குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Sunday, February 26, 2017

Come on my Brothers let us join, decide which now, do not delay



இந்தியாவின் வளர்ச்சி என்கிற பெயரில் இந்தியாவிற்கே உணவளிக்கும் எங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை அழித்திட முனைந்திருக்கும் இந்திய அரசே! ஆளும் அதிகாரவர்க்கதினரே!

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் யூத இனத்தை கேஸ் சாம்பரில் குவித்து கொன்றொழித்தானே அதைப் போல எங்களையும் கேஸ் என்கிற பெயரில் கொல்லப் போகின்றீரா?

எங்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்பித்தானே ஓட்டுப் போட்டோம் எங்கள் உயிரைப் பறிக்க முதுகில் குத்திக் கொல்ல வருவீர்கள் என்று நினைக்கவில்லையே?

வீடு வீடாக வந்தீர்களே! நாங்கள் உங்களை எங்கள் பிரதி நிதியாகத்தானே பார்த்தோம் ஆனால் எமதர்மனின் பிரதிநிதிகளாக எப்போது மாறினீர்கள்?

இரத்தமும் சதையும் எலும்பும் நிறைந்த உங்கள் உடம்புக்குள் இதயம் என்று ஒன்று இல்லாமல் போய் விட்டதா?

ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு ஊர் அழியலாம் என்கிறாரே ஒருவர், எங்கள் குழந்தைகளையும் எங்களையும் கொன்று விட முடிவெடுத்து விட்டுத்தான் பேசுகின்றீர்களா?

உங்களிடம் ராணுவம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. எங்களிடம் இயலாமையும் கண்களில் வழிந்தோடும் கண்ணீரும் தான் இருக்கிறது இந்திய அரசே!

உலகத்தின் ஒப்பற்ற நாகரீக தமிழர்களை இருக்க இடமில்லாமல் அழித்து விட முயன்று விட்டீர்களா? தமிழும் தமிழனும் உங்களுக்கு என்ன கெடுதலைச் செய்தார்கள்?

நம்பி நம்பி கெட்டவர்கள் நாங்கள். இப்போது நாங்கள் இருக்கும் இடத்தையும் அழித்து எங்களை நாடில்லா வீடில்லா மனிதர்களாக ஆக்கப் போகின்றீர்களா?

நாங்கள் வாழும் இடத்தையும் பறித்துக் கொண்டு எங்களையும் விரட்டி அடிக்கப் போகின்றீர்களா?

உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் முசோலினிக்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்தார்களே. வரலாற்றினை மறந்தா போனீர்கள்?

நேதாஜி அழைத்தார் என்பதற்காக உயிருக்கு அஞ்சாமல் வெற்று நெஞ்சினைக் காட்டி துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் நெஞ்சில் பெற்று மண்ணோடு மண்ணாய் செத்துப் போன வரலாறு எங்களுக்கு உண்டு.

எங்கள் வாரிசுகளுக்காக எதிர்காலத்தை தேக்கி நிற்கும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக நாங்கள் எங்கள் உடம்பில் இறுதி மூச்சு இருக்கும் வரை அஹிம்சா வழியில் போராடுவோம்.

நெடுவாசலையும் நெடுவாசல் மக்களையும் காப்பாற்றுங்கள்

நெடுவாசல் கிராமம் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. எனது ஊர் அது. நான் பிறந்த ஊர். எனது தந்தை மாணிக்கதேவர், அவரின் தகப்பனார் அருணாசலத்தேவர், அவரின் தகப்பனார் நாடதேவர் இப்படியாக வாழையடி வாழையாக வாழ்ந்த ஊர். எங்கள் குடும்பத்திற்கு நாடி வீடு என்றொரு பட்டப்பெயரும் உண்டு. எனது வீட்டுக்கு முன்னால் நெடுவாசல் கிராமத்தின் தெய்வமான நாடியம்மன் இருக்கிறார். நெடுவாசல் திருவிழா சுத்துப்பட்டு ஊரெங்கும் புகழ் பெற்றது. படத்தேர் திருவிழாவின் அசத்தல் நிகழ்ச்சி.

நெடுவாசலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே இருக்கும் கூகுள் மேப் இணைப்பினைக் கிளிக் செய்து சுற்று வட்டாரங்களைப் பாருங்கள். எங்கெங்கும் பசுமை மண்டிய விவசாய பூமி எம் ஊர்.


என் சிறு வயதில் ஓ.என்.ஜி.சி வண்டிகள் அடிக்கடி வந்து செல்லும். வெடி வைப்பார்கள். வெடிக்கும் போது நடக்கக்கூடாது என்பார்கள். நாடங்குளத்தருகில் தான் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்தார்கள். அப்போதெல்லாம் இந்தக் காலத்தில் இருப்பது போன்று டெக்னாலஜி வளர்ச்சி ஏதும் இல்லை. அரசாங்கம் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்கிறது என்ற பெருமையில் மட்டுமே ஊர் மக்கள் இருந்தார்கள். நம்ம ஊரில் மண்ணெண்ணெய் இருக்கிறதாம் என்ற பெருமை மட்டுமே. ஆனால் அதனடியில் கொலைகார எண்ணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்தளவுக்கு அப்பாவித்தன்மை கொண்டவர்கள் எம் மக்கள். நெல், உளுந்து, நிலக்கடலை, எள், சிறுதானியப் பயிர்கள், மா, பலா, வாழை, காய்கறிகள் என எங்களூரில் விளையாத உணவுப்பொருட்களே இல்லை எனலாம். தென்னந்தோப்புகள் அதிகம். தேங்காய்கள் அதிகம். உலகெங்கும் நாங்கள் விளைவிக்கும் விவசாயப்பொருட்கள் உண்ணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டம் என்பார்கள். ஆனால் நெடுவாசல் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதி. காவிரி ஆறு நெடுவாசலின் கிழக்கே செல்கிறது. ஊருக்கே உணவளிக்கும் உன்னத ஊர் நெடுவாசல்.


எனது சகோதரி ஜானகியும் சித்தி செவையாளும் போராட்டக்களத்தில்

எக்கானமிக்ஸ் டைமில் 2016ம் வருடம் ஒரு செய்தி வெளியானது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சியால் கண்டறியப்பட்ட எண்ணெய் வளமிக்க பகுதிகளில் ஆயில் எக்ஸ்புளோரேஷனுக்காக வெளி நாட்டு நிறுவனங்களை ஏலத்தில் பங்கு கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் ரோடு ஷோவை நடத்தி வந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து விட்டு சும்மா இருக்குமா அரசு?  அதன் பிறகு நடத்தப்பட்ட ஏலத்தில் தற்போது ஜெம் லேபரட்டரீஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்றுச் சொல்லி மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான பகுதி என்று மத்திய அரசுக்குத் தெரியாதா? இல்லை பாரதப்பிரதமருக்குத்தான் தெரியாதா? எல்லாம் அனைவருக்கும் தெரியும். உலகிற்கே உணவளிக்கும் பகுதி இது என்று அனைத்து அரசியல்தலைவர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்தும் செய்கின்றார்கள் என்றால் என்ன காரணம்?

போராட்டக்களத்தில் இருப்பவர்களை பிரிவினை வாதிகள் என்கிறார் பாஜகவின் ஹெச்.ராஜா. இல.கணேசன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு மாவட்டம் தியாகம் செய்யணும் ஒரு மாவட்டம் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமம் தியாகம் செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாஜகவின் மாநிலத் தலைவர் இதுவரை அமைதியாக இருந்து விட்டு இப்போது போராடுகின்றார்கள் என்கிறார். ஆக இவர்களின் பேட்டியை வைத்துப் பார்க்கும் போது நெடுவாசலை சுடுகாடாக்க முடிவே செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மக்களின் விருப்பமின்றி எந்தத் திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆளும் பிஜேபி அரசின் அங்கத்தினர்கள் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராகப் பேசுகின்றார்கள். போராடினால் தேசத்துரோகி என்கிறார்கள் பிஜேபியினர்.

ஒரு ஊரையே அழித்துத்தான் பிறரின் அடுப்பு எரிய வேண்டுமா? ஊர் மக்களைக் கொன்றொழித்துதான் இந்திய மக்கள் உணவு சமைக்க வேண்டுமா? இப்படியெல்லாம் பேச இல.கணேசன் அவர்களின் மனது என்ன கல்லா? ஏன் இத்தனை வன்மமாகப் பேசுகின்றார் என்றே தெரியவில்லை. உணவை விட இயற்கை எரிவாயு தான் அவசியமா? விவசாயத்தை விட அடுப்பு எரிக்கவும், கார்கள் ஓட்ட பெட்ரோல் தான் அவசியமா? இல.கணேசன் அவர்கள் உணவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை உண்கின்றாரா? அவர் குடும்பத்தாரும் அப்படித்தான் இயற்கை எரிவாயுவை குடிக்கின்றார்களா? என்று தெரியவில்லை.

மத்திய அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை புதிய தலைமுறையில் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

செய்தி கீழே:


மத்திய அரசின் மக்கள் நயவஞ்சகத் திட்டம்

ஷேல் கேஸ் திட்டத்தை, புதுபுதுப் பெயர்களில் செயல்படுத்த, முயற்சி தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு குத்தாலம் உள்ளிட்ட மிகச்சில இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்போவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பால், திட்டத்தை நிறுத்திவைத்தது ஒஎன்ஜிசி (ONGC). இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பொதுப்பெயரில், கைவிடப்பட்ட அந்த ஷேல் கேஸ் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது.

ஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி வழங்கப்பட்டு தொடங்கப்படலாம் என்பதே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதார ஆவணத்தின்படி தெரியவரும் பேரதிர்ச்சி தரும் உண்மையாகும்.

செய்தி இணைப்பு : http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/special-news/35/81826/shell-gas-project-in-the-name-of-hydrocarbon-gas-stunning-truth

இந்தியமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நெடுவாசல் போன்ற தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுத்து மொத்தமாக தமிழக நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கி பீஹார் போன்ற ஏழைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிட மத்தியில் ஆளும் அரசு கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகிறது.

அதிகாரத்தில் இருப்பதற்காக இந்தியாவின் நெற்களஞ்சியத்தை அழிக்க தனி நபர் சார்ந்த நிறுவனங்களின் துணை கொண்டு மத்திய அரசின் இத்தகைய ரகசிய செயல்பாடுகளை அதி தீவிரமாக எதிர்க்க வேண்டும். தமிழக நெற்களஞ்சியத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முதலாளி. சொந்தத் தொழில் செய்யும் முதலாளிகள். நெற்களஞ்சியத்தை அழித்து ஒழித்து விட்டால் மொத்தமாக வேலையிழந்து பஞ்சைப் பராரியாக ஊரு விட்டு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்வார்கள் என்பதாலும் அப்போது வெகு எளிதாக அரசியல் லாபம் பெறலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.

உணவா? அடுப்பெரிக்க வாயுவா? எது வேண்டும் உங்களுக்கு என்பதை முடிவெடுங்கள்.

மத்திய அரசின் கொடூரத்தின் முன்னே அதிகாரத்தின் முன்னே எழும் எங்கள் ஊரின் அவலக்குரலைக் கேளுங்கள். உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கும் உணவளித்து வரும் எங்களை மத்திய அரசின் அரக்கப் பிடியில் இருந்து காப்பாற்ற வாருங்கள்.

வருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு உங்களின் ஆதரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கனம் நெடுவாசல் மக்களின் ஒருவனாக !

Thursday, February 23, 2017

எங்கே சென்றாயோ நீ?

நேற்றுக்கு முதன் நாள் இரவு நாளை ”திருப்பூர் வரைக்கும் போய்ட்டு வரலாமா? வக்கீல் உடனே வரச்சொல்கிறார்” என்றார் என் நண்பர். வெயில் அதிகமானதாலும் பணியும் அதிகமானதாலும் உடல் அயர்ச்சியடைந்திருந்தது. உண்மையில் நேற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. நண்பர் ஆறு வருடங்களுக்கு முன்பு வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். 

வழக்கில் தொடர்புடையவரை அழைத்து இருவருக்கும் பொதுவாக ’பஞ்சாயத்து’ செய்து வைக்க முயன்று கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக வழக்கு விபரங்கள், தற்போதைய நிலை பற்றி விசாரிக்கச் சென்றால் சரியாக நேற்று வாய்தா தேதி. இரண்டாவது அழைப்பாக வர பதினைந்து நாட்கள் வாய்தா பெற்றுக் கொண்டு திருப்பூரிலிருந்து கிளம்பினோம். இனி இருவருக்குமான பஞ்சாயத்து மிச்சம் இருக்கிறது. யாருக்கும் சங்கடம் வராமல் நேர்மையாகச் செய்து கொடுக்க வேண்டும். 

ஏழு வருடங்களாக நடக்கும் பிரச்சினை ஏதோ ஒரு நொடியில் சரி செய்யப்பட்டால் நல்லதுதானே. மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சூண்டு கவனம் தேவை. இல்லையென்றால் இது போன்ற பஞ்சாயத்துக்கள் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி விடும் ஆபத்து மிகுந்தவை. கத்தி மீது நடப்பது போலத்தான் இது. கொஞ்சம் பிசகினாலும் வெட்டி விடும்

திருப்பூரில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. எங்கெங்கும் காய்ந்து கிடந்த செடி கொடிகள் கண்ணில் பட்டன. காற்று உடலைச் சுட ஆரம்பித்தது. கண்கள் மசமசக்கத் தொடங்கின. பெட்டி பெட்டியாக காங்கிரீட் கட்டடங்கள் மட்டுமே தெரிந்தன. ஆனால் பச்சைகள்?? திருப்பூர் வெயிலில் பார்பிக்யூவில் வைக்கப்பட்ட மட்டன் போல வறுபட ஆரம்பித்தேன். நண்பர் காரை விரட்டிக் கொண்டிருந்தார். காரில் ஏசி இல்லை. வரும் வழியெங்கும் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. அவினாசி வந்து சேர்ந்தோம். அங்கும் கொதித்துக் கொண்டிருந்தது. செல்பேசியில் கால நிலை அளவுகள் எகிறிக் கொண்டிருந்தது. கருவலூர் வழியாக கோவில்பாளையத்துக்கு வந்த பிறகு தான் வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. சிலுசிலுவென காற்று தன் சூட்டினைக் குறைக்க ஆரம்பித்தது.

