குரு வாழ்க ! குருவே துணை !!

For Property Consultation (All Work) ::::: Phone : 9600577755 ::::: Email :covaimthangavel@gmail.com
Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Tuesday, October 25, 2016

தீபாவளியும் ஹிட்லரின் சதியும் ஒரு உண்மைச் சம்பவம்

வருடம் தோறும் தீபாவளி வருகிறது. வெடித்து விட்டுச் சென்று விடுகிறது. இப்படியான விழாக்கள் மக்களை செக்கு வாழ்க்கையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வளர் பிராயத்தினருக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பினை உண்டாக்குகிறது. பிறக்கிறோம் இறக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையின் மீதான அழகியலை இது போன்ற விழாக்கள் தான் உருவாக்கி காலம் காலமாக மனித கட்டமைப்பை விரிசல் விடாது பாதுகாக்கின்றன.

(2011ம் வருடம் ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தின் மீது அம்மு, ரித்தியின் அப்பத்தா குட்டியம்மாள் அவர்களுடன்)

இந்த வருடம் அடியேனுக்கு முறுக்குப் பிழிவதிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்து விட்டது. பெண் அச்சில் முறுக்கு மாவைச் சேர்த்துக் கொடுக்க பையன் முறுக்கு பிழிய ஹிட்லர் அடுப்பில் முறுக்கைச் சுட நான் தீபம் நா.பார்த்தசாரதியின் நூலில் மூழ்கி விட்டேன். கடந்த ஞாயிறு அன்று மாலை நேரம் முறுக்குச் சுடுவதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்த போதே நான் நைசாக உடல் வலிக்கிறது என்றுச் சொல்லி பெட்ரூமில் படுத்து விட்டேன்.

இல்லையென்றால் மூன்றுபடி மாவை ஒற்றை ஆளாக பிழிந்து கொடுப்பது என்றால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏண்டி இப்படிப் படுத்தறே என்றால் சர்ர்ரீங்க்க நீ....ங்க..... போ......ய்ய்ய்ய் ரெஸ்ட் எடுங்.....க..... என்ற குரல் இழுத்துக் கொண்டே முகம் கோணலாய் மாறியபடி வரும். கைகள் இரண்டும் முறுக்கு அச்சினை அழுத்தியதால் உண்டாகும் எரிச்சல் வலியை விட இந்த இழுப்புச் சேட்டை அவஸ்தைப் படுத்தி விடும். வேறு வழி முழுவதும் முடிந்தால் தான் தற்காலிக விடுதலை கிடைக்கும்.

இதுவாவது பரவாயில்லை. தீபாவளி அன்று இரவில் மெதுவடைக்கு வெங்காயம் நறுக்கிக் கொடுக்க வேண்டும். சுழியனுக்கு சுக்கு, வெல்லம் உடைத்து தர வேண்டும். பாலப்பத்திற்கு கட்டி இல்லாமல் மாவு கரைத்துக் கொடுக்க வேண்டும். அன்றைக்கு என்று சுடும் அதிரசத்திற்கு கூட இருந்து உதவி செய்ய வேண்டும். இட்லிக்குச் சட்னி அரைக்க நான்கைந்து தேங்காய் துருவித் தர வேண்டும். விடிகாலையில் வெந்நீர் போட்டு பசங்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல வேண்டும்கள் தீபாவளி அன்று வரிசை கட்டி நிற்கும். நான் செய்து கொடுப்பது சிறிய உதவிகள் தான். ஆனால் அதுதான் வண்டிக்கான அச்சாணி என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் அச்சாணிகளை மதிப்பதே இல்லை. மேலழகைத்தானே ஆஹா ஓஹோ என்கிறது. ஆம்பளைங்க விதியை ஆண்டவன் இப்படித்தான் எழுதி வைத்திருப்பான் போல.

