குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, August 31, 2008

தஞ்சாவூரென்றாலே குளிர்ச்சி தான் போலும் !

அடியேன் தஞ்சாவூர்காரன். எப்போதும் பசுமையும், தண்ணீரும், திருவிழாக்களும், காதணி விழாக்களும், திருமண விருந்துகளும் களை கட்டும் எங்கள் தஞ்சையில். இசையும், கொண்டாட்டமும் எங்கள் ஊரின் முக்கிய அம்சங்கள். உழைப்பு... உழைப்பு.... உறவுகள்... விழாக்கள்... இது தான் தஞ்சை மாவட்டம்.

ஆனால் பாருங்க, இந்தப் பாட்டில் தஞ்சாவூர் பெயர் வர, என்னவென்று எட்டிப் பார்த்தால்... ஆகா.. ஆகா.. இளமை துள்ளி விளையாடுகிறது பாருங்கள் இங்கே.... பாடல் வரிகளும் எங்க ஊர்க்காரனுங்க பேச்சுலே அசத்தற மாதிரி வேற இருக்கு. பச்சைப் பசேல்னு இருக்கு பாருங்க...

பார்த்து ரசிங்க .......... முடிந்தால் தஞ்சாவூர் பக்கம் ஒரு தடவை வந்து பாருங்க....

Saturday, August 30, 2008

கேரளா, கஞ்சிக்கோட்டில் கோக், பெப்ஸிக்கெதிரான போராட்டத்தில் சாரு நிவேதிதாவுடன் !



( சாரு நிவேதிதாவுடன் என் மகன் ரித்திக் நந்தா )




மணி ஒன்பது முப்பது இருக்கும். சாருவிடம் இருந்து போன். நாளைக் காலையில் கேரளா செல்கிறேன் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வர “சார் வந்துட்டீங்களா“ என்றேன்.

“இரயிலைத் தவற விட்டு விட்டேன் தங்கம். அதனால் காலையில் ஃபிளைட்டைப் பிடித்து அரை மணி நேரமாக வந்து நின்று கொண்டிருக்கிறேன் கார் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் வரவில்லை “ என்று சொன்னார்.

“அப்படியா “ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது மற்றொரு அழைப்பு வர, அந்த அழைப்பினைத் ஏற்று பேச சாருவின் வாசகர் ஒருவர் என்னைப் பார்க்க வருவதற்கு வீட்டுக்கு வழி கேட்டார். வழி சொல்லி முடித்தவுடன் சாருவிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு.

” தங்கம் கார் இன்னும் வரவில்லை” என்றார்.

“சார் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமா “ என்றேன்.

“ தங்கம், நான் எங்கிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்க, ” கேரளாவில்தானே “ என்று நான் கேட்க, “இல்லை தங்கம்..கோவை ஏர்போர்ட்டில் நிற்கிறேன் தங்கம் “ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நம்ம ஓட்டை வண்டியில சாருவை ஏற்றிக் கொண்டு வந்தால் சாரு மறு ஜென்மத்திலும் பைக் சவாரியை மறந்து விடுவாரே என்று எண்ணிக் கொண்டிருந்த போது சாருவின் வாசகரின் கார், வீட்டின் வாசல் முன்பு வந்து நின்றது. சாருவின் வாசகர் திரு சிவா வீட்டின் முன்பு காரை நிறுத்தி லேப்டாப் மற்றும் சில பொருட்களை துணைவியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்க அவரிடம்,

“சார், வாங்க போலாம், சாரு ஏர்போர்ட்டில் நிற்கிறார் “ என்று சொல்ல அவரும் “ஆகா , ஆகா... “ என்றபடி காரை உயிர்பித்தார். பறந்தது கோவை ஏர்போர்ட்டை நோக்கி கார்.

”சரியான பசி. அதனால் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்து இங்கு சாப்பிட்டேன்” என்றார் சாரு. அப்போது மணி 10.50.

அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். எனது துணைவியாரும் சிவாவும் கோழிக் கடைக்குச் சென்று நாட்டுக்கோழிக் கறியினை வாங்கிக் கொண்டு வந்தனர். அதற்கிடையில் லேப்டாப்புக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை இணைத்து இயக்கும் சில வழி முறைகளைச் சாருவுக்குச் சொல்லித் தந்தேன்.

இடையில் கேரளாவில் இருந்து போன் வந்தது. நண்பர்களுடன் சரியாக மூன்று மணிக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னார்.

சிவாவும் சாருவும் சாப்பிட்டனர். என் மகள் நிவேதிதா கத்திக் கொண்டிருந்தாள். காய்ச்சல் வேறு. அத்துடன் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையுடன் சண்டை. வீட்டில் ஒரே அழுகையும் சத்தமும். அவளை மடியில் போட்டுத் தட்டித் தூங்க வைத்தபடி சாப்பிட்டு முடித்தேன்.

காரில் கிளம்பினோம். காரில் செல்லும்போது கேரள முதல்வருக்கு அவர் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. மேடை போட்டு இருப்பார்கள். மாலை எல்லாம் போடுவார்கள் போலும். கூட்டமாக மக்கள் வேறு கூடி இருப்பார்கள். எனது வாழ்வில் முதன் முதலாக எழுத்தாளர் ஒருவர் சமூகப் பிரச்சினைக்காக அதுவும் வேறு மாநிலத்த்தில் பேசப்போகிறார் என்றும் நம்ம சாரு பேசப்போகிறாரே என்றும் எனக்குள் எதிர்பார்ப்பு கூடியபடி இருந்தது.

கஞ்சிக்கோடு. தோளில் தொங்க விட்ட பையுடன் ஒருவர் வழி மறித்தார். இன்னும் ஒரு மணி நேரமாகும் ஊர்வலம் வர என்று சொல்ல, சாருவுடன் கட்டஞ்சாயா குடித்தேன் ஊர்வலம் வந்து சேரும் இடைப்பட்ட நேரத்தில்.

இரண்டு நாட்களாக ஊர்வலத்தில் மக்கள் நடந்து வருகிறார்களாம். ஊர்வலம் கஞ்சிக்கோட்டில் இருக்கும் கோகோ கோலாவின் ஃபாக்டரி முன்பு முடிவு பெற வேண்டும். அங்கு இவர் உரை ஆற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

சிறிது நேரத்தில் நானூறு பேர் இருக்கும் போல. வரிசையாக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். நான் காரிலேயே உட்கார்ந்து கொண்டேன்.

சாருவும், சிவாவும் சென்று விட்டனர். ஊர்வலத்தின் முன்புறம் சாலையில் நின்ற படியே ஒருவர் மைக்கில் முழங்கினார். மேடையும் இல்லை. மாலையும் இல்லை. எனக்குள் தமிழ் நாட்டின் அரசியல் மேடைகளும், போராட்டங்களும் நிழலாடின. உண்மைப்போராட்டம் அது. உணர்ச்சிப் போராட்டம் அது. தண்ணீர் கொள்ளையைத் தடுக்க, தண்ணீரைக் காப்பதற்கு போராட்டம். நாளைய சந்ததிகள் தண்ணீர் இன்றி துன்பப் படக்கூடாது என்பதற்கான போராட்டம். அமெரிக்க பகாசுர கம்பெனியினை எதிர்த்து அன்றாடம் காய்ச்சிகள் செய்யும் போராட்டம். ஏசிக்குள் அமர்ந்து கொண்டு குளுகுளுவென செல்லும் பணக்காரனுக்கும், எது நடந்தாலும் கிஞ்சித்தும் கவலைப்படாத மிடில் கிளாஸ் மக்களின் நலனுக்காக உடுத்த உடையின்றியும், சரியான உணவின்றியும் இருக்கும் ஏழை மக்களின் உணர்ச்சி மிகு போராட்டம் அங்கு நடந்தது.


