குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com
Showing posts with label ஓஷோ. Show all posts
Showing posts with label ஓஷோ. Show all posts

Friday, October 27, 2017

பிள்ளைகளின் அன்பு பொய்யானதா?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான அனுபவத்தைத் தருபவை. விடிகாலையில் எழும் போது இன்றைக்கு நடக்க இருப்பவைகளைப் பற்றியும், புதிதாகச் சந்திக்க இருப்பவர்களைப் பற்றியும் ஆர்வமிருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். 

ஓஷோ சொல்வார் வாழ்க்கை மீது ஆர்வம் வேண்டும் என. 

ஆர்வம் இல்லாதவர்கள் ’வெந்த சோற்றைத் தின்று விதி வந்த அன்று செத்துப் போவார்கள்’. வாழ்க்கையில் ஆர்வமின்றி இருப்பவர்களால் இந்த உலகிற்கு மட்டுமல்ல அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் துன்பமேயன்றி வேறொன்றுமில்லை. தற்கால மனிதன் இழந்தது இந்த ஆர்வம் என்ற குணத்தை என்பார் ஓஷோ. வாழ்வதற்காக வேலை என்பவர்கள் தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள். வேலையை ஆர்வமுடன் நேசிக்கும் ஒருவன் உயர உயர உயர்ந்து கொண்டே இருப்பான்.

விஜய் டிவியின் சந்திர நந்தினி (செம அழகு இந்தப் பெண்) தொடரை அடிக்கடிப் பார்ப்பதுண்டு. சந்திரகுப்தர் மவுரியருக்கு ஒரு பெண்ணை காதலிக்கத் தெரியவில்லை என்பதுதான் இந்தத் தொடரின் கதை முடிச்சு. இயக்குனர் சுற்றும் பூ உடல் முழுதும் பரவினாலும் அழகுப் பெண்களைப் பார்க்கும் போது சூரிய ஒளியில் மலரும் காந்திப் (எதார்த்தமாக வந்து விட்டது) பூ போல உள்ளம் மலர்ச்சி அடைகிறது. அவர்கள் நலமுடனும் நன்றாகவும் இருக்கட்டும். (அது ஏன் சூரிய காந்தி எனப் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. காந்திக்கும் மலர்ச்சிக்கும் என்ன தொடர்பு?)

இந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மகள் சூடான சாதத்தில் பருப்பு விட்டு பிசைந்து கொண்டு சாப்பிடுவதற்காக ஷோபாவில் அமர்ந்தார். என்னைப் பார்த்ததும், “அப்பா, நல்ல மணமாக இருக்கிறதப்பா, ஊட்டி விடுகிறேன், சாப்பிடுகின்றாயா?” என்று கேட்க, மறுக்க முடியுமா?

சாதத்தைப் பிசைந்து கவளமாக எடுத்து என் உதட்டில் படாமல் வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டார். மணோன்மணியே அருகில் இருந்து ஊட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. மகள் கையில் தகப்பன் சாப்பிடுவது என்பது எவ்வளவு மகிழ்வு தரும் நிகழ்வு? ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு ஏற்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குறுகுறுப்புக்கு விடை தேடி மனசு அலை பாய்ந்தது. விடை கிடைக்குமா?

மனைவி உணவு ஊட்டுகையில் வாய்க்குள் வைத்து உணவை ஊட்டுவார். அம்மாவும் அப்படித்தான். ஆனால் மகளோ தன் விரல் கூட உதட்டில் படாமல் உணவை ஊட்டி விட்டதனால் எனக்குள் ஏற்பட்ட அந்த குறுகுறுப்புக்கு விடை காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை. ஏதோ ஒரு மறைபொருள் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் தூங்கிப் போனேன்.

விடிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து மனையாளுக்கு காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து விட்டு ஓஷோவின் மனிதனின் புத்தகம் புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். நான்காம் பாகத்தில் மகன் என்றொரு தலைப்பில் விவரிக்க ஆரம்பித்தார்.