சுழியத்துக்கு வெல்லத்தை இப்படியா பொடித்து தருவது என்று நக்கல் வேறு. வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை வராது. எல்லாம் முடிந்த பிறகு தான் கிண்டல்கள் வரும். எத்தனை வருடமா சுழியத்துக்கு வெல்லம் பொடிக்கிறீங்க, கொஞ்சமாவது பொடிசா பொடிக்கிறீங்களா என்பார்கள் மாலை நேரத்தில். ஒவ்வொரு செயலையும் மாலையில் விமர்சித்தால் எப்படி இருக்கும்? கொதிக்கும் ரத்தம் பசங்க கையில் பலகாரங்களைப் பார்க்கையில் கொதிக்கும் பாலில் ஒரு துளி தண்ணீர் பட்டது போல அடங்கி விடும். ஆம்பளைங்களுக்குதான் அதிகம் ரத்தக் கொதிப்பு வரும் என்றுச் சொல்கிறார்கள். வராமல் என்ன செய்யும்? வராமல் என்ன தான் செய்யும்?

ஒரு வழியாக பலகார பிரச்சினை தீர்ந்தாலும் வெடிப்பிரச்சினைதான் பெரிது. வாசலில் உட்கார்ந்து ஒவ்வொரு பார்சலாய் பிரித்து எடுத்துக் கொடுக்க வேண்டும். மத்தாப்பூ வெடித்ததும் கம்பியைப்  பெற்று தனியாக வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் சுட்டுக் கொள்வார்கள். பெண் இருக்கிறதே அவ்வளவுதான் ஊரையே கூட்டி கண்ணில் கங்கையைக் கொட்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய பெரிய பூகம்பமே கிளம்பி விடும். தேவையா இதெல்லாம் என கண் கொத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

நேற்றைக்கு காலையிலிருந்து போன் மேல் போன் வந்து அடுப்படியில் ஹிட்லரும் அவரது அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இன்றைக்கு நமக்கு டிரைவர் வேலை இருக்கிறது போல என நினைத்தால் சரிதான். இதற்குள் எனக்கு வங்கிக்குச் செல்ல வேண்டியபணி, அரசு அலுவலரைச் சந்திக்க வேண்டிய பணி, ஆடிட்டரைப் பார்க்க வேண்டிய பணி, வேறொரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணி என வரிசை கட்டி நின்றிருந்தன. இருந்தாலும் தலையில் வலி வந்தால் உடம்பு முழுவதும் அல்லவா வலிக்கும். அது போல ஹிட்லர் வேலை என்றால் தலையில் வலி வந்ததாகத்தானே. அதற்காக நான் ஹிட்லரை தலைவலி என்றுச் சொல்லி விட்டேன் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் கோயம்புத்தூர் வெயில் வறுத்து எடுக்கிறது. எவ்வளவு வெயில் அடித்தாலும் குளிர்ச்சியாக இருக்கும் கோவை வெயில் இன்றைக்கு என பார்த்துக் கொதிக்கிறது. என்னைச் சுற்றி ஆண்கள் அதிகமிருந்தார்கள். அவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்குமோ என நினைத்தேன். நினைத்தால் என்ன ஆகி விடப்போகிறது. வறுபடல் வறுபடல் தான். அரை மணி நேரமாக கோவை சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை அருகில் நின்று கரூரிலிருந்து வரும் பஸ்ஸுக்காக காத்திருந்து அங்கிருந்து வந்த பார்சலை கண்டக்டரிடமிருந்து பெற்றுக் கொண்டு பிறகு ஒவ்வொரு வேலையாக முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து பார்சலைப் பிரித்தார் ஹிட்லர்.

வருடா வருடம் கரூரிலிருந்து ஹிட்லரின் அம்மா காரபூந்தி செய்து தனியாகப் பார்சலில் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் திருவள்ளுவர் ஹோட்டலிலிருந்து நான்கு பரோட்டாக்களும் வரும். பலகாரங்களுடன் கரூர் போர்வை, கொசுவலை மற்றும் இன்னபிற தீபாவளி தொடர்பான வஸ்துகளும் வந்து விடும். இந்த வருடம் அடியேனுக்குப் பிடித்த காரபூந்தியைக் காணவில்லை.

