குரு வாழ்க ! குருவே துணை !!

Phone : 9600577755 - Email :covaimthangavel@gmail.com

Property Title Clearance with Survey - Contact us

For DTCP/LPA/CMDA Land & Building Plan Approvals, Survey, Construction, Farm Houses, Bulk Land Purchase/Sale
Showing posts with label காவிரி பிரச்சினை. Show all posts
Showing posts with label காவிரி பிரச்சினை. Show all posts

Saturday, September 10, 2016

காவிரிக்கு குட்பை சொல்லி விடலாம்

தஞ்சாவூர் கடைமடைப் பாசனத்தில் எனக்கும் கொஞ்சம் வயல்கள் உண்டு. அந்த வயலில் இருந்து வரும் அரிசியில் தான் உண்கிறேன். குருவை, சம்பா சாகுபடிகள் இன்னும் நினைவில் இருக்கின்றது. விவரம் தெரிந்த நாளில் இருந்து குருவைச் சாகுபடி செய்வதில்லை. ஒரே ஒரு சாகுபடி தான். குருவையில் சீக்கிரமே விளையும் நெல் விதைப்பு நடக்கும். இரண்டு வருமானங்கள் கிடைக்கும். இப்போதெல்லாம் ஒரே ஒரு சாகுபடி. சாப்பாட்டுக்குப் போக உபரியை விற்று வரும் பணத்தில் தான் பிள்ளைகள் படிப்பு, மருத்துவம், உடை, உறவுச் செலவுகள், விவசாயச் செலவுகள் அத்தனையும் அந்த வருமானத்தில் தான் சமாளிக்க வேண்டும். முடியுமா?

புட் சட்னி இணையதளத்தில் ராஜ்மோகன் அவர்களின் வீடியோவைப் பார்த்தேன். பிரமாதம். மணல் மாஃபியா தான் காவிரியில் தண்ணீர் வருவதை தடுக்கிறது என்று பேசி இருக்கிறார். பொய் பேச வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆகவே அவர் மணல் மாஃபியா பற்றிப் பேசியது எந்த ஆதாரத்தை வைத்து என்று கூட ஆயுத எழுத்தில் கேட்க மாட்டேன் என்கிறார் ஹரிஹரன். பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படிப் பாதுகாக்கிறார் ஹரிஹரன் என்று நினைக்கையில். யாரோ ஒருவர் தான் பிழைப்பதற்காக தமிழகத்தின் ஆதாரத்தையே அசைக்கிறார் என்றால்? என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இதோ அந்த வீடியோ இணைப்பு, நீங்களும் பாருங்கள்.


ராஜ்மோகனுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். மிகப் பெரிய தூண்டுதலை அவர் உருவாக்கி இருக்கிறார். ஆனால் யாரும் எதுவும் செய்யப்போவதும் இல்லை, செய்ய விடவும் மாட்டார்கள்.

ஆனால் ராஜ்மோகன் உங்களுக்கு ஒன்றினை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களின் பிள்ளைகள், அவர்களின் உறவினர்கள் என்று பலரும் கர்நாடகாவில் வேலை செய்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் வருகிறது. ஆகவே காவிரியாவது ஒன்றாவது என்று தான் பேசுவார்கள். எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

காவிரி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படப்போகிறது ராஜ்மோகன். அதை அனைவரும் வேடிக்கைதான் பார்ப்பார்கள். யாரும் எதுவும் செய்யப்போவதில்லை, செய்யவும் விட மாட்டார்கள். ஆகவே  நாம் விரைவில் காவிரிக்கு குட்பை சொல்லி விடுவோம். தமிழர்களின் வாழ்வாதாரம் அழிய அழிய அவன் அகதியாய் வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடையத்தான் போகின்றான். இது நடக்கத்தான் போகிறது.

விரைவில் நாமும் வேறு ஏதாவதொரு நாட்டினை தேர்வு செய்து வேலை விசாக்களுக்கு தயார் செய்து கொள்ள வேண்டியதுதான்.

வாய்ச் சொல்லில் வீரர்கள் நாம். அடிக்க அடிக்க ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு இனம் இந்த உலகில் உண்டென்றால் அது நாம் தான். சினிமாக்காரர்களுக்கு ஆட்சியையே தூக்கிக் கொடுத்தவர்கள் நாம். கர்நாடகாவிற்கு காவிரியை தாரை வார்த்து விடுவோம். விடவும் வைப்பார்கள். முல்லைப் பெரியார் அணையில் நீரைத் தேக்கி வைக்கக் கூட முடியவில்லை. அதற்கும் எதிர்ப்பு வருகிறது. தண்ணீர் இல்லா மாநிலமாக மாற்றி விட்டால் தமிழகமும் தமிழர்களும் வேறு வழி இன்றி அகதிகளாக மாறி விடுவார்கள்.

நாமெல்லாம் அகதிகளாக மாறி விடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. பிழைத்துக் கிடந்தால் எங்காவது ஒரு நாட்டில் நம் சந்திதிகள் சந்திப்பார்கள்.

இதுவரை நமக்கு உணவிட்டு வந்த காவிரிக்கு அனைவரும் சேர்ந்து குட்பை சொல்லி விடுவோம்.

காவிரியே உனக்கு குட்பை !