அங்கு சிங்கமென கர்ஜித்தார் சாரு. அமைதியான குரல். குத்தீட்டிகள் போல கேட்பவர்களின் காதுகளையும் , நெஞ்சங்களையும் துளைத்தன அவரின் பேச்சு. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவரின் உரையினைக் கேட்கக் கேட்க எனக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது.

அட ஆமாம். அவர் பாட்டுக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தனை விட்டுக் கிழி கிழியென்று கிழிக்கிறார். மாத்ருபூமியில் அவர் எழுதிய கட்டுரையின் கேள்விகளுக்கு நிருபர்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று முதல்வர் அச்சுதானந்தன் அவர்களை கேட்டால் ஓடி ஒளிந்து கொள்கிறார் என்று அவர் பாட்டுக்கு பேசுகிறார். விடமாட்டேன். வருவேன்... வருவேன்.. மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பேன்.. பதில் சொல்... பதில் சொல் என்று கர்ஜிக்கிறார். அந்த இடத்தில் என் மனதில் வீர வசனம் பேசிய சினிமா ஹீரோவெல்லாம் தூசு தூசாகிவிட்டனர். தைரியமென்றால் அப்படி ஒரு தைரியம். எதிரில் ஆளும்கட்சியின் அடியாட்களாகிய போலீஸை வைத்துக் கொண்டு முதல்வரை வாங்கு வாங்குன்னு பேசுவதற்கெல்லாம் தைரியம் வேண்டும். தமிழ் நாட்டில் ஏதாவது போலீஸ் பிரச்சினை செய்தால் ஏதாவது செய்யலாம். ஆனால் இவரோ கேரளாவில் முதல்வருக்கு எதிராகப் பேசுகிறார். ரொம்ப தைரியம் தான் இவருக்கு. அவரின் தைரியம் எனக்கு அதைரியத்தை உருவாக்கியது. மனுஷன் விடாமல் பட்டயக் கிளப்புறாரு. அனில்ங்கிறாரு. அம்பானிங்கிறாரு.. அய்யோ சாமிகளா அதையெல்லாம் இங்கு எழுதினால் அப்புறம் நமக்கு ஆப்புத்தான்.

இப்படி அவர் பேசப் பேச எனக்கு அய்யய்யோ போலீஸ்காரங்க காரைப் பார்த்துட்டு போனாங்களே. இவரு பாட்டுக்கு சிம்மம் போல கர்ஜிக்கின்றாரே கடுப்பாகி கூட்டத்துக்குள் புகுந்து லத்தியால ஒரு போடு போட்டானா என்ன பண்றது. அவர் கூட வந்து காரில படுத்துக் கிடக்கிற இவனுக்கு ரெண்டு சேர்த்துப் போடனும்னு போட்டா செத்துல போய்விடுவோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக பேசி முடித்தார். மீண்டும் ஊர்வலம் ஆரம்பித்தது. மைக்கில் சாரு நிவேதிதா, சாரு நிவேதிதா என்று கதறிக் கொண்டிருந்தனர். நானும் சிவாவும் காரில் ஊர்வலத்தின் பின்பாக சென்று கொண்டிருந்தோம். ஊர்வலத்தின் இடையில் சாருவை அழைத்துக் கொண்டு பெப்சிக் கம்பெனி எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு சென்று பார்த்தால் கம்பெனிக்கு முன்பாக ஒரு பஸ், ஜீப் நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது போலீசார் இருப்பார்கள் என நினைக்கிறேன். 15 அடி தூரத்தில் காரை நிறுத்த காரின் முன்புற சீட்டில் அமர்ந்திருந்த என்னையே போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

” தங்கம், போலீஸார் எல்லோரும் உங்களையே பார்த்துக்கிட்டு இருக்காங்க “ என்று வேறு சொல்லி பயமுறுத்தினார்.

