்கம் போல சிக்னெல் கொடுக்க, முகத்தினை அஷ்ட கோணலாக்கி அம்மு சிரித்துக் கொண்டிருந்தது.

”அப்பனும் மவளும் அங்கே என்னடி குசுகுசுன்னு பேசுறீங்க?” என்று ஒரு கத்து. கப்சிப் என்று ஆகி விட்டோம் இருவரும்.

பாக்கெட்டில் இருந்த பவுடரை கிழித்துக் கொட்டி கலக்கினாள். மக்கில் எடுத்து, விளக்குமாற்றால் தரையில் கொட்டி வழித்தாள். 

பசு மாட்டுச்சாணம் வாசம் வர, ஈரமாய் தரையில் பரவியது.

பொழுது விடிந்தது.

வழக்கம் போல, பேப்பர் எடுக்க கதவினைத் திறந்தேன். பச்சைப் பசேல் என்று வாசல் மின்னியது. ஆடி வெள்ளிக் கிழமையை எங்கள் வீடு வரவேற்றது.

மனதுக்குள் புன் சிரிப்பொன்று பூத்தது.



Thursday, July 21, 2011

தினம்தோறும் சுறுசுறுப்பாய் இருப்பது எப்படி?

களவாணி படம் பார்த்திருப்பீர்கள். படம் முடிந்து எழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் போது சரண்யா, இளவரசுவிடம் வெளி நாட்டில் வேலை செய்யும் மகனைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருப்பார்.

”தனியா வீடு கொடுத்திருக்காங்களாம், கார் கொடுத்திருக்காங்களாம், வெள்ளிக்கிழமையானா வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடுறாங்களாம்” என்று ஏகப்பட்ட ஆம்களைப் போட்டுக் கொண்டிருப்பார். தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணிப் பக்கமாய் இப்படித்தான் இழுவை போடுவார்கள்.

யாராவது ஒருவர் வெளி நாடு போய் சம்பாதித்து கொஞ்சம் சொத்து வாங்கினால் என்றால் போச்சு, சொல்லி வைத்த மாதிரி அனைவரும் வெளி நாடு போய் விடுவார்கள். என் ஃபிரண்டு ஒருத்தன் கூல் ட்ரிங்க்ஸ் கடை போட்டா ஓடுமாடான்னு கேட்டான், என்ன விஷயம் என்று விசாரித்தால், நண்பனின் எதிர்த்த வீட்டுக்காரன் கேரளாவில் கூல்டிரிங்க்ஸ் கடை போட்டு, வீடு கட்டிட்டானாம். இவனுக்கு ஆசை வந்து விட்டது. இதே மாதிரி எங்களூர் பக்கம் ஒருவர் கோன் ஃபாக்டரி போட்டு, சம்பாதித்து வீடு கட்டி விட்டார். உடனே ஊரில் பல பேர் சொத்து பத்துக்களை விற்று கோன் ஃபேக்டரியைப் போட்டு சம்பாதிக்கின்றார்கள். கோன் ஃபாக்டரி போட்டவரில் ஒருவர் பொட்டென்று போய் விட்டார். நானும் ஹோட்டல் நடத்துறேன்னு ஊரில சொல்லிக்கிட்டு திரிவார்கள். என்ன ஹோட்டல்னு போய் பார்த்தா காக்கா பிரியாணி ஹோட்டலா இருக்கும். மத்தவனுங்க கிட்ட லந்து விடுவதில் இருக்கிற அக்கரை உடல் நலத்தில் இருப்பதில்லை. 

எனது பள்ளிக்கூட நண்பனொருவன் போனில் பேசிய போது சொன்னான்.“ஐந்து வருடம் வெளி நாட்டில் இருந்து படாத பாடு பட்டு சம்பாதித்தேன் தங்கம், வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை, எப்போ போறீங்கன்னு மனைவி கேட்கிறாள்டா ” என்றான். ”சொந்த பந்தமெல்லாம் கேவலமா பேசுறானுங்கடா, இந்தப் பொழப்பு பொழக்கிறதுக்கு எதுக்குடா மனுசனா பொறந்தோம்னு இருக்குடா” என்றான். இவனை மாதிரி இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். 

