குரு வாழ்க ! குருவே துணை !!

For Property Consultation (All Work) ::::: Phone : 9600577755 ::::: Email :covaimthangavel@gmail.com

Wednesday, April 29, 2020

போலிப் புகழ் பத்மா சுப்ரமண்யம் - சுவர்ணமுகி


இந்த கட்டுரையை தனது ஃபேஸ்புக்கில் எழுதி இருப்பவர் நிவேதிதா லூயிஸ். இதைப் படித்த போது, எனக்கு மிகுந்த மன அதிர்ச்சியைத் தந்தது. பத்மா சுப்ரமண்யம் பரதநாட்டியத்தின் ரசிகன் அடியேன். இந்த பதிவைப் படித்ததும் அவர் செய்திருக்கும் செயலை என்னால் மறக்கவே முடியவில்லை.

வர்ணாசிரம தர்மம் பற்றிப் பேச இவர்களுக்கெல்லாம் தகுதி எங்கே இருக்கிறது? அதுவும் ஆங்கிலத்தில் பேசுகிறார் பத்மா.

எங்கே போச்சு உங்க மொழி? வெட்கம் இல்லையா உங்களுக்கு?

இப்படியும் ஒரு பெண் இந்த உலகிலே போலிப் புகழோடு வாழ்கின்றார்கள் என்பது எவ்வளவு நீசத்தனமானது. இதெல்லாம் எதற்காக? இதோ காலம் வெளிக்கொணர்ந்து விட்டதே?

தன் சக தோழியைக் கூடவா அழிக்கும் உங்கள் பேராசை? அப்படி அடைந்த உங்களின் புகழ் இன்றைக்கு என்ன ஆனது? பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. அசிங்கம்…!

த்தூ இதுவும் ஒரு பிழைப்பா?

மயிர் நீப்பின் உயிர் வாழா கானகத்து கவரிமான் போல தமிழர்கள் மானம் போயின் உயிர் நீக்கும் வாழ்வியல் கொண்டவர்கள்.

நன்றி : நிவேதிதா லூயிஸ்

இனி அவரின் கட்டுரை

அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா?

காலம் மறந்து போன பெண். நட்டுவனாரும் சினிமா நடன இயக்குனருமான பூபாலின் மகள். மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த சுவர்ணமுகி கரகாட்டக்காரரும் ஆசிரியருமான பெரியசாமியின் மாணவி. குட்டி பத்மினி, உஷா ராஜேந்தர் என்று கலைக் குடும்ப வாரிசுகள் இந்தக் குடும்பத்தில் உண்டு.

சுவர்ணாவின் நாட்டிய சிறப்பைக் கண்டுகொண்ட பூபால், மகளை ஊர் ஊராக அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள கரணங்களை விளக்கிக் கற்றுத் தந்தார். 108 காரணங்களையும் அற்புதமாக ஆடும் கொடையைப் பெற்றிருந்தார் சுவர்ணா. பின்னாளில் ஒரு பேட்டியில் தந்தை மகர்காற்றிய உதவியை சொல்லி இருக்கிறார் சுவர்ணா. சுவர்ணாவின் சிறப்பு அவரது மயில் மற்றும் பாம்பு நடனங்கள். மேடை மேடையாக கரணங்களைப் பயன்படுத்தி உடலை வில்லாக வளைத்து ஆடி நாட்டையே கட்டிப் போட்டார் சுவர்ணா.

1977ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற சர்வதேச இசை மற்றும் நடன விழாவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார் சுவர்ணமுகி. இலண்டன், பாரிஸ், ஃபிராங்க்ஃபர்ட் என்று ஐரோப்பாவிலும், அமெரிக்கா, இலங்கை, தென் கிழக்கு ஆசியா என்று உலகின் பல்வேறு நாடுகளில் சுவர்ணா ஆடாத மேடைகள் இல்லை. 52 நாடுகளில் மேடை ஏறி ஆடிய சுவர்ணமுகியை தமிழ்நாடு அரசின் "ஆஸ்தான நர்த்தகி" ஆக்கி அழகு பார்த்தார்கள். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தன் முதல் மாத குடியரசுத் தலைவர் ஊதியத்தை சுவர்ணமுகிக்கு அளித்து வாழ்த்தினார். சும்மா இல்லை பத்மா, "எலும்பேயில்லாத நடன மங்கை" என்று பாராட்டித்தான்!

108 கரணங்களை ரோம் முதல் ரஷ்யா வரை ஆடித் தீர்த்தவருக்கு கலைமாமணி விருதும் வழங்கி கௌரவித்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இப்படி உலகம் முழுக்க அறியப்பட்ட சுவர்ணா ஆட்டத்தில் மட்டும் கவனத்துடன் இருக்க, நீங்கள் என்ன செய்தீர்கள் பத்மா? ஆண்டாண்டு காலமாக சுவர்ணா உள்ளிட்ட பலர் ஆடிக் கொண்டிருந்த கரணங்களை, வெகு சாமர்த்தியமாக எப்படி ஆடுவது என்று தானே ஆய்வு செய்து கண்டுபிடித்ததாக நூல் எழுதினீர்கள். துணைக்கு "மகா பெரியவாவை" அழைத்துக் கொண்டீர்கள்.

உங்களுக்கு நினைவு இருக்கிறதா பத்மா? 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு நீங்களும் சுவர்ணமுகியும் இணைந்து சென்ற இந்து மாநாட்டில் என்ன நடந்தது? கரணங்களை நீங்கள் ஆய்வு செய்ததாக மேடை ஏறிச் சொன்னீர்கள். ராகம் பாவத்துடன் ஆடி ஒன்றிரண்டு கரணங்களை, இயன்றதைச் செய்தீர்கள். அதே மேடையில் உடலை வில்லாய் வளைத்து ஆடிய சுவர்ணா 108 கரணங்களையும் அதன் பின் ஆடித் தீர்த்தத்தை உலகம் என்ன சொல்லிற்று? "சினிமாக்காரர்கள் முன் கலையை கடை விரிக்கிறார், வெளிநாட்டுக் காரனுக்கு முன்பாக அருவருக்கத்தக்க நடன அசைவுகள் செய்கிறார்" என்று."சர்க்கஸ் வித்தை காட்டும் கோமாளி" என்று.

பிராமணப் பெண்ணான நீங்கள் "ஆய்வு செய்யும் அறிஞர்" ஆனீர்கள். பிராமணரல்லாத சுவர்ணா வெறும் செப்படி வித்தைக்காரி ஆனார். பிராமணர் அல்லாதோர் ஆடிய கரணங்களை உங்கள் கைக்கு லாவகமாக "ஆய்வு செய்தேன்" என்று கொண்டு வந்த நீங்கள் என்ன குலம் பத்மா? அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் கே.ஆர்.ஸ்ரீநிவாசன் துணையை ஏன் தேடி ஓடினீர்கள்? உங்களை விட அதிகமாக இந்தக் கரணங்களை நேசித்து ஆடிய சுவர்ணமுகி என்ன ஆனார் பத்மா? கர்த்தருக்குள் தஞ்சம் புக சுவர்ணாவைத் தூண்டியது யார், அல்லது எது பத்மா?