ஒரு தாய் தன் பிள்ளை மீது அன்பு கொண்டிருப்பது இமயமலையில் இருந்து வழிந்தோடும் கங்கை நீரைப்போல. தாய்க்கு தன் பிள்ளை மீது அன்பு கொள்வது இயற்கை நியதி. பிள்ளைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் தேவை. அதற்கான நான் உன் மீது அன்பாயிருக்கிறேன், ஆகவே நீயும் என் மீது அன்பாயிருக்க வேண்டுமென்று குழந்தையைக் கேட்பது மடத்தனம். அந்தக் குழந்தைக்கு தன் குழந்தையின் மீது தான் அன்பு இருக்குமே ஒழிய தன் தாயின் மீது இருக்காது என்று போட்டுடைத்தார் ஓஷோ.

ஓ...! இதுதான் காரணமா? என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல ஜோதி சாமியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ”இது என்ன ஆண்டவனே பிரமாதம், இன்னொன்றும் சொல்கிறேன்” என்றார்.

”சொல்லுங்க சாமி” என்றேன். 

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

திரு மூலரின் ”யாக்கை நிலையாமையில் வரும் பாடலொன்று” இது.

ஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொள்ளி இட்டுச்சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர். (பொழிப்புரை  ப.ராமநாதப் பிள்ளை)

”ஆண்டவனே, ஒவ்வொரு மனிதனும் எப்போதும் தனியாள் தான். மேலே சொல்லி இருக்கிற பாடலையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார். 

“ நச்சுன்னு மண்டைக்குள் ஏறிவிட்டது சாமி” என்றேன்.

ஆகவே நண்பர்களே, யாக்கை நிலையாமையும், அன்பின் தத்துவத்தையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக மாற்றுவோம். 

Friday, February 10, 2017

எப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி?

போன் வருகிறது. பிள்ளை கீழே விழுந்து விட்டான். அடிபட்டு விட்டது என்கிறது அது. மனசுக்குள் திடுமென்று பயம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. எண்ணங்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று அலைபாய மனதுக்குள் பாரம் அடுத்து அடுத்து ஏற்றப்பட்டுக் கொண்டே முடிவில் பெரும் துன்பகரமனதாக வேதனையில் விழுந்து வெம்மி விடும். பையனை நேரில் பார்க்கும் வரை வேதனையில் மனது வெந்து சாகும். அவனை நேரில் பார்த்தால் சின்ன அடி தான் என்றவுடன் மனசு லேசாகி விடும். அவ்வளவு நேரம் துயரப்பட்ட மனசு பட்டென்று லேசாகி சந்தோஷமாகி விடும். காரணம் அறியாமல் உண்மை தெரியாமல் மனது தனக்குள்ளேயே தவறான முடிவு எடுத்து துயரப்பட ஆரம்பித்து விடும். 

மனம் எப்போதுமே உண்மையை உணர்ந்து கொள்ளாது. மனதுக்கு முதல் எஜமான் உணர்ச்சிகள் தான். உணர்ச்சியின் பிடியில் சிக்கிய மனம் முழு உடலையும் ஆட்டுவிக்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. உண்மையை மறைத்து விடுகிறது. இறந்தகாலத்துக்குச் சென்று எதிர்காலத்துக்குச் சென்று இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இறந்த காலமும் இல்லை
எதிர்காலமும் இல்லை
இந்த இரு இல்லாமைகளுக்கிடையில்தான் மனம்
இருக்கிறது
அதனால் தான் துன்ப துயரங்கள்

மனதால் வாழ்வது துயர வாழ்க்கை
வேதனை மிகுந்த நரகம்
மனமே நரகம் தான்

சட்டென இதை உணர்ந்தால்
புதிய வாசல் பிறக்கும்
அது நிகழ்வின் தீர்ப்பு
இயல்பின் திறப்பு இது.