எத்தனை நேரம்தான் தைரியமா இருக்கிற மாதிரி நடிக்கிறது. சரி இன்னிக்கு பொங்கல் தான் சட்னிதான் என்று நினைத்து சகதர்மினியிடம் போனில் ”இப்படி இப்படி என்ன செய்றது” என்று கேட்டேன். இங்கே பாருங்க சாரு நம்ம வீட்டு விருந்தாளி. அவரைக் கைது செய்தாங்கன்னா நீங்களும் அவரு கூடவே போய் ஜெயில்ல இருந்துட்டு வாங்க என்று சொல்லி எரியுற நெருப்பில என்னய (எண்ணெய்) வார்த்தா. அவளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.

ஊர்வலம் அந்த இடத்தின் முன்பு வருவதற்குள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு, ” சூழ்நிலை சரியில்லை தங்கம். என் செல்போனை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது நடந்தா பதட்டப் படாதீங்க. பத்திரிக்கைகளுக்கு கூப்பிட்டுச் சொல்லுங்க, நண்பர்களிடம் சொல்லுங்க” என்று சொல்லியபடி மீண்டும் ஊர்வலத்தின் முன்புறம் சென்று கூட்டத்தில் கலந்து விட்டார்.

வெகு சூடாக பேச்சுக்குரல்களும், தள்ளு முள்ளும் நடந்தது. ஒருவர் மைக்கில் கோகோ கோலாவின் தண்ணீர் கொள்ளையை எதிர்த்து முழங்கினார். அதைத் தொடர்ந்து சாரு பேசினார். “போலீஸார் நமக்கு எதிரியில்லை. எதிரி வேறு ஆள்” என்று சொல்லி காட்டமாக பேசினார். ஆனால் நிதானத்துடன் பேசினார். அந்த இடத்தில் தேவை நிதானம். உணர்ச்சி வசப்பட்டால் லத்தி அடி நிச்சயம் தொடர்ந்து கைதும் செய்யப்படும் என்ற சூழ்நிலையிலும் வெகு ஜாக்கிரதையாகப் பேசி ஊர்வலத்தை அமைதியாக முடிவு பெற வைத்தார். தொடர்ந்த முழக்கத்தினிடையே அந்த ஊர்வலம் அமைதியாக கலைந்தது.

இதே வேறு எவராக இருந்தாலும் கொந்தளிப்பாக பேசி, மக்களின் உணர்ச்சியினைக் கிளப்பி விட்டு தடி அடி நடத்த வைத்து, கலவரம் செய்து செய்தி தாளில் செய்தியாக்கி இருப்பார்கள். ஆனால் சாரு செய்தது....???

சாருவும், சிவாவும் வர, காரில் கோவைப் பயணம் தொடர்ந்தது.

காரில் வரும்போது, “தங்கம், கோழிக்கறி பஞ்சு பஞ்சா இருந்தது சாப்பிட, குக்கரில் வேக வைப்பாரா பூங்கோதை? ” என்று கேட்டார்.

”ஆமாம் சார். இஞ்சியுடன் குக்கரில் வேக வைத்துதான் பின்னர் மசாலா சேர்ப்பார் “ என்றேன்

“ சென்னையில் நாட்டுக்கோழி சாப்பிட்டால் கட்டி கட்டியாக இருக்கும்” என்றார்.