இயேசு நாதர் தன் கனவில் வந்ததாகவும் இனி அவரே தன் கணவர் என்றும் அவரைத் தவிர வேறு யாருக்கும் தன் கலையை அர்ப்பணிக்கப் போவதில்லை என்றும் சுவர்ணா அறிவித்த போது நீங்கள் எங்கே உங்கள் ஆய்வுகளை செய்து கொண்டு இருந்தீர்கள்? சக நடன மங்கை மேல் உங்களுக்கு உள்ளார்ந்த அக்கறை இருந்ததா பத்மா? 80களுக்குப் பிறகு தொடர் உளவியல் தாக்குதல்களுக்கு உள்ளான அந்தப் பெண் மதமாற்றம், திருமணம், ஆட மறுப்பு, மறுதலிப்பு என்று நாட்டிய உலகை விட்டு விலகி ஓட யார் காரணம் பத்மா?

இன்றும் ஊழியம் செய்கிறேன், நடனம் ஆடினால் இயேசுநாதர் என்னை மன்னிக்க மாட்டார் என்று சுவர்ணா சொல்லிக் கொண்டிருக்க, "தெளிவாக" இருப்பதாக காட்டிக் கொள்ளும் நீங்கள், வர்ணாசிரம தர்மம் சரியே, அவரவர் அவரவர் குலத் தொழிலை செய்தால் மட்டுமே உலகம் சம நிலையில் இயங்கும் என்று "கொரோனா கால அறிவை" எந்தத் தயக்கமும் இல்லாமல் உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் குலத் தொழிலைச் செய்யவில்லை? யாரோ ஒரு கோயில் குருவின் வீட்டில் அமர்ந்து கொண்டு புளியோதரை செய்து கொண்டிருக்க வேண்டிய நீங்கள் உலகின் மிக பிரம்மாண்ட "கரண" ஆய்வாளர், இண்டாலஜிஸ்ட் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்வது எப்படி சரி? உலகின் பாலன்ஸ் ஆட்டம் கண்டுவிடாதா?

உங்கள் மகா பெரியவாவின் வழிகாட்டுதல் படி நீங்கள் மீண்டும் உங்கள் குலத்தொழிலுக்கே திரும்ப வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அப்படியே சுவர்ணமுகி என்ன ஆனார், ஏன் ஆட மறுத்தார், இன்று அவரை அவரை பல "இந்து" ஊடகங்கள் "சர்க்கஸ்காரி", "மதம் பிடித்த பைத்தியம்" என்று தொடர்ந்து இகழ்ந்து பேசியும் எழுதியும் வரக் காரணம் என்ன என்பதையும் சொல்லிவிடுங்கள்.

உங்களைத் தவிர கரணங்களை ஆய்வு செய்து, ஆடியும் வந்த அடையாறு லட்சுமணன், குச்சிப்புடி ஜாம்பவான் வேம்பாட்டி சின்ன சத்யம் போன்றவர்கள் ஏன் அதிகம் பேசப்படவில்லை? உங்கள் அரசியல் என்ன? அதில் மகா பெரியவாவின் பங்கு என்ன? எப்படித் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகள் உள் மன அழுக்கைச் சுமந்து கொண்டு உங்களால் தெய்வீகப் புன்னகை பூக்க முடிகிறது பத்மா? வர்ணாசிரம தர்மம் பெண்களாகிய உங்களை எங்கே வைத்துப் பார்க்கிறது பத்மா? சூத்திரன் அருகே.

அந்த வர்ணாசிரம அழுக்கை மண்டை முழுக்க சுமந்து கொண்டு அழுத்தமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சிறு வயது "தெய்வ நாட்டிய மங்கை" பிம்பம் உடைந்து போனதில் அளவற்ற மன அழுத்தத்தில் நான் இருக்கிறேன் பத்மா. நீங்களும் இந்த சமூகமும் சுவர்ணா போன்றவர்களுக்கு செய்த "உதவிகளுக்கு" யார் பதில் சொல்வது? மனசாட்சி என்ற ஒன்று உங்களுக்கு இருந்தால் இனியேனும் மனிதப் பிறவியாக, கருணையின் மறு உருவான பெண்ணாக மட்டுமே வாழ முனையுங்கள் பத்மா. சுவர்ணாவை என்றாவது ஒரு நாள் நேரில் சந்தித்து அவர் ஏன் ஆடவில்லை என்று கேட்டுக் கொண்டு உங்களிடம் மீண்டும் வருகிறேன். நன்றி. வணக்கம்.

நிவேதிதா லூயிஸ் ஃபேஸ்புக் ஐடி : www.facebook.com/nivedita.louis

காயங்களின் கதாநாயகன் – ஜோசப்


முதலில் இந்தப் பாடலைப் பார்த்து விடுங்கள். பின்னர் படிக்கச் செல்லலாம்.

இது விமர்சனம் அல்ல. படம் பார்த்த போது எனக்குள் உண்டான எண்ணங்கள். விமர்சனம் என்றால் ஒப்பீடு. ஒப்பீடுகள் ஒரு சில இடங்களில் சிலாகிக்க முடியாது. எங்கு விமர்சனம் செய்ய வேண்டுமோ அங்கு அவசியம் கருதி விமர்சிக்க வேண்டும். சினிமா விமர்சனம் என்பது கத்தி மீது நடப்பது போல. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போம். அதற்கேற்ற அறிவுதான் இருக்கும். அதை வைத்து சரியான விமர்சனத்தை எழுத முடியாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அறிவின் தன்மையைப் போல அவரவர்களின் விமர்சனம் வரும். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்தது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை விமர்சிக்க முடியாது. திட்டனும். ஏனென்றால் இன்று வரைக்கும் கிழவர்கள் குமரிகளை அதுவும் ரக ரகமான பாவைகளை காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதி திரைப்படம் பார்த்தேன். கதாநாயகியே இல்லை. படம் நன்றாக ஓடியதாக கேள்விப்பட்டேன். கார்த்தியின் ஹீரோயிசத்தை சகித்துக் கொண்டால் ரசிக்க முடியும்.

நாமெல்லாம் பிறரின் ஹீரோயிசத்தைப் படித்து வளர்ந்தவர்கள் தானே. முளைக்கும் போதே தவறான வழிகாட்டல். அது காடு செல்லும் வரை தொடர்கிறது.