இப்போதும் எங்களூர் பக்கம் ஃபேமஸ் வெளி நாட்டுக்குப் போவது. அங்கே என்ன வேலைன்னாலும் பார்க்கலாம். இங்கே கல்யாணப் பத்திரிக்கையில் பையன் பெயருக்குப் பின்னால் “கேம்ப் : மலேசியா” என்று போல்ட் லெட்டரில் போடுவார்கள்.இதுல ஒரு பெருமை. பையன் எங்கேன்னு கேட்டா, மலேசியாவில இருக்கான்னு சொல்லிக்கிட்டு திரிவார்கள்.

நேற்றைக்கு எனது சினிமா தயாரிப்பாளர் நண்பருக்கு கொரியர் ஒன்றினை அனுப்ப, கொரியர் ஆஃபீஸ் சென்றிருந்தேன். முன்பக்கம் கூல் டிரிங்க்ஸ் கடை ஒன்று இருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தேன். இந்தக் குளிரில் கூல்டிரிங்க்ஸ் குடிக்க வருவார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி பாக்கெட்டில் கலராக இருந்த தண்ணீர் போன்ற வஸ்துவை வாங்கினார். அதைப் பாக்கெட் போட்டது ஒரு குட்டிப் பையன். முகமெல்லாம் சிரிப்பு. ”எந்த ஊர்?” என்று கேட்டேன். ”பேராவூரணிப் பக்கம்” என்றான். ”என்ன சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டேன். ”அதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னா, அண்ணா பேசி விட்டாக” என்றான். படிக்கும் வயதில் எதிர்கால வாழ்க்கையை இழந்து கூல்டிரிங்க்ஸ் கடையில் உழைத்துக் கொண்டிருக்கின்றான் அந்தச் சிறுவன். அவனின் சுறுசுறுப்பான செயல்பாடுகளைப் பார்த்தேன். இந்தப் பதிவு எழுதிவிட்டேன். 

எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பது எப்படின்னு இப்போது பார்க்கலாம்.


 நன்றி : சுட்டி இதழ் மற்றும் சுட்டி பாரதி.

Wednesday, July 20, 2011

விதவிதமான சாப்பாட்டு மேஜைகள் வரிசை

அன்பு நண்பர்களே,

இதோ உங்களுக்காக விதவிதமான சாப்பாட்டு மேஜைகளின் அணி வரிசை. இப்படியெல்லாம் மேஜைகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றும் வரிசைகள் இவை. 
















Tuesday, July 19, 2011

வாழ்க வளமுடன் - பழனி

திருப்பத்தூரிலிருந்து கோவைக்கு வந்து, சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் திரு பழனி அவர்களுக்கு இன்று பிறந்த நாள். மிஸ்டர் பழனி கடுமையான உழைப்பாளி. சின்னஞ்சிறு வயதில், இளமைப் பருவத்தில் கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞன்.


புது உடை உடுத்தி, மகிழ்ச்சியுடன் சாக்லேட் கொண்டு வந்து கொடுத்து, “சார், இன்றைக்கு எனது பிறந்த நாள் சார் !” என்று சொன்னார். 