பொசுக்கென்று ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் மாமியார் வீட்டுப் பலகாரம் என்றால் கொஞ்சம் குஷியாகத்தானே இருக்கும். இந்த வருடம் சோகமாகவே இந்தத் தீபாவளி போகும் போல. இது பற்றி நைசாக விசாரித்தால் அது ஹிட்லரின் சதி என்று கண்டுபிடித்தேன். நான் செய்து தருகிறேன் என்று ஆரம்பித்தார். விதி வலியது அல்லவா? மீண்டும் அடுப்பங்கரைக்குக்கு ஆளை வர வைத்தே ஆக வேண்டும் என்று சதி செய்தால் என்ன செய்வது? கிரேக்க வம்சத்து அடிமை மாதிரி இருப்பதைத் தவிர என்னதான் செய்ய முடியும்?

இந்த வருடம் டிவியை ஆன் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். உண்மையான தீபாவளி டிவியை ஆஃப் செய்வதில் தான் உள்ளது.

இதெல்லாம் முடிந்து இரவில் படுக்கச் செல்லும் போது முகத்தில் புன்னகையுடன் காலையிலிருந்து கொண்டாடிய கொண்டாட்டத்தால் அசந்து தூங்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அறியாமலே மனதுக்குள் மத்தாப்பூ பூக்கும். அதுதானே நமக்கு உண்மையான தீபாவளி இல்லையா?

குடும்பத்துடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுங்கள். வெளி நாடு வாழ் தியாக உள்ளங்களே வரக்கூடிய நாட்களில் நீங்களும் உங்கள் குடும்பங்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Wednesday, November 14, 2012

தீபாவளி அன்றும் இன்றும் இறுதிப் பகுதி


மரப் பட்டையினால் செய்யப்பட்டிருக்கும் தீப்பெட்டிகளை இப்போதெல்லாம் கண்ணால் கூட பார்க்க முடிவதில்லை. சூழலுக்கு எந்த வித தீங்கினையும் தராத அப்பெட்டிகளை இனி எப்போது பார்க்கப் போகின்றேனோ தெரியவில்லை.

தீபாவளி அன்று மாலையில் மாமா வெடிகளை வாங்கி வருவார். துணிகள் எல்லாம் தயாராய் தைத்து தாம்பாலத்தில் எடுத்து வைத்து விடுவார்கள். பழங்கள், இனிப்புகள் வந்து விடும். ஏற்கனவே முறுக்கு, அதிரசம், மடக்குப் பணியாரம், கெட்டி உருண்டை எல்லாம் தயாராக இருக்கும்.

இப்போது செய்வது போல தினமும் இட்லியெல்லாம் சுடமாட்டார்கள். நல்ல நாள், விரதம் போன்ற நாட்களுக்குத்தான் இட்லி கிடைக்கும். இட்லி மாவு புளித்தால் அத்துடன் கறிவேப்பிலை கூட சேர்த்து மொறு மொறு தோசை கிடைக்கும். இளம் தேங்காயுடன் வெங்காயம், சோம்பு, இஞ்சி வைத்து அரைத்து தாளித்த சட்னியில் தோசையை நனைத்துச் சாப்பிடச் சாப்பிட டிவைன் தான் போங்கள்.  அம்மா சில சமயம் ஆட்டுகறிக் குழம்பைச் சுட வைத்து தருவார்கள். தோசைக்கு மிகச் சரியான காம்பினேஷனாக நான் நினைப்பது கறிக்குழம்பு தான்.

உளுந்து வடை, சேமியா கேசரி, பாலப்பம், சுழியன் இத்துடன் மல்லிகைப் பூவை விட மெது மெது இட்லிச் சட்னி என்று தழை வாழை இலையில் படையல் போட்டு, குத்து விளக்கு, லட்சுமி விளக்கு ஏற்றி தூபம், பத்தி வைத்து வீடே கமகமக்கும். விடிய விடிய அம்மா பலகாரம் சுட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அவ்வப்போது எழுந்து சென்று அம்மாவிற்கு ஏதாவது உதவி செய்து கொடுப்பேன்.