ஏதோ ஒரு இடத்தில் கண்ணில் குட்டை  ஒன்று தென்பட்டது. அதில் தண்ணீர் கிடந்தது. அதைப் பார்த்ததும் தான் மனதுக்குள் கொஞ்சமே கொஞ்சம் சிலுசிலுப்பேற்பட்டது.

என் சிறு வயதில் நன்கு நினைவில் இருக்கிறது. தீபாவளி அன்றைக்கு வெடி வெடிக்க முடியாது. வானம் கொட்டிக் கொண்டே இருக்கும். மழையில் நெற்மணிகள் நனைந்து போய் விடும். மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டைகளில் தவளைகளின் “டொர்ராங் டொர்ராங்” சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆலங்கட்டி மழையில் அடி வாங்கி இருக்கிறேன். வாசலில் வந்து கொட்டும் வெண்பனிக்கட்டிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து விழுங்கி இருக்கிறேன். கொட்டிக் கொண்டிருந்த மழை நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதை என்னால் உணர முடிகிறது.

குறுவை, சம்பா சாகுபடிகள் இப்போது இல்லை. கோடைச் சாகுபடியும் இல்லை. குளங்கள் பொறுக்குத் தட்டிக் கிடக்கின்றன. ஆடு மாடுகளைக் காணமுடியவில்லை. பசும் புற் தரைகளைக் கூட காணவில்லை. மரங்கள் வெப்பத்தில் வாட்டியவை போல சோம்பிக் கிடக்கின்றன. குளிக்கும் தண்ணீரில் நுரையே வருவதில்லை. உப்புச் சேர்ந்து தண்ணீரின் அமுது அழுக்காகிக் கிடக்கிறது.

என் வயதொத்தவர்கள் உங்கள் நினைவுகளைப் பின்னே ஓட்டிப் பாருங்கள். நம் வயதில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் பெய்த மழை இப்போது பெய்கிறது எனத்  தோன்றுகிறதா? இல்லை அல்லவா? ஆக நம் முன்னே ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது.

நம்மை விட்டு வெகுதூரம் போய் விட்டது மழை. தண்ணீரோ பூமியின் அடியாளத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டது. தண்ணீர் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். இனி குளிப்பது என்பது கூட எவராலும் முடியாது போய் விடும் போல. குடிக்கவே தண்ணீர் இல்லாமல் குளிப்பது எங்கே. டிவிக்களில் உடல் துர்நாற்றப்போக்கிகளின் விளம்பரங்கள் அதிகமாகின்றன.

மனித குலத்தை அழிக்கும் ஆயுதமாக தண்ணீர் நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. காலம் தப்புவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

வீடெங்கும் ஒரு மரத்தையோ தெருவெங்கும் மரங்களை வளர்த்து மழைக்கு அழைப்பு விடுப்போம். தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடுகளைச் செய்வோம். 

இல்லையெனில் நம் வருங்கால சந்ததியினர் நாசா புதிதாக கண்டுபிடித்த கிரகங்களுக்கு செல்ல நேரிடும். ஜோசியக்காரர்களுக்கு கணக்குப் பிழையாகி விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். புதிய கிரகங்கள் புதிய கணக்குகள் என்றால் கொஞ்சம் சங்கடம் தானே???

Monday, February 20, 2017

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்

இந்திய அரசியலும், அரசும் அதன் இயங்கும் விதத்தையும் பற்றியும் எழுத ஆரம்பித்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடும். அரசமைப்பியல் அந்தளவுக்கு கேடுகெட்டதாய் ஆகி விட்டது. இனி மாற்றம் வரும் என்பதெல்லாம் நடக்கும் என்று எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் மாற்றம் ஒன்றே மாறாதது என்றொரு இயற்கைச் செயல்பாடு இருக்கிறது என்பதால் ஓர் அணுவத்தளவும் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. ஆயாசமாக இருந்தாலும் அந்த நம்பிக்கை தரும் ஊக்கம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

இந்தியாவில் தென் தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழக்கூடிய தட்ப வெப்ப நிலைகளுக்கு தகுந்ததாகும். தென் தமிழகத்தில் மட்டுமே ஆன்மீகம் தழைத்திருக்கிறது. உலகிற்கே உயர்வு வாழ்வு நெறி காட்டிய தமிழும், தமிழர்களும் கலை மோகம் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தின் அடி வேரினையே பிடுங்கி எறிந்து கொண்டிருக்கின்ற அவக்கேடு எந்த உலகத்திலும் உள்ள எந்த ஒரு இனத்திலும் நடக்காத ஒன்று. தமிழ், தமிழ் என்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவார்கள். தமிழர்கள் பாரம்பரியம் என்பார்கள். ஆனால் வீட்டிலோ ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஜீன்ஸ் உடைகள், சல்வா துப்பட்டாக்களை உடுத்துவார்கள். மலையாளத்துக் காரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். ஓணம் பண்டிகைகளில் பாருங்கள். 

ஆனால் தமிழர்களோ தமிழ் பண்டிகைகளின் போது என்ன உடுத்துவார்கள்? வேஷ்டி எங்கே போனது? சேலை எங்கே போனது? தாவணிகள் எங்கே சென்றன? தானும் கெட்டும் தன் இனத்தையும் கெடுத்துக் கொண்டு வாழும் ஒரு இனம் இந்த உலகில் இருக்கிறதென்றால் அது தமிழினம் மட்டுமே. இனி எந்தக் காலத்தில் தமிழர்கள் உருப்பட்டு உருப்படிக்கு வருவார்கள் என்பதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றா? தன் இனத்துக்கு ஒரு அமைப்பினை உருவாக்கி தன் இனத்தையும் தன் மொழியையும் வளர்த்து வரும் பிராமணர் சங்கம் போல தமிழர்கள் தங்களையும் தங்கள் மொழியையும் வளர்த்திட வேண்டாமா? 

தமிழர்கள் எங்கே வளர்க்கின்றார்கள்??? குறுந்தாடிகளைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மலைகள் இணையத்தில் வெளியான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம் கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். படித்து வையுங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்றுமுகம்


பதினைந்தாயிரம் பேர் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமலே யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிவந்த விஷக்காற்றினால் உயிரை விட்டனர். லட்சக்கணக்கான பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டனர். மூளை வளர்ச்சி குன்றியும், கண் போயும், இன்னும் சொல்ல முடியாத நோய்களுக்கெல்லாம் ஆட்பட்டு இன்றும் நோயின் பிடியில் சிக்கி உயிரோடு வேதனைப்பட்டு வருகின்றனர். ஆலையின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி ஆண்டர்சன். மற்ற குற்றவாளிகள் இந்த ஆலையின் நிர்வாகத்திலிருந்தவர்களும், டெக்னீஷியன்களும். இந்த வழக்கு முதல் குற்றவாளி இல்லாமலே நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுபயங்கர கொலைகளுக்கான தீர்ப்பு இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட போது, இத்தீர்ப்பினைப் பற்றி வட மாநில மீடியாக்களில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு வெளியான அன்று ஆண்டர்சன் உயிரோடு இருந்தார். அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று டிவிக்கள் கண்டுபிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அவரை கைது செய்யக்கூட இந்திய அரசால் முடியவில்லை. இதே ஒரு சாதாரணன் என்றால் சட்டமும் சட்டத்தின் காவலர்களும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த தீர்ப்பை கூர்ந்து அவதானிக்கும் போது நெஞ்சை உலுக்கும் சில உண்மைகள் நிர்வாணமாக வெளிப்படுகின்றன. இந்த உண்மைகள் சாதாரண மக்களிடையே இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்விக்குறி எழுவதில் வியப்பேதும் இல்லை. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற மாயையினால் ஆளும் அதிகார வர்க்கமும் அதற்கு துணையாக இருக்கும் கோடீஸ்வரர்களும் எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் அப்பட்டமாகத் தெரியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் இந்தியப் பிரஜைகள் என்று சட்ட மேதை அம்பேத்கார் எழுதிச் சென்றார். ஒரு நீதிபதி நில மோசடியில் சிக்குகின்றார். அரசு புறம்போக்கு நிலத்தை தன் பதவியை வைத்து கபளீகரம் செய்கிறார். பொதுமக்களை அந்த நிலத்திற்குள் வர விடாமல் தடுக்கிறார். மீடியாக்களில் இந்த விஷயம் வெளிப்பட்ட பிறகு அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கின்றது. விசாரணை செய்து அந்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷயம் பற்றி அறிக்கை அளிக்கின்றது. ஆனால் சட்டத்தை அமுல் படுத்தி வரும் உச்ச நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கியவரை வேறு ஊருக்கு மாறுதல் செய்கிறது. சர்ச்சையில் சிக்கியவர் பணி நாள் முடிவடையும் வரை நீதிபதியாகத்தான் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அரசு நிலத்தை தன் அதிகாரத்தால் கபளீகரம் செய்யும் நீதிபதியைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இந்த நீதிபதி தண்டிக்கப்பட கூடியவர் என்றால் அது ஏன் இன்னும் செய்யப்படவில்லை? இந்திய நீதிபதிகள் தங்களைச் சட்டத்திற்கும் மேலானவர்களாக, கடவுளாக கருதிக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் மூலமாக தெரிய வருகிறது. அதாவது நீதிபதிகள் விஷயத்தில் அவர்கள் கொலைக் குற்றமே செய்தாலும் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மற்றொரு உண்மை என்பதை இவ்விடத்தில் புரிந்து கொள்க.

1976ல் ஜஸ்டிஸ் கே. வீராச்சாமி மேல் சிபிஐயினால் பதிவு செய்யப்பட்ட கரப்ஷன் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலே 108 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து திரு ஜஸ்டிஸ். கே.வீராச்சாமியின் மருமகன் திரு ஜஸ்டிஸ் ராமசாமி மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்க கையெழுத்திட்ட சம்பவங்களையும் பத்திரிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம். இந்திய நீதிபதிகள் சில பேர் மீது இருக்கும் வழக்குகளை மெயில் டுடே என்ற பத்திரிக்கை 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி அன்று கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. கட்டுரையினை இந்த இணைப்பில் படிக்கலாம்.
ஒரு நீதிபதி இரு நீதிபகள் என்று இல்லை. ஊழல் வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் எண்ணற்ற இந்திய நீதிபதிகள் சிக்கினார்கள். இது பற்றிய கட்டுரைகள் பல பல பத்திரிக்கைகளில் வெளி வந்தன. ஆனால் சட்டத்தினால் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஓய்வு பெற்று இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற குற்றச்செயல்களில் சாதாரணன் ஈடுபட்டால் அதே சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏன் முதலில் நீதிபதிகளைப் பற்றி எழுதுகிறேன் என்றால் சட்டங்களை அமுல் படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதும் நீதி மன்றங்கள்தான். ஆனால் நீதிமன்றத்தின் தலைவர்களான நீதிபதிகளாலே சட்டங்கள் மீறப்படுவது என்பது சட்டத்திற்கே சட்டம் எதிரியாக இருப்பது போன்றது. ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதில் சிறு துளி உண்மை இருக்கிறதா என்றால் நம்புவது கடினம். அடுத்து மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

அடுத்து யூனியன் கார்பைடு ஆலையின் அதிபர் ஆண்டர்சன், ஆலையின் அலட்சியத்தால் நடந்த விபத்திற்குப் பிறகு அரசு செலவிலே, அரசு விமானத்திலே, முதலமைச்சரின் ஆலோசனையின் படி, காவல்துறையினரின் பாதுகாப்போடு அவரது சொந்த நாட்டிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் இந்தியாவில் இருந்தால் சட்ட ஒழுங்கு அமைதிக்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று காரணம் சொன்னார் அன்றைய மாநில முதலமைச்சர் திரு.அர்ஜூன் சிங். ஒருவரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவரைக் கைது செய்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆண்டர்சன் விசயத்தில் நடந்த சம்பவம் அவரைப் பாதுகாக்க மட்டுமே என்பது தான் உண்மை. பதினைந்தாயிரம் இந்திய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கொலைக்குக் காரணமானவரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் துணிந்திருக்கிறார். இவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் நம்பிக்கைக்கு இவர் செய்திருக்கும் துரோகம் என்னவிதமானது என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் ஒரு ஓட்டுக் கூட போடாத மாபெரும் கோடீஸ்வரனைப் பாதுகாக்க துணிந்த முதலமைச்சர் ஏழைகள் கொல்லப்பட்டது குறிந்து சிறு வருத்தமும் இன்றி செயல்பட்டதை எண்ணினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மறு முகம் பற்றிய நிர்வாணமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

தீர்ப்பு வெளியிட்ட நாளன்று அமெரிக்காவில் வசதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வரும் ஆண்டர்சனை, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை சிபிஐயினால் கைது செய்ய முடியவில்லை. அவர் இருக்கும் இடத்தையும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் பிறகு அவரை இந்தியா கொண்டு வர முயற்சிக்கப்படும் என்று சொல்கிறார்கள் ஆட்சியாளார்கள். ஆனால் சமீபத்தில் ஆண்டர்சன் இறந்தே போய் விட்டார். ஆண்டர்சனின் அலட்சிய நிர்வாகத்தால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஒன்றுமறியாத அப்பாவிகள். அவர்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீதிமன்றமும் 26 ஆண்டுகள் கழித்து வழங்கிய தீர்ப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையும், ஆளும் அதிகார வர்க்கத்தினரின் பாசம் எந்தப்பக்கமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பதினைந்தாயிரம் உயிரைப் பறிக்க காரணமாயிருந்தவர்களை, ஜாமீனில் செல்லக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கி இருப்பது வழக்கையே இல்லாமல் ஆக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தி குற்றவாளிகள் அனைவரும் விடுதலையாகி விட்டார்கள். இது தான் ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் நிலைமை.

மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 150 பேர். சட்டம் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? வழக்கு விசாரணையை ஒரே வருடத்தில் முடித்து தீர்ப்பும் வழங்கி விட்டது. ஏனென்றால் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தாக்கப்பட்டது இந்தியக் கோடீஸ்வரரின் ஹோட்டல். அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விடட்து. யூனியன் கார்பைடு ஆலையினால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஏழைகள் கொல்லப்பட்டதற்கு தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்போ நகைப்புக்கிடமான ஒன்றாகும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட்ட நாட்கள் ஏன் வேறுபட்டதாக இருக்க வேண்டும்? நீதிபதிகளை சட்டம் ஒன்றும் செய்யாது. பணக்காரர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. அரசியல்வாதிகளை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அதிகாரவர்க்கத்தினரை சட்டம் தீண்டிக்கூட பார்க்க முடியாது என்றால் பின்னர் ஏன் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று சொல்கின்றார்கள்? ஏழைகளைக் கட்டுப்படுத்தவும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவும் தான் சட்டம். ஏழைகள் சட்டத்தை மீறக்கூடாது என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானதா? சட்டத்திற்கு வேறு முகங்களும் இருக்கின்றன. மீண்டும் இங்கு ஒரு எழுத்தாளரின் எழுத்தை மேற்கோள் காட்டி பத்தியை முடிக்கிறேன். ”ஏழைகள் அதிகாரவர்க்கத்தினரின் இரக்கத்தின் பால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்”.

Wednesday, February 15, 2017

புத்திசாலி சாமர்த்தியசாலி ஒரு நீதிக்கதை

புத்திசாலிகள் வெற்றிபெறுவதில்லை. சாமர்த்தியசாலிகளே வெற்றி பெறுகின்றார்கள். இரண்டு நபர்களை உதாரணமாகச் சொல்லலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புத்திசாலியானவர். நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் புத்திசாலி மட்டுமல்ல சாமர்த்தியசாலியும் கூட. அறிவு மட்டும் இருந்தால் பணியாளராக இருக்கலாம் . சாமர்த்தியமும் இருந்தால் முதலாளியாக இருக்க முடியும் என்பதற்கு இவர்களே சாட்சி.

சாமர்த்தியசாலிகளைப் பற்றிய ஒரு நீதிக்கதை உண்டு. அதை இப்போது படியுங்கள். 

ஒரு ஊரில் புத்திசாலி பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சொந்தமாகப் பெரிய ஆட்டு மந்தைக் கூட்டம் இருந்தது. நிலங்களும் பெரிய அளவில் இருந்தன.  அவன் ஆடுகளை வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல, அவைகளின் தோலுக்காகவும், கறிக்காவும் தான் வளர்த்து வந்தான். அவன் பணக்காரனாக இருந்தாலும் மகா கருமி. அவன் நிலத்தைச் சுற்றிலும் வேலி போட அவனுக்கு விருப்பமில்லை. வேலி போட்டால் செலவு அதிகமாகும் என்ற நினைப்பு. 

அந்த ஆடுகளில் ஒரு சில புத்திசாலிகள் இருந்தன. அவைகள் இவன் தங்களைக் கொன்று பிழைக்கின்றான் என்றும் பேசிக் கொண்டன. அதனால் கூட பல ஆடுகள் அருகில் இருக்கும் காடுகளுக்குத் தப்பிச் சென்றும் விட்டன. அடிக்கடி ஆடுகள் வேலி தாண்டிச் சென்றும் விடும். இதன் காரணமாக அவனுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டன.

இந்தப் புத்திசாலி பணக்காரன் செலவும் ஆகக்கூடாது, ஆடுகளும் தப்பித்துச் செல்லக்கூடாது, இதற்கொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தான்.

ஒரு நாள் அனைத்து ஆடுகளையும் அழைத்து அவைகளிடையே பேச ஆரம்பித்தான்.

ஆடுகளுக்கு எப்போதும் இறப்பே வராது என்றும், அதன் தோல்களை நீக்கும் போது வலியே ஏற்படாது என்றும், அதனால் அவைகளின் உடல் நன்கு பாதுகாக்கப்பட்டு, மீண்டும் தோல் வளர்ந்து எப்போதும் சாவதே இல்லை என்றும் அவைகளுக்கு நம்பிக்கை ஊட்டி வசியப்படுத்தினான்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தின் மீது அவன் அளவற்ற அன்பு கொண்டுள்ளதாகவும், அவைகளின் நன்மைக்காக உலகில் இருக்கும் அத்தனை நலன்களையும் அவைகளுக்குச் செய்து வருவதாகவும், அந்த ஆடுகளின் நன்மையைத் தவிர வேறு எதையும் அவன் சிந்திப்பதே இல்லை என்றும், அவன் அவைகளுக்கு நல்ல எஜமானனாக இருப்பதாகவும் விவரித்துப் பேசினான்.

அவைகளுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் ஏற்படவே ஏற்படாது என்றும், அவைகளுக்குத் துன்பம் ஏற்படவே கூடாது என்பதற்காக அவன் தன் வாழ் நாளையே தியாகம் செய்து பணி செய்து வருவதாகவும் பேசினான். அப்படி அவைகளுக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டால் அது தான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்றும் வீராவேசமாகப் பேசினான்.

அதுமட்டுமல்ல அந்த ஆடுகளில் பல ஆடுகளே இல்லை என்றும் அவைகளும் நாளை நல்ல எஜமானனாகும் தகுதி உடையவை என்றும், பல ஆடுகள் சிங்கங்கள் என்றும், பல ஆடுகள்  புலிகள் என்றும், பல ஆடுகள் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும், பல ஆடுகள் தியாகமே உருவான தொண்டர்கள் என்றும் ஆடுகளையே ஆடுகள் இல்லை என்ற தோற்றத்தினை உருவாக்கினான். அவன் பேசியதைக் கேட்ட ஆடுகள் தங்களை ஆடுகளே இல்லை என நம்ப ஆரம்பித்தன.

அவன் பேசப் பேச ஆடுகளுக்கு அவன் மிக நல்ல எஜமானன் என்று தோன்றின. அவைகள் அவனை நம்பின. அன்றிலிருந்து எந்த ஒரு ஆடும் வேலி தாண்டிப் போவதில்லை. அவன் நிலத்துக்குள்ளேயே வசித்து வர ஆரம்பித்தன. அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடாக கொன்று தோலை உரித்து, கறியை விற்பனை செய்து சுகமாக வாழ்ந்து வந்தான்.

அந்த ஆடுகள் தாங்கள் கொல்லப்படுவதையோ, தாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையோ அறிந்திருக்கவில்லை. தங்கள் எஜமானன் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தன.

கதையைப் படித்து விட்டீர்களா?

இந்தக் கதையில் வரும் ஆடுகள் யார்? அந்த சாமர்த்தியசாலியும் புத்திசாலியுமான எஜமானன் யார் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆகவே.... !!!




Sunday, February 12, 2017

மஞ்சள் குளிர்பானம் அதீத ஆபத்து

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெறுகிறது. நிலத்தில் பாகத்தைச் சரியாகப் பிரித்துக் கொடுக்கும் பணியில் பிசியாக இருந்தேன். மிகச் சரியாக பாகத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை என்றால் நீயும் பாகமும் என்று கிண்டலடித்து விடுவார்கள். ஆகவே தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் அமர்ந்து பேசி அவரவர் கோரிக்கைகளைக் குறித்துக் கொண்டு மிகக் கவனமாக நிலப்பாகத்தினை அளந்து உறுதி செய்து கொண்டேன். பின்னர் நிலத்தில் அளக்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரவர் வீடு இருக்கும் பகுதியில் நிலமும் வர வேண்டும். மரங்களும் சரியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்திற்கும் பாதை இருக்க வேண்டும். அந்தப் பாதைகளின் மொத்த அளவு அதிகமாக இருக்கக்கூடாது அதுமட்டுமல்ல இன்னும் இது போன்ற பல்வேறு சிக்கல்களுடன் நில அளவை நடந்து கொண்டிருந்தது.

இதுவெல்லாம் பிரச்சினையே இல்லை. நான் சுவாசிப்பதே நிலத்தைப் பற்றித்தான். நிலம் மட்டும் இல்லையென்றால் மனிதனே இல்லை. பூமித்தாய் ஒவ்வொரு மனிதனையும் தன் இரத்தத்தால் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதை நேசிப்பதில் அதனுடன் உறவாடுவதில் அதனுடன் இயைந்து இருப்பதில் எனக்கு எல்லையில்லா ஆனந்தம். இந்தப் பூமியில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் மனிதனுக்காகத்தான் பயன்படுகிறது. காற்றிலிருந்து, வெளிச்சத்திலிருந்து பூமி தான் மனிதனுக்கு அள்ளி அள்ளி வழங்குகிறது. கண்ணை மூடி ஒரு நிமிடம் பூமி நமக்கு தருவன பற்றி நினைத்துப் பாருங்கள். பூமியின் மீது நடப்பதற்கே கூச்சமாக இருக்கும். 

எனக்குப் பிரச்சினை ஆரம்பித்தது மனிதர்களாலே. ஒவ்வொரு வீட்டிலும் காஃபி, டிஃபன், குடிநீர் சாப்பிட வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். முதன் முதலில் வந்திருக்கின்றீர்கள், ஒரு வாய் டீ என்று ஆரம்பித்து தொல்லைகள் வர ஆரம்பித்தன. அப்போதுதான் ஹார்லிக்ஸ் குடித்திருப்பேன். ஐந்து நிமிடம் கூட இருக்காது. இள நீரைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். பஜ்ஜி சுடச்சுட கொண்டு வந்து தருவார்கள். என்னை வேலை செய்யவே விடவில்லை. 

மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நேரம் காலம் தெரியாமல் அவர்கள் செய்த உபசரிப்பின் காரணமாக எரிச்சலின் உச்சத்திற்கே சென்று கொண்டிருந்தேன்.

மாலையில் அவசரமாக வேறு வேலை நிமித்தமாக கிளம்பிய போது மஞ்சள் கலர் குளிர்பானத்தைக் கொண்டு வந்து நீட்டினார்கள். வெயிலில் காய்ந்ததால் இதமாக இருக்கட்டுமே என்று இரண்டு மிடக்கு மஞ்சள் குளிர்பானத்தை விழுங்கினேன். ஒரு மணி நேரம் வேறு பணியை முடித்து விட்டு வீடு வரும் முன்பு மற்றொரு நண்பர் இடையில் பிடித்துக் கொண்டார். ஏதாவது சாப்பிடுங்கள் என்று வற்புறுத்த ஆரம்பித்தார். சுடுதண்ணீர் கொண்டு வந்து தாருங்கள் என்றுக் கேட்டு அருந்தினேன். அடுத்த இரண்டு நொடிகளுக்குள் நெஞ்சுக்குள் வலி சுருக் சுருக் என ஆரம்பித்தது. பதட்டமானேன்.  நண்பரோ விடாமல் பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் நெஞ்சுக்குள் வலி எடுக்கிறது என்றுச் சொல்லி விடைபெற்றேன். 

வண்டியில் வரும் போது ஏப்பமாக வந்து கொண்டே இருந்தது. இடது நெஞ்சில் வலி பின்னிப் பெடலெடுத்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து பாயில் படுத்தேன். என்னால் படுக்கவே முடியவில்லை. பிரஷர், ஹார்ட் பீட் எல்லாம் சோதனை செய்த போது அனைத்தும் நார்மல். ஆனால் வலி மட்டும் குறையவில்லை. மூச்சை உள்ளே இழுத்தால் சுருக்கென்றது. உணவில் ஏதோ பிரச்சினை என்று அறிந்து கொண்டேன். மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். ஒரே ஒரு மாத்திரையைப் பரிந்துரைத்தார். வெறும் கஞ்சி கொண்டு வரச் சொல்லிக் குடித்து விட்டு மாத்திரையைப் போட்டுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது. அரை மணி நேரத்தில் சுருக் வலி நின்று போனது. ஆனால் ஏப்பம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. காலையில் கூட வெறும் ஏப்பம் தான் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் நான் அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர. வேண்டாம் என்றாலும் விடாமல் படுத்தி எடுக்கின்றார்கள். கிராமத்து ஆட்கள் வெள்ளந்தியானவர்கள். ஒருவர் வாழைக்காய் சிப்ஸைக் கொண்டு வந்து கொடுத்து தோட்டத்தில் இருந்து பறித்து உங்களுக்காக மனைவியைச் செய்யச் சொல்லி கொண்டு வந்திருக்கிறேன் என்று படுத்திக் கொண்டிருந்தார். 