இருக்கிற ஒரே காலம் நிகழ்காலம் மட்டுமே
இருப்பதே அதுதான்
அதில் நீ இரு, அப்போது நீ விடுதலையடைவாய்
அதில் வாழ்க, அதுவே பரவசம்!

நன்றி : ஓஷோ - ஒரு கோப்பை தேநீர் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை

நான் சொல்ல வந்தது இதுதான். எது நடந்தாலும் என்ன நடந்தாலும் நடந்ததை அழித்து விட்டு புதிதாக ஆரம்பிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நடந்து விட்டது இனி என்ன செய்யலாம்? நடந்து விட்டதை நமக்கு சாதகமாக பிறருக்கு பாதகம் ஏற்படா வண்ணம் சரி செய்ய முடியுமா? என்று மட்டும் தான் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையின் போக்கு நிச்சயமாக மாறிப்போய் விடும். தட்டுத்தடுமாறி இப்பாதைக்கு மாறி விடுங்கள். எதையும் எளிதாக வெற்றி கொள்ளலாம்.

ஏதேனும் புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும். விவரித்து எழுதுகிறேன்.

Saturday, November 5, 2016

வழக்குமன்றங்கள் வழக்குகள் விவாதங்கள் உண்மை என்ன?

சாமானியனுக்கு கோர்ட்டுகள் தான் தர்மம் இருக்கும் இடம். ஒருவர் கூடவா நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்? என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்தளவுக்கு கோர்ட்டுகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள சாமானிய மக்களின் எண்ணம் நிறைவேறுகிறதா என்ற முடிவுக்கு வர முடியவில்லை. காரணம் அரசியல். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவிக்கு வரும் அரசியல் நீதி மன்றங்களைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு நீதிபதி பிரதமர் முன்பே அழுதார். அதையும் நாம் தினசரிகளில் படித்தோம். ஆனால் என்ன நடந்தது? ஒன்றுமில்லை.

இந்தியாவில் கோர்ட்டுகளை நிர்வகிக்க தனி அமைப்பினை உருவாக்கினால் தான் நீதி நிலை நாட்டப்படும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோர்ட்டுகள் ஒரு வரையறைக்குள் அழுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். நீதிபதிகள் முதலமைச்சரைச் சந்தித்தே ஆக வேண்டிய சூழல் உண்டாகத்தான் செய்யும். அது நீதி பரிபாலனத்துக்கு சரியாக வராது. தேர்தல் கமிஷன் போல தனி அமைப்பு நீதிமன்றங்களை நிர்வகிக்கவும், நீதிபதிகளை நியமிக்கவும், சம்பளம் கொடுக்கவும், செலவுகளைக் கவனிக்கவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் தேவை. அவ்வாறு அமைத்திடாவிடில் நீதிமன்றங்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். அதிலும் முக்கியமாக தீர்ப்புகள் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கும். கீழ்கோர்ட்டில் தண்டனை மேல் கோர்ட்டில் விடுதலை என்றால் நீதிமன்றங்களின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போகும் அல்லவா? இதற்கொரு விடிவுகாலம் கிடைக்கக் கூடிய எல்லா சாத்தியங்களையும் அரசியல் அழித்துக் கொண்டே வருகிறது.

புதிய சிந்தனை கொண்ட தலைவர்களை தமிழகத்தில் இன்றைக்கு காண்பது அரிதாகி விட்டது. தமிழகத்தினைப் பொறுத்தவரை தமிழ் சமூக மேம்பாட்டுச் சிந்தனையும், செயலூக்கமும் கொண்டவர்களையும் புதிய சிந்தனாவாதிகளையும் பார்க்க முடிவதில்லை.

ஒவ்வொருவரும் இருக்கும் கட்சிகளுக்கு ஜால்ரா வீசுபவர்களாகவே இருக்கின்றார்கள். ஏதோ ஒரு கட்சியில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். தனி ஆவர்த்தனம் செய்ய முயன்றால் ஆக்டோபஸ் போல கட்சிகள் அவர்களை அழித்து விடுகின்றன. எவரையும் புத்தம் புதிய சிந்தனைகளோடு வெளி வர விடுவதில்லை.

