குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 29, 2020

காயங்களின் கதாநாயகன் – ஜோசப்


முதலில் இந்தப் பாடலைப் பார்த்து விடுங்கள். பின்னர் படிக்கச் செல்லலாம்.

இது விமர்சனம் அல்ல. படம் பார்த்த போது எனக்குள் உண்டான எண்ணங்கள். விமர்சனம் என்றால் ஒப்பீடு. ஒப்பீடுகள் ஒரு சில இடங்களில் சிலாகிக்க முடியாது. எங்கு விமர்சனம் செய்ய வேண்டுமோ அங்கு அவசியம் கருதி விமர்சிக்க வேண்டும். சினிமா விமர்சனம் என்பது கத்தி மீது நடப்பது போல. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போம். அதற்கேற்ற அறிவுதான் இருக்கும். அதை வைத்து சரியான விமர்சனத்தை எழுத முடியாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அறிவின் தன்மையைப் போல அவரவர்களின் விமர்சனம் வரும். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்தது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை விமர்சிக்க முடியாது. திட்டனும். ஏனென்றால் இன்று வரைக்கும் கிழவர்கள் குமரிகளை அதுவும் ரக ரகமான பாவைகளை காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதி திரைப்படம் பார்த்தேன். கதாநாயகியே இல்லை. படம் நன்றாக ஓடியதாக கேள்விப்பட்டேன். கார்த்தியின் ஹீரோயிசத்தை சகித்துக் கொண்டால் ரசிக்க முடியும்.

நாமெல்லாம் பிறரின் ஹீரோயிசத்தைப் படித்து வளர்ந்தவர்கள் தானே. முளைக்கும் போதே தவறான வழிகாட்டல். அது காடு செல்லும் வரை தொடர்கிறது.

இந்த உலகில் ஒரே ஒரு அப்துல் கலாம் தான் இருக்க முடியும். அவரைப் போல வாழ்க்கையை இன்னொருவர் வாழவே முடியாது. ஆனால் நாமோ அவரைப் போல, இவரைப் போல என பேசி தன் சுயத்தை அழித்துக் கொள்கிறோம்.

இனி படம்.

கொலை நடந்த வீடு. எஸ்.பி யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறார். அவர் தான் இந்த ஜோசப். பழைய ஸ்கூட்டரில் வருகிறார். கொலை நடந்த இடத்தை ஒவ்வொரு பகுதியாக பார்வை இடுகிறார். பேசுகிறார். கொலையாளியைக் காட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஆக்ஸிடெண்ட் என்று போனில் அழைக்கிறார் ஒருவர். ஹாஸ்பிட்டலில் ஸ்டெல்லா படுத்து இருக்கிறார். ஸ்டெல்லா இவரின் மனைவி. அழைத்தது ஸ்டெல்லாவின் இரண்டாவது கணவர்.

ஸ்டெல்லா உடனான வாழ்க்கை விரிகிறது. காவியம் போல. இடையில் ஒரு கிளைக்கதை. ஜோசப்பிற்கு முன்னால் காதலி ஒருத்தி உண்டு. அந்தக் காதல் நிறைவேறவில்லை. அவளை அவர் போலீஸாகி வேலை பார்க்கும் போது, ஒரு கொலை விசாரணைக்குச் சென்ற போது அழுகிய பிணமாகப் பார்க்கிறார்.

அதன் பாதிப்பில் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கிறார். ஸ்டெல்லா ஜோசப் இன்னொரு பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு மகளை ஜோசப்பிடம் விட்டு விட்டு சென்று விடுகிறார். இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜோசப் திருமணம் செய்யாமலே வாழ்கிறார்.

ஸ்டெல்லாவுக்கு மூளைச்சாவு ஏற்படுகிறது. உடலுறுப்புகள் தானம் கொடுக்கப்படுகிறது. ஜோசப் ஸ்டெல்லா ஆக்சிடெண்ட் ஆன இடத்தைப் பார்வையிடுகிறார். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிகிறார். அவரின் மகளும் இதே போல ஆக்சிடெண்டில் சிக்கி உயிரிழக்கிறார். அப்போது ஸ்டெல்லா இன்னொருவரின் மனைவி. அப்போது இருவரும் மகளின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய அனுமதிப்பார்கள். அடுத்த ஆக்ஸிடெண்ட் மரணம் ஸ்டெல்லா.

முதன் முதலாக காதலித்தவரும் கொலையாகிறார். மகளும், மனைவியும் இறந்து போகின்றார்கள். தன் மனவலியை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் இப்படத்தில். அவரின் வலியை நாம் உள்ளுக்குள் உணரலாம்.

கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிகிறார்.

தன்னையே, தன் உயிரை சாட்சியாக்கி விட்டு சாகிறார். கொலையாளிகள் சிக்குகிறார்கள்.

படம் முடிந்தது.

முதல் காதல் – மரணம் வரை மறையாத உணர்வு. ஜோசப் ஏழை என்பதற்காக அக்காதலை இழக்கிறார். காதலியோ இன்னொருவருடன் வாழ்கிறார்.