விடிகாலையில் பெரிய அண்டாச்சட்டியில் தண்ணீர் சேர்த்து மாமாவும், வீட்டு வேலைக்காரனும் விறகை போட்டு தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். எனக்கோ பயம் பற்றிக் கொள்ளும். அரப்பு ஒரு பக்கம் கரைத்து தயாராய் இருக்கும். நல்லெண்ணெய் பெரிய கிண்ணத்தில் ஊற்றி வைத்திருப்பார்கள். அம்மா தலையில் எண்ணெய் வைத்து விட உடம்பெல்லாம் எண்ணெய் ஊற்றி மெழுகி விடுவார்கள். குடத்தடிக்கு வந்தவுடன் தான் சோதனை ஆரம்பிக்கும்.(குடத்தடி என்பது வீட்டின் பின்புறம் இருக்கும் பகுதி.அக்காலத்தில் குடங்களில் தண்ணீர் பிடித்து வரிசையாக வைத்திருப்பார்கள். பெரிய பொக்கையில் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள்)

கொதிக்க கொதிக்க சுடுதண்ணீரில் அரப்புத் தேய்த்து தலையில் ஊற்றுவார்கள் பாருங்கள். உடம்பு வெந்து விடும். கத்திக் கதறி ஒரு வழியாக குளித்து விட்டு வந்த பிறகு தலை துவட்டி விட்டு பழைய டிரஸ்ஸை மாட்டி விட்டு படையல் அருகில் காவல் இருப்பேன்.

அனைவரும் குளித்து விட்டு வந்தவுடன் தேங்காய் உடைத்து, தீபம் காட்டி, சாமியை வணங்கி அம்மா மஞ்சள் இட்டுத் தரும் புது உடையை உடுத்தி அழகு பார்த்து வெடி வெடிக்க சென்றால் மாமா ஒவ்வொரு வெடியாய் எடுத்துக் கொடுத்து பாதுகாப்பாய் வெடிக்கச் செய்வார். சர வெடியெல்லாம் வேலைக்காரன் தான் வெடிப்பான். கேட்டால் உதை கிடைக்கும்.

பிறகு பலகாரம் சாப்பிட உட்கார்ந்தால் ஒவ்வொரு அயிட்டமாய் வயிற்றுக்குள் சென்று சேரும். அதற்குள் லத்தீப் கடைக்கு ஆட்டுக்கறி வாங்கச் சென்று விடுவார் மாமா. நாலு அல்லது ஐந்து கிலோ ஆட்டுக்கறி வரும்.

அதற்குள் வீரியங்கோட்டை ருக்மணி சித்தி வீட்டுக்கு பலகாரம், குருசாமி சித்தப்பாவிற்கு வேஷ்டி, துண்டு, சட்டை அத்துடன் ஒரு கிலோ ஆட்டுக்கறி பார்சலை தயார் செய்வார் அம்மா குட்டியம்மாள்.

மாமா வந்தவுடன் பார்சல் பஸ் ஏறி வீரியங்கோட்டைக்குச் செல்லும். மாமா திரும்பி வரும் போது மதியமாகி இருக்கும்.

அதற்குள் வடை, சுழியன், கேசரி, பாலப்பம் போன்றவைகளை தின்று தீர்த்திருப்போம்.

மதியம் ஆட்டுக்கறி வறுவல், குழம்பு, ஆட்டு எலும்பு ரசம் என்றுச் சாப்பாடு சுடச்சுட வாழை இலையில் பரிமாறுவார் அம்மா.

இலையில் இனிப்புகள் சீந்துவார் இன்றிக் கிடக்கும். ஒரு பலகாரம் கூட கடையில் வாங்கித் தர மாட்டார்கள். அதை எவரும் சாப்பிடவும்  மாட்டோம்.
அம்மாவின் அன்புடன் தயார் செய்யப்பட்ட பலகாரத்திற்கு இணை வேறு எங்கிருக்கிறது?