அடியேனோ எண்ணைப் பலகாரங்கள், பால், டீ, காஃபி, மட்டன், சிக்கன், மீன், நண்டு, இறால், முட்டை என எதையும் சாப்பிடுவதே இல்லை. நாக்குக்கு அடிமைப்பட்டு நெஞ்சைக் கிழித்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடே இல்லை. சாதம் என்றால் பத்து வாய் அத்துடன் கொஞ்சம் காய்கறிகள். மாலையில் பழங்கள், காய்கறிகள் என்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. வேறு வழியே இல்லையென்றால் ஹார்லிக்ஸ் என்பதோடு நிறுத்திக் கொள்வேன். அதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. எவ்வளவு கவனமாக இருந்த போதும் ஏதோ ஒரு நினைவில் குளிர்பானம் என்கிற கெமிக்கல்ஸ் நிறைந்த குடிபானத்தினால் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை கொடுமையானது.

நான் குடித்த மஞ்சள் கலர் குளிர்பானத்தின் மகிமை என்று மருத்துவர் சொன்னார். பத்து மிலி கூட குடித்திருக்க மாட்டேன். அது செய்த பிரச்சினை இன்னும் முற்றிலுமாகத் தீரவில்லை. எனது அனுபவம் இது. ஆகவே நண்பர்களே, மஞ்சள் கலர் குளிர்பானம் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள்.

Friday, February 10, 2017

எப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி?

போன் வருகிறது. பிள்ளை கீழே விழுந்து விட்டான். அடிபட்டு விட்டது என்கிறது அது. மனசுக்குள் திடுமென்று பயம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. எண்ணங்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று அலைபாய மனதுக்குள் பாரம் அடுத்து அடுத்து ஏற்றப்பட்டுக் கொண்டே முடிவில் பெரும் துன்பகரமனதாக வேதனையில் விழுந்து வெம்மி விடும். பையனை நேரில் பார்க்கும் வரை வேதனையில் மனது வெந்து சாகும். அவனை நேரில் பார்த்தால் சின்ன அடி தான் என்றவுடன் மனசு லேசாகி விடும். அவ்வளவு நேரம் துயரப்பட்ட மனசு பட்டென்று லேசாகி சந்தோஷமாகி விடும். காரணம் அறியாமல் உண்மை தெரியாமல் மனது தனக்குள்ளேயே தவறான முடிவு எடுத்து துயரப்பட ஆரம்பித்து விடும். 

மனம் எப்போதுமே உண்மையை உணர்ந்து கொள்ளாது. மனதுக்கு முதல் எஜமான் உணர்ச்சிகள் தான். உணர்ச்சியின் பிடியில் சிக்கிய மனம் முழு உடலையும் ஆட்டுவிக்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. உண்மையை மறைத்து விடுகிறது. இறந்தகாலத்துக்குச் சென்று எதிர்காலத்துக்குச் சென்று இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இறந்த காலமும் இல்லை
எதிர்காலமும் இல்லை
இந்த இரு இல்லாமைகளுக்கிடையில்தான் மனம்
இருக்கிறது
அதனால் தான் துன்ப துயரங்கள்

மனதால் வாழ்வது துயர வாழ்க்கை
வேதனை மிகுந்த நரகம்
மனமே நரகம் தான்

சட்டென இதை உணர்ந்தால்
புதிய வாசல் பிறக்கும்
அது நிகழ்வின் தீர்ப்பு
இயல்பின் திறப்பு இது.

இருக்கிற ஒரே காலம் நிகழ்காலம் மட்டுமே
இருப்பதே அதுதான்
அதில் நீ இரு, அப்போது நீ விடுதலையடைவாய்
அதில் வாழ்க, அதுவே பரவசம்!

நன்றி : ஓஷோ - ஒரு கோப்பை தேநீர் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை

நான் சொல்ல வந்தது இதுதான். எது நடந்தாலும் என்ன நடந்தாலும் நடந்ததை அழித்து விட்டு புதிதாக ஆரம்பிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நடந்து விட்டது இனி என்ன செய்யலாம்? நடந்து விட்டதை நமக்கு சாதகமாக பிறருக்கு பாதகம் ஏற்படா வண்ணம் சரி செய்ய முடியுமா? என்று மட்டும் தான் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையின் போக்கு நிச்சயமாக மாறிப்போய் விடும். தட்டுத்தடுமாறி இப்பாதைக்கு மாறி விடுங்கள். எதையும் எளிதாக வெற்றி கொள்ளலாம்.

ஏதேனும் புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும். விவரித்து எழுதுகிறேன்.

Thursday, January 12, 2017

மறைந்து போன பெண்களின் வாழ்க்கை முறை - கெணத்தடிப்பாம்பு

காலம் மனிதர்களின் எத்தனையோ பழக்க வழக்கங்களைத் தன்னுள்ளே இழுத்து விழுங்கி விடுகின்றது. காலம் காலமாக இருந்து வந்த மனித வழக்கங்களையும், சுவாரசியங்கள் நிறைந்த காட்சிகளையும் கூட அழித்து விடுகிறது. இதுவரை எவரும் காட்டாத ஒரு வழக்கத்தினை சிறுகதையாக எழுதி மலைகள் இணைய தளத்தில் வெளியிட ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு அனுப்பி இருக்கிறேன். நினைத்தாலே இன்பச் சிலீரிடும் பழைய காலத்து இயல்பு வாழ்க்கையை முடிந்த அளவு சுவாரசியமாக வித்தியாசமான தொனியில் எழுதி உள்ளேன். 114 இதழாக வெளிவரப்போகும் மலைகள் டாட் காமில் ‘கெணத்தடிப்பாம்பு’ சிறுகதை அதை உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். படித்துப் பாருங்கள். இன்னும் ஒரு சில நாட்களில் 114 இதழ் வெளிவரும். 

மலைகள் இணைய இணைப்பு : www.malaigal.com

வாசகர் கடிதத்திற்கு பதிலும் வசியப் பிரச்சினையும்

திரு. தங்கவேல்,

நான் உங்கள் கட்டுரைகளை கடந்த சில நாட்களாக படித்தேன், எளிமையான, இயல்பான நடை. சற்றேக்குறைய அனைத்து கட்டுரையும் நமது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வுகள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுகொடுக்கும் பாரம்பரிய விளையாட்டுகள், TV பாதிப்புகள், தங்களுக்கும் பாம்பிற்கும் உள்ள பந்தம்(!) மற்றும் பல சட்ட விளக்கம் அனைத்தும் பல பல தலங்களுக்கு இழுத்து செல்கிறது. இருந்தாலும் திருவாதிரை உங்களுக்கு ருத்திரம் மாதிரி தான் தெரியுது? நானும் நேற்று முழுவதும் விரதம் இருந்து என் ஆதரவை தெரிவித்து விட்டேன்.

இந்த Blog தவிர வேறு எங்கேயும் எழுதுகிறீர்களா? இந்த அனுபவ பதிவுகள் மற்றும் ஆலோசனை பல நபர்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதே என் அவா. 

வாழ்த்துக்கள்

Babu


அன்பு பாபு அவர்களுக்கு,

மிக்க நன்றி. கடிதம் மகிழ்வைத் தந்தது. என் பிள்ளைகள் அதனைப் படித்தார்கள். அம்முவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. பையன் வழக்கம் போல மவுனச் சாமியாராக இருந்தான். மனையாளோ கடுப்படித்துக் கொண்டிருந்தார். ”என்னை வம்பு இழுக்காமல் உங்களுக்குப் பொழுது போகாதே” என்றார். “ உன்னுடன் வம்பு இழுக்காமல்,  பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்டேவா வம்பு இழுக்க முடியும்? விளக்குமாத்தாலே பிச்சுப்புடுவாங்க, அது உனக்கு உசிதமா?” என்று கேட்டேன்.  முறைத்தபடி சென்று விட்டார். 

சாரு ஆன்லைனில் சாருவின் கட்டுரைகளைப் படித்து சரி செய்து பதிவேற்றிய காலத்தில் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்ததுதான் எனது பிளாக். தத்தித் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்து எழுத ஆரம்பித்து எட்டு வருடங்களாக தொடர்ந்து எழுதி வருகிறேன். பனிரெண்டு நாடுகளில் படிக்கின்றார்கள் என்று விசிட்டர்ஸ் லிஸ்ட் காட்டுகிறது.

மலேசிய பத்திரிக்கையில் புனைப்பெயரில் காட்டமான அரசியல் கட்டுரைகள் எழுதினேன். தற்போது நிறுத்தி விட்டேன். பரபரப்புச் செய்தி இதழில் எழுதினேன். ஆழம் பத்திரிக்கையில் எழுதினேன். திண்ணையில் எழுதினேன். சிறு இதழாசிரியனாக இருந்து மூன்று இதழ்களில் எழுதினேன். இப்போது மலைகள் டாட் காமில் எழுதுகிறேன். எனது பிளாக்கைப் பற்றி தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.

ஆனாலும் பிளாக்கில் தொடர்ந்து எழுதி வருகிறேன். எழுத எவ்வளவோ இருக்கின்றன. லெளகீக வாழ்க்கைக்கு முன்னால் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விடுவதால் அனைத்தையும் எழுத இயலவில்லை. எழுத்து இன்னும் வசமாகவில்லை. படிப்பவர்களுக்கு ஏதாவது ஒரு உபயோகம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தேவையற்ற சொரிதல்களை எழுதுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

வெகுஜன பத்திரிக்கைகளுக்கு சிபாரிசு முக்கியம். இல்லையென்றால் வெளியிடமாட்டார்கள். தோல் சிவப்பாக அழகாக இருந்தால் (உதாரணம் தமிழச்சி) பெண்பிள்ளையாக இருந்தால் உடனடியாக வெளியிட்டு ப்ரிவியூவும் எழுதுவார்கள். நான் ஆணாகப் போய் விட்டேன். 

வெகு ஜன பத்திரிக்கைகளில் ஆக்கங்கள் வெளியாகி கிடைக்கும் புகழினால் ஒரு கரண்டி தோசை மாவு கூட வாங்க முடியாது என்பதால் ஆர்வமில்லை. விகடன், குமுதத்தில் ஆக்கங்கள் வெளியாகினால் தலையில் இல்லாத கிரீடத்தைச் சுமப்பது போல என்னால் நினைக்கமுடியாது. வெற்றுப் புகழ் மாலைகளினால் ஒரு புண்ணாக்கும் கிடைக்காது. 

இருப்பினும் பிளாக் எழுதுவதினால் ஒரு சில சுவாரசியங்கள் நடக்கின்றன.

எழுத ஆரம்பித்த நாளில் இருந்து பல அழைப்புகள், கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்ன ஒன்று? வசியமை கேட்டுத்தான் அதிக அழைப்புகள் வந்த வண்ணமிருக்கின்றன. ஆரம்பத்தில் அதைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்றுச் சொல்லிப் பார்த்தேன். எவரும் கேட்பதாக இல்லை. பிறகு ’ஒரு டப்பா ஒரு இலட்சம், உடனடி பலன், பணத்தை அக்கவுண்டில் கட்டுகின்றீர்களா?’ என்று கேட்க ஆரம்பித்தேன். ஓடிப்போனார்கள். பிளாக்கில் இலவசமாய் படிக்க கிடைப்பது போல வசியமருந்தும் இலவசமாய் கிடைக்கும் என்ற நப்பாசையில் இரவு பகல் பாராது அழைக்க ஆரம்பித்தனர். இப்போது கொஞ்சம் அழைப்புகள் குறைந்திருக்கின்றன.

வெளி நாட்டிலிருந்து 60 வயது பெரியவர் ஒருவர் வசியமை கேட்டு அழைத்திருந்தார். பேச ஆரம்பித்தவுடன் அவரிடம் விஷயத்தைக் கறந்து விட வேண்டுமென்ற ஆவலில் விசாரித்தேன். ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அவருடன் பள்ளிப்படிப்பின் போது கூடப்படித்த பெண் மீது காதல் கொண்டாராம். ஆனால் அக்காதல் நிறைவேறவில்லையாம். இப்போது அப்பெண் அவரின் வீட்டருகில் இருக்கின்றாராம். மேட்டர் செய்ய வேண்டுமாம். இப்படித்தான் சொன்னார் ஆள். எனக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது பார்த்தீர்களா? 

இவரைப் போலவே ஒரு பெண் உங்கள் ப்ளாக் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி எழுதினார். போனில் பேசினார். இது என்னடா வம்பாப்போச்சு என்று நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன். கடைசியில் வசிய மை கிடைக்குமா என்று கேட்க ஆரம்பித்தார். மாமா பையனை வசியம் செய்ய வேண்டுமாம். அவன் இந்தப் பெண்ணைக் காதலித்து மேட்டர் முடித்து விட்டு எஸ்கேப்பாகி விட்டானாம். இப்போது வேறு பெண்ணைக் காதலிக்கின்றானாம். பெரிய மனது வைத்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார். 

கோவையில் மாந்திரீகர் ஒருவர் சினிமா பிரபலங்களுக்கு வசிய மை விற்றே கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என்று ஏதோ ஒரு பிளாக்கில் எழுதி இருந்தார்கள். அது போல நாமும் ஆரம்பித்து விடலாமா என்று கூட யோசித்தேன். மாதம் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கல்லா கட்டி விடலாமென்று கூட நினைத்தேன். மனசு ஒப்பவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வசிய மை உண்மைதானா? என்று கண்டுபிடிக்க ஆர்வம் ஏற்பட்டது. பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பல வசிய மை ஆட்களைச் சந்தித்து பேசினேன். மதி முக்கால் மந்திரம் கால் என்று தான் அனைவரும் சொன்னார்கள். ஃபேஸ்புக்கில் கூட அந்த மூலிகையை வைத்தால் வசியம், அதை இப்படிச் செய்தால் வசியம் என்று எழுதி வருகின்றார்கள். இதெல்லாம் உண்மையா என்று அறிய முயற்சித்தேன். ஒரு கண்றாவியும் இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை என்று கண்டு கொண்டேன். 