பசி இருந்தால் தான் புதிய சிந்தனைகளும், ஆக்கங்களும், புதிய சிந்தனாவாதிகளும் வெளி வருவர். ஆனால் இங்கு எல்லாமே இலவசமானதாய் பசி கொஞ்சமேனும் ஆற்றப்படுகிறது. சோம்பேறிகள் நிறைந்து விட்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஒரு வழக்குப் பற்றி சுவாரசியமான கதை ஒன்றினை ஓஷோவின் புத்தகத்தில் படித்தேன். படித்துப் பாருங்கள். செம ரகளையாக இருக்கும்.


இனி ஓஷோவின் பத்தி,

சட்டத்தொழில் உலகிலிருந்து மறைகிற போது 90 சதவீதம் சூழ்ச்சிகளும் அதனோடு சேர்ந்து மறைந்து விடும். சட்டம் தெரிந்தவர்களே அதிகமதிக குழப்பத்தை உண்டாக்குபவர்கள்.

என் துணை வேந்தர்களில் ஒருவர் மாபெரும் சட்ட வல்லுனர். உலகப் புகழ் பெற்ற சட்ட வல்லுனர். அவர் மீண்டும் மீண்டும் பின்வரும் சம்பவத்தைக் கூறுவது வழக்கம். ஒரு தடவை ஒரு இந்திய மகாராஜாவுக்காக தனி நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய குடிகாரர். முந்தின நாள் இரவு அவர் நிறையக் குடித்திருந்தார். அதன் மப்பு இன்னும் இருந்தது. எனவே அவர் தான் மகாராஜாவுக்கு சார்பாக வாதாடுகிறோமா எதிராக வாதாடுகிறோமா என்பதையே மறந்து விட்டார். எனவே ஒரு மணி நேரமாக மகாராஜாவுக்கு எதிராக அவர் பேசினார். மகாராஜாவுக்கு வேர்த்துக் கொட்டியது. அவரது உதவியாளர்கள் நடுங்கினார்கள். ”என்ன செய்து கொண்டிருக்கிறார் இவர்?”. தேநீர் இடைவேளை வந்தது. அவர்கள் அவரிடம் சொன்னார்கள், “என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நம் கட்சிக்காரரை ஒழித்துக் கட்டி விட்டீர்கள், இனி அவரை காப்பாற்ற வழியே இல்லை”

“என்ன நடந்து விட்டது?” என்றார் அவர்.

“நம் சொந்தக் கட்சிக்காரருக்கே எதிராக இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தீர்கள்!”

“கவலையை விடுங்கள், இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்றார்.

மறுபடியும் வழக்குமன்றம் தொடங்கியது. அவர் சொன்னார்,”கணம் கோர்ட்டார் அவர்களே, ஒரு மணி நேரமாக நான் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்ததற்கு நன்றி. ஏனென்றால் எதிர்கட்சியார் முன் வைக்க சாத்தியமான எல்லா வாதங்களையும் நான் தான் தந்து கொண்டிருந்தேன். இனி நான் என் கட்சிக்காரரின் தரப்பைச் சொல்வேன்”

பின் தன் வாதங்களையே அவர் மறுத்து அந்த வழக்கில் வென்றார்.

விஷயம் விளங்கி விட்டதா? வழக்காடு மன்றங்களில் வக்கீல்களாக இருந்தவர்களே நீதிபதிகளாக பதவியேற்கின்றார்கள் என்கிற போது மனதுக்குள் சிறிய அவநம்பிக்கை ஏற்பட்டு விடுவதை நாமெல்லாம் உணர்கிறோம். ஆனால் இருந்தும் என்ன பயன்? நம் சட்டம் அப்படி இருக்கிறது.

