குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 10, 2008

கந்தசாமியுடன்(10.10.2008)

கந்தசாமி என்ற எனது நண்பர். அடிக்கடி விதண்டாவாதமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சினைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும்.

ஆனால் நான் அப்படி இல்லை. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்கு என்று இருக்க வேண்டுமென அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். என்ன அர்த்தமென்றால், சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்குமாம். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமாம். நடுத்துண்டில் விஷம் ஏதும் இருக்காதாம். அதைச் சாப்பிட்டால் பிரச்சினை இருக்காது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் இருக்குமிடத்திற்கு தகுந்த வாறு மாறிக்கொள்ள வேண்டுமென்பது தான். அய்யா அப்படித்தான். ஆனால் கந்தசாமி இருக்காரே அவர் ஒரு விதமான கேரக்டர். வேலை பார்ப்பது ஒரு மில்லில். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். பேச ஆரம்பித்தாப் எப்போதும் மற்றவர்களை குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். விதண்டாவாதமாக ஏதாவது சொல்லி வைப்பார். வேறு வழி. எனக்கு எழுத வராது என்பதால் அவர் சொன்ன சில விதண்டாவாதங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதி வைக்கிறேன். பிடித்திருந்தால் படித்து வைக்கவும்.

கந்தசாமியிடம் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வளவும் அத்துப்படி. விஷய ஞானமுள்ளவர். அவருக்கு இப்போதைய தலையாய பிரச்சினை மின்சார வெட்டு. என்னைப் பார்க்கும்போதெல்லாம் கொந்தளிப்பார்.

” என்னப்பா இது. இப்படியெல்லாம் பேசுகிறாய் “ என்றால் போதும் தொலைந்தேன். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்த்து ஏதாவது சொல்லபோனால் கொலை வெறியுடன் கருத்துக்கள் அம்புகளாய் சீறும். இப்படிப்பட்ட ஆளிடம் நட்புத் தேவையா என்றால் எனக்குத் சொல்லத் தெரியவில்லை. மனிதர் ரொம்ப நல்லவர். பேச்சுதான் ஒரு மாதிரியாய் இருக்கும்.

அப்படித்தான் நேற்று அவரைச் சந்தித்த நேரத்தில், ஒரு விஷயம் சொன்னார். ”தமிழ் சமூகத்திற்கு சுரனையே இல்லை”.

”என்னப்பா திடீரென்று இப்படி பாய்கிறாய் ? “

“ஆமாம் தங்கம். தமிழகம் என்றால் சினிமா. சினிமா என்றால் தமிழகம். சரிதானே ?”

ஏதோ வில்லங்கமாக வரப்போகிறது என்ற யோசனையுடன் ஆமோதித்து வைத்தேன்.

“பின்னே என்னப்பா, கிழவர்கள் காதலையெல்லாம் ரசிக்கிறார்கள் தமிழர்கள். அதுவும் பொருந்தாக் காதல். கிழவனும் குமரியும் “ என்றார்.

“ ஏய்... நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது. இப்படியெல்லாம் சத்தமா பேசி வைக்காதே.. பின்னி பெடலெடுத்து விடுவார்கள்”

சிரி சிரியென்று சிரித்தார். மனதுக்குள் என்னனென்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் மெதுவாக அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்

Wednesday, October 8, 2008

உயிர்கள் படும் வேதனை

எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சொன்ன சில விஷயங்கள் என் மனதை அம்பு போல் துளைத்து விட்டது. விஷயம் இதுதான். மாட்டுச் சந்தைகளில் மாடுகள் ஏலம் போடுவது பெரிய திருவிழா மாதிரி நடக்கும். மீடியாக்களில் செய்திகள் வெளியிடுவார்கள். அந்த மாட்டுச்சந்தைகளில் மாடுகளை மனிதர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதை வார்த்தைகளில் சொல்வது எளிதல்ல. சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.

1. பல் போன மாடுகளுக்கு, இறந்த மாட்டின் பற்களை எடுத்து வந்து, கோணி ஊசியால் துளை போட்டு அந்த பற்களை பதிப்பார்களாம். மாட்டின் விலை பற்களை வைத்துக் கணக்கிடுவார்கள்.