”அன்பு பழனி, நீங்கள் நல்ல நலமோடு, ஆரோக்கியத்தோடு, மகிழ்ச்சியாய் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் “


Monday, July 18, 2011

பிஎஸ்என்எல் எரிச்சலூட்டும் நிறுவனம்



பியெஸ்ஸென்னில் புது இண்டெர்னெட் கனெக்‌ஷன் எடுக்க பீளமேடு டெலிபோன் எக்சேஞ்சை அணுகினேன். யாரிடமோ ஒரு பெண்மணி பேசினார், முகவரி கேட்டார் சொன்னேன். அங்கே தற்போது கனெக்‌ஷன் கொடுக்க இயலாது என்றுச் சொல்லி, பேசாமல் டேட்டா கார்டுக்குப் போய் விடுங்கள் சார் என்றார். அதற்கு யாரைப் பார்க்கணும் என்றேன். சம்பந்தப்பட்டவர் வெளியில் சென்றிருக்கிறார், பிறிதொரு நாள் வாருங்களேன் என்றார்.

என்ன சொல்ல முடியும்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம். இதே ஏர்டெல், ரிலையன்ஸ், டாடாவாக இருந்தால் ஒரு போன் போட்டால் போதும், வீடு தேடி வந்து அப்ளிகேஷன்ஸ், கட்டணம் வசூலித்துச் செல்வார்கள். ஆனால் பியெஸ்சென்னில் மட்டும் ஏன் இந்தப் பிரச்சினை வருகிறது?

இணையத்தில் பதிவு செய்த உடன் ஒரு யெஸ்ஸெம்மெஸ் வந்தது. அதில் ஒருவரின் மொபைல் எண் கொடுத்து, அவர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்றார்கள். இதுவரையில் அவர் அழைக்கவே இல்லை. நானே முயன்று பார்த்தேன். யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்து, பள்ளம் தோண்ட வேண்டும் சார், காண்ட்ராக்டர் இல்லை என்றார். அவர் எப்போதுதான் வருவார் என்றேன். தெரியாது சார். ஆனால் விரைவில் சொல்கிறேன் சார் என்றார். தொடர்ந்து நானே பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்யட்டுமா என்றேன். அதெல்லாம் முடியாது சார். காண்ட்ராக்டர்தான் பள்ளம் தோண்டி, வயர் போட வேண்டுமென்றுச் சொல்லி விட்டு போயே போய் விட்டார். வேறு வழி இன்றி தனியாரிடம் இணைய இணைப்புப் பெற வேண்டியதாகி விட்டது. இதே போன்று ஒவ்வொரு கஸ்டமரும் தனியாரிடம் சென்று கொண்டிருந்தால், பின் ஏன் பியெஸ்ஸென்னல் இருக்க வேண்டும்? தேவையற்ற செலவுகள் ஏன்? தொலைத்தொடர்புத் துறையை தனியாரிடம் ஒப்படைத்து விடலாமே?

எனது வீட்டின் பக்கத்து வீட்டில் பியெஸ்ஸென்னல் டெலிபோன் இருக்கிறது. ஆனால் என் வீட்டிற்கு கொடுக்க பள்ளம் தோண்ட வேண்டுமென்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எத்தனை நாள் ஆகும் போன்ற விபரங்களைக் கூட சொல்ல மறுக்கின்றார்கள்.

தனியார் நிறுவனங்கள் லாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பியெஸ்ஸென்னலோ நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றுச் சொல்கின்றார்கள்.

தனியாரிடம் ஒரு போன் அழைப்பில் புது கனெக்‌ஷன் கிடைக்கிறது என்கிறபோது, அரசாங்க நிறுவனத்தில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை? என்ன காரணம்?  எங்குப் பிரச்சினை இருக்கிறது? என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப சில முடிவுகளை எடுக்கவில்லை என்றால் பியெஸ்ஸென்னல் விரைவில் முழுகிப் போய்விடும் ஆபத்து நிகழத்தான் போகிறது.

மாண்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு கபில்சிபல், இது போன்ற மக்களுக்கு எரிச்சல் தரும் சேவைப் பிரச்சினைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பதிவு இமெயில் செய்யப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பதிவு மூலம் தெரிவிக்கிறேன்.


Sunday, July 17, 2011

செம்பருத்தியும் சில நினைவுகளும்


மக்களை ஏமாற்றும் டீலர்கள் பற்றிய பதிவிற்கு பல நண்பர்கள் யார் அந்த டீலர்கள் என்றுச் சொன்னால் பரவாயில்லை என்று கேட்டிருக்கின்றார்கள். சில பல பிரச்சினைகளால் பப்ளிக்காக பெயர்களை வெளியிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏமாறக்கூடாது என்பதற்காகவும், இது போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை அதே பதிவில் எழுதி இருப்பதை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, அதன்படி செயல்பட்டாலே தப்பித்துக் கொள்ளலாம்.

கம்பெனி தரும் கமிஷனை விட பல மடங்கு அதிகம் லாபம் வைத்து விற்பவர்களைத்தான் நான் எழுதி இருந்தேன் என்பதையும் இவ்விடத்தில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தி.ஜானகி ராமனின் “செம்பருத்தி” நாவலைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மூன்று நாட்கள் விடாமல் படித்து முடித்தேன். நாவலின் வெற்றி என்பது நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பாதிப்பை படிப்பவரின் மனதுக்குள் உருவாக்கி விடுவதுதான். சமீபகால எழுத்தாளர்கள் பலரின் நாவல்களை நான் படித்திருக்கிறேன். இது போன்ற பாதிப்பை அந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தவில்லை. தி.ஜானகி ராமன் அவர்கள் எனக்குள் உருவாக்கிய ”கேரக்டர் பாதிப்பினை” இந்தக் கால எழுத்தாளர்களின் படைப்புகள் இதுகாறும் உருவாக்கிடவில்லை.

செம்பருத்தியில் வரும் சட்ட நாதனும், அவனின் மனைவியான புவனாவும் ஜானகி ராமனின் சொற்கள் வழியே மனதுக்குள் உருவமாய் உருவானார்கள். அவர்களின் எண்ண ஓட்டமும், கதை நகரும் தொனியும், என் புற உலகினை முற்றிலுமாய் மறக்கச் செய்து கதையுடனே என்னை இழுத்துக் கொண்டு சென்றது. வாசகனை நாவலுக்குள் இழுத்து, அவனுடனான புற உலக நினைவுகளை மறக்கச் செய்து, நாவலுக்குள் மூழ்க வைத்து விடும் கலை திரு ஜானகி ராமனின் எழுத்துக்கு இருக்கிறது. இவரைப் போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளை இதுகாறும் நான் படிக்கவில்லை. (பாஸ்கி ! உங்களுக்கு அப்படியான நாவலாசிரியர்கள் ஏதேனும் தெரிந்தால் தெரிவியுங்களேன் )

எனது இளம் பிராய காலத்தில், கல்லூரி நாட்களில் ”செம்பருத்தி” நாவலை  படித்த நினைவுகள் எழும்பின. அப்போது ”காதலித்த பெண் அண்ணனை திருமணம் செய்ததும், அண்ணன் இறந்ததும் காதலனைக் கட்டிப் பிடித்ததுமான” பாலியல் சம்பவங்களே எனக்குள் பதிந்திருந்தன. வயதுக் கோளாறு அல்லவா? அதையெல்லாம் இன்றைக்கு நினைத்த போது புன் சிரிப்பொன்றே பதிலாய் எனக்குள் பூத்தது.

”செம்பருத்தியில்” நுண்ணிய ஒரு பிரச்சினையை ஜானகி ராமன் எழுப்பி இருப்பார். அதைப் பற்றிப் பேசும் முன்பு கதையின் கரு என்னவென்று பார்க்கலாம். சட்ட நாதனுக்கு அண்ணன் இருவர். மூத்தவர் திருமணமானதும் வெளியூரில் செட்டிலாகி விடுவார். இளையவர் உறவுகள், குடும்பம் என்று வாழ்பவர். இளைய அண்ணனின் சம்பாத்தியத்தில் சட்ட நாதன் கல்வி பயின்று வரும் கால கட்டத்தில், ஆசிரியராய் இருந்தவரின் மகளின் மீது காதலை வளர்த்துக் கொள்வான்.ஆனால் அக்காதல் நிறைவேறாது. இளைய அண்ணனுக்கு மணம் பேசி முடித்து விடுவர். தான் காதலித்த பெண், அண்ணனின் மனைவியாகி விடுவதை மனதுக்குள் வைத்து மருகுவான் சட்ட நாதன். இளைய அண்ணன் திடீரென்று காலராவால் காலமாகி விட அண்ணி விதவையாவார். ஆனால் இளைய அண்ணனின் விருப்பப்படி புவனாவைத் திருமணம் செய்து கொள்வார் சட்ட நாதன். புவனாவிடம் தன் காதல் அனுபவத்தைச் சொல்லி தன்னை நியாயவான் என்று நிரூபிப்பார்.தன் மனைவியிடம் ஆண்கள் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பது தவறானதோ என்று சட்ட நாதன் பிற்காலத்தில் நினைக்கும் படி ஆகி விடும்.  கதை இத்தோடு முடியவில்லை. படு ரகளையான பல முடிச்சுகள், தத்துவ விசாரணைகள் இருக்கின்றன.  நுண்ணிய பிரச்சினை என்றுச் சொன்னேன் அல்லவா அது என்னவென்றால் மனத்தின் புரிதல்கள் காரணத்தை முன்னிட்டு வருவதில்லை என்பதும், அது சுற்று சூழல்களாலும் வரக்கூடியது என்பதும்தான்.

வாழ்க்கையின் சில புரிபடாத சூட்சுமங்களில் இவ்வகையான குடும்பத்தினரின் மனபுரிதல்கள் சில நேரங்களில் மட்டுமே இன்பத்தை வழங்கும். பெரும்பான்மையான சமயங்களில் பெரும் மனத்துன்பத்தை தந்து விடும். இதை உணர்ந்து, தனக்குள்ளான விசாரணை செய்து உணரும் பக்குவத்தினை ஆண்களும், பெண்களும் பெற வேண்டும். அவ்வகையான புரிதல்கள் இந்த நாவல் வாசிக்கும் போது எனக்குக் கிடைத்தன. நண்பர்களுக்கும் அவ்வகையினான புரிதல்கள் கிடைக்க வேண்டுமென்பதற்குத்தான் இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

சில பேரின் வாழ்க்கை அவர்களின் கடைசிக் காலம் வரை துன்பமாகவே கழிந்து போய் விடும். அதையே அவர்கள் தங்களுக்கான இன்பமாய் கருதி விடும் இயல்பும் நாளடைவில் உண்டாகி விடும். இந்த நாவலில் குஞ்சம்மாளை ஜானகிராமன் அவ்வாறே உருவாக்கி விட்டார். ஏன் இந்தக் கதாபாத்திரம் துன்பத்தினை மட்டுமே ஏற்று வாழ்ந்தது என்பதை, நம் வாழ்க்கையோடு சேர்த்துப் பார்க்கும் போது, கடவுளின் மீதான நம்பிக்கை கூடுகிறது.

படைப்பாளிகள் என்போருக்கு கடின மனது இருக்குமோ என்பதை ஜானகி ராமனும் தன் எழுத்தின் வழியே சொல்கிறார் போலும். பிரம்மனின் படைப்பிலும் ஜானகி ராமனின் கதாபாத்திரங்களைப் போன்றோரை நாம் பார்த்து வருகிறோம் அல்லவா?

உங்களுக்கு நேரமிருந்தால் ”தி.ஜானகி ராமனின் செம்பருத்தியை” வாசித்துப் பாருங்கள். ஏதேனும் உங்களுக்குப் புரிய வரலாம். 

அன்பும் நட்பும் உங்களிடம் என்றைக்குமே நிரந்தர வாசமாகட்டும்.

-பிரியமுடன் 
கோவை எம் தங்கவேல்


Saturday, July 16, 2011

உதவி கோரிய கடித்ததை முன்வைத்து

நேற்று காலையில் மெயில்களைப் படித்து வருகையில் யாரோ ஒரு பெண் தன் குடும்பப் பிரச்சினை பற்றி எழுதி எனக்கு அப்பிரச்சினையில் இருந்து தீர்வு சொல்லுங்கள் என்று மொபைல் எண்ணையும் கொடுத்திருந்தார். ஏதோ பத்திரிக்கைக்குச் அனுப்ப வேண்டிய மெயிலை எனக்கு அனுப்பி விட்டாரே என்று நினைத்தேன்.

தனி மனித வாழ்வில் உறவுகளுக்கிடையான பிரச்சினை என்பது மிகவும் சென்சிடிவானது. அதில் பிறர் தலையிடுவது என்பது வேறுபல பிரச்சினைகளை தலையிடுபவருக்கு உருவாக்கி விடும் என்பது நான் பல அனுபவங்களின் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். இப்படித்தான் ஒரு முறை எனது நெருங்கிய தோழி ஒருவருக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தேன். தோழி தன் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். தன் சம்பளத்தில் பெரும்பான்மையானதை தன் உறவினருக்குச் செலவு செய்து வந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. இப்படியான நிலையில் என் மூலம் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். பெண் பார்க்கும் படலம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி வைத்து விட்டு, தோழியின் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த போது, அந்த உறவினர் ” நீங்கள் அவளை வைத்திருக்கின்றீர்கள்” என்று பட்டென்றுச் சொன்னார். என்னுடன் வந்த என் மனைவிக்கும், எனக்கு திகீர் என்றது.

அவர்களுடன் என்ன பேச முடியும் என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். என் தோழியின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏதும் பேசாமல் திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு தன் தோழியின் சம்பளப் பணம் கிடைக்காமல் போய் விடும் என்பதாலும், தோழிக்குப் பெரிய இடத்தில் திருமணமாகி விடுமே என்ற பொறாமையினாலும் அந்த உறவினர் அப்படி நடந்து கொண்டார் என்று கேள்விப்பட்டேன். தோழி தனியாய் வந்து, தற்போது திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார். சில நுண்ணிய பிரச்சினைகள் உறவுகளில் இருக்கும். ஆகவே வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்தச் சம்பவத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.

கணவன் மனைவி உறவானது பல்வேறு அகமுடிச்சுகளைக் கொண்டது. அம்முடிச்சுகளை போடுவது இருவர் தான், அவிழ்ப்பதும் இருவர் தான். இதில் பிறருக்கு என்ன வேலை இருக்கிறது? ஆகவே அந்தப் பெண் நிதானமாய் யோசித்து, தன் கணவன் எதனால் பிற பெண்ணை நோக்குகிறான் என்பதை ஆராய்ந்து, உணர்ந்து அதைச் சீர்படுத்த முயல வேண்டும். 

பொறுமையும், நிதானமும், ஆராய்ந்து தெளியும் பக்குவமும் இருந்தால் தான், இது போன்ற பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம். அந்தப் பெண்ணுக்கு கடவுள் மேற்படி சக்திகளை வழங்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நாளை “ செம்பருத்தி” வாழ்வியல் சூட்சுமத்தின் ஒரு ரகசியத்தைப் பற்றிப் பார்க்கலாம்.


Sunday, July 3, 2011

மக்களை ஏமாற்றும் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பாக வாங்கிய வீடியோகான் ஃப்ரிட்ஜ் தன் ஆயுளை முடித்துக் கொண்டது. கம்ப்ரஷர் மாற்றலாமா என்ற யோசனையை நிராகரித்து, புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தேன்.பத்து நாட்களுக்கும் மேலாய் இணையங்களை அலசி ஆராய்ந்து, ஏகப்பட்ட விசாரணைகள் செய்து ஒரு வழியாய் ஒரு கம்பெனியின் ஃப்ரிட்ஜை வாங்கலாம் என்று முடிவெடுத்து, கடைகளில் விசாரணைப் படலத்தை ஆரம்பித்தோம்.

