குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, August 13, 2018

தமிழகம் ஒரு தர்மபூமி

திருவள்ளுவர் !  இதைத்தவிர வேறொன்றினையும் தமிழகம் ஒரு தர்ம பூமி என்பதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியதில்லை. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதை எவரும் நம்புவதும் இல்லை. ஆனால் இப்போது நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் காலத்தில் தர்மமாம், அதர்மமாம் என்று கேலி பேசுபவர்கள் அதிகமிருக்கின்றார்கள். புத்தகங்களில் இருப்பவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்றெல்லாம் அடுக்கடுக்காக காரணங்களை அடுக்குவார்கள். 

இப்படித்தான் கண்ணதாசன் ஆரம்பத்தில் கடவுளே இல்லை என்று கடுமையான நாஸ்திக உணர்வில் கடவுள் மறுப்பு கட்டுரைகளைத் தீட்டி வந்தார். பேசியும் வந்தார். அவரின் கடைசிக் காலத்தில் கண்ணனின் கீதைக்கு உரை எழுதினார். ”கண்ணா ! கண்ணா !!” என்று உருகினார். 

இதை இப்போது எழுதக்காரணம் இருக்கிறது. எழுதத்தான் வேண்டுமா? என்று கூட யோசித்தேன். 

பதினோறு வயசுக் குழந்தையைக் கூட கற்பழிக்கும் காமாந்தகர்கள் இங்கு இருக்கின்றார்கள். இன்றைக்கு என்ன? என்பது பற்றிச் சிந்திக்கும் சிந்தனாவாதிகளுக்கு, நின்று கொல்லும் தர்மம் பற்றிய ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். 

குறுக்கே நூல் போட்டவெனெல்லாம் கடவுள்கள் என்று பேசும் அறிவிலிகள் இங்கு அதிகமிருக்கின்றார்கள். கடவுளையும் காசு பண்ணும் அதிபுத்திசாலி மடையர்களும் இருக்கின்றார்கள். ஆன்மீகத்தின் பெயரால் ஒன்றுமறியா எதார்த்த மனிதர்களின் சொத்துக்களை உறிஞ்சிக் கொழுத்து காமத்தில் திளைத்து, உலகியல் இன்பங்களை நுகர்ந்து தெரியும் சாமியார்ப்பயல்களும் இங்கு இருக்கின்றார்கள். மதத்தின் பெயரால், வேதப் புத்தகங்களின் பெயரால் கொலை செய்யும் கொடூர மதிபடைந்த மாந்தர்களும் இங்கு இருக்கின்றார்கள். அரசியலின் பெயரால், அதிகாரத்துக்கு வந்து அடாத கொலைகளையும், துடிக்கதுடிக்க பறித்துத் தின்னும் கொள்ளையர்களும் இங்கு இருக்கின்றார்கள். நீதியின் பெயரால் அதிகாரத்திற்கு வரும் நீதிமான்களும் பதவிக்காக தர்மத்தை விற்றுக் காசாக்கும் அற்ப மனம் படைத்த அயோக்கியர்களும் இங்கு இருக்கின்றார்கள். தானொன்றே நிதர்சனம் என்று பேசித் திரிபவர்களும் இங்கு இருக்கின்றார்கள். பேனாவிற்குள் ரத்தத்தையும், நீதியைக்கொன்ற பாதகத்தையும், அரசியல்வாதிக்கும் அடிபணிந்து நக்கி விடும் எச்சிலையும் போட்டு எழுதும் பத்திரிக்காவாதிகளும் இங்கு இருக்கின்றார்கள். எது உண்மை? எது பொய்? என்று உணரா வண்ணம் தீது பேசி, புறம் கூறி வாழ்க்கை நடத்தும் இழிபிறந்தார்களும் இங்கு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் தர்மம் என்ற ஒன்று இருக்கிறது என்பது பற்றிய சிந்தனை இருப்பதில்லை. அதிகாரமும், அகங்காரமும் அனைத்தையும் மறைத்து விடுவதால் அடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அப்படியானவர்களின் கடைசி என்ன என்று எவருக்கும் தெரிந்திருக்கப்போவதில்லை. அதைப் பற்றித்தான் இப்போது படிக்கப்போகின்றோம். 

ஆட்டோ ஷங்கர் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது நமக்கு இப்படி ஒரு முடிவு இருக்குமா? என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? ஹிட்லர் தன் முடிவு இப்படித்தான் இருக்கும்? என நினைத்தாவது பார்த்திருப்பாரா? உலகையே ஆள நினைத்த நெப்போலியனுக்கும், அலெக்‌ஷாண்டருக்கும் அவர்களின் இறுதிக்காலம் இப்படி ஆகி விடும் என்று தெரிந்திருக்குமா? நிச்சயம் தெரிந்திருக்காது. அவ்வாறு தெரிந்து இருந்தால் எவரும் ஒருவரையாவது நாட்டினைப் பிடிக்கும் ஆசையில் கொலை செய்திருப்பார்களா? 

ஒரு காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நான்கு கைகளாலும் லஞ்சம் வாங்கி சொத்துக்களைக் குவித்தார். தனது இரண்டு மகன்களும் அவரின் கண் முன்னே காரில் நசுங்கிச் செத்ததைப் பார்த்து பைத்தியமாகிப் போனார். கல்விக்கு காசு வாங்குவது தலைமுறைக்குற்றம். கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அதற்காக காசு வாங்கிக் குவித்த ஒருவர் தன் ஒரே மகனைப் பரிகொடுத்து இன்றைக்குப் படுக்கையில் இருக்கிறார். ஓடி ஓடி, அடித்துப் பிடித்து, அடுத்தவனைக் கெடுத்துப் பிடுங்கிச் சம்பாதிக்கின்றவர்களின் இறுதிகாலம் கொடுமையானதாக இருக்கிறது. வயதானவர்களிடம் பேசிப்பாருங்கள். பெற்ற பிள்ளைகள் பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் தள்ளி விட்டு விடுகின்றார்கள். பