குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பூண்டி. Show all posts
Showing posts with label பூண்டி. Show all posts

Saturday, November 11, 2017

திருவையாற்றங்கரை நினைவலைகள்

கடந்த வாரம் என நினைவு. இரு கரை தொட்டு பொங்கிப் புரண்டோடும் திருவையாரில் செல்லும் காவிரியின் போட்டோவை தினமலரில் பார்த்தேன்.  நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அதற்கு முன்பு தினமலரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

இப்போதெல்லாம் ராமசுப்பு என்கிற அந்துமணி அடிக்கடி தினமலரில் தென்படுகிறார். தலையில் வெளிர் நீல நிற தொப்பி அணிந்து திமுக மேடையில் அமர்ந்திருந்தார். பிரதமர் தமிழக விசிட்டின் போது பார்வையாளர்களில் பகுதியில் அமர்ந்திருக்கிறார். தினமலர் வாரமலரில் அந்து மணி என்ற கேரக்டர் இவர்தான் என பத்து வருடங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. இப்போது அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தொடர்ந்து தினமலரை வாசித்து வருவதால் அதன் செய்தி வடிவம் நெகடிவ் தன்மையாக மாறி வருவதை என்னால் அறிய முடிகிறது. அதுமட்டுமின்றி அரசியல் சார்பும் தெளிவாகத் தெரியும்படி தினமலர் நடந்து கொள்கிறது. பையன் பள்ளியில் நியூஸ் வாசிக்க செய்திகளைக் குறித்துத் தரும்படி கேட்பான். அப்போது எந்தச் செய்தியை எடுத்தாலும் நெகட்டிவ் தலைப்பு வருகிறது. 

குறிப்பாக மன்னார்குடியினரைப் பற்றியும், அதிமுகவினரைப் பற்றியும் சமீபத்திய செய்திகள் தான் முழு பக்கத்தையும் நிரப்புகின்றன. மன்னார்குடிக்கும் தினமலருக்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை. இந்த ஒரு பிரச்சினை பற்றிப் படிக்க செய்தி தாள் வாங்கவில்லை என்று தினமலர் உணர வேண்டும். இந்தச் செய்தியைத் தலைப்புச் செய்தியாக்குவது தினமலருக்கு வேண்டுமெனில் நன்மையாக இருக்கலாம். ஆனால் படிக்கும் வாசகர்களுக்கு எரிச்சல் தான் வரும். தினமலர் என்ற மாபெரும் நிறுவனம் தனி மனித செய்திக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

தினமலரின் தலைப்புச் செய்திகள் உட்பட உள் செய்திகளின் தலைப்புகள் நெகட்டிவ் செய்திகளாகவே வருவது தலைமை மாறியதால் வந்த பிரச்சினையா என்று தெரியவில்லை. தினமலர் தலைமைப் பொறுப்பாளர்கள் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் அதை புகைப்படத்தில் வெளியிட்டு மகிழ்வதும் தினமலரின் தகுதிக்கு குறைவான செயல் என்றே படுகிறது. தலைவர்கள் வரலாம் போகலாம். ஆனால் தினமலர் என்ற மாபெரும் அமைப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே அந்துமணி அவர்கள் எனது இந்த பதிவை சற்றே கவனிக்க வேண்டுமென நினைக்கிறேன். 

எனக்கு பனிரெண்டு வயதாகிய போது தந்தை நாடி மாணிக்க தேவர் காலமானார். அறியாத வயது. கருமாதிக்காக தாய் மாமக்களுடன் திருவையாறு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் பஸ் தான் ஒரே வழி. ஊரிலிருந்து பட்டுக்கோட்டை, பின்னர் தஞ்சாவூர், பிறகு திருவையாறு. இரவில் சென்று ஒரு மடத்தில் தங்கிக் கொண்டோம். சரியான குளிர். எனக்கு மேலே போர்வை போர்த்தவில்லை என்றால் தூக்கமே வராது. பாயில் இரவு முழுவதும் தூக்கம் வராமல் குளிரில் நடுங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தேன். விடிகாலையில் எழும்பியதும் சலூனுக்குச் சென்று முடி மழித்து அய்யருடன் சென்றோம்.

கரை புரண்டோடும் காவிரியாற்றினைக் கண்டு மலைத்துப் போனேன். பனி படர்ந்து குளிர்ந்த அந்த விடிகாலைப் பொழுதில் தண்ணீருக்குள் குளித்து வர வேண்டுமென்று நினைத்தாலே நடுங்கியது. வேறு வழி இன்று படிகளில் இறங்கி குளித்தால் காவிரித்தாய் தன் வெது வெதுப்பான நீரில் உடலைத் தழுவினாள். குளிர் உடம்பை விட்டு ஓடியே போனது. அய்யர் ஏதோதோ செய்யச் சொன்னார். எல்லாம் முடித்து மீண்டும் குளியல் போட்டு பஸ்ஸில் வரும் போது நீண்ட அந்தப் பாலத்தின் வழியாக காவிரியைப் பார்த்தேன். இரு கரை தொட்டு கடல் போல விரிந்து சென்றாள் அவள். கரைகளோரம் வாழைகள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. எங்கு நோக்கினும் பச்சைப்பசேல் செடிகொடிகள். விவசாயம் என செழித்திருந்தன.

ஆறேழு வருடங்களுக்கு முன்பு, ஒரு சினிமா ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அப்பாவின் நினைவு நாள் மறு நாள் வந்தது. அப்போது திருவையாறு சென்றிருந்தேன். அகன்று விரிந்த காவிரியின் நடு மத்தியில் சள்ளைப் பிள்ளை போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மனசே ஆறவில்லை. 

சின்ன விஷயம் தான். மனிதனிடம் இருந்த மனிதம் இறந்து போனது. காவிரியில் தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் செத்தார்கள். தண்ணீரை எவரும் கண்டு பிடிக்கவும் இல்லை, அதற்கு உரிமையாளர்களும் இல்லை. ஏன் இந்தப் பூமியில் மனிதன் வந்து செல்லத்தான் இயற்கை அனுமதித்திருக்கிறதே ஒழிய உரிமை கொண்டாட அல்ல. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?

எத்தனை தெய்வங்கள் வந்தாலும், எத்தனை நன் நூல்கள் இருந்தாலும், எத்தனை மதங்கள் மனிதனை நல் வழிப்படுத்தினாலும் அவன் இதுவரையிலும் சரியானதே இல்லை. சக மனிதனை மனிதனாகக் கூட நினைக்க மாட்டேன் என்கிறான். அவனின் மிருக உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகவே மாற்றி விட்டிருக்கின்றன.

தன் பிள்ளை பசியாக இருப்பதை அறிந்த உடன் தன் தட்டில் இருக்கும் உணவைக் கொடுத்து பசியாறச் செய்யும் ஒருவன், அதே பக்கத்து வீட்டுக்காரன் என்றால் கொடுக்க மாட்டேன் என்கிறான். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பூண்டியில் கணிணிப் பட்டயப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரி விழாவில் திருவையாறு கல்லூரியிலிருந்து வந்த ஒரு பெண் காயத்ரி என நினைவு, ஆசை அதிகம் வச்சு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். அன்றிலிருந்து பூண்டி கல்லூரியே காயத்ரியின் மீது மயக்கம் கொண்டது. ஒரு சிலர் திருவையாறுக்கே சென்று அவளைக் கல்லூரியில் தேடினார்கள் என்றுச் சொல்லக் கேட்டேன். பாத்ரூம்களில் காயத்திரியின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதுவும் கொஞ்ச நாள் தான். கல்லூரி காயத்ரியை மறந்து போனது.

ஆனால் என் நினைவுகளில் காவிரி ஆறு இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.

Friday, June 6, 2014

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் திரு உருவசிலை பிரதிஷ்டை விழா

ஆத்ம சகோதர, சகோதரிகளே !

உங்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கம்.

நிகழும் சுப வருடம் வைகாசி மாதம் 25ம் நாள் (08.06.2014) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் திரு உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அது சமயம் அனைத்து சித்த வித்யார்த்திகளும், மெய்யன்பர்களும் விழாவில் கலந்து கொண்டு குரு அருள்  பெற அன்போடு அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல் :-

காலை 8.00 மணிக்கு - திரு உருவ சிலை பிரதிஷ்டை
காலை 9.00 மணிக்கு - சிற்றுண்டி
பகல் 12.00 மணிக்கு - கூட்டு ஜெபம்
மதியம் 1.00 மணிக்கு - அன்னமளிப்பு

இங்கணம்

வெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவ சமாதி
ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் ஆசிரமம் மற்றும் ட்ரஸ்ட்
முள்ளங்காடு போஸ்ட், செம்மேஉ, பூண்டி,
கோவை - 641114

தொடர்புக்கு 
டாக்டர் ஏ. நாகராஜ் M.B.B.S, D.C.H.,
மேனேஜிங் ட்ரஸ்டி
போன் : 94426 45711

ஜோதி ஸ்வாமிகள் 
போன் : 9894815954