கோவையில் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஒவ்வொன்றிலும் விசாரணையை ஆரம்பித்தவுடன் மிகப் பெரும் அதிர்ச்சியை சந்தித்தேன். இணைய தளங்களில் ஒரு விலை, ஷோரூம்களில் ஒரு விலை என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் வித்தியாசம் இருந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர்கள் 30 பர்சண்டேஜ் கமிஷன் வழங்குகிறார்கள். அதற்கு மேலும் நான்காயிரம், ஐந்தாயிரம் என்றால் வரக்கூடிய லாபம் தயாரிப்பாளர்களை விட, விற்பனையாளருக்கு கிடைக்கிறது என்பது தான் என் அனுபவத்தில் கண்ட ஸ்பெஷல் செய்தி.

அதுமட்டுமா, ஆளைப் பார்த்து பொருளுக்கு விலை சொல்லும் கலாச்சாரத்தை ஒவ்வொரு கடையிலும் கண்டேன்.அசந்து போய் விட்டேன். கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல், பகல் கொள்ளையை விட மோசமானதாய் மேற்படி கோயமுத்தூர் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சிலர் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். மக்களின் உழைப்பை உறிஞ்சும் இவ்வகை டீலர்களுக்கிடையில் ஏதோ சில பேராவது நாணயத்தோடு தொழில் செய்பவர்கள் இருப்பார்களே அவர்களைத் தேடலாம் என்று ஒரு நாள் மாலையில் கண்டு பிடித்தேன்.

கிட்டத்தட்ட நான் விசாரித்த ஃப்ரிட்ஜை பிரபல எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சொன்ன விலையிலிருந்து 5000 ரூபாய் குறைவாக, புத்தம் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கினேன் வெகு நேர்மையாக தொழில் செய்யும் அந்த டீலரிடமிருந்து. கடந்த பத்து வருடத்திற்கு முன்னால் அவரிடம் தான் ஃப்ரிட்ஜை வாங்கி இருந்தேன். அந்த ஃப்ரிட்ஜ் கடந்த பத்து வருடங்களாய் எந்த வித பிரச்சினையும் தராமல் வேலை செய்தது. டீலரிடம் மேற்படி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு, அவர் கம்பெனி கொடுத்த ரிசீப்டைக் காட்டிய போது மகிழ்ச்சியா மேலும் தள்ளுபடி கொடுத்தார்.

ஒரு ஃப்ரிட்ஜ்க்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வைத்து விற்பனை செய்கிறார்கள் என்றால், ஒரு நாளைக்கு கோவையில் எத்தனை ஃப்ரிட்ஜுகள் விற்கின்றார்கள் என்பதையும், எவ்வளவு பணத்தை மக்களிடமிருந்து திருடுகிறார்கள் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கோவையிலே இவ்வளவு திருட்டு என்றால் பிற ஊர்களில் எல்லாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தலையே சுற்றும்.

இந்த வகைத் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி என்று நினைப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பொருள் வாங்கும் போது விலை குறைவான பொருட்களை வாங்க முயலுங்கள். நேற்றைக்கு எல்சிடி பிரபலமாய் பேசப்பட்டது. இன்றைக்கு எல்யிடி, த்ரீடி என்றுச் சொல்கிறார்கள். 60,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி டிவியை மாற்ற வேண்டுமென்று நண்பரின் வீட்டில் பிரச்சினையாகி விட்டது. எந்தப் பொருள் என்ன பயன் என்று முடிவு செய்தவுடன், வெப்சைட்டுகளில் தேடிப்பார்த்து அதன் விலையினை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு டீலரிடம் செல்லுங்கள். சில ஆயிரமாவது மிச்சமாகும்.