தேடினால் கிடைக்கும் என்பார்களே அதைப் போல ஒரு மந்திரவாதி எனக்கு அந்த வித்தையைக் கற்றுக் கொடுத்தார். மருந்தும் தேவையில்லை. மண்ணாங்கட்டியும் தேவையில்லை. சிறிய விஷயம் தான். யார் கற்றுக் கொடுத்தாரோ அவரே என்னிடம் பரீட்சித்துக் காட்டினார். அசந்து தான் போனேன். மூன்றாவது நாளில் எவரை வசியம் செய்ய விரும்புகிறோமோ அவரே வந்து காதலைச் சொல்லி விடுவார். அந்தளவுக்கு அந்த வசிய வித்தை களேபரமானது. கற்ற பிறகு பரீட்சித்துப் பார்க்க எனக்கு ஆர்வமில்லை. நம்மைப் போன்றே ஆசா பாசங்கள் ஆசைகள் கொண்டு ஜீவனை ஆசைக்காக அழிப்பது எவ்வளவு கொடூரமானது என்று நினைக்கையில் இது போன்ற வித்தைகளின் மீது எரிச்சல்தான் வந்தது. சக மனிதனை அழித்துதான் சந்தோஷம் பெற வேண்டுமா? தேவையே இல்லை அல்லவா? ஆகையால் அந்த விஷயம் அத்தோடு முற்றிற்று.

நிலம் பற்றிய தொடர் பல பேருக்கு உபயோகப்படுகிறது என்று நினைக்கிறேன். பலரும் அணுகி தங்கள் சொத்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். பட்டா மாறுதல், சொத்துக்களின் ஆவணம், காணாமல் போன சொத்துக்களை மீட்பது போன்றவைகளுக்காக அணுகுகின்றார்கள். முடிந்தவரை செய்துகொடுக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வாசகர் கம்பெனி ஆரம்பித்து விடுங்கள். நான் இன்வெஸ்ட் செய்கிறேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். பணம் பல விஷயங்களைக் கொன்று போடும் தன்மை மிக்கது. செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று யோசனையில் இருக்கிறேன். நம்பி வருகின்றவர்களுக்கு ஏதும் தவறு நடந்து விட்டால் அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. 

வாசகராய் வந்து இப்போது எனது தோழராக மாறிய ஒருவர் வாழ்க்கையில் எனது பிளாக் மாறுதலை ஏற்படுத்தி உள்ளது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த பிளாக் எழுதுவதன் பலன் இப்படித்தான் இருக்கின்றன. படிப்பவர்களுக்கு ஏதாவது உருப்படியாக தகவலோ அல்லது மன நெகிழ்வோ, சந்தோஷமோ ஏற்பட வேண்டுமென்பது தான் எனது நோக்கம். அந்த வகையில் உங்கள் கடிதம் அதைக் கட்டியம் கூறுகிறது. மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து படியுங்கள். சந்தோஷமாக வாழுங்கள். அது ஒன்றே எனக்குப் போதுமானது.

Thursday, January 5, 2017

பாம்பு உடன் பயணம்

வாசலின் வடமேற்கு மூலையில் மண்வெட்டி இருந்தது. அதை எடுக்கச் சென்ற போது அதன் கீழே சுருண்டு கொண்டு படுத்திருந்தது அது. கட்டம் கட்டமாக நல்ல தடியாக இருந்தது. அலறிய அலறலில் அந்தப் பாம்பு பரலோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்து வயதில் முதன் முதலாக தனியாக பாம்பு பார்த்த அனுபவம் மனதுக்குள் பயத்தினை எழுப்பி விட்டு விட்டது. பாம்பின் மீது அன்றிலிருந்து பயம் தொடர ஆரம்பித்தது.

வீட்டுக்கு மேல்புறம் செடி கொடிகள் மண்டிய நிலம் இருந்தது. அதன் வடமேற்கு மூலையில் பாம்புப் புற்றொன்று இருந்தது. அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டேன். பாம்புப் புற்று இருந்த இடத்திற்கு வடபுறம் என் வகுப்புத் தோழன் பழனிவேலின் தென்னந்தோப்பு இருந்தது. யாரும் அந்தப் பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் அந்தப் பாம்பு புற்றுக்குள் நாகங்கள் இருக்கின்றன என்று சொல்லக் கேள்வி.

ஒரு முறை வீட்டின் பின்புறத்தில் மாடுகள் கட்டி இருக்கும் வேப்பமரத்தடியைத் தாண்டி இருக்கும் முருங்கைமரத்தின் அருகில் காரப்பழம் மரம் இருந்தது. அதில் பழம் பறிக்கச் சென்றேன். அந்த இடத்தில் சிறிய எலுமிச்சை செடி ஒன்றிருந்தது. அதன் அருகில் ஏதோ அசைவது போலத் தெரிந்தது. தூர இருந்தபடி கல்லைத் தூக்கி அந்தப் பகுதியில் வீசினேன். திடீரென்று தலையைத் தூக்கி படமெடுத்து மிரட்டியது நாகப்பாம்பு. அவ்விடத்தில் இருந்த அடியேனை அடுத்த நொடி காணவில்லை. வீட்டுக்குள் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தவனுக்கு, ”உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது” என்ற திட்டு கிடைத்தது. நானா அதுகளைத் தேடிப்போய் வம்பிழுக்கிறேன். அதுகள் அல்லவா என்னுடன் வம்பிழுக்க வருகின்றன? 

நல்ல மழை பெய்து வீட்டின் வடபுறமுள்ள கிணற்றின் வாய் வரைக்கும் தண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த தண்ணீர் பால் போல இருக்கும். குளிப்பதற்கு தண்ணீர் இறைக்கச் சென்ற போது அதற்குள் நல்ல நீளமான அது குளியல் போட்டுக் கொண்டிருந்தது. பூட்டைக்கயிற்றில் தட்டுக்கூடையை வைத்து அதன் மீது வைக்கோல் போட்டு உள்ளே விட்டபோது நீச்சல் அடித்தது போதும் என்று கருதி தட்டுகூடையில் ஓய்வெடுக்க வந்து விட்டது. மெல்ல கயிற்றை மேலே கொண்டு வந்தார்கள். அது நான் எங்கிருக்கிறேன் என்று பார்த்ததோ என்னவோ தலையைத் தூக்கி ஒரு படத்தை எடுத்து ஒரே குதி, தூரமே இருந்த என்னருகில் வந்து விழுந்தது அந்தப் பாம்பு. முடிகள் சில்லிட்டன எனக்கு. இப்போது நினைத்தாலும் அதே கதைதான். படத்தின் வியூபாயிண்டில் ஏதோ கோளாறு ஏற்பட வேறுபக்கமாய் வேகவேகமாகச் சென்றது. அதற்குள் ஒரே போடு. தோலை மட்டும் தனியாக உரித்துக் கொண்டு சென்று விட்டார் பாம்பு பிடிக்க வந்தவர். 

கோவை வீட்டின் முன்புறம் வேப்பமரம். முன்னாலே இரண்டு தென்னைமரங்கள், பின்புறம் இரண்டு தென்னை மரங்கள், கொய்யாமரம், கருவேப்பிலை, மருதாணிச் செடிகள் என்ற தோட்ட எஃபெக்டில் இருக்கும் வீட்டைச் சுற்றிலும் அதுகள் ராஜ்ஜியம் தான் அதிகம்.

நானும் மனையாளும் வெளியில் சென்று வீடு திரும்பினோம். வாயில் கம்பிகளில் ஒருவர் தொங்கி கொண்டிருந்தார். எதிர்த்த வீட்டுப்பையன் அதை பரலோக பிதாவிடம் அனுப்பி வைத்தான்.

வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். பத்து பனிரெண்டு அடி இருக்கும். ஊர்ந்து வந்து அப்படியே வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்புறமாகப் போனது. நான் உட்கார்ந்திருக்கிறேன் என்ற பயமெல்லாம் அதுக்கு இருந்ததா என்று தெரியவில்லை. பெட்ரூம் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு மயில்கள் ஆட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பனிரெண்டடி ஜீவன் வேலியோரம் இருந்த இண்டு இடுக்குகளில் தலையை நீட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தது. பசங்களை அழைத்துக் காட்டினேன். நாங்கள் பார்ப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

மனையாள் மேல் நிலைத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மோட்டார் போடச் செல்லும் போது அருகிலிருக்கும் சின்னக் குச்சியின் மீது ஏறி தலையை நீட்டி அம்மணியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் எங்கோ சென்று விட்டது. பயத்தில் முகமெல்லாம் வெளிறிப் போய் வெடவெடத்துக் கொண்டிருந்தார்.

இரவு பால்காரர் பால் ஊற்ற வரும் போது சின்னஞ் சிறிய அதுவை அம்மணி தெரியாமல் மிதித்தே முக்தி அடைய வைத்து விட்டார். அது என்ன பாம்பு? மிதித்ததால் விஷம் ஏதும் பட்டிருக்குமோ என்ற பயத்திலே இருந்தார். நானோ தூங்குவதாக பாவனை செய்து கொண்டு இரவுகளில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

சமீபத்தில் மனையாளுக்கு கையில் பிராக்சர் ஏற்பட்டதால் பூச்சியூர் வைத்தியரிடம் வாரா வாரம் சென்று வந்து கொண்டிருந்தோம். வைத்தியரைப் பார்த்து விட்டு வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்குச் சென்று வருவது வாடிக்கை. ஆசிரமத்திற்குச் செல்லும் போது அங்கு வரும் மெய்யன்பர்களுக்கு உணவு சமைக்க கொஞ்சம் காய்கறிகளை வாங்கிச் செல்வேன். கடந்த மாதம் கையை நீவி விடுவதற்காக பூச்சியூர் சென்றோம். ஆசிரமத்திற்காக வடவள்ளி உழவர் சந்தையில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கிக் கொண்டு பூச்சியூர் சென்றோம். 

பூச்சியூர் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டு ஹோண்டா ஆக்டிவாவின் பின் சீட்டைத் திறந்து காய்கறிகளை சீட்டின் அடியில் வைக்கலாம் என்று நினைத்து திறந்தபோது சீட்டின் லாக் செய்யுமிடத்தில் சுருண்டு படுத்திருந்தது அது. வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம். அந்தப் பாம்பு என்னுடன் கூடவே வந்திருந்திருக்கிறது. ஆடவில்லை அசையவில்லை. நிஷ்டையில் இருந்தது அது. கொஞ்சம் அதிர்வு ஏற்பட்டாலும் பாம்புகள் வெளியில் சென்று விடும். ஆனால் இந்தப் பாம்போ யோகத்தில் இருந்தது. மனதுக்குள் சிலீர் என்றது.  

அங்கிருந்த சலூன்காரர் கம்பினைத் தூக்கிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும், ”அய்யோ அது சுருட்டை” என்றுச் சொல்லி தூரப்போய் விட்டார். பின்னர் வயதான போலீஸ்காரர் அதன் நிஷ்டையைக் கலைத்து வெளியில் தூக்கிப் போட்டு மோட்சத்துக்கு அனுப்பி வைத்தார். மனையாள் பதறிக் கொண்டிருந்தார். அந்த சிலீர் ஏற்பட்ட பிறகு நடுக்கமாக இருந்தது. அந்தச் சுருட்டை இருக்கிறதே தலையைத் தூக்கி ஒரு சீறு சீறி விட்டு செல்லமாய் கடித்து வைப்பாராம். கடுமையான விஷம் கொண்டவராம் அந்தச் சுருட்டை. 

ஆக்டிவாவை சர்வீஸ் செய்து பாலீஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டேன். ஆனாலும் தினமும் வண்டியை எடுக்கும் போது சுருட்டையின் நினைவு வருவதும் பின் சீட்டினை திறந்து பார்ப்பதுமாய் இருக்கிறேன். 

காதலி மட்டும் தான் எப்போதும் நினைவிலிருப்பாள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்? என்று தினமும் நினைத்துக் கொள்வதுண்டு. பாம்பென்றால் படையே நடுங்குமாம். நானென்ன சுண்டைக்காய்!

Monday, December 12, 2016

விதை முளைக்க உமி தேவையில்லை

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே மதத்தின் வழி அடையாளப் படுத்தப்படுகின்றான். எவரும் தப்ப முடியாது. பெயராலோ, இனத்தாலோ அல்லது எதுவோ ஒன்றாலோ அவன் இன்னவன் என்கிறபடி அடையாளப் படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறான். மதங்கள் பிறப்பதற்கு முன்பு மனித வாழ்வு இப்படி இல்லை. அவன் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்தான். 

எப்போது மதங்கள் உருவானதோ அப்போதே அவன் வாழ்க்கையை இழந்தான். 