மகனின் வகுப்புத் தோழனின் அம்மாவிடம் மனைவி பலகாரம் சுடுவதைப் பற்றி விசாரித்து இருக்கிறாள். அதற்கு அந்தப் பெண் “அய்யே நீங்களெல்லாம் வீட்டிலா பலகாரம் சுடுகின்றீர்கள், அதெல்லாம் சுத்த வேஸ்ட். நாங்கள் அதையெல்லாம் சாப்பிடவே மாட்டோம்” என்றுச் சொன்னாராம்.

நேற்று விடிகாலையில் குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து பலகாரங்கள் சாப்பிட்டு உட்கார்ந்திருந்த போது அம்மா போன் செய்தார்கள். மனைவியிடம் விசாரித்தார்கள். எல்லாம் சரியாகச் செய்திருக்கிறாரா மருமகள் என்ற விசாரணை அது. மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

அடுத்த சில நொடிகளில் சட்டையைக் கொண்டு வந்து கொடுத்து ”கிளம்புங்கள்” என்றாள் மனைவி.

“எங்கே?”

”உங்க சகலை வீட்டுக்குத்தான் “ என்றாள்.

“அதுக்கு ஏண்டி காவி டிசர்ட்டைக் கொண்டு வந்து கொடுக்கிறாய், நல்ல டிஷர்ட்டுகள் இருக்கின்றனவே அதில் ஒன்று கொடேன்” என்றேன்.

”பலகாரத்தைக் கொடுக்கத்தான் அனுப்பி வைக்கிறேன். பல் இளிக்க இல்லை. புரிகிறதா? கொண்டு போய் கொடுத்தவுடன் அடுத்த நொடியில் கிளம்பி விட வேண்டும்” என்றாள் கர்ண கடூரமாய்.

அவளை முறைத்து விட்டு கிளம்பினேன். விடிகாலை கோவை சிங்கா நல்லூர் தூங்கிக் கொண்டிருந்தது.

மனைவியின் தங்கை அப்போதுதான் குப்பை கொட்டி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார் வீட்டுக்கு. பலகாரத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்குள் கூட போகாமல் திரும்பி வந்து விட்டேன்.

வீட்டிற்கு வந்தவுடன் “ என்ன அதற்குள் வந்து விட்டீர்கள்? “ என்றாள். 

”நீதானடி உடனே வரச்சொன்னாய்? அதான் உடனே வந்து விட்டேன்” என்றேன்.

“ஏன், அவள் உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி கூடவா கொடுக்கவில்லை?” என்றுச் சிரித்துக் கொண்டே கேட்டாள். ( என்னை நக்கல் செய்கின்றாராம் அம்மணி)

இருடி இரு, உனக்கு வைத்திருக்கிறேன். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

மாலையில் சகலை தன் குடும்பத்தோடு வீட்டுக்கு வருகை தர, அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

அடடா, எனக்கு  அப்போதுதான் நிஜமான தீபாவளியே ஆரம்பித்தது.

ஒரு வழியாக எனது இந்தக் கால தீபாவளி மாலையுடன் முடிவடைந்தது மனைவியின் தங்கை வருகையோடு !

* * *

Saturday, November 10, 2012

அன்றும் இன்றும் தீபாவளி பகுதி ஒன்று


கதிர் அறுப்பு முடிந்து நெல் மூட்டைகள் வீட்டுக்கு வந்தவுடன் , வயலில் மீந்து கிடக்கும் ஈரப்பதத்தில் மீண்டும் இரண்டு உழவோட்டி எள்ளை விதைத்து விட்டு வருவான் போஸ். எள் நன்கு வளர்ந்து அறுப்புக்குத் தயாராகும். எள் பயிர்களை அறுத்து வந்து போர் போட வேண்டும். எள் காய்கள் சூட்டினால் அவிந்து கருப்பாய் மாற வேண்டும். அப்போதுதான் எள் அதன் அடுக்கிய பெட்டி போன்ற காய்களிலிருந்து வெளியே வரும். அடுக்கி வைத்த எள் போர் சூட்டினால் வெந்து ஒரு வித வாடை வரும். ஐந்தாவது நாள் எள் தட்டைகளை எடுத்து வானம் பார்த்தபடி வைத்து விட வெயிலில் நன்கு காய்ந்து காய்கள் வெடித்து அதனுள் இருக்குள் கருப்பு நிற எள் வெளியில் கொட்டும். மாலையில் ஒவ்வொரு பத்தையாய் எடுத்து குப்புற சாய்த்து உதறினால் முழு எள்ளும் கீழே கொட்டி விடும். மீண்டும் போர் மேய்ந்து வைத்து இரண்டு நாட்கள் இப்படியே வெயிலில் காய வைத்தால் முழு எள்ளும் வந்து விடும். வாசல் தரையில் கொட்டி இருக்கும் எள் இலை, எள், குப்பைகளை ஒன்று சேர்த்து புடைத்து சுத்தம் செய்து, வெயிலில் நன்கு காய வைத்து மூட்டையாய் கட்டப்படும்.

ஒரு வாரத்தில் அந்த எள் எண்ணை ஆட்ட, ஆவணம் முஸ்லிம் தெரு எண்ணைச் செக்குக்குச் செல்லும். அது கரண்ட் செக். ஆவணம் வடக்கித் தெருவில் மாட்டு செக் ஒன்று இருந்தது. ஆனால் அம்மா அங்கு செல்ல மாட்டார்கள். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து கரண்டு செக்குத்தான். எள்ளுடன் கருப்பட்டியோ அல்லது வெள்ளமோ சேர்த்து எள் எண்ணையாய் மாறி சில்வர் குடம் சேரும். வெள்ளைத் துணியால் முக்காடு கட்டி வீட்டின் மேற்திசை அறைக்குள் சமர்த்தாய் உட்கார்ந்து விடும். கருப்பட்டி சேர்ந்த எள் கொஞ்சம் அம்மா எடுத்து வந்து தருவார்கள். சாப்பிடுவேன். சுவையோ சுவை. ரொம்பச் சாப்பிட விடமாட்டார்கள்.

கிட்டத்தட்ட பதினாறு படி அதாவது நாலு மரக்கா பச்சை அரிசி களைந்து காயப்போட்டு, வடக்கித்தெரு கருப்பையாத் தேவர் மாவுமில்லில் மாவு அரைத்து உலர வைக்கப்படும். அத்துடன் மடக்குப் பணியாரத்திற்கு என்று தனியாய் மாவு அரைக்கப்படும். இதற்கிடையே ஒரு மரக்கா அதாவது நாலு படி பச்சரிசி ஊற வைக்கப்பட்டு உரலில் போட்டு இடித்து சலித்து அதனுடன் ஏலக்காய் தூள், வெள்ளப்பாகு சேர்த்து கிண்டி ஒரு மண் சட்டியில் வைத்து வெள்ளைத் துணியால் வேடு கட்டி மூடி வைக்கப்படும். பாசிப்பயரை வறுத்து அரைத்து அத்துடன் கற்கண்டு, வறுபட்ட தேங்காய் துண்டுகள், முந்திரிப்பருப்பு, நெய், சர்க்கரைப்பாகு சேர்த்து கெட்டி உருண்டை செய்வார் அம்மா. அது பெரிய குவளை சட்டியில் அடுக்கி வைக்கப்படும்.