காரின் சீட்டில் சாய்வாக படுத்துக் கொண்டேன். ஒரு மேல் நாட்டு கம்பெனி குளிர் பானம் தயாரிக்கின்றேன் என்று சொல்லி பூமியின் ஆதாரமான தண்ணீரை ராட்சதப் போர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து பதினைந்து லிட்டர் தண்ணீரைச் சுத்திகரித்து ஒரு பாட்டில் குளிர் பானமாக்கி விற்கிறது. தண்ணீருக்காக மாநிலங்கள் ஒவ்வொன்றும் அடித்துக் கொண்டு இருக்கின்றன. நம் மாநிலத்தின் நீர் வளம் கொள்ளை போகிறதே என்று கவனிக்காமல் ஓட்டுப் பொறுக்கிகள் இப்படி மக்களுக்கு துரோகம் செய்கிறார்களே இவர்களை யார் தான் தட்டிக் கேட்பது. கேரளத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் கார்பொரேட் ஆட்களாகி விட்டனர் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த ஊர்வலத்தில் நடந்து வந்த ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ஏழைகள். இரண்டு நாட்களாக நடந்து வருபவர்களை சாலையில் செல்லும் எவரும் பாரட்டவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. கடைக்குள் இருப்போர் சற்றுக் கவனித்துப் பார்த்தார்கள். அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட மக்களுக்காக ஏழைகள் நடக்கிறார்கள். காவல் துறையினரின் லத்தி அடிகளை வாங்கவும் தயாராகி போராடுகிறார்கள். மிடில்கிளாஸ் எனும் சூடு சொரனையற்ற மக்களோ எவனோ எதுக்கோ போராடுகிறான் என்ற அளவில் இருக்கின்றார்கள். புழு கூட துன்புறுத்தினால் சிறிதாவது முண்டிப் பார்க்குமே என்றெல்லாம் எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. அதற்குள் வீடு வந்து விட,

டெக்கான் கிரானிக்கிள்ளுக்கு ஆர்ட்டிக்கிள் டைப் செய்து கொடுக்க, சாரு எடிட் செய்தார். அந்தக் கட்டுரையினை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும்போது தோசையும், கறிக்குழம்பும் சாப்பிட்டு முடித்தார் சாரு. சிவா திருப்பூர் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றால் சென்னை செல்லும் இரயில் போத்தனூரில் தான் நிற்குமெனவும் இங்கு வராது எனவும் சொல்ல சிவா, சாருவை சடுதியில் போத்தனூர் சென்று சேர்த்தார்.

சாரு இரயில் ஏறிவிட்டார். போனில் அழைத்து இரவு வணக்கம் சொல்லி விட்டு, சிவாவிடம் திருப்பூர் சென்று சேர்ந்தவுடன் குறுஞ்செய்தி அனுப்பவும் என்று சொல்லியிருந்தேன். இரவு 11.00 மணிக்கு குறுஞ்செய்தி வந்து சேர அயர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.

Wednesday, August 27, 2008

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 5

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 4

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 3

அர்த்தமுள்ள இந்துமதம் பகுதி 2

வெகு அற்புதமான, கணீர் குரலில் கண்ணதாசன் பேசுகிறார். கேளுங்கள். கேட்டு மகிழுங்கள்.


Tuesday, August 26, 2008

நடிகை ரம்பாவுக்காக பிரார்த்தனை

அன்பு உள்ளமே.. உங்களுக்கு இறைவன் மகிழ்ச்சியான வாழ்வினையும், நீண்ட ஆயுளையும் வழங்கட்டும். பேரோடும் புகழோடும் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்


Monday, August 25, 2008

அர்த்தமுள்ள இந்துமதம் 1 - கண்ணதாசனின் குரலில்

அர்த்தமுள்ள இந்துமதம் 1 - கண்ணதாசனின் குரலில்


காந்தக் குரலோன் கண்ணதாசன். குடியும் கூத்தும் கண்ணதாசனை கண்ணனின் தாசனாக்கியது போலும். என்ன ஒரு கணீர் குரலில் இந்து மதத்தையும் அதன் பெருமையினையும் சொல்கிறார். கேட்டு மகிழுங்கள்

Osho Speach - Strange consequence

Rajneesh - Called as Osho. My favorite philosopher.

See his speach about Strange consequence

சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ உரை

சுவாமி விவேகானந்தரின் முதல் சிக்காகோ உரையின் எழுத்து வடிவ தொகுப்பு. கிடைக்காத பொக்கிஷம்.