அவனைச் சுற்றி மதங்கள் வழிபாடுகள் என்ற சிறைக்கம்பிகளை வைத்துச் சிறைப்படுத்தின. இனி அவன் எந்தக் காலத்திலும் சிறையிலிருந்து வெளி வர முடியாது. அந்தச் சிறை அவனுக்கு கடும் துன்பத்துடன் கூடிய மரணத்தை மட்டுமே பரிசளிக்கும். வாழ்க்கை அவனை விட்டு தூர ஓடி விட்டது. இயற்கையாக மலர வேண்டிய மரணத்தை துன்பகரமாக்கி துயரத்தில் ஆழ்த்தி கொன்று விடுகிறது. மதம் என்பது அனுபவம், முன்னாள் சென்றவர்களின் வழிச் சுவடுகள் இன்றி ஒவ்வொரு மனிதனும் தனியாகத்தான் பயணம் செல்ல வேண்டும் என்கிறார் ஓஷோ.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் கடுமையான மன அழுத்தமேற்பட மன அமைதிக்காக வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றேன். உறவுகள், நட்புகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தொழில் செய்பவர்கள் என பலராலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோமே இது என்ன விதமான உலகம் என்று புரிந்து கொள்ள முடியாமல் திணறினேன். முகத்துக்கு முன்னால் ஒரு பேச்சு முதுகுக்கு பின்னால் வேறொரு பேச்சு பேசுகின்ற நண்பர்களால் மனது வெம்மையாகி புழுங்கியது. பல்வேறு உடலியல் சிக்கல்களில் இருக்கும் எனக்கே மனச்சாட்சியை இழந்து துரோகங்கள் இழைக்கப்படுகிறபோது ஏற்படும் அதிர்வுகளில் மனம் சிக்கி சிதிலமடைந்து கொண்டிருந்தது. வாழ்வியல் சிக்கல்களை அவிழ்க்கும் முடிச்சு தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். எது வாழ்க்கை எனப் புரியாமல் எனக்குள் சிதறிக் கொண்டிருந்தேன்.

சிங்கா நல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் செல்லும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று ’டீ சாப்பிடலாம்’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே வண்டியை விட விஜயா பதிப்பகத்தின் புக் ஸ்டால் இருந்தது. அதில் காட்சிப்படுத்தியிருந்த புத்தகத்தில் ஓஷோ கைகளை நீட்டியபடி நின்று கொண்டிருந்தார். எனது கல்லூரி காலத்தில் ஓஷோவின் ’ஒரு கோப்பை தேநீர்’ புத்தகம் கிடைத்தது ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டின் ஓரமாக வண்டியில் அமர்ந்துகொண்டு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

வீட்டுக்கு வந்தும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மனிதர்களைப் புரிந்து கொண்டேன். வாழ்க்கையை புரிந்து கொண்டேன். மதங்களைப் புரிந்து கொண்டேன். எல்லாம் வெளிச்சமானது போலத் தெரிந்தது. 

நேற்று ஓஷோவின் பிறந்த நாள். அவர் உண்மையைப் பட்டவர்த்தமாகச் சொன்னதால் 22 நாடுகள் சேர்ந்து விரட்டின. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவரின் உண்மையோ இன்றும் பேசிக் கொண்டே இருக்கிறது. எனக்கு வெளிச்சத்தை உணர வைத்த அவரை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லா மதங்களையும் அவர் ஆராய்ச்சி செய்தார். அதன் பலாபலன்களை விவரித்தார். இந்து மதத்தை பூசாரிகளின் ஆதிக்கம் நிறைந்தது அங்கு கடவுளே இல்லை என்றார். முஸ்லிம் மதத்தை விமர்சித்தார். கிறிஸ்து மதத்தை மரணக் குறியான சிலுவையை வணங்கும் மதம் என்று காட்டமாக விமர்சித்தார். பிறப்பும் இறப்பும் இயற்கையானது. இடைப்பட்ட வாழ்வில் வாழ்க்கைத்தானிருக்கிறது. அதை மனிதன் வாழ வேண்டும் என்றார். 

மதம், இனம், மொழி, தேசம் என்கிறவை எல்லாம் மனிதனுக்கான தளைகள். அவைகளால் மனிதன் சிறைப்படுகின்றானோ ஒழிய அவன் வாழ்க்கை சின்னப்படுத்தப்படுகிறதோ ஒழிய அவனுக்கு நன்மை தருவதில்லை என்கிறார். தனி மனித பிரச்சினைகளுக்கு இவையே காரணம் என்று சாடுகிறார்.

ஜைன மஹாவீரர், புத்த மதங்களையும் தத்துவங்களையும் அவர் அலசி ஆராய்ந்தார். முடிவில் எல்லோராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜென் என்பது மனிதனுக்கானது என்று விவரித்தார். 

ஜென் மதமும் அல்ல சித்தாந்தமும் இல்லை அது எதுவுமே இல்லை என்றார். எதுவுமே இல்லாத ஒன்று தான் மனிதனுக்கு முழுமையான வாழ்க்கையைத் தருகிறது என்றார்.

சலனமற்ற, சிந்தனையற்ற மன நிலையை எவனொருவன் அடைகின்றானோ அவன் இந்த சமூக வாழ்க்கையிலிருந்து வெகு எளிதாக தன்னை மீண்டெடுத்து தனக்கான வாழ்க்கையை வாழ்வான் என்று தனது உரைகள் மூலம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் ஓஷோ.

மனிதனின் தற்போதைய வாழ்க்கையை அவர் ஒரு கதை மூலம் விவரிக்கிறார். இதோ கதை!

முல்லா நஸ்ருதீனின் சமாதியில் ஒரு பெரிய மரக்கதவு பொருத்தப்பட்டுள்ளது. அது அடைத்துப் பூட்டப்பட்டிருக்கிறது. யாரும் அதற்குள் நுழைய முடியாது கதவின் வழியாக. அது அவருடைய கடைசி வேடிக்கை. அந்தச் சமாதிக்கு நான்கு சுவர்களே இல்லை. வெறும் பூட்டிய கதவு மட்டுமே. முல்லா நஸ்ருதீன் தம் சமாதியை எப்படி அமைத்தாரோ, அப்படித்தான் ஒவ்வொருவரும் தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர் அறியாமலேயே! வாழ்க்கை பாதுகாப்பின்மையானது. அது தான் நிதர்சனம். அதை உணர்ந்து கொள்ள வேண்டும். விஷயம் அவ்வளவுதான். 

அதிகாரம், பதவி, பணம், இறையருள், ஆத்மபலம் ஆகியவைகளால் உருவான கதவினால் பூட்டப்பட்டிருக்கும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைப்பதே எவ்வளவு அனர்த்தம்? இது மட்டுமல்ல மனிதன் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வதுதான் ஆகப் பெரும் முட்டாள் தனமானது. 



ஒவ்வொரு மனிதனும் மதத்தின் வழியாக நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றான். எதார்த்தமான வாழ்க்கை வாழாமல் நெறி முறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இறந்து போய் விடுகிறான். ஒரு கதை ஒன்று உங்களுக்காக ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஓர் இருண்ட இரவில், ஒரு பக்கிரி பாழ்கிணற்றின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்த போது, அபயக்குரல் கேட்டு எட்டிப் பார்த்தார். “என்ன ஆச்சு?” என்று கிணற்றுக்குள் பார்த்துக் கேட்டார். “ஐயா, நான் ஓர் இலக்கணப் புலவன். துரதிர்ஷ்டமாக உள்ளே விழுந்து விட்டேன், வழி தெரியவில்லை, அதனால் தான், இப்போது நகர முடியவில்லை” என்றார் உள்ளே கிடந்தவர்.

“இரப்பா! ஒரு ஏணியும் கயிறும் கொண்டாறேன்” என்றார் பக்கிரி.

“ஒரு நிமிடம்! உங்கள் பேச்சு இலக்கணப் பிழை. அதை நான் திருத்தி விடுகிறேன்” என்றார் உள்ளே விழுந்தவர்.

”ஏணியையும், கவுத்தையும் விட அது முக்கியம்னா, நான் நல்லாப் பேசக் கத்துக்கிற வரை நீ அங்கேயே கெட!” என்றுச் சொல்லி நகர்ந்தார் பக்கிரி.

(பிரேம் உங்களுக்குப் புரிகிறதா?)

ஓஷோ உண்மையின் உரைகல். எதார்த்தமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான உரைகளை ஓஷோ வழங்கி இருக்கிறார். அவரை நாம் பின் தொடர வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய அவரின் கருத்துக்களை புரிந்து கொள்ளலாம். அதன் உண்மையை ஆராயலாம், எது சரி எது தவறு என்ற முடிவெடுக்கலாம். நாமும் புதிதாகச் சிந்திக்கலாம். அதன் தொடர்ச்சியாக வெளிச்சமடையலாம். 

ஒவ்வொருவருக்குள் வெளிச்சம் ஏற்பட வேண்டும். அதுவே உண்மையான வாழ்க்கை!

குறிப்பு : ஜெயமோகன் அவர்கள் தனது பிளாக்கில் தமிழ் இந்துவில் எழுதப்பட்ட கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார். விசித்திர புத்தர் என்று தலைப்பிட்டிருந்தார். ஓஷோ அடையாளப்படுத்தப்படுவதைத்தான் உடைத்தார். ஓஷோ புத்தரையே சின்னாபின்னமாக்கினார். புத்தமதத்தை கேள்விகளால் துளைத்தெடுத்தார். ஜைன மதத்தின் ஆணி வேரையே அசைத்தார். ஓஷோ வந்து சென்றவர். புத்தரல்ல!

அதுமட்டுமல்ல ஓஷோவின் கேலியும் கிறுக்கும் இன்றைய நவீன ஊடங்களில் விரவிக்கிடக்கின்றன என வெட்டி அரட்டையும் அர்த்தமில்லா பதிவுகளையும் கொண்ட நவீனமய விளம்பர உத்திகளை தன்னகத்தே அடக்கிய இணையதள ஊடகங்களும் கருத்துக்களும் ஓஷோவின் உடைத்தல்களும் ஒன்றானவை என்பது போல எழுதி இருப்பது சரிதானா? என்றொரு கேள்வியை எனக்குள் எழுப்பி இருக்கிறது. 

Wednesday, December 7, 2016

வாழ்க்கை சொல்லும் நியதி - ஜெயலலிதா அம்மா

நேற்று இரவு 7 மணி வரை டிவி முன்பு உட்கார்ந்து விட்டேன். ஆறாம் வகுப்புப் படிக்கும் போது என நினைவு. இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்டார் என்ற ரேடியோ தகவல் வர நான் படித்த ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உடனடியாக லீவு விட்டு விட்டார்கள். ஆனால் கண்டிப்பாக மறு நாள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளியின் சார்பாக அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என்று வாத்தியார்கள் சொல்லி இருந்தார்கள். 

மறுநாள் பள்ளிக்குச் சென்ற போது ஹெச்.எம். என்னை அழைத்து ஊர்வலத்தின் முனையில் மூன்று சக்கர வண்டியில் தான் போட்டோவை வைத்து அலங்கரித்து செல்ல இருக்கிறோம் என்றுச் சொன்னார். அதன்படி சைக்கிளில் அம்மையார் இந்திராவின் போட்டோவை முன்புறம் வைத்து பூக்களால் அலங்கரித்து நடுவில் அடியேன் உட்கார ஊர்வலம் கிளம்பியது. பின்னால் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் வரிசையாக வந்தனர். வழியெங்கும் மக்கள் சைக்கிள் முன்பாக வீழ்ந்து வணங்கினர். சிலர் கும்பிட்டனர். ஒரு சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆவணம் கடைத்தெரு தாண்டி பள்ளி வாசல் வழியாக கைகாட்டி வரை சென்று ஆலமரங்கள் இருக்கும் பகுதியில் இருந்த டிவைடரைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் ஆவணம் கடைத்தெருவுக்கு வந்து போட்டோவைக் கழற்றி, அங்கு கொடிக்கம்பினருகில் வைக்கப்பட்டிருந்த அம்மையார் இந்திராவின் போட்டோவின் முன்பு அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர் மறைவின் போது இதே போன்று அமைதி ஊர்வலத்தில் முனையில் அடியேனின் சைக்கிளில் போட்டோ வைத்து கலந்து கொண்டேன். மதியம் போல ஐயோபி பேங்க் அருகில் இருந்த முஸ்லிம் ஒருவரின் வீட்டில் இருந்த பிளாக்கண்ட்வொயிட் டிவியில் லைவ் ரிலே பார்த்தேன். சிறிய வயதில் எனக்கு எம்.ஜி.ஆரின் மறைவும், இந்திராவின் மறைவும் மனதுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடவில்லை. ஆனால் ஜெவின் மறைவு பெரும் மனத்துன்பத்தைத் தந்து கொண்டே இருந்தது. 

நேற்றைக்கு முழுமையும் மனதுக்குப் பாரமாக இருந்தது. சாப்பிடக்கூட முடியவில்லை. சிறிய வயதில் வீட்டுக்குள்ளும்,  மாட்டு வண்டியிலும் புகைப்படமாக பார்த்து வளர்ந்தவன். மனதுக்குள் பதிந்த அதீத ஆளுமையாக இருந்தார். தாய் மாமா அம்மாவின் பக்தர். அவரின் வளர்ப்பு நான். மாமாவைப் போலவே அம்மாவின் மீது பேரன்பு கொண்டவன்.

சாதாரண மனிதர்கள் விதி என்பார்கள். நானும் அதைத்தான் நம்புகிறேன். விதி அவருக்கான வாழ்க்கையை முற்றிலுமாய் ஆக்கிரமத்திருந்திருக்கிறது. அவரின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கான விதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. எப்படி என்றுச் சொல்கிறேன்.

எம்.ஜி.ஆர் மறைவின் போது தனியாளாக நின்று கொண்டிருந்தவரை கடைசி நிமிடத்தில் ராணுவ வண்டியில் ஏற விடாமல் விரட்டியது. எதிர்கட்சித் தலைவராக இருந்த போது சட்டசபையில் தாக்கப்பட்டது. முதலமைச்சரான போது தத்து எடுத்த நிகழ்வின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டது. கும்பகோணத்தில் சாமி கும்பிடப்போன இடத்தில் கூட விதி தன் விளையாட்டைக் காட்டியது. இரண்டாம் முறை முதலமைச்சரானபோது பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் பதவி போனது, பின்னர் மீண்டும் முதலமைச்சரானது. முதலமைச்சராய் இருந்த போது கைதானது. இதோ தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சரான போது ஆயுள் முடிந்தது.