அடுத்த நாள் வெயிலில் காய்ந்து கிடந்த பெரிய பெரிய விறகு மரங்கள் வெட்டி அடுக்கி வைக்கப்படும். பெரிய இருப்புச் சட்டி அடுப்பிலேற்றில் நல்லெண்ணெய் ஊற்றி காயும். இரண்டு கை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவுக்கு முறுக்கு பாம்பாய் எண்ணெயில் வறுபடும். தேங்காய்பால் சேர்த்து முறுக்குச் சுடுவதால் முறுக்கு எண்ணெயில் பொறியும் போதே கமகமக்கும். தீபாவளி அன்றைக்கு படைப்பதற்குச் ‘சாமி’க்கு என்று தனியாய் எடுத்து வைத்து விட்டு, அதன்பிறகு அம்மா முறுக்குத் தருவார்கள். இரண்டு முறுக்குகளை மென்று தின்று விட்டு, தூங்கச் சென்று விடுவேன். விடிய விடிய முறுக்கும், மடக்குப் பணியாரமும் சுடுவார் அம்மா. விடி காலையில் பார்த்தால் இரண்டு அண்டாச்சட்டி முழுவதும் பெரிய பெரிய முறுக்குகளும், சின்ன அண்டாச் சட்டியில் மடக்குப் பணியாரமும் நிறைந்து இருக்கும். மடக்கு பணியாரத்தின் மீது கோட்டிங்காய் படிந்து இருக்கும் சீனிப்பாகு கோடுகள் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதைச் சுரண்டு விட்டுத்தான் சாப்பிடுவேன்.

இது வரையிலும் சரி, இனிமேல் தான் எனக்குப் பிரச்சினையே ஆரம்பிக்கும்.

வீரியங்கோட்டையில் கட்டிக் கொடுத்திருக்கும் அம்மாவின் தங்கை ருக்மணிக்கு தீபாவளி பலகாரம் கொடுப்பார்கள். பெரிய பனையோலை கடவாப் பெட்டியில் முறுக்குகளை எடுத்து அடுக்கி, அதன் மீது மடக்குப் பணியாரம், கெட்டி உருண்டை எல்லாம் எடுத்து வைக்க, எனக்கு திக் திக்கென்றிருக்கும். ‘அம்மா, எல்லாவற்றையும் எடுக்காதே’ என்றுச் சண்டை போடுவேன். சிரித்துக் கொண்டே ‘உனக்குத்தான் பெரிய அண்டாச்சட்டியில் முறுக்கு இருக்கிறதே அது போதும்டா’ என்பார்கள். எனக்கு மனசே கேட்காது. அம்மாவை எடுக்கவே விட மாட்டேன். முறுக்குகள் முடிந்தவுடன் மீண்டும் சுட்டுத்தருகிறேன் என்று உறுதி கொடுப்பார்கள். ஏதோ அப்போதைக்கு கொஞ்சம் மனசு ஆறும். மேலும் ஆவணம் வடகாட்டார் மளிகைக்கடையில் மேரி பிஸ்கட் வாங்கி வைத்து கடவாப் பெட்டியை வெள்ளைதுணியினால் வேடு கட்டி வைப்பார்கள். அம்மாவிற்கும் ருக்மணி சித்தி மீது அதீத அன்பு. சித்தி கருப்பாய் இருப்பார்கள். அவர்கள் குளிப்பதற்கு மைசூர் சாண்டல் சோப், கோழி முட்டை போல இருக்குமே அதை வேறு வாங்கி வந்து பலகாரத்துடன் வைத்துக் கொடுப்பார்கள். அது பஸ் ஏறி ருக்மணி சின்னம்மா வீட்டுக்கு சென்று சேரும்.

அருணாசலம் மாமா பட்டுக்கோட்டை கொழும்பு சில்க்ஸில் அனைவருக்கும் துணிகள் எடுத்து வருவார்கள். மாமா தேடித்தேடி எடுத்து வந்தாலும், அக்காவிற்கு மாமா எடுத்த சேலை என்றைக்குமே பிடிக்காது. ஆவணம் மாரியம்மன் கோவிலின் பின்புறம் இருக்கும் டைலர் கடையில் சட்டை தைக்கக் கொடுப்பார்கள். 

