குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label legal opinion. Show all posts
Showing posts with label legal opinion. Show all posts

Friday, December 16, 2022

நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான். 

சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.

சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.

அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.

உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.

ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.










Wednesday, January 13, 2021

நிலம் (75) - சூலூரில் பிரபல பில்டரின் மோசடி - லீகல் ஒப்பீனியன்

ஒரு இடத்தின் விலை எப்படி உயர்கிறது? எப்போதாவது யோசித்தது உண்டா? 

கோவை நூறடிச் சாலையில், பஸ் ஸ்டாண்ட் நோக்கி இருக்கும் இடத்தின் ஒரு செண்ட் விலை இரண்டு கோடியே நாற்பது லட்சம். அதே நூறடிச் சாலையில் குறுக்குச் சாலையில் இருக்கும் நிலத்தின் ஒரு செண்ட் விலை ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய்.

இப்படியான விலை உயர்வுக்கு காரணம் என்ன? தேவையா? இல்லை என்னவாக இருக்கும்? யோசித்தது உண்டா?

ஒரு பொருளின் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை உயரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு செண்டின் விலை கோடிகளுக்கு மேல் சென்றால் அந்த நிலத்தினை வாங்க போட்டி அதிகமிருக்காது. ஆனாலும் விலை உயர்ந்து கொண்டே போகிறது என்ன காரணம்?

யோசித்துப் பாருங்கள். இது உங்களுக்காக எழுப்பபட்ட கேள்வி. பதில் எனக்குத் தெரியும். ஆனால் எழுதப் போவதில்லை. நீங்கள் தான் யோசிக்க வேண்டும்.

சார், வங்கியில் ஆவணம் வைத்திருக்கிறோம். எதற்கு லீகல் பார்க்கணும்? வங்கியிலேயே லீகல் பார்த்துதான் லோனே கொடுப்பார்கள் என்று என்னிடம் அடிக்கடிச் சொல்வார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? தற்போது வங்கிகள் சொத்தினை மட்டும் நம்பிக் கடன் கொடுப்பதில்லை. கடன் வாங்குபவர் மீது இன்ஸ்சூரன்ஸ் போடச் சொல்லி விடுகிறது. 

வங்கிகளின் லீகல் பிராசசிங் 30 வருடங்கள் மட்டுமே இருக்கும். அதனால் அந்த சொத்தானது வில்லங்கம் இல்லாதது என்று சொல்ல இயலாது.

சூலூரில் ஒரு பிரபல கட்டுமான நிறுவனம் இரண்டு ஏக்கர் நிலத்தினை அக்ரிமெண்ட் போட்டு சுமார் 30 வீடுகளை கட்டி விற்றிருக்கிறது. அதில் மோசடி நடந்திருக்கிறது என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின் விபரம் புகைப்படத்தில் இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த வீட்டினை வாங்கியவர்களின் கதி இனி என்ன? முறைகேடான பத்திரம் போட்டு கிரையம் செய்யப்பட்டிருக்கிறது. நிலத்தின் உரிமையாளர் கையொப்பம் இல்லாமல் கட்டுமான நிறுவனம் வீடுகளை விற்றிருக்கிறது. அதைக் கூடவா வீடு வாங்கியவர்கள் பார்க்கவில்லை? லீகல் பார்த்திருப்பார்களே அவர்களால் இதைக் கண்டு பிடிக்க இயலவில்லையா?

அந்தளவுக்கா கேனத்தனமாக லீகல் பார்க்கப்பட்டிருக்கும்? 

இனி வழக்கு, இழப்பு, பிரச்சினை? இந்தச் செய்தி சொல்ல வருவது எனன்வென்றால் இழப்பு வீட்டினை வாங்கியவர்களுக்கு மட்டுமே. கட்டிட ஒப்பந்ததாரர் பணத்தைப் பெற்று விட்டார். அவர் இனி அதைத் திருப்பிக் கொடுத்தாலும், அவருக்கு அது வட்டி இல்லாத பணம். நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் உரிமையாகி விடும். முறைகேடாக வீடு வாங்கியவர்களுக்கு மட்டுமே இழப்பு.

இந்தப் பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்றால் இனி என்னென்ன செலவுகளும், அலைச்சலும் உண்டாகும். விளைவு ஏண்டா இந்த வீட்டினை வாங்கினோம் என்கிற நிலை. வங்கிக் கடன் வாங்கி இருந்தால் அது வேறு பிரச்சினை. 

ஒரு கட்டிய வீடு வாங்கப் போகின்றீர்கள் என்றால் அதற்கென என்னென்ன ஆவணங்களைப் பார்க்க வேண்டுமென்ற லிஸ்ட் இருக்கிறது. அது மட்டுமின்றி நிலத்தின் உரிமை முதலில் சரி பார்க்கப் பட வேண்டும். அதன் பிறகு கட்டிடத்தின் அனுமதி மற்றும் ஒப்பந்த அனுமதி ஆராயப்பட வேண்டும்.

சமீபத்தில் கோவையில் பிரபலமான ஒரு கட்டிட நிறுவனத்தின் வீட்டினை என் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க பார்க்கச் சென்றிருந்தேன். அப்கோர்ஸ் கட்டணச் சேவை. அந்த வீட்டினை வாங்கலாமா வாங்க கூடாதா என அடியேன் சொல்ல வேண்டும். 

வீட்டின் அமைப்பினைப் பார்க்கும் முன்பு நிலத்தின் அமைப்பினை ஆராய்ந்தால் வாஸ்து அல்லது நில அமைப்பு முற்றிலும் நெகட்டிவாக இருந்தது. அதுமட்டுமல்ல அவர்கள் வீட்டின் தன்மையையே மாற்றி இருந்தார்கள். மின் விளக்கு இல்லாமல் இருக்க இயலாது. மின் கட்டணம் அதிகமாகும். வீட்டிற்குள் அலுவலக செட்டப் வேறு. விலையோ கோடிக் கணக்கில். மாதா மாதம் சுமார் 6000 ரூபாய் மெயிண்டனன்ஸ் கட்டணம் வேறு வரும். இப்படியான ஒரு நவீன கட்டமைப்பில் இருந்தது அவ்வீடுகள். இம்மாதிரியான வீடுகளை விரும்பும் நபர்களும் இவ்வுலகில் உண்டு. அப்ரிஷியேசன் ஆகும் என்று சொல்வார்கள். ஒரு வீடு அப்ரிஷியேசன் ஆகும் என்றுச் சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். வீடு இருக்க இருக்க பழையதாகும் என்பதை மறந்து விடக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை செங்கலுக்கும், கம்பிக்கும், சிமெண்டுக்கும் கொடுக்கும் விலையானது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். ஆடம்பரமாக வாழ்வதன் அர்த்தமற்ற செலவுகள், செலவு செய்பவர்களின் எதிர்காலம் சூனியமாகி விடும். எத்தனையோ வீடுகள் விற்பனைக்கு வருகின்றன. பார்த்துப் பார்த்துக் கட்டி இருப்பார்கள். கடைசியில் விற்பனைக்கு வந்து விடும். வியாபாரம் என்பது வேறு, வசிப்பிடத்தினை விற்பது என்பது வேறு. 

லீகல் பார்க்கும் போது அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு. அதை வைத்து லீகல் சரிபார்கக் வேண்டும். நான் என்னிடம் லீகல் செக்கிங்க் வருபவர்களிடம் பல வித ஆவணங்களைக் கேட்பேன். வெகுவாகச் சலித்துக் கொள்வார்கள். இன்றைய சலிப்பு நாளைக்கு ஆபத்தினை உருவாக்கி அமைதியின்மையை தருவிக்கும் சூழல் உண்டாகலாம்.

ஆகவே வீடோ அல்லது நிலமோ எதுவாக இருப்பினும் நல்ல அனுபவம் தெரிந்தவர்களிடம் லீகல் பார்த்து வாங்குங்கள். 

நிலம் என்பது நம்மை வாழ வைக்கும் ஒரு உயிரிடம். ஒரு சிலருக்கு ஒரு சில இடங்களே வாழ்க்கையில் முன்னேற்றத்தினையும், சந்தோஷத்தையும் தரும். அதற்காக அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

குறிப்பு: ஒரு சில இடங்களில் வீடுகள் வாங்கினால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். ஆகவே வீடுகள் வாங்கும் போது வெகு கவனம் தேவை.