இந்திய மக்களின் மீது பற்றுக் கொண்ட, பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படாத எவனொருவன் தலைவனாக வருகின்றானோ அந்த நாளில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் பல்வேறு அதிகார சட்டங்களை நீக்கி மக்களுக்கு நன்மை புரியும் சட்டங்கள் உருவாக்கப்படும் என்று நம்புவோம். இந்தியத்தாய் தன் குடும்பத்தினை நிர்வகிக்க தக்கப் புதல்வனை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.

நீதித்துறை பரிபாலன முறை மாற்றப்பட்டால் நாட்டில் ஊழலும் இருக்காது. அதிகார அத்துமீறலும் இருக்காது. அவரவர் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள். 

Friday, September 23, 2016

ஜலாலுத்தீன் ரூமி கவிதையை முன்வைத்து ஓஷோவுடன் உரையாடல்

காதலன் தன்னுடைய காதலியின்
வீட்டுக் கதவைத் தட்டுகிறான்
உள்ளிருந்து குரல் வருகிறது
“யாரது?”
காதலன் கூறுகிறான்

”நான் உன் காதலன்
என்னைத் தெரியவில்லையா?
என்னுடைய காலடி
ஓசையை மறந்து விட்டாயா?
என்னுடைய குரலும்
உன் நினைவை விட்டு
நீங்கி விட்டதா?”

உள்ளிருந்து குரல் வருகிறது

“கதவு உனக்காகத் திறக்கப்படுவதற்கு
இன்னும் நீ தகுதி பெறவில்லை
இன்னும் உனக்கு
அந்த அதிகாரம் வரவில்லை”

அந்தக் காதலன் திரும்பிச்
சென்று விட்டான்.
பல வருடங்கள் திரிந்தலைந்தான்.
காதலைத் தேடுவதில்
அவன் முழு மூச்சுடன்
ஈடுபட்டான்
காதலைத் தெரிந்து கொள்ள
முயன்று
கொஞ்சம் கொஞ்சமாக
அவன் காதலைத் தெரிந்து கொண்டான்.

அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
” நீயே தான்!”
உடனே கதவு திறக்கிறது.

ஜாலாலுத்தீன் ரூமியின் கவிதை இது. ஓஷோ இந்தக் கவிதை முடிவடையவில்லை என்கிறார். இன்னும் நான்கு வரிகள் சேர்ந்திருந்தால் நலமாயிருக்கும் என்கிறார். நீ என்றால் கதவு திறந்திருக்கக் கூடாது என்கிறார் ஓஷோ.

( ஜலாலுதீன் முகமது ரூமி - 1207 - 1273ல் வாழ்ந்த மிகச் சிறந்த கவிதையாளர்)

நீயும் நானும் எதிரெதிர் பதங்களே, ‘நீ’ என்பதன் முழு அர்த்தமும் ‘நான்’ என்பதிலேயே அடங்கியுள்ளது. எதுவரை ‘நான்’ உள்ளதோ அதுவரை ‘நீ’ யிலும் அர்த்தமுண்டு. ‘நான்’ என்பதே இல்லை என்றாகும் போது ‘நீ” என்பது யார்? என்கிறார் ஓஷோ. காதலனும் இருக்கக்கூடாது காதலியும் இருக்ககூடாது என்று முடித்து விடுகிறார் ஓஷோ. 


(ஓஷோ - தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மிகச் சரியான மனிதர்)

ஜலாலுத்தீன்  ரூமியை நீங்கள் சந்தித்தீர்களோ இல்லையோ ஓஷோ, இந்தக் கவிதைக்கு ஒரே ஒரு வார்த்தையில் முடிவுரை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வந்தது இதுவாகக் கூட இருக்கலாம் அல்லவா ஓஷோ?

மீண்டும் அந்தக் கவிதை...............!


அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
”காதல்”
உடனே கதவு திறக்கிறது.

சரிதானே ஓஷோ?

நன்றி : ஓஷோவின் நாரதரின் பக்தி சூத்திரம் மற்றும் ரூமி