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும். சம்மள வீட்டு மாணிக்கதேவர் தாத்தா (அம்மாவின் அப்பா) எனக்கு பனையோலை வெடிக்கட்டு வாங்கிக் கொடுப்பார்கள். நான் மண்ணென்னெய் விளக்கைப் பொறுத்தி வெடியை விளக்கு மாத்து குச்சியில் சொருகி திரியை விளக்கில் நீட்டுவேன். அந்த பனையோலை வெடி செய்தவன் திரியை சிறியதாய் வைத்து இருப்பான். உடனே வெடித்து விடும். விளக்கு அணைந்து விடும். ஒரு கட்டு வெடியை வெடித்து முடிப்பதற்குள் இரண்டு மூன்று தீப்பெட்டிகள் முடிந்து விடும். 

கரண்டு போய் விடும் என்பதால் தொடர் அடுத்த பதிவில் தொடரும்....

Saturday, October 29, 2011

மறக்க முடியாத தீபாவளி

ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், தீபாவளி நாள் அன்று நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர்களுடன் தீபாவளி வாழ்த்த்துக்களை பகிர்ந்து கொண்டு, இனிப்புகள் சாப்பிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது என்னிடம் படித்த ஆறாம் வகுப்பு பையன் ஒருவன் என்னைப் பார்த்துக் கையை ஆட்டினான்.

வண்டியை நிறுத்தி, அவனை அருகில் வரும்படி அழைத்தேன். 

“வீட்டுக்கு வாரீங்களா சார் !” என்றான்.

”வீடு எங்கேப்பா இருக்கு ?” என்று கேட்டு அவனை அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றேன்.

குளிர்ச்சி தரும் தென்னை ஓலைகள் வேய்ந்த, அழகாய் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீடு. வீட்டின் முகப்பில் கோலமிட்டு இருந்தது. மாணவனின் அப்பாவும், அம்மாவும் வண்டிச் சத்தம் கேட்டு வெளியில் வர மாணவன் வண்டியில் இருந்து குதித்து அவர்கள் அருகில் ஓடி என்னை “அப்பா, எங்க இவருதான் கம்யூட்டர் சாரு” என்றான்.

இருவருக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அருகில் வந்து “வாங்க வாங்க” என்றழைத்தவர்கள் வீட்டிற்குள் அழைக்க தயக்கத்தோடு நின்றனர்.

”சாப்பிட ஏதாவது கிடைக்குமா? “ என்றேன். வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி வீட்டுக்குள் சென்றேன்.

வழு வழுவென்று மெழுகிய தரைகள். அதன் மீது பாய் போடப்பட்டு அமர்ந்து கொண்டேன்.

இடதுபுறமாய் சமையலறை. மண்சட்டிகள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாவரைக்கும் கல்லில் அரைத்த மெதுவடை, சுழியம் இரண்டும் கொண்டு வந்து தந்தார்கள். வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்பா என்ன ஒரு சுவையாக இருந்தன தெரியுமா? என்னைப் பற்றி விசாரித்தார்கள்.மாணவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டே அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன்.

“மதியம் என்ன சமைக்கப் போகின்றீர்கள்?” என்றேன்.

“சாம்பார், பாயசம் சார்” என்றான் மாணவன்.

”எனக்கும் கொஞ்சம் சேர்ந்து சமைத்து விடுங்களேன், இருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறேன்” என்றேன்.

நிகழ்காலத்தில் படித்த போது பாத்திரத்திப் பொறுத்தது உணவின் சுவையும் தரமும் படித்த போது என் மாணவன் வீட்டில் சாப்பிட்ட சாம்பாரின் சுவை நினைவுக்கு வந்தது. இதுவரை எத்தனையோ ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். வித விதமாய் சமைத்துப் போடும் மனைவியின் கைப்பக்குவம் கூட மாணவன் வீட்டில் வைத்திருந்த சாம்பாருக்கு நிகராக இல்லை.

அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்வார்கள். நான் ஆசிரியராக இருந்த காலம் முழுவதும் தீபாவளி தினங்களில் மாணவனின் வீட்டுச் சாப்பாடே எனக்கு அமிர்தமாய் இருந்தது. அம்மாணவன் இப்போது என்ன செய்கின்றானோ தெரியவில்லை. அவன் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

* * *