இரண்டாவது வாழ்க்கை. முதல் காதலியின் மரணத்தின் வலியால் மனைவியை இழக்கிறார். அதை அவளிடம் தாமதமாகச் சொல்கிறார். இருந்தும் என்ன பயன்? அவள் வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெண்கள் அவசர புத்திக்காரர்கள் என்பார்கள். ஆண்களின் உணர்வுகள் சினிமாத்தனமானவை அல்ல. ஒரு முழுமையான ஆண் தன் ஆசாபாசங்களைக் குறைத்துக் கொள்வான் காலத்தின் சூழலுக்கு ஏற்ப. ஆனால் பெண்களில் பலர் அவ்வாறு இருப்பதில்லை.

இன்றைக்கும் என் காதல் மனைவி தன் மகளிடம் ”உங்கப்பா, முன்ன போல இல்லை” என சொல்லிக் கொண்டிருப்பார்.. எனக்குள் ஆயாசம் தான் ஏற்படும். எப்போதும் சினிமா கதாநாயகர்களைப் போல காதலித்துக் கொண்டிருக்க முடியுமா?

மகள் பெரிய பெண்ணாகி விட்ட நாள் முதல் கொண்டு, மனைவியின் முகத்தை காதலுடன் பார்க்க் கூட முடியவில்லை. என் மனைவியின் மீதான காதல், என் மகளின் மீது அன்பாக மாறிப் போனது. அரும்பு மீசை தழுவ மகனைப் பார்க்கும் போது என்னால் வேறொரு பெண்ணை பார்க்கவே முடியவில்லை. வயது கூட கூட, உணர்வுகளும் மாற்றமடைகின்றன. ஆனால் பெண்களோ…??? அவர்களின் உணர்வுகளோ? என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது. அவர்கள் என்றைக்குமே உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் தூங்கும் எரிமலை போல.

ஜோசப் பெரிய பெண்ணாகிய தன் மகளை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் வாசலில் விட்டு வருவார். அப்போது ஸ்டெல்லாவைப் பார்ப்பார். 

அந்தக் காட்சியைப் பார்த்த போது எனக்குள் எழுந்த வேதனையை என்னவென்று சொல்வது. பெண்களால் எப்போதுமே உண்மையானவைகளை அறிந்து கொள்ளவே முடியாதா? அந்தக் காட்சி என் மனதுக்குள் நின்று கொண்டு இரண்டு நாட்களாக பாடாய் படுத்தியது. அவசரம் ஸ்டெல்லாவுக்கு. ஜோசப் கடைசி வரையில் இன்னொரு பெண்ணை நினைத்துக் கூட பார்க்காமல் வாழ்வார்.

ஸ்டெல்லாவுடன் ஜோசப்பின் வாழ்க்கை ஒரு பாடலில் விரியும் அழகான ஆண் மயில் பெண் மயிலை ஈர்க்க விரிக்கும் இறகுகளைப் போல. ஒரு காட்சியில் ஸ்டெல்லா குளித்து விட்டு, கூந்தலில் எண்ணை மிளிரும் அழகோடு, பின்னாலே மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொண்டு, ஜோசப்பை திரும்பி பார்த்து, ஒரு பார்வை பார்ப்பார். அய்யோ….!!! இன்னும் அந்தப் பார்வையின் காதலை மறக்க முடியவில்லை. இயக்குனர் கலாரசிகன். என்ன ஒரு காட்சி? பாடல் இருக்கிறது யூடிப்பில் கீழே பாருங்கள். சொக்கிப் போவோம்.

ஆண்கள் எப்போதுமே காயங்களோடு தான் வாழ்வார்கள். ஆம் பெண்கள் தங்களிடம் இருக்கும் பல ஆயுதங்களால் ஒவ்வொரு ஆண்களையும் வீழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வீசும் ஒவ்வொரு ஆயுதங்கள் ஏற்படுத்தும் காயங்கள் என்றைக்குமே ஆறாத தழும்பாய் ஆண்களிடம் பதிந்து விடும். நிராயுதபாணியான ஜோசப் இரண்டு பெண்களின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு முடிவில் தன்னையே அழித்துக் கொள்வார்.

சர்ச்சுகளில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆண்களின் நினைவுகள் வந்துவிடும்.

ஜோசப்பின் வாழ்க்கை முழுவதையும் நம்முள் உணரலாம். அற்புதமான படைப்பு. எழுதிக் கொண்டே போகலாம். நான் ரசித்தவைகளை எழுத எழுத நான் படத்துக்குள் மூழ்கி விடுவேனோ என்ற பயம் ஏற்படுகிறது. 

என்னை ஈர்த்த அற்புதமான படங்களில் இது ஒன்று.

காயங்களின் கதாநாயகனாக ஜோசப்.

வாழ்க்கையின் அபத்த நாடகங்களை இந்த ஜோசப் திரைப்படம் ஒரு துளியாய் மின்னலடிக்க வைத்திருக்கிறது.

இயக்குனருக்கு என் பாராட்டுக்கள். ஜோஜு ஜார்ஜ் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க நினைக்கிறேன். பார்க்கலாம் காலம் கனியட்டும்.

அமைதியாக அமர்ந்து கொண்டு, இந்தத் திரைப்படத்தை அவசியம் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்று அறியலாம்.

பல வகைகளில் நாமெல்லாம் காயங்களோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காயங்கள் இல்லாத மனிதர்கள் இவ்வுலகில் உண்டா?

ஆம் நண்பர்களே….!

பாரதி சொன்னான் பாருங்கள்.

காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

ஒரே ஒரு வலியோடு செத்துப் போவது மேல் அல்லவா?

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.