இந்த உலகில் ஒரே ஒரு அப்துல் கலாம் தான் இருக்க முடியும். அவரைப் போல வாழ்க்கையை இன்னொருவர் வாழவே முடியாது. ஆனால் நாமோ அவரைப் போல, இவரைப் போல என பேசி தன் சுயத்தை அழித்துக் கொள்கிறோம்.

இனி படம்.

கொலை நடந்த வீடு. எஸ்.பி யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறார். அவர் தான் இந்த ஜோசப். பழைய ஸ்கூட்டரில் வருகிறார். கொலை நடந்த இடத்தை ஒவ்வொரு பகுதியாக பார்வை இடுகிறார். பேசுகிறார். கொலையாளியைக் காட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஆக்ஸிடெண்ட் என்று போனில் அழைக்கிறார் ஒருவர். ஹாஸ்பிட்டலில் ஸ்டெல்லா படுத்து இருக்கிறார். ஸ்டெல்லா இவரின் மனைவி. அழைத்தது ஸ்டெல்லாவின் இரண்டாவது கணவர்.

ஸ்டெல்லா உடனான வாழ்க்கை விரிகிறது. காவியம் போல. இடையில் ஒரு கிளைக்கதை. ஜோசப்பிற்கு முன்னால் காதலி ஒருத்தி உண்டு. அந்தக் காதல் நிறைவேறவில்லை. அவளை அவர் போலீஸாகி வேலை பார்க்கும் போது, ஒரு கொலை விசாரணைக்குச் சென்ற போது அழுகிய பிணமாகப் பார்க்கிறார்.

அதன் பாதிப்பில் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கிறார். ஸ்டெல்லா ஜோசப் இன்னொரு பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு மகளை ஜோசப்பிடம் விட்டு விட்டு சென்று விடுகிறார். இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜோசப் திருமணம் செய்யாமலே வாழ்கிறார்.

ஸ்டெல்லாவுக்கு மூளைச்சாவு ஏற்படுகிறது. உடலுறுப்புகள் தானம் கொடுக்கப்படுகிறது. ஜோசப் ஸ்டெல்லா ஆக்சிடெண்ட் ஆன இடத்தைப் பார்வையிடுகிறார். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிகிறார். அவரின் மகளும் இதே போல ஆக்சிடெண்டில் சிக்கி உயிரிழக்கிறார். அப்போது ஸ்டெல்லா இன்னொருவரின் மனைவி. அப்போது இருவரும் மகளின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய அனுமதிப்பார்கள். அடுத்த ஆக்ஸிடெண்ட் மரணம் ஸ்டெல்லா.

முதன் முதலாக காதலித்தவரும் கொலையாகிறார். மகளும், மனைவியும் இறந்து போகின்றார்கள். தன் மனவலியை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் இப்படத்தில். அவரின் வலியை நாம் உள்ளுக்குள் உணரலாம்.

கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிகிறார்.

தன்னையே, தன் உயிரை சாட்சியாக்கி விட்டு சாகிறார். கொலையாளிகள் சிக்குகிறார்கள்.

படம் முடிந்தது.

முதல் காதல் – மரணம் வரை மறையாத உணர்வு. ஜோசப் ஏழை என்பதற்காக அக்காதலை இழக்கிறார். காதலியோ இன்னொருவருடன் வாழ்கிறார்.

இரண்டாவது வாழ்க்கை. முதல் காதலியின் மரணத்தின் வலியால் மனைவியை இழக்கிறார். அதை அவளிடம் தாமதமாகச் சொல்கிறார். இருந்தும் என்ன பயன்? அவள் வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெண்கள் அவசர புத்திக்காரர்கள் என்பார்கள். ஆண்களின் உணர்வுகள் சினிமாத்தனமானவை அல்ல. ஒரு முழுமையான ஆண் தன் ஆசாபாசங்களைக் குறைத்துக் கொள்வான் காலத்தின் சூழலுக்கு ஏற்ப. ஆனால் பெண்களில் பலர் அவ்வாறு இருப்பதில்லை.

இன்றைக்கும் என் காதல் மனைவி தன் மகளிடம் ”உங்கப்பா, முன்ன போல இல்லை” என சொல்லிக் கொண்டிருப்பார்.. எனக்குள் ஆயாசம் தான் ஏற்படும். எப்போதும் சினிமா கதாநாயகர்களைப் போல காதலித்துக் கொண்டிருக்க முடியுமா?

மகள் பெரிய பெண்ணாகி விட்ட நாள் முதல் கொண்டு, மனைவியின் முகத்தை காதலுடன் பார்க்க் கூட முடியவில்லை. என் மனைவியின் மீதான காதல், என் மகளின் மீது அன்பாக மாறிப் போனது. அரும்பு மீசை தழுவ மகனைப் பார்க்கும் போது என்னால் வேறொரு பெண்ணை பார்க்கவே முடியவில்லை. வயது கூட கூட, உணர்வுகளும் மாற்றமடைகின்றன. ஆனால் பெண்களோ…??? அவர்களின் உணர்வுகளோ? என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது. அவர்கள் என்றைக்குமே உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் தூங்கும் எரிமலை போல.

ஜோசப் பெரிய பெண்ணாகிய தன் மகளை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் வாசலில் விட்டு வருவார். அப்போது ஸ்டெல்லாவைப் பார்ப்பார். 

அந்தக் காட்சியைப் பார்த்த போது எனக்குள் எழுந்த வேதனையை என்னவென்று சொல்வது. பெண்களால் எப்போதுமே உண்மையானவைகளை அறிந்து கொள்ளவே முடியாதா? அந்தக் காட்சி என் மனதுக்குள் நின்று கொண்டு இரண்டு நாட்களாக பாடாய் படுத்தியது. அவசரம் ஸ்டெல்லாவுக்கு. ஜோசப் கடைசி வரையில் இன்னொரு பெண்ணை நினைத்துக் கூட பார்க்காமல் வாழ்வார்.

ஸ்டெல்லாவுடன் ஜோசப்பின் வாழ்க்கை ஒரு பாடலில் விரியும் அழகான ஆண் மயில் பெண் மயிலை ஈர்க்க விரிக்கும் இறகுகளைப் போல. ஒரு காட்சியில் ஸ்டெல்லா குளித்து விட்டு, கூந்தலில் எண்ணை மிளிரும் அழகோடு, பின்னாலே மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொண்டு, ஜோசப்பை திரும்பி பார்த்து, ஒரு பார்வை பார்ப்பார். அய்யோ….!!! இன்னும் அந்தப் பார்வையின் காதலை மறக்க முடியவில்லை. இயக்குனர் கலாரசிகன். என்ன ஒரு காட்சி? பாடல் இருக்கிறது யூடிப்பில் கீழே பாருங்கள். சொக்கிப் போவோம்.