2. மாட்டின் கால்களை கட்டி போட்டு விட்டு அதன் வாலை பிடித்து கடித்து வைப்பார்கள் முழுவதும். மாட்டை தொட்டவுடன் துள்ளுவதற்காக. ஏனென்றால் மாடு இளமையாக இருப்பதாக காட்டி அதிக விலை விற்க வேண்டுமென்பதற்காக.

3. முட்டும் மாட்டின் கொம்புகளில் விடாமல் அடித்துக்கொண்டே இருப்பார்கள். வலி தாங்காமல் அந்த மாடு முட்டாது.

4. மாட்டின் வயிறு புடைத்தது போல் இருக்க, மோட்டார் மூலம் தண்ணீரை வலுக்கட்டாயமாக செலுத்துவார்கள். புடைத்த வயிறுடன் காட்ட வேண்டுமென்பதற்காக.

5. மாடு வாங்கும் போது சுழி முதன்மையாக இருக்கும். வேண்டாத சுழி இருக்கும் மாட்டை, கட்டி போட்டு நெருப்பை பத்த வைத்து கோதுமை மாவின் உதவியால் சுழி இல்லாதவாறு செய்து விடுவார்கள்.

மாடாய் பிறந்து வளர்ந்து மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்து, அவன் செய்யும் கொடுமைகளை எல்லாம் தாங்கி அதன் பின்னர் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அவன் வயிற்றுக்குள்ளே பிரியாணியாக செல்லும் மாடுகளை நினைத்தால் ...

இதை விடவா மனிதன் துன்பப்படுகிறான்... சொல்லுங்கள்...

இலவச புத்தகங்களின் தொகுப்பு

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, எப்போது வருமென்று காத்திருந்து புத்தகங்கள் படித்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. உலக மொழிகளில் வெளிவந்த சில புத்தகங்களை இந்தத் தளத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றனர். ஆங்கிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபத்திரண்டாயிரம் புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ் மொழியில் ஒன்றும் இல்லை. படிக்க விரும்பும் நண்பர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் டவுன்லோடு செய்து பின்னர் படித்து வையுங்கள்.

http://www.gutenberg.org

Monday, October 6, 2008

உங்களில் யார் பிரபுதேவா ?

ஸ்ரீதர் - டான்ஸ் மாஸ்டரின் மேற்பார்வையில் உங்களில் யார் பிரபுதேவா நடனப் போட்டிக்குத் தேர்வானவர்களுக்கு நடனப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு துரதிர்ஷடமான நேரத்தில் விஜய் டிவியைப் பார்க்க நேர்ந்தபோது கண்களில் பட்டது இந்தக் காட்சி.

சல்சா என்பது ஒரு வகை நடனமாம். மேல் பகுதி உடம்பு ஆடாமல் இடுப்பு மட்டும் அசைய வேண்டுமாம். மைக்கில் இன்ஸ்டரக்‌ஷன் கொடுத்தவாறு ஆடிக்காட்டினார் ஒருவர். கிட்டத்தட்ட நூறு ஆண்களும் பெண்களும் இருக்கும். தனித்தனியாக ஆடினர். ஸ்ரீதர் மைக்கில் அடுத்து யாருக்கு யாரெல்லாம் பிடிக்குமோ அவரவர்கள் ஜோடியாய் நின்று ஆட வேண்டும் என்றார்கள். ஹி..ஹி... அவனவன் கிடைத்தது சான்ஸ் என்று இடுப்பில் ஒரு கை. தோளில் ஒரு கை என்று அணைத்துப் பிடித்தவாறு ஆட ஆரம்பித்தார்கள். பின்புறங்கள் அழகாக ஆடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு சிறுவன் வேறு மாட்டிக் கொண்டான். வெட்கத்தில் அவனுக்கும் ஒரு ஜோடி கிடைக்க இடுப்பை ஆட்டினான்(டான்ஸ்ப்பா!).

விடிகாலையில் எழுந்து குளிரில் குளித்து மட மடவென மடிப்புக் கலையாத சட்டைப் போட்டு சைக்கிளில் அரக்கப் பரக்க மிதித்து அவள் வருவதற்கு முன்பே சென்று காத்திருந்து அவள் வரும் வரை அவளுக்காக உருகி உருகி வந்தவுடன் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கிறாளா என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்தும் பார்க்காதவாறு அவளையேக் கவனித்து காதல் செய்து, கட்டிலில் கண்ணாமூச்சி விளையாடிய காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு.

சின்னத்திரை மீடியாக்கள் இன்று ஜோடிகளை சேர்த்துச் சேர்த்து ஆட விட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு எழுத்தாளர் சொன்ன கருத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

அந்த எழுத்தாளர் பெயர் : ஜேம்ஸ் ஜாய்ஸ்
நாவலின் பெயர் : A PAINFULL CASE
கருத்து : ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்து வெறும் சிநேகிதம் மட்டும் சாத்தியமில்லை.
உதவி : திரு ஆர்பி.ராஜநாயஹம்

உடனே அம்மா, அக்கா, தங்கை என்று ஆரம்பிக்க கூடாது. மனசுக்கு பட்டுச்சு எழுதிவிட்டேன். குறிப்பு : எனக்குள் இருக்கும் கலாச்சாரக்காவலனின் ஆசை இது. வேறு வழியின்று எழுதி தொலைக்க வேண்டிய கட்டாயம். எழுதிவிட்டேன்.

அன்பு மகனுக்கு கடிதம் (7) தேதி : 5.10.2008

ரித்திக், நீ முதன் முதலாய் எங்களை விட்டு விட்டு உனது மாஸ்டருடன் கராத்தே காம்படீஷனில் கலந்து கொள்ள செல்கிறாய். வாழ்த்துக்கள். அந்தக் குழுவிலேயே நீதான் சிறுவன். உன்னை பனிரெண்டு வயதுக்குள்ளே இருப்போருடன் போட்டியிட வைப்பார்கள். வெற்றி என்பது உலகில் வேறு வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். நீ கராத்தே பழக வேண்டுமென்று நினைத்தற்குக் காரணம் உனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டுமென்பதற்காகத்தான். தற்காப்புக் கலையில் நீ சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காகத்தான்.




ஆறு வயதில் உனக்கு பல அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதன் முதலாய் உன்னை மாஸ்டருடன் அனுப்பி வைத்தேன். உன்னை எல்லோரும் பாராட்டினார்கள். மெத்த மகிழ்ச்சி.

சமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். உன்னால் இவ்வுலகம் பயன்பெற வேண்டும். பெற்றால் இப்படிப் பட்ட பிள்ளையைப் பெற வேண்டுமென்று உலகே சொல்ல வேண்டும். அப்போது தான் நானும், உன் அம்மாவும் பட்ட துன்பங்கள் தீரும்.

வாழ்த்துக்கள் ரித்தி...

அன்பு அப்பா

Wednesday, September 24, 2008

இந்தியாவில் நடந்த பார்ட்டி ஒன்றின் சில புகைப்படங்கள்

யூ டியூப்பில் பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது, பெங்களூரில் மிகப் பெரிய கம்பெனி ஒன்றினால் நடத்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்று கிடைத்தது.

சும்மா பார்த்து வையுங்க...

ஆத்துக்குள்ளே...

பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள். நானும் என் சின்னம்மாவின் பையனும் மாலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம்.
அன்று பார்த்து, ஆற்றில் தண்ணீரை நிறுத்தி விட்டிருந்தார்கள்.

சரின்னு குளத்தில குளிக்கலாம்டான்னு சொல்லிகிட்டு ஆற்றின் படியில் உட்கார்ந்தேன். ஆற்றில் அங்கங்கே தண்ணீர் குளம்போல கிடந்தது. தண்ணிக்குள் எதுவோ கிடப்பதுபோல தோன்ற டேய் அங்கே பாருடா தண்ணிக்குள்ளே என்னமோ கிடக்குன்னு தம்பிக்கிட்டே சொல்ல,
அண்ணே பாம்பா இருக்கப்போவுதுன்னு சொன்னான். பாம்பு தண்ணிக்குள்ளே என்னடா பன்னும். வேற என்னமோடான்னு சொல்ல, இருவரும் ஆற்றுக்குள் இறங்கினோம்.

சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டு உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருக்கும்போது மீனு ஒன்னு துள்ளி விழுந்துச்சு. பாலு(தம்பி பெயர்) என்னன்னு பாத்துடனும்டான்னு சொல்லிக்கிட்டே யோசிச்சோம். மெதுவாக அந்தப் பள்ளத்துக்குப் பக்கத்துல இன்னுமொரு பள்ளத்தைத் தோண்டி வாய்க்கால கையால வெட்டி தண்ணிய வடிய விட்டா அங்கே ஒரு மீன் புதையலே இருந்தது.

அள்ளுடா அள்ளுடான்னு குளிச்சிட்டு துவட்ட வச்சிருந்த துண்டில மீனை அள்ளிக் கட்டினோம். இரண்டு துண்டுகளும் நிறைஞ்சிடுச்சி. குளிக்கிறதாவது ஒன்னாவது. நேரா சைக்கிளை விட்டோம் வீட்டுக்கும்.

அம்மாட்டே கொடுத்தோம். எங்கேடா புடிச்சிட்டு வந்தீங்கன்னு அம்மா கேக்க விபரத்தை சொல்லிட்டு மீண்டும் ஆத்துக்குப் பக்கத்தில இருந்த குளத்தில குளிக்க வந்தோம். பார்த்தா ஆத்துக்குள்ளே ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க.

குளத்தில கண்ணு செவக்க செவக்க ஆட்டம் போட்டு விட்டு வீட்டுக்கு வந்தால் சுடுசோறு, மீன் குளம்பும் தயரா இருந்துச்சு.

குடத்தடியில இருந்த மாமரத்து மாங்காயும், மாங்காய் கொட்டையும் குளம்புக்குல மிதக்க, காரமும், புளிப்புமாய் இரண்டு தட்டு சோத்தை வயித்துக்குள்ளே தள்ளினோம்.

அன்று சாப்பிட்ட மீன் குழம்பை நெனச்சு நெனச்சு நெஞ்சு கனக்கிறது.

Thursday, September 18, 2008

செத்துப்போன மனசு !

நானும் என் நண்பனும் மாதம் பத்து தடவை தண்ணி அடிக்க கிளம்பி விடுவோம். ரமனா வோட்காவில் ( அல்சர் பிராப்ளத்துக்கு இப்படி குடித்தால் பிரச்சினை வராது என்று காலையில் இருந்து மாலை வரை தண்ணியில் மிதக்கும் குடிகார பெருமகன் சொன்ன தகவல். ஆனால் அதன் பின்னர் தான் அல்சர் அதிகமானது என்பது தனிக் கதை) லெமன் சேர்த்து குடிப்போம். சைடிஸ்ஸாக முட்டையுடன் பிரானைச் சேர்த்து அதனுடன் மிளகு பொடியும், மிளகாயும் எண்ணெயில் வதக்கி நன்றாக வறுத்து காரில் கொண்டு வந்து தருவார் சர்வர். அடுத்து வஞ்சிரம் மீனுடன் காரம் சேர்த்து நெய்யை அதன் மீது விட்டு தோசைக்கல்லில் தங்கக் கலரில் வறுத்து ஒரு சிப் சிக்னேச்சர் ஒரு வாய் மீன்.. காரில் உட்கார்ந்தபடியே சிக்னேச்சரோ அல்லது ரமனா வோட்காவையோ சிப் சிப்பாக உறிஞ்சினால் தொண்டையில் நெருப்பு எரியும். சிறிது நேரத்தில் நரம்புகள் தளர நினைவில் ஒரு மந்த நிலை வந்து தொக்கி நிற்கும். அந்த நிலையில் பார்க்கும் எந்தப் பெண்ணும் அழகாக தெரிவாள். சுவையில்லாத உணவும் சுவைக்கும். மதுவை ருசித்தால் மனசு மந்தமாகி விடும். அது தான் போதை... போதை... போதை... தண்ணி போதை... இன்னும் என்னென்னவோ போதைகள் இருக்கின்றன. அதெல்லாம் வரும் நாட்களில் எழுதுகிறேன்.

அப்படி ஒரு நாள் வரும்போது (நிதானத்துடன் தான்) கார் விறுக்கென இடதுபுறமும் வலது புறமும் சென்று பின்னர் நிலை பெற்றது. என் கண் முன்னே எமராஜாவும் சித்திரகுப்தனும் வந்து சென்றார்கள். ஆனால் பாருங்கள் அதில் ஒரு நிம்மதி இருந்தது. கார் வெட்டி வெட்டி இழுக்க இடதும் வலதுமாய் சரக் சரக்கென சென்று வர சீட்டில் அமைதியாய் உட்கார்ந்து இருந்தேன். என் மனதில் ஒரு நினைவும் இல்லை. மனம் செத்துப் போய் இருந்தது. கார் ஒரு நிலைக்கு வர, பட படவென வியர்த்துக் கொட்டியது. ஏசியிலும் வியர்வையில் குளித்தேன். மனசுக்குள் நடுக்கம் வர மயக்கம் வரும்போல இருந்தது.

சாவு நெருங்கிய போது எனக்குள் உணரப்பட்ட மனசு செத்துப்போன அதிசயம் மரணத்தின் மீது அபரிமிதமான காதலை உருவாக்கி விட்டது. ரமணாவும் தேவையில்லை. சிக்னேட்சரும் தேவையில்லை. ப்ளூ லேபிலும் தேவையில்லை என்ற நினைப்பு எனக்குள் அழுத்தமாக விழுந்து விட்டது.

மரணம் எப்படி இருக்கும்? அது எப்படி மனிதனை தழுவுகிறது. அழகான ஆழமான கடல் போல இருக்குமா? அந்த நிலையில் மனிதனின் மனசு என்ன நினைக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் எனக்குள் புயலடிக்கின்றன.

விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ மனிதனைத் தழுவுவது மரணம். அதைக் காதலிப்பதில் தவறேதும் இல்லை அல்லவா ?

Tuesday, September 16, 2008

மனதை மயக்கும் பாடலில் இதுவுமொன்று

இளையராஜாவின் குரலிலும் இசையிலும் இந்தப் பாடல் ஜொலிப்பதை கேளுங்கள். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இந்தப் பாட்டை மிஞ்ச எவர் இருக்கிறார் இசையுலகில்.

சற்று நேரம் .. சற்று நேரம்.. மனதை இலேசாக்குங்கள். கால்களையும் கைகளையும் படர விடுங்கள். மூச்சினை மெதுவாக விடுங்கள். மனது லேசா லேசா இருப்பது போல உணருங்கள். இப்போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். மனம் மிதக்கும்.... கண்கள் சொக்கும்... குரலில் தேன் சொட்டும். அது உம்மை நனைக்கும்... நீங்கள் நனைவீர்கள்.. நிச்சயம் நனைவீர்கள் இசை மழையில்.... மனம் சட்டென்று ஒருமைப்படும்....

கேட்கும்போதே கிளுகிளுப்பைத் தரும் பாடல்

என் சிறு வயதில் வேலைக்காரர் ஜெயராஜ் என்னை மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து கொண்டிருந்த கீழே இறங்காமல் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அன்று கடைசி நாள். சுற்றி வரக் கயிறு கட்டி இருந்தனர். ஜெயராஜ் துண்டை விரித்து அமரச் சொன்னார்.

ஒரு பெண்ணும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவரும் இந்தப் பாட்டை ஒலிபெருக்கியில் போட்டு விட்டு ஆடினர். ஆட்டம் பட்டையக் கிளப்பியது. அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பார்க்கவும் படு ஜோராக இருந்தது. பாம்புபோல நெளிந்து வளைந்து ஆடி பார்ப்போரின் மனதினை சிதற வைத்த ஆட்டம் அது. அந்த வயதிலேயே பார்க்கும் போது கிளுகிளுப்பாய் இருந்ததன் விளைவு இதோ இன்று... கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டு எழுதுகிறேன்.

இந்தப் பதிவை எழுதும் போது மணி 10.56 இரவு நேரம். அருகில் உள்ள வீட்டார்கள் அனைவரும் உறங்கி இருப்பார்கள். தப்பித் தவறி யாராவது இந்தப் பாட்டைக் கேட்டால், தங்கம் வீட்டில் மஜாவா இருக்கான் பாருன்னு அப்படி இப்படின்னு பேசிக்கிட்டே அவங்க அவங்க வீட்டில ஏதாவது நடக்கும்ல.... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

பாட்டைக் கேட்க கேட்க கிளுகிளுப்பாய் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணத்தில்.... இதோ சிலுக்கு ஸ்மிதாவும், கமலும்...

அடி தூள்...............