குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, March 31, 2020

காவக்காரர்கள்

கிராமங்களின் எல்லைப்புறமாய் கருப்புசாமி கோவில் இருக்கும். ஊர் காவல் தெய்வம் என்பார்கள்.  அந்தக் காலங்களில் ஒவ்வொரு ஊருக்கும் காவல் இருக்க, கையில் கம்புடன், பந்தத்தை ஏந்தியபடி ஊர் எல்லைகளில் காவல் இருப்பார்கள் என படித்திருக்கிறோம்.

காவல்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஊரிலிருந்து அவர்களுக்குத் தேவையானவை அனைத்தும் கொடுக்கப்படும். காவல்காரர்களாய் இருப்பவர்கள் சாமிகளாய் வணங்கப்பட்டார்கள்.

இதோ, இன்று தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் நம் காவல் தெய்வங்கள். தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் கொரானாவை பரவ விடாமல் தடுக்க, ஐந்தறிவு படைத்த மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக கையில் தடியுடன் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நடுவீதிகள், தெரு ஓரங்கள், வீடுகள், நிறுவனங்கள் என ஊன், உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அவர்கள் வேலை செய்கிறார்கள். வெயில், பனி, இரவு எனப் பாராமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். 

ஒருவர் கண்களில் கண்ணீருடன் வேண்டுகிறார். ஒருவர் பயமுறுத்தி தெருவுக்கு வராதே என்கிறார். ஒருவர் போதாத புத்திகாரர்களுக்கு பிரம்படி கொடுக்கிறார். 

இரவில் வீட்டுக்குச் சென்று தெருவில் கோணிப்பை விரித்து தூங்கி விட்டு, வீட்டின் பின்புறமாகச் சென்று குளித்து, துணிகளைத் துவைத்து, குடும்பத்தைப் பார்த்து விட்டு மீண்டும் காவல் பணிக்குத் திரும்புகிறார்கள்.

24 மணி நேரமும் பணி. மனசும், உடம்பு ஓய்வெடுக்க இயலா நிலையில் அவர்கள் படும் துயரங்கள், மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் இதயத்தில் ரத்தத்தை வரவைக்கும்.

அன்பு காவல்தெய்வங்களே...!

உங்கள் அனைவருக்கும் மனித சமூகம் சார்பாக எனது வணக்கத்தையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் காவலாய் இருக்கும் சூழலை எம்மைப் போன்றவர்கள் தான் உருவாக்கினோம். இனி அது நடக்காது.

உங்கள் தேவைகளை நிறைவேற்றிடவும், தர்மத்தின் தலைமகனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும், சட்டத்தையும், தர்மத்தையும் காக்கும் காவல்காரர்களாய் நிமிர்ந்து நடந்திட நாங்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

எங்களை எப்போதும் காவல்காத்து வரும் தெய்வங்களான உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவியாக இனி அதைச் செய்வோம்.

சுய நலமும், ஜாதியும், மதமும் இனி எங்களைப் பீடித்து, தீயவர்களையும், கொடியவர்களையும், சுய நலகும்பல்களையும் கண்டுணர்ந்து இருக்கிறோம். அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி, நல்லவர்களை, வல்லவர்களை, மனிதாபிமானம் மிக்கவர்களை, மக்கள் நலத்தில் சுய நலமின்றி பொது நலமிக்க நல்லோர்களையும் தேர்ந்தெடுக்கிறோம்.

தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் நலமுடனும், வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இயற்கைச் சக்தியை வணங்கி பிரார்த்திக்கிறோம்.

பல்லாண்டு வாழ்க எங்கள் தெய்வங்களே....!


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.