அவரின் வாழ்க்கை நமக்கு பல்வேறு உண்மைகளைச் சொல்கிறது. எதுவும் எவருக்கும் முழுமையாக கிடைத்து விடுவதில்லை. அதிகாரம், புகழ் அனைத்தும் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருந்தார். அவரின் ஒவ்வொரு மகிழ்வான தருணத்திலும் தொடர்ந்து துன்பங்களும் அவருக்கு வந்து கொண்டே இருந்தன. இன்பத்தையும் துன்பத்தையும் அவர் ஒன்றாகவே அனுபவித்து வந்துள்ளார். 

அவர் தனக்காக வாழவே இல்லை. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த உண்மையான அம்மா அவர் மட்டுமே. 

Tuesday, December 6, 2016

அம்மா அம்மா அம்மா



கடந்த 75 நாட்களாக மனதைக் கனக்கச் செய்த நிகழ்வு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. எனது மாமா ஜெயின் தீவிர ரசிகர். ஆவணம் கிராமத்தில் பிரச்சாரத்திற்கு வந்தபோது அவருடன் மேடையில் ஒன்றாக அருகில் நின்றிருக்கிறார். அக்கா அதிமுக தஞ்சாவூர் மாவட்ட பிரதிநிதி. ஒவ்வொரு தேர்தலின் போதும் வீடு முழுவதும் அதிமுக கொடிகளும், இரட்டை இலை பொறித்த சின்னங்களும் கிடக்கும். நான் அவைகளை எடுத்து, “போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையைப் பார்த்து” என்று கூட்டமே இல்லாத இடத்தில் கத்திக் கொண்டிருப்பேன்.

வருடம் தோறும் ஜனவரி ஒன்றாம் தேதியன்று மாமா எம்.ஜி.ஆரின் புகைப்படத்தினையும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தினையும் கொண்டு வந்து வீட்டினுள் சுவற்றில் பாங்காக பிரமேட்டு வைப்பார்.

மாட்டு வண்டியில் ஒரு புறம் எம்.ஜி.ஆர் புகைப்படம், மறுபுறம் அம்மா புகைப்படத்தினை ஆர்ட்டிஸ்ட் வைத்து வரைந்து வைத்திருப்பார். சிறிய வயது முதலே அம்மாவைப் பார்க்க வைக்கப்பட்டு வளர்ந்தவன். 

முதன் முதலாக அடியேனுக்கு ஓட்டுப் போடும் வயது வந்து முதல் ஓட்டு போட்டது அதிமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சிக்குதான். அது முதல் என் ரத்தத்திலேயே ஊறிய நிகழ்வு ஓட்டுப் பெட்டியைப் பார்த்ததும் கைகள் தானாக இரட்டை இலை நோக்கிச் சென்று விடும்.

எத்தனையோ அனாதை இல்லங்களில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அந்த நிறுவனத்தின் காப்பாளர்தான் அம்மாவும் அப்பாவும் ஆக இருப்பர்.அதே போல கிட்டத்தட்ட இரண்டு கோடி பேரின் உள்ளத்தில் அம்மாவாக வாழ்ந்து வந்தவர் அவர். மனதைக் கனக்கச் செய்யும் நிகழ்வு நடந்து விட்டது. இந்த வயதிலா இறக்க வேண்டும் என்ற பதைபதைப்பு ஏற்பட்டுக் கொண்டே மனதைக் கீறிக் கொண்டே இருக்கிறது. 

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக் கொள்கிறேன்.


Saturday, December 3, 2016

உயிர் எங்கே இருக்கிறது?

கடந்த செவ்வாய் கிழமையன்று மனையாளுக்கு கையில் ஏற்பட்ட ஜவ்வு பிரச்சினையால் போடப்பட்ட முட்டைக்கட்டினைப் பிரித்தெடுக்க பூச்சியூருக்குச் சென்றோம். பூச்சியூரில் சிங்கிரிபாளையம் வைத்தியர்கள் எலும்பு முறிவுகளுக்கு சிகிக்சை அளிக்கின்றார்கள். ஆக்டிவாவை ஸ்பீடு பிரேக்கரில் கொஞ்சம் வேகமாக ஏற்றி விட்டேன். படக்கென்று சற்று உயரப் போய் வந்ததால் வண்டியில் பிடித்திருந்த பிடியை இறுக பிடித்திருக்கிறார். சுருக்கென முழங்கைக்குள் வலி வந்து விட்டது. எனக்கொன்றும் ஆக வில்லை. 

மறுநாள் முழங்கைக்கு மேல் பகுதியில் வீக்கமும் வலியும் ஏற்பட நீவி விட்டு வரலாமென்று சிங்கிரிபாளையத்து வைத்தியரிடம் சென்றால் கையில் சிம்புகளை வைத்து பெரும் கட்டாகப் போட்டு விட்டார்கள். வலி பின்னிப் பெடலெடுத்து விட்டது என அழுகாத குறை. அடுத்த ஐந்தாவது நாளில் மேலும் ஒரு கட்டு அடுத்த பத்தாவது நாளில் முட்டைக்கட்டு அடுத்த பத்தாவது நாளில் கட்டினைப் பிரித்து நீவி விட வலியில் கதறி விட்டார். சிங்கிரிபாளையம் வைத்தியர்கள் கைலி கட்டிக்கொண்டு பாய் மீது அமர்ந்து கொண்டு எலும்பு முறிவுகளோடு வருகின்றவர்களுக்கு சிகிக்சை அளித்து வருகின்றார்கள். 

இருபத்தைந்து நாட்களாக வீட்டு வேலை, பள்ளிக்குச் சென்று வருதல் என வேறு எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. ஒரு சிறிய நிகழ்வு ஒரு மாதம் முடக்கி விட்டது. மனிதர்களின் வாழ்க்கை என்பது இதுதான். அடுத்த நொடியில் என்ன நடக்குமென்று தெரியாத திகில் வாழ்க்கைதான். எல்லாவற்றுக்கும் தயாராக இருத்தல் வேண்டும்.

வடகிழக்குப் பருவ மழை பொய்த்து விட்டதனால் செடி கொடிகள் மரங்கள் எல்லாம் தன் பசுமையை இழந்து வெளுக்க ஆரம்பித்திருந்தன. நொய்யல் ஆற்று நீர் கொஞ்சமே கொஞ்சமாய் வடிந்து கொண்டிருந்தது. பச்சைப் பட்டாடை போல மின்னும் வெள்ளிங்கிரி மலை வெளுத்துப் போய் இருந்தது. ஆடு மாடுகளைக் காணவில்லை. விவசாயமும் சரியாக இல்லை.

ஆழ்துளைக்கிணற்று நீரை வைத்து விவசாயம் செய்ய முடியாது. ஏதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் செய்யலாம். காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டார்கள். ஆனால் கடைமடைப் பகுதியான தஞ்சாவூர் பகுதிக்கு தண்ணீரே சென்று சேராமல் வயல்கள் தரிசாகக் கிடக்கின்றன. அரிசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காவிரி நீர் போராட்டம் பிசுபிசுத்து விட்டது. இனி விவசாயிகளைக் கவனிக்க ஆளேது. இருந்த ஒருத்தரும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். இதற்கிடையில் கள்ளப்பணம் பிரச்சினை. இத்தனைப் பிரச்சினைகளுக்குள் மனிதன் வாழ வேண்டும். 

கவுண்டர் நண்பரின் தோட்டத்துக் கிணறு தண்ணீர் வற்றி விட விவசாயம் கருகி விட்டது. மாடுகள் தீவனமின்றி பரிதவிக்க ஆரம்பித்தன. மேலும் ஆழத்தில் தண்ணீர் எடுக்க இருந்த மாடுகளில் ஒன்றினை விற்று விட்டார். அவருக்கு அது ஒன்றுதான் வருமானம். அதுவும் இல்லையென்றால் அவரின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு நாள் ஒரே ஒரு நாள் தண்ணீர் இன்றி இந்த உலகம் இருக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள். உடம்பு சில்லிடும். மனிதனின் உயிர் எங்கே இருக்கிறது என்று இனி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விஷயம் அவ்வளவுதான்.

Saturday, November 26, 2016

காயகப்பல்

சமீபத்தில் சித்தர் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்த போது கிடைத்த அறிய பாடல் இது. பாடல் புரியும் என்று நினைக்கிறேன். எவ்வாறு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது போனதோ அதே போல ஒரு நாள் செல்லாது போகும் இந்த உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சித்தரொருவர் பாடி வைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். 

சிந்தை குலைந்து மனம் சிதறி நிற்கையில் கொஞ்ச நேரம் இப்பாடல்களைக் கேளுங்கள். சிந்தை தெளிந்து சீராவீர்கள்.

இனி சித்தரின் அபூர்வ பாடல் :

ஏலேலோ ஏகரதம் சர்வரதம் 
பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ. 

பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து 
பாங்கான ஓங்குமரம் பாய்மரம் கட்டி 
நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம் 
மானாபிமானங் கயிறாகச் சேர்த்து 

ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றி 
ஐம்புலன் தன்னிலே சுக்கானிருத்தி 
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி 
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து 

தஞ்சலான வெள்ளத்தில் தானே 
அகண்டரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோ. 
களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு
கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல் 

நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் 
மூக்கணைமுன்றையுந் தள்ளுடா தள்ளு 
முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல் 

திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு 
திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல் 
பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு 
பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ ஏலேலோ

தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து
தாரம் சகோதரம் தானதும் மறந்து
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து 
பதினாலு லோகமும் தனையும் மறந்து

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி
ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி 
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்
அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ.

பாடல் பாடிய சித்தர் அடியினைப் பணிந்து இப்பாடலை பதிவிடுகிறேன். 
நன்றி குருவே !

Wednesday, November 23, 2016

கரட்டான்

இன்னும் வங்கிகளில் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. சிறுவாட்டுப் பணத்தை எப்படி மாற்றுவது என்று கிழவிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த பாட்டி சிறுவாட்டுப்பணமாய் பத்தாயிரம் வைத்திருக்கிறது. பாட்டியின் பக்கத்து வீட்டுக்காரர் நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் கமிஷன் கேட்க பாட்டிக்கு ஆக்சிலேட்டர் எகிறி இருக்கிறது. பாட்டிக்கு சரியான கோபம் வந்து விட்டது. ஒன்றுமே சொல்லாமல் முறைத்துக் கொண்டு போய் விட்டது. ஆனால் அந்த கமிஷனால் ஏற்பட்ட கோபத்தில் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் இப்போது தினமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். பார்க்கும் போதெல்லாம் கரிச்சுக் கொட்டும் பாட்டியைப் பார்த்தாலே எமனைப் பார்ப்பது போல எகிறிக் குதித்தோடிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் பாட்டியிடம் மொத்த காசையும் வாங்கி, அது வைத்திருக்கும் கேஸ் கனெக்‌ஷன் அக்கவுண்டில் போட்டு, பாஸ்புக்கில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்து விட்டார். பாட்டி இன்னொரு பக்கத்து வீட்டுக்காரருக்கு எள்ளுருண்டை, எள்ளடை எல்லாம் செய்து கொண்டு போய் கொடுக்கிறார். அத்தோடு இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி என்னெவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் கிழவிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது கமிஷன் விஷயம். இவரைப் பார்க்கும் கிழவிகள் எல்லாம் என்னவோ பெரிய குற்றம் செய்து விட்டதாக தங்களுக்குள் அவரைப் பார்த்து ஆள் காட்டி விரலைக் காட்டிப் பேசப் பேச ஆள் என்னவோ மாதிரியாகத் திரிகின்றார்.

யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். பாட்டியின் வாயில் விழுந்து தினம் தினம் வறுபட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆள் இப்போது சோகமாகத் திரிந்து கொண்டிருக்கின்றாராம். அவரிடம் கொஞ்சம் பெண் தன்மை அதிகம். ஆகையால் அவர் பாட்டியிடம் வாங்கிய பேச்சுக்களை மோடியிடம் திருப்பிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி படத்தை கண்ணாடியில் ஒட்டி வைத்துக் கொண்டு தினமும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மனைவிக்கோ இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 

இப்படியெல்லாமா மனிதனுக்கு பிரச்சினைகள் எழும்? என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. யாராவது கிராமத்துப் பாட்டியிடம் முயற்சித்துப் பாருங்களேன்.

இளம் வயதில் நான் செய்த ஒரு செயல் இப்போது என்னை பீதியில் தள்ளி விட்டிருக்கிறது. விஷயம் தெரியாத வயதில் செய்த செயலுக்கெல்லாம் இப்போது பயந்தே ஆக வேண்டிய சூழல். விஷயத்தைச் சொல்கிறேன். கேளுங்கள். 


வீட்டின் வடக்குப் பக்கமாக கிணற்றடி. கிணற்றின் கிழ புறமாக காசாலட்டு மாமரம் விரிந்து பரந்து இருக்கும். தாழ்ந்த கிளைகள் உண்டு. அதில் கயிறு கட்டி ஊஞ்சல் செய்து ஆடிக் கொண்டிருப்பேன். மாமரத்தின் வடபுறமாக வேலி. வேலியில் ஓங்கி வளர்ந்த பனைமரம் ஒன்று இருந்தது. ஒரு நாள் மதியம் போல இருக்கும். ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தவன் பனைமரத்தின் உச்சியில் பார்க்க அகலமான கண்களுடன் சாம்பல் நிறத்தில் பெரிய பறவை ஒன்றினைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்குள் நடு நெஞ்சில் சிலீர் என்று பயம் ஏற்பட்டது. சரியாக அது தலையை நான்கு புறமும் சுத்த அதைக் கண்டு பயந்து அம்மா அம்மா என்று அலறிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அம்மாகிட்டே கேட்டால் அது ஆந்தை என்றார்கள். அன்றிலிருந்து ஆந்தை என்றாலே எனக்கு ஆகாது. இருந்தாலும் யாராவது விளையாடுவதற்கு கூட வந்தால் மாமரத்தின் ஊஞ்சலுக்குச் சென்று விடுவேன். கண் ஒரு பக்கம் பனைமரத்தைப் பார்த்தாலும் உச்சியினைப் பார்க்காது. அவ்ளோ பயம்.