ஆண்கள் எப்போதுமே காயங்களோடு தான் வாழ்வார்கள். ஆம் பெண்கள் தங்களிடம் இருக்கும் பல ஆயுதங்களால் ஒவ்வொரு ஆண்களையும் வீழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வீசும் ஒவ்வொரு ஆயுதங்கள் ஏற்படுத்தும் காயங்கள் என்றைக்குமே ஆறாத தழும்பாய் ஆண்களிடம் பதிந்து விடும். நிராயுதபாணியான ஜோசப் இரண்டு பெண்களின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு முடிவில் தன்னையே அழித்துக் கொள்வார்.

சர்ச்சுகளில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆண்களின் நினைவுகள் வந்துவிடும்.

ஜோசப்பின் வாழ்க்கை முழுவதையும் நம்முள் உணரலாம். அற்புதமான படைப்பு. எழுதிக் கொண்டே போகலாம். நான் ரசித்தவைகளை எழுத எழுத நான் படத்துக்குள் மூழ்கி விடுவேனோ என்ற பயம் ஏற்படுகிறது. 

என்னை ஈர்த்த அற்புதமான படங்களில் இது ஒன்று.

காயங்களின் கதாநாயகனாக ஜோசப்.

வாழ்க்கையின் அபத்த நாடகங்களை இந்த ஜோசப் திரைப்படம் ஒரு துளியாய் மின்னலடிக்க வைத்திருக்கிறது.

இயக்குனருக்கு என் பாராட்டுக்கள். ஜோஜு ஜார்ஜ் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க நினைக்கிறேன். பார்க்கலாம் காலம் கனியட்டும்.

அமைதியாக அமர்ந்து கொண்டு, இந்தத் திரைப்படத்தை அவசியம் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்று அறியலாம்.

பல வகைகளில் நாமெல்லாம் காயங்களோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காயங்கள் இல்லாத மனிதர்கள் இவ்வுலகில் உண்டா?

ஆம் நண்பர்களே….!

பாரதி சொன்னான் பாருங்கள்.

காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

ஒரே ஒரு வலியோடு செத்துப் போவது மேல் அல்லவா?

Tuesday, April 28, 2020

கொரானா சொல்லப்படாத உண்மைகள்


அமெரிக்காவில் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொரானாவில் பாதிப்படைந்து, அதில் 50000 பேர் உயிரிழப்பு நடந்திருக்கிறது என்கிறது செய்தி. இதை நம்பலாம். ஏனென்றால் அங்கு ஓரளவு பத்திரிக்கை முதலாளிகள் தைரியசாலிகள்.

ஆனால் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வரக்கூடிய செய்திகளை நம்பக் கூடிய அளவுக்கு மீடியாக்கள் இதற்கு முன்னால் உண்மையான செய்திகளை வெளியிடவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் சொன்னார்கள்.

கோவையில் உண்மையை வெளியிட்ட சிம்ப்ளிசிட்டி இணைய பத்திரிக்கையின் நிர்வாகி கைது அதை வெளிக் கொணர்ந்து இருக்கிறது. ஊருக்கு உண்மையைச் சொன்னால் கைது. தமிழக அரசின் கண் அசைவுகளுக்கு ஏற்ப தான் பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

என்ன உண்மை என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்க தோன்றும். அந்தளவுக்கு தரவுகளை என்னால் திரட்ட முடியாது. செய்தி தாள்களில், இணையங்களில், அரசு உத்தரவுகளில் வரக்கூடிய ஒரு சில செய்திகளை படிக்கும் போது பூனைக்குட்டி வெளியில் வந்து விடுகிறது. உண்மையை மறைக்கலாமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியாது. அது உண்மையின் இயல்பு. பொய் பல அலங்காரங்களுடன் வெளியிடப்படும் போது, அந்தச் செய்தியில் உண்மை எங்கோ ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அம்மா உணவகம் மூலம் இலவச உணவு அளிக்கப்படுகிறது என்கிறது அரசு. அதைக் கிண்டல் செய்து கார்ட்டூன் வரைகிறது ஆர்.;பி.ஐ.இயக்குனரின் பத்திரிக்கை துக்ளக். மக்களுக்குப் பதிலாக திமுக என எழுதி இருக்கிறார்கள். எழுத்துப் பிழை அல்ல. கருத்துப் பிழை. உண்மை மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள் என்பது.
நேற்று முதலமைச்சர்களுடன் பிரதமர் பேசிய போது, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொற்று அதிகரிக்கும் எனச் சொன்னதாக, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாகச் செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அப்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு லாக் டவுன் இருக்கலாம் என சிந்தனை வருகிறது.


கேரளா முதலமைச்சர் பி.எம்முக்கு லெட்டர் எழுதுகிறேன் எனச் சொல்லி, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்களால் எங்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதற்காக அவர் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லையோ என நினைப்பு வருகிறது.

கொரானா டெஸ்டிங்கை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கிறோம் என தமிழக அரசு அறிவிக்கிறது. அப்போது அரசு அறிவிக்கும் தொற்று எண்ணிக்கை சரியானதாக இருக்காது என அறிவு சொல்கிறது. தொற்று எண்ணிக்கை எவ்வளவு எனத் துல்லியமாக அறிவிக்க டெஸ்ட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் தொற்று எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்? ஆக தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், பசியோடு இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று ஏழு கட்டளைகளைப் பின்பற்றும்படி ரேடியோவில் பேசுகிறார். ஆக மத்திய அரசு மக்களுக்கு உதவாது என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தெரிகிறது.

நாங்கள் வரியை மட்டும் வசூலிப்போம். அதை குறித்த காலத்துக்குள் மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம். மக்கள் செத்துப் போனாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால் பெரிய நிறுவனங்கள் நடத்தும்  முதலாளிகளுக்கு வட்டி, வரிகளுக்கு தள்ளுபடி வழங்குவோம் என்று சொல்கிறாரோ என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

எக்கனாமி நன்றாக இருக்கிறது என்று பேசுகிறார். நாமும் நம்புகிறோம். ஆனால் இந்தியாவில் மியூட்சுவல் ஃபண்ட் பிசினஸ் செய்யும் டெம்பிள்டான் நிறுவனத்திற்கு 50000 கோடி நிவாரணம் அறிவிக்கிறது ஆர்.பி.ஐ. நன்றாக இருக்கிறது எக்கனாமி என்று ஒரு பக்கம் பேசி முடிப்பதற்குள், இந்த செய்தி வெளி வருகிறது. மியூட்சுவல் ஃபண்ட்ஸ் அடிவாங்கினால் மொத்தமாக ஷேர் மார்க்கெட் படுத்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை பின் ஏன் டெம்பிள்டானுக்கு ஆர்.பி.ஐ. நிவாரணம் வழங்குகிறது? ஆக இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என தெரிகிறது. இனி பிரதமர் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்கிறது.
தமிழகத்தை பி.ஜே.பி தான் ஆள்கிறது என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். பால்பாக்கெட் கெட்டுப் போனவுடன், அதை சி.எம்க்கு டிவீட் செய்கிறான். ஆஃப்டர் ஆல் ஒரு கூத்தாடிக்கு வீட்டுக்கே பால் பாக்கெட் கொண்டு போய் கொடுக்கப்படுகிறது. வாங்கியவன் பேசாமல் இருந்திருக்கலாம். வேண்டுமென்றே அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை டிவீட் போடுகிறான். ஒரு டிவீட்டுக்கு அரசு எனக்கு எவ்வாறு வேலை செய்கிறது எனப் பாருங்கள் என தற்பெருமைக்காக, கேவலப்படுத்துகிறோம் என்று தெரிந்தே அதைச் செய்கிறான் அவன். இப்போது நம் தமிழகத்தின் முதலமைச்சருக்கு நெட்டில் வேறு பெயர் வைத்து அழைக்கிறார்கள். இந்தச் சம்பவம் உண்மையில் சென்ஸார் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஒரு கூத்தாடிக்கு இந்த அரசு பயந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆக பி.ஜே.பி தான் தமிழகத்தை ஆள்கிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என்று நம்பிட வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் வெளியிடப்படும் செய்திகளில் இருக்கும் பொய்களைக் களைந்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதே கதைதான். ஏதோ இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு நண்பர் என்னிடம், அரசு கொரானா இல்லை என்று அறிவித்த பிறகு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று கேட்டார்.
கொரானாவுக்கு மருந்து இருக்கிறது என்று உறுதியாக தெரியும் வரையில் அனுப்புவதில் எனக்கு உவப்பில்லை. ஒரு வருடம் லீவ் போட்டு விட்டால் போச்சு. அரசுக்கு கொரானாவில் செத்தார் என்பது அது அறிவிக்கும் எண்ணிக்கையில் ஒரு எண் கூடும். அவ்வளவுதான். அது அவர்களுக்கு எண் மட்டுமே. ஆனால் நமக்கோ அது ஒரு உயிர். நம் வாழ்வின் துடிப்பு. நம் வாழ்க்கை. டிப்ளமேட்ஸ், அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பிறரின் வாழ்க்கை? யாருக்கு யார் உத்தரவாதம் தர முடியும்? நாம் தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இனி என்னதான் செய்வது? பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் எதிர்காலம் என்னவாகும்?

பசிக்கு உணவு அதற்காக உழைப்பு, உடலுக்கு உடை, இருக்க ஓர் இடம். இது போதும். கடவுள் மனிதனை இயற்கையோடு ஒன்றி வாழத்தான் படைத்தார். காசு சம்பாதிக்க அல்ல.

பின்னே இந்த அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்? இனி வரும் காலங்களிலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடலாம். எவனாது அரசு இயந்திரத்தை இயக்க வேண்டுமே?

நமக்குத்தான் தைரியம் இல்லையே. கேள்வி கூட கேட்க மாட்டோமே? தெருவில் இறங்கி நிற்க கூட தைரியமில்லையே? எக்கேடு கெட்டால் தான் நமக்கு என்ன? கூனிப் போய் விட்டது மனசும் உடம்பும் நமக்கு.

ஆக, அரசு தன்னால் இயன்றதைச் செய்யும். அது எல்லோருக்குமானதாக இருக்காது. மக்கள் தான் தங்களை காத்துக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் சுடுகாடு. மக்கள் உயிருடன் இருந்தால் ஓட்டுப் போட்டு ஜன நாயகத்தை நிலை நாட்டலாம். வரி கொடுக்கலாம். உயிருடன் இல்லாது செத்துப் போனால் அது அரசின் புள்ளி விபரங்களுக்கு உதவும். இத்தனை பேர் உயிருடன் உள்ளார்கள். இத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்று அரசு கணக்குகளை டிவியில் வெளியிடும். நிச்சயமாக இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கும். உண்மைக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகமோ அதிகம்.

நீங்கள் புள்ளி விபரங்களில் எதுவாக இருக்க விரும்புகின்றீர்கள் என்பது உங்களின் அறிவுக்கு உட்பட்டது.

ஆகவே நண்பர்களே, இதுவும் கடந்து போகும் என்ற எதிர்மறைச் சிந்தனையில், விதி இதுதான், கடவுளின் விருப்பம் இது, இயற்கையின் சீற்றம் இது என்று வசதிக்கு ஏற்றபடி சிந்தித்து முடிவெடுப்போம்.

குறிப்பு : செய்திகளை உற்றுக் கவனியுங்கள். உண்மையை உணர்ந்து கொள்வோம். நம்மையும், நம் உறவுகளையும், நண்பர்களையும் காப்பாற்றுவோம்.

வாழ்க நலமுடன்…வளமுடன்…!!

Sunday, April 26, 2020

சினிமா வழியான ரகசிய தாக்குதல்


இரக்கம் மானுட உலகில் மட்டுமல்ல, விலங்குகளின் வாழ்விலும் வெளிப்படும் ஜீவகாருண்யத்தின் உணர்வு நிலை.

நீங்கள் யுடியூப் வீடியோக்களில் பார்த்திருக்கலாம். பல விலங்குகள் தன் இனம் அல்லாத பல உயிரினங்களைப் பாதுகாப்பதும், பாலூட்டி வளர்ப்பதுமான பல காட்சிகளை. பார்க்க விரும்பினால் மீண்டும் தேடிப்பாருங்கள். ஆயிரக்கணக்கில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தண்ணீரிலிருந்து வெளியில் வந்து துடித்துக் கொண்டிருந்த மீனை ஒரு பறவை மீண்டும் தூக்கி தண்ணீருக்குள் போட்ட வீடியோவைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். பறவைக்கு மீன் ஆகாரம். பசியை விட இரக்க உணர்வு அப்பறவையிடமிருந்து உடனடியாக வெளிப்பட்டது. பசி, தாகம், கோபம் இவை எல்லாவற்றையும் விட இரக்க உணர்வு, எல்லா உயிரினங்களிடத்திலும் ‘சட்’டென்று வெளிப்படுபவை.

எத்தனையோ பேர் சாலைகளில் அடிபட்டுக் கிடப்பவர்கள் பிழைக்க வேண்டுமென பிரார்த்திப்பார்கள். அது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, மனதுக்குள் சட்டென்று கவிழும் இரக்க உணர்வு உடல் முழுதும் வியாபித்து மனம் துயரத்தில் வீழும் அல்லவா?

நாய் – கற்காலத்திலிருந்து இதுவரையிலும் மனிதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈடு இணையற்ற விலங்கு. வேட்டைக்காகவும் ஆடு,மாடு மந்தைகளைக் காப்பது முதற்கொண்டு, மனிதனைக் காத்து வரும் அற்புதமான இறைவனின் படைப்பு அது. காவல்காரன் கூட துரோகி ஆகலாம். நாய்கள் அப்படி ஆவதில்லை. அதனுடைய எஜமானனை எவராவது அடிக்க கை ஓங்கினால் பட்டென்று கவ்வி விடும். ஒரு சில நாய்கள் தலையைக் கவ்வி தனியாகப் பிடுங்கி எடுத்து விடும் கோபம் கொண்டவை. தன் எஜமானன் மீதான அன்பினால் அவைகள் சக மனிதர்களை கொல்லக் கூட தயங்காது. மனிதனின் மீது ஜீவகாருண்யத்தைக் காட்டுவதில் நாய்க்கு நிகராக தாயைத்தான் சொல்லலாம்.

முயலை வாயில் கவ்வி, அதை தன் எஜமானனிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அவர் போடும் கறிக்காக காத்துக் கிடக்கும் அந்த விசுவாசமான நாய். கணவன் இறந்தால் கூட பிள்ளைகளோ, மனைவியோ கூட இறந்து விடுவதில்லை. ஆனால் பாசமுள்ள நாய்கள் உண்ணாமல் பட்டினி கிடந்து செத்துப்போன கதைகளை நாமெல்லாம் கேட்டிருக்கிறோம்.

ஜீவகாருண்யம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஒரே உணர்வாகத்தான் வெளிப்படுகிறது.

அந்த இரக்கம் எனும் உணர்வு மனிதனிடத்தில் அவனறியாமல் அவனைப் பல சங்கடங்களில் சிக்க வைத்து விடும். பல பேருக்கு இந்த அனுபவம் இருக்கலாம். நாமெல்லாம் இன்றைக்கு சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்திருக்க காரணமும் அந்த இரக்க உணர்வுதான்.

மனிதனின் இரக்க சுபாவத்தை வெளிப்படுத்த வைத்து, அதன் விளைவாக தன்னை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி, அதன் மூலம் ரசிகனின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அவனை அறியாமலே, அவனுக்குப் புரியாமலே சுரண்டி கோடிகளைக் குவித்து மனித குலத்துக்கே கேடு விளைவிப்பதில் சினிமாவுக்கு நிகராக வேறு ஒன்றையும் சுட்டிக் காட்ட முடியாது.

தீவிரவாதத்துக்கும் எல்லாம் மேலானது இது. மனிதனை அவன் அறியாமலே அடிமையாக்கி, அது தான் உண்மையான மகிழ்ச்சி என நம்ப வைக்கும் செயலை தீவிரவாதத்துக்கும் எல்லாம் உயர்ந்த தீவிரவாதம் என்று தான் சொல்ல வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு மனிதனின் உணர்வுக்குள் அசுர தாக்குதலை நிகழ்த்தி, அவனறியாமலே அடிமையாக்கி விடுகிறது சினிமா. மனிதனின் உளவியலில் வெகு நுட்பமான வகையில் தாக்குதல் நடத்தி, அவனக்குப் புரியாமலே உணர்வினூடே பதிந்து, அதன் பலனை அட்சர சுத்தமாய் அறுவடை செய்து விடுகிறார்கள் புத்திசாலி சினிமாக்காரர்களில் பலர்.

சினிமாக்களில் ஹீரோக்கள் கொடுமையான பல வேதனைகளை வில்லன்களால் அனுபவிப்பார்கள். ஹீரோக்களின் அம்மா துடிக்கத் துடிக்க கொல்லப்படுவார். தங்கைகள் ஹீரோவின் முன்னாள் கற்பழிக்கப்படுவர். வில்லன்கள் செய்யும் செயல்களால் ஹீரோ பெரும் துயரம் கொள்வார். கண்ணீர் வடிப்பார். வேதனையில் விம்முவார். இப்படித்தான் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

திரையின் முன்னால் காசைக் கொடுத்து, படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனின் நெஞ்சுக்குள் ஹீரோவின் மீதான இரக்கமும், அவன் எது செய்தாலும் சரி, ஏன் இன்னும் ஹீரோ வில்லனைக் கொல்லாமல் இருக்கிறான் என்ற எண்ணமும் எழுவது திண்ணம் அல்லவா? 

இரக்க சுபாவத்தின் இன்னொரு முகம் கொடூரம். ஹீரோ வில்லனைக் கொன்றாலும் பரவாயில்லை என்று மனம் கோபம் கொள்ளும். இன்றைக்கு ரசிகக் குஞ்சுகள் தன் நடிகன் பெரியவன் என டிவீட், ஃபேஸ்புக்கில் எழுதி, மீம்ஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்ன காரணத்தினால் நாம் அவ்வாறு செய்கிறோம் எனத் தெரியாமலே. உண்மையில் ரசிகக் குஞ்சுகள் ஒரு வித கிளர்ச்சியின் பாதிப்பில் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள் என அவர்கள் அறிவதில்லை.

அது மட்டுமின்றி, பருவ வயதில் சக பெண்களை ஏறெடுத்துப் பார்க்கவும் முடியாமல் தவிக்கும் இளவட்டங்களின் முன்னால், அழகு மிளிரும் பாவைகளுக்கு அரைகுறை ஆடைகள் உடுத்தி அவளின் கழுத்தில் கை வைத்து தடவி, தொப்புளில் முட்டை சுட்டு, பிசைந்து, பிசைந்து, கடித்து, நக்கி, உறிஞ்சி இன்னும் என்னென்ன சேட்டையெல்லாம் செய்யலாமோ அத்தனையும் செய்து ஹீரோயிசத்தைக் காட்டுவது போல, ரசிகனின் ஏக்கத்தைத் தீர்ப்பார் ஹீரோ. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவரை மறக்க முடியுமா? அது போல காம உணர்வின் வடிகாலுக்கு உதவும் ஹீரோ ரசிகனின் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டு விடுகின்றார்.

வெள்ளைதுணியில் ஒளிரும் பிம்பத்தைப் பார்க்கும் ரசிகக்குஞ்சுகளின் காம உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அந்த இன்பத்தினால் எழும் குதூகலத்தில் ஹீரோவின் அடிமையாகி விடுவார்கள். பின்னே என்ன ஹீரோவின் மீதான இரக்கம், அவன் செய்யும் காமச் சேட்டைகள் இவை ஒவ்வொரு ரசிகக் குஞ்சுகளின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் இல்லை. ”முதல் நாள் முதல் சோ” என்பார்கள் அல்லவா ஒரு சில ரசிகர்கள்? அவர்கள் அனைவரும் இந்த விதமான காட்சிகளால் தூண்டப்பட்டவர்கள் தான்.

இவர்களைப் போன்றவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிப்பவர்கள். இவர்கள் தான் என்ன செய்கிறோம் என்று அறியாத அடிமைகளாகி, ஒப்புக்கு வாழ்வார்கள். ஒரு சிலர் காலப் போக்கில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். உண்மை புரிந்த உடன் விலகி விடுவார்கள். பெரும்பான்மையானவர்கள் தங்கள் ஆயுள் காலம் முடியும் வரை அடிமைகளாக இருந்து கொண்டு, அதற்கு பெயர் “ரசிகன்” என்றுச் சொல்லிக் கொண்டு திரிந்து செத்துப் போவார்கள். 

இந்த உண்மையை அட்சர சுத்தமாக புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரும், பாலசந்தரும். பெரும்பாலும் சினிமாக்களில் ஒரு ஜாதி ஆதிக்கம் அதிகமிருக்கும். அவர்கள் எல்லா ஃபீல்டுகளிலும் இருப்பார்கள். அவர்களின் நோக்கம் வேறு. முன்பே எழுதி இருக்கிறேன் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆரம்பகாலப் படங்களில் கற்பழிப்புக் காட்சிகள் அதிகமிருக்கும். சட்டத்தைக் கேள்வி கேட்கும் படங்கள் எனச் சொல்வார் அவர். சினிமா வசனங்கள் நாட்டின் அரசியலமைப்பினைக் கேள்வி கேட்கும். ஓட்டைகளை அலசும். 

ஆனால் உண்மை என்ன? அரசியலமைப்பு எல்லோருக்கும் நன்மை செய்வதற்காகத்தான் உருவானது. ஆனால் அதை பயன்படுத்துவோரால் தான் அது சிறுமை பெறுகிறது. சினிமாவில் என்ன சொல்வார்கள் தெரியுமா? மொத்த அரசியலமைப்பே தவறு என்பார்கள். ஆட்கள் தவறு என்று சொல்வதை விட அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தி ஹீரோ வேஷத்துக்கு பலம் சேர்ப்பார்கள். ஹீரோ பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு நாட்டைக் காப்பாற்றுவார்.

கற்பழிப்புக் காட்சிகள் மன வக்கிரத்தின் உச்ச நிலை. ஆனால் ரசிகனுக்கு அது ஒரு வேறு விதமான உணர்வினை உண்டாக்க்கி கிளர்ச்சி தன்மையை கிளறி விடும். அவருக்கு என்ன தேவை எனில், இவரின் அடுத்த படத்தில் எந்த நடிகையை யார் கற்பழிக்கப் போகிறான் என ரசிகன் பார்க்க வர வேண்டுமென்பது. திரையில் காட்டுவார். ரசிகன் மயங்குவான். அதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த படங்களுக்கு ரசிகன், ‘முதல் நாள் முதல் சோ” என்று அலைய ஆரம்பித்து விடுவான். அவர் என்ன எதிர்பார்த்தாரோ அதை மிகச் சரியான வகையில் ரசிகனின் நெஞ்சில் விதைத்திருப்பார். நாட்டுக்கு நல்லது செய்ய அல்ல. எவன் எக்கேடு கெட்டாலும் சரி, எனக்கு பணம் கொட்ட வேண்டும். அதற்கு இது ஒரு வழி. அவ்வளவுதான்.

அதுமட்டுமல்ல, இன்று தமிழகத்தில் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அவர் தன் மகனுக்கு அவர் கொடுக்கும் அலப்பறைகள் ஊரெல்லாம் தெரிந்த கதை. தன் மகனை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த ஆரம்பகாலப் படங்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் காம உணர்வைத் தீண்டி விடும் தன்மையானவை. ரசிகன் என்றொரு படத்தில் ஃப்ளூபிலிம் காட்சியை விஜய் பார்ப்பது போல வைத்திருப்பார். ஆங்காங்கே, அவ்வப்போது பார்வையாளன் கிளர்ச்சி அடையும் படி காட்சிகளை வைப்பார்கள். படத்தில் ஒன்றும் இருக்காது. ஆனால் சீன்கள் நிறைய இருக்கும். அதில் விஜய் நடிக்கும் பாடல் காட்சியில் நடிகை கருப்பு டவுசர் போட்டுக் கொண்டு மழையில் நனைந்து கட்டிப் பிடித்து பின்புறத்தை உரசி, ஆட்டிக் கொண்டிருப்பார். பாத்ரூம் கதவுக்குள் மாமியாரைத் தடவுவார் விஜய். 

பின்னர் போகப் போக காதலுக்காக தியாகி ஆவது, ஊருக்கு நல்லது செய்வது போல படங்களை விடுவார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளன் மனதில் ஹீரோவை கடவுள் ரேஞ்சுக்கு உயர்வடைய வைப்பார்கள். 

அதுமட்டுமல்ல, காசு கொடுத்தால் கூவும் ஒரு சில விவரமான ரசிகர்களை இவர்கள் கண்டுகொண்டு, இவர்களே காசு கொடுத்து பாலாபிஷேகம், பீராபிஷேகம் நடத்துவார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் சினிமா தியேட்டர்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த 1000 தியேட்டரில் 100 பேர் ரசிகக் குஞ்சுகளாக இருப்பார்கள். மொத்தம் 100000 - ஒரு லட்சம் பேர் குஞ்சுகளாய் மாறி குதூகலித்து கிடப்பார்கள். ஆனால் டிவியில் பார்த்தீர்கள் என்றால் கோடிக்கணக்கில், உலகமெங்கும் என அள்ளி விடுவார்கள். இதன் அரசியல் வேறு. நேரம் வரும் போது எழுதுகிறேன்.

தமிழ் ஊடகங்களில் வேலை செய்யும் வாழவே தகுதியற்ற பல அயோக்கிய சிகாமணி நிருபர்களை சூட்டிங்க் இடையில் வர வைத்து ஜூஸ் கொடுப்பது, துணை நடிகையை அறிமுகப்படுத்தி வைப்பது, ஹீரோயினை அறிமுகப்படுத்தி விடுவது போன்ற அக்மார்க் அயோக்கியத் தனங்களைச் செய்வார்கள். பணம் கொடுத்து ஆஹா ஓஹோ என எழுதச் செய்வது போன்ற பல்வேறு நரித்தந்திரங்களைச் செய்வார்கள் மீடியாக்காரன் போன்ற ஒரு அக்மார்க் அயோக்கியனை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க முடியாது. மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியவர்கள் சொல்வதே இல்லை. அப்படியானவர்களை நாம் இப்படித்தான் குறிப்பிட வேண்டும் அல்லவா? நல்ல நிருபர்கள் கோபம் கொள்ள வேண்டாம்.

பாலசந்தர் கதை வேறு. அதற்கான களம் வரும் போது எழுதுகிறேன்.

உங்களுக்கு நினைவில் இருக்கலாம் ஒரு ஹிந்தி பாட்டு. “சோலி கே பீச்சா கியா ஹே” இந்தப் பாட்டில் நடனமாடிய நடிகை மாதுரி தீட்சித் ஒரு காலத்தில் ஹிந்தி சினிமா உலகில் நிரந்தர கதாநாயகியாக இருந்தார். இந்தப் படம் வந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஜாக்கெட்டுக்குள் என்ன இருக்கு என்று அர்த்தம் தொனிக்கும் இரட்டை அர்த்தப் பாடல் வரி இது. அதன் கிளர்ச்சி காரணமாக, ஹாஸ்டலின் புக் செல்ஃபில் மாதுரி தீட்சித் புகைப்படத்தை வைத்து ரசித்துக் கொண்டிருந்தேன். இதே போன்ற சம்பவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நடந்திருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு நிகழ்வினால் ஒரு நடிகையையோ அல்லது நடிகரையோ பிடித்திருக்கிறது என. மனதுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். எந்த ஒரு படம் பார்த்த பிறகு நாம் ரசிகனாய் மாறினோம் என்ற விஷயம் பிடிபடும். பின்னர் மனது தெளிவாகி விடும்.

இது ஒரு மன நோய். ஆம் என்னைப் பொறுத்தவரை சினிமா ஹீரோயின் அல்லது ஹீரோவின் மீதோ வெறித்தனமான அன்பு வைத்திருக்க காரணம் மன நோய். ரசிகனாய் இருக்கும் ரசிகனுக்கு ஒரு தம்பிடி லாபம் இல்லை. 

இங்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.ரசிகன், என் ரசிகன், உங்களால் தான் நான் என்றெல்லாம் சொல்லும் ஹீரோக்கள் தன் படங்களில் எந்த ரசிகனுக்கு வாய்ப்புக் கொடுத்து அவனையும் நடிகனாக்கி அழகு பார்த்தார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம். ரஜினி அவரின் மகள்கள், சகலையின் மகன், அவரின் நண்பர்களின் வாரிசுகள் இப்படித்தான் வாய்ப்புக் கொடுப்பார். கமலோ சொல்லவே வேண்டியதில்லை. ரஜினி ஒரு படி மேலே. தன் படம் ஜப்பானில் ஓடுகிறது என்பதற்காக ஜப்பான்காரப் பெண் ஒருத்தியை ஒரு படத்தில் நடிக்க வைத்தார். இதுதான் அக்மார்க் பிழைப்புதனம். 

ரசிகனாக இருப்பது என்பது மன நோய். அந்த மன நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரசிகனின் பாக்கெட்டில் இருக்கும் பணம் ஹீரோக்களின் கல்லாபெட்டிக்குள் சென்று கொண்டே இருக்கும்.

இப்போது நிதர்சனத்துக்கு வாருங்கள்.

இந்திய அரசியல் பல காலங்களில் பிணத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆட்சிகளாக இருந்தன அல்லவா? இந்திராகாந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மீது இந்திய மக்களுக்கு இரக்கம் கடலெனப் பொங்கி பிரவாகமெடுத்து, அவரைப் பிரதமராக்கி விட்டுத்தான் அமைதியானார்கள். ராஜீவ் கொல்லப்பட்டார், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி. இப்படி ஒவ்வொரு மரணத்தின் பின்பும் மக்களுக்கு எழும் இரக்கமென்னும் சுபாவத்தினாலே அறுவடைகளை அழகாகச் செய்து கொண்ட வரலாற்று நிகழ்வுகளை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் காரணம் நம் மனதில் இருக்கும் கடவுள் தன்மை கொண்ட இரக்கம் எனும் உணர்வுதான். இல்லையென்று உங்களால் மறுக்கவே முடியாது.

ஒரு புலி உங்களைக் கொல்ல வருகிறது. அதன் காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. அதைப் பார்க்கும் போது, அய்யோ பாவம் என தோன்றும். அது உங்களைக் கொல்ல வருகிறது என்றாலும் கூட, நொடியில் அந்த எண்ணம் தோன்றி மறையும். அந்த நொடி புலிக்குப் போதும். இரையாகி விடுவீர்கள் அல்லவா? அது போன்ற உணர்வு எழும் போதெல்லாம், அது சரிதானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூனை வளர்ப்பதற்காகவெல்லாம், அது பசியாக கிடந்து அல்லலுறுகிறதே என்பதற்காகவெல்லாம் இரக்கப்பட்டால், காசு தான் கரியாகும். இமயமலைக்கு அழைத்துச் சென்றவரின் அன்பு இன்றைக்கு செல்லாக்காசு ஆகிப் போன கதையை, அந்த அன்பு சொல்லும்.

இரக்கமும், ஜீவகாருண்யமும் சரியானவைகளுக்குச் சேர வேண்டும் எனப் புரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரையும் ஏமாற்றும் வஞ்சக நரிகளிடம், இரக்கத்தைக் காட்டினால் நாம் அழிக்கப்படுவோம்.

அந்த நரிகளின் சுய நலம், நம் இரக்க உணர்வினை அவர்களின் பிழைப்புக்கு பயன்படுத்தி விடுவார்கள் என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

ரசிகன் என்ற சொல் மனநோயைக் குறிக்கும் சொல். இனி நான் அவருக்கு ரசிகன் என்று சொன்னீர்கள் என்றால் நீங்கள் ஒரு அடிமுட்டாளான அடிமையும், மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் அவலமானவர் என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உழைப்பில் கிடைக்கும் பலன்களை, தேவைப்படுபவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். ஒரு சினிமா பார்ப்பதற்கு செலவழிக்கும் தொகை இன்னொருவருக்கு ஒரு நாள் உணவு என்பதை மறந்து விடாதீர்கள்.

அதற்காக மகிழ்ச்சியாக இருக்க படமே பார்க்க கூடாதா என்று கேட்காதீர்கள். அதற்கு ஹீரோயிசம் இல்லாத எதார்த்தமான படங்களைப் பாருங்கள். அது தான் உண்மையான படைப்பும் கூட.

இனி நல்ல எதார்த்தமான பல படங்களை விமர்சனமாக எழுதலாம் என நினைக்கிறேன். முதல் நாளே பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள் என்றால் அது உங்களின் நோயின் தன்மை முற்றி, ஹீரோவுக்கு அடிமையாகி விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது ஒரு விதமான போதை. போதையிலிருந்து வெளி வாருங்கள். வாழ்க்கை சுகமானது.

அதை தன்னை உருவாக்கிய குடும்பங்களுடனும், உறவினர்களுடனும், நட்புக்கள் உடனும் கொண்டாட்டமாய் வாழலாம்.

எனது அன்பும், அசீர்வாதமும் என்னை விட இளையவர்களுக்கு. என்னை விட அனுபவத்தில் முதிந்தவர்களிடம் ஆசீரவாதங்கள் செய்யுங்கள் எங்கள் எல்லோரையு என வேண்டிக் கொள்கிறேன்.