இன்னொரு சம்பவமும் எனக்கு ஏற்பட்டது. காசாலட்டு மாமரத்தில் காய்கள் பிடித்தவுடன் தொரட்டி வைத்து மாங்காய்களைப் பிடுங்கி வைக்கோல் போருக்குள் வைத்து விடுவேன். தினமும் எந்த மாங்காயாவது பழுத்து இருக்கிறதா என்று பார்ப்பேன். மாங்காய் பழுத்து விட்டால் நன்றாக அழுத்திப் பிசைந்து விட மாம்பழம் கொழ கொழவென ஆகி விடும். நுனியில் ஒரு ஓட்டையைப் போட்டு விட்டு உறிஞ்சினால் மாம்பழ ஜூஸ். அடியேன் கண்ட மேனிக்கு மாம்பழத்தைத் தின்பதுண்டு. வீட்டில் வியாபாரிக்கு விற்றது போக மீதமுள்ள மாங்காய்களை வேப்பந்தழையில் போட்டு பழுக்க வைப்பார்கள். அந்தக் கணக்கு வேறு. ஆனால் யாருக்கும் தெரியாமல் நான் கொஞ்சம் மாங்காய்களை வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்து சாப்பிடுவதுண்டு. மாம்பழத்தின் ருசி அப்படி. அப்படி ஒரு நாள் பதுக்கி வைத்திருந்த மாங்காய்களை வைக்கோல் போருக்குள் கையை விட்டு பார்க்க ஏதோ தட்டையாக இருந்தது. யாரோ விளையாண்டு விட்டானே என்ற கோபத்தில் அதை இழுத்து வெளியில் போட மல்லாக்க விழுந்தது அந்த வஸ்து. என்ன வஸ்து என்று தெரியாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை குப்புற தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் அது மெதுவாக நகன்றது. பயத்தில் அம்மா என்று அலற அனைவரும் ஓடி வர பார்த்தால் அது ஆமை. அம்மா என்னைக் கண்ட மேனிக்குத் திட்ட ஒரு வழியாக ஆமையை தீயை வைத்துக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்தார்கள். இனிதான் விஷயமே இருக்கிறது.

(கரட்டான் என்றழைக்கும் ஓணான்)

ஞாயிற்றுக் கிழமைகளில் மாமா பையன் விட்டியன் என்னுடன் விளையாட வந்து விடுவான். அவனுக்கு ஏன் விட்டியன்னு பெயர் வந்துச்சுன்னு தெரியாது. விட்டிப்பயலைக் கூப்பிடு என்றுதான் சொல்வார்கள். நானும் அவனும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு கரட்டானுக்குச் சமாதி என்று அர்த்தம். அவன் கைகாட்டி தோட்டத்து வீட்டில் இருந்து வரும் போதே தென்னை ஓலையின் ஈர்க்கைக் கொண்டு வந்து விடுவான். ஈர்க்கு நரம்பு போலவே இருக்கும். நுனியில் சுறுக்குப் போட்டால் அவ்வளவு எளிதில் கண்ணுக்குப் புலப்படாது. வேலியில் பதுங்கி இருக்கும் கரட்டானைச் சுறுக்குப் போட்டுப் பிடித்து அடித்துக் கொன்று விடுவோம். பின்னர் அதற்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்து மண்ணுக்குள் புதைத்தால் தான் இருவருக்கும் விளையாட்டு முடியும்.


பட உதவி சிறுகதைகள் தளம்

இப்படி பல கரட்டான்களைக் கொன்று கொன்று விளையாடிய நாட்கள் எப்போதாவது நினைவுக்கு வந்து செல்லும். கடந்த வாரம் ஒரு நாள் நானும் மனையாளும் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு வந்த போது நடு ரோட்டில் கரட்டான் நின்று கொண்டிருந்தது. சற்றே பெரிய கரட்டான் அது. நடு ரோட்டில் தலையைத் தூக்கிக் கொண்டு என்னை முறைத்துக் கொண்டு நின்றது. வண்டியை நிறுத்தி விட்டேன். மனையாள் ஒதுங்கிப் போங்க என்றார். இடது பக்கம் ஒதுங்கினால் இடது பக்கம் வந்தது. வலது பக்கம் திருப்பினால் வலது பக்கம் வந்தது. இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டு பின்னாலும் முன்னாலும் பார்த்தால் அந்த நேரம் பார்த்து ஒரு வண்டியும் வரவில்லை. கரட்டான் என்னைத் தடுக்க எனக்கோ பழைய நினைவுகள் வர சிலீரென்று பயமேற்பட்டது. நானும் விட்டிப்பயலும் கொன்ற கரட்டான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு புதிய பிறப்பாக பிறந்து இப்போது நேருக்கு நேராக மோத வந்து விட்டதோ என்று நினைத்தேன். விட்டியனுக்கும் எனக்கும் பாதிப் பங்கு ஆகவே கரட்டானே இருவரையும் ஒன்றாகப் பார்த்து தான் நீ சண்டைக்கு வர வேண்டும், இப்போது சென்று விடு என்று அதைப் பார்த்துச் சொன்னேன். அது அசைவதாகத் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து லாரி ஒன்று வர கரட்டான் சாலையோரம் ஒதுங்கியது. விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த போது வேப்பமரத்தின் மீது ஒரு கரட்டான் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்ப்பதும் பின்னர் தலையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தது. விடாது கரட்டான் போல! என நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட்டேன். இப்போது வேப்பமரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கரட்டானைத் தேடுகின்றன. அதைக் காணவில்லை. என்னை மன்னித்து விட்டதா? என்று தெரியவில்லை.

Sunday, November 20, 2016

ஆட்டுக்குட்டியும் புற்களின் வாசமும்

சின்னஞ் சிறிய பிராய மனசு. தெளிந்த நீரோடை போல இன்றைக்கு நினைத்தாலும் மனதை வருடும். அத்தகைய மனசு இருந்த இடத்தில் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் மனசு இருக்கிறது. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கொடுமையான நிகழ்வுகளை எல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்து அனுபவித்து தெளிந்த நீரோடை போன்ற மனதை அழுக்கு நிறைந்த சாக்கடையாக மாற்றிக் கொண்டே வருகிறோம். 

எனக்குள் உறைந்து கிடக்கும் அற்புதமான ஓவியம் சின்னஞ் சிறிய வயதில் நான் வளர்ந்த வீடு. என் வீடு அல்ல அது. என் தாய் பிறந்த வீடு அது. அகலமான கற்கள் பாவிய வாசல். மூன்று புறமும் செங்கற்கள் வைத்து அழகாக பூசப்பட்டிருக்கும். தெற்கு வாசல் வீடு. வடக்கேயும் வாசல் இருக்கும். வடக்குப் பக்கம்  குடத்தடி. வரிசையாக குடங்கள் தண்ணீர் நிரம்பி இருக்கும். குடத்தடியில் ஒரு மாமரம் இருக்கும். அழகான பூக்களைச் சொரிந்து கொண்டிருக்கும். இடது பக்கமாய் குப்பைக் கிடங்கு. கிடங்கினை ஒட்டியவாறு தென்புறமாய் கிழமேலாய் ஒரு கூரை வீடு. வேலைக்காரர்கள் தங்கிக் கொள்ளவும், ஆட்டுக்குட்டிகளையும், மாடுகளையும் கட்டி வைப்பதற்கு இருக்கும். குடத்தடியைத் தாண்டி கிழமேலாய் பெரிய வைக்கோல் போர் இருக்கும். இதற்கு வடக்குப் பக்கமாய் நான்கு பேர் சேர்ந்து கட்டிப்பிடித்தாலும் அடங்காத அளவில் பெரிய மாமரம். அதன் வடக்கே காசாலட்டு மாமரமும், ஒட்டு மாமரமும், பாவற்காய் போலவே காய்க்கும் ஒரு மாமரமும் வட மேற்கு மூலையில் தண்ணீர் வற்றவே வற்றாத கிணறும் அதைத்தாண்டி ஒரு பெரிய பனைமரமும் இருந்தது. 

பெரிய அகலமான ஓட்டு வீடு. திண்ணை, நடு வீடு, இரண்டு பக்கமும் இரண்டு அறைகள், பிறகு சமையல் கட்டு என்று பார்ப்பதற்கே படு ரகளையாக இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் அந்த வீட்டினை இடிக்கப் போகிறார் மாமா. அருகில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். பழையது ஆனால் குப்பைக் கூடைக்குத்தானே போக வேண்டும். 


வீட்டில் மாடுகளும், செம்மறி ஆடுகளும் அதிகம். பால் மாடும், கன்றுகளும் இருக்கும். வண்டி மாடுகள் இரண்டு ஜோடி இருக்கும். மழைக்காலங்களில் வயற்காடுகளில் இருந்து புற்கள் அறுத்துக் கொண்டு வந்து ஆட்டுகுட்டிக்கும் மாடுகளுக்கும் போடுவார்கள். கரக் கரக் என்று வாய் கொள்ளாமல் ஆட்டுக்குட்டிகளும் மாடுகளும் தின்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வாய் பேசாத ஜீவன்களுக்கு உணவிடுவதையும், அதுகள் வாய் கொள்ளாமல் தின்பதையும் காண்பதை விட மகிழ்ச்சியான தருணங்கள் ஏதுமில்லை. 

கோடைக்காலங்களில் ஆட்டுக்குட்டிகளையும், மாட்டு மந்தையினையும் வேலைக்காரர்கள் புல் மேய அழைத்துச் சென்று மாலையில் அத்தனையையும் கொண்டு வந்து கயிற்றில் கட்டி வைப்பார்கள். 

(உழவாரம் - புகைப்பட உதவி : ஜஃப்னா ஹெரிடேஜ்)

ஒரு கோடை நாள் என்று நினைக்கிறேன். வீட்டில் உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று விட்டனர். ஜெயராசு எங்கோ சென்று விட்டான். நான் மட்டுமே இருந்தேன். கொட்டகைப் பக்கம் வந்து பார்த்தால் பசியில் ஆட்டுக்குட்டிகள் கத்திக் கொண்டிருந்தன. எனக்கு மனசுக்குப் பொறுக்கவில்லை. ஜெயராசு எங்காவது ஒதுங்கப்போயிருப்பான் போல. கொலுசு ராவுத்தர் வீட்டின் அருகில் தரையில் படர்ந்து இருக்கும் புற்களைச் செத்தி எடுத்து வந்து கொடுக்கலாம் என்று நினைத்து உழவாரத்தை வைத்து தரையோடு தரையாக படர்ந்து கிடந்த புற்களை செத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக செத்தச் செத்த புற்கள் கையோடு வந்தன. எடுத்து மண்ணை உதறி விட்டு அருகில் வைத்திருந்த கூடையில் போட்டுக் கொண்டே வந்தேன். புற்களைப் பூமியில் இருந்து பறித்த போது அதன் வேர்கள் அறுந்து கூடையில் விழும் போது எழுந்த அற்புதமான வாசம் என்னைத் தழுவியது. மனது சிலிர்த்தது. மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் புற்களைச் செத்தினேன். கொண்டு வந்து ஆட்டுக்குட்டிகளிடையே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு செத்தையாக எடுத்து ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் கொடுக்கையில் அதுகள் கடித்து மெல்லுகையில் எழுந்த வாசம் இன்றைக்கும் என்னை விடாது சூழ்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்து போன ஒரு நாளில், பெரியசாமி கவுண்டர் தன் வீட்டுத் தோட்டத்தில் சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டியைக் கட்டி வைத்திருந்தார். அழகான சிறு ஆட்டுக்குட்டி அது. அருகில் வேப்பந்தழைகளைக் கட்டி வைத்திருந்தார். இழந்து போன எதையோ மீண்டும் பார்த்தைப் போல இருந்தது. அதைப் பிடித்துக் கொண்டு நானமர்ந்திருந்த கட்டிலில் கட்டி வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் அதன் தலையில் கையால் தட்டிக் கொண்டிருந்தேன். அது கோபமாய் பின்னே போவதும் பின்னர் முன்னே வந்து கால்களை உயரத் தூக்கி முட்டுவதுமாய் இருந்தது. நீண்ட நேரம் அது கூட விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் புல்லைத்தான் காணவில்லை. கவுண்டர் எங்காவது உழவாரம் வைத்திருக்கின்றாரா என்று தேடின என் கண்கள். 

“அங்கே என்னத்தை அப்படித் தேடுறீங்க?” என்றாள் மனைவி. 

பிளாக்கைப் படிக்கும் அன்பு நண்பர்களே! ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்களின் சின்னஞ் சிறிய பிள்ளைப் பிராயத்து நினைவுகளை கண்ணுக்குள் கொண்டு வாருங்கள். ஏதோ ஒரு வாசம் அந்தப் பிராயத்திலிருந்து விடாது உங்களையே சுற்றிக் கொண்டிருப்பது நினைவில் வருகிறதா? வரும்!

இனி தேடினாலும் கிடைக்கவா போகிறது உழவாரமும் அந்தப் புற்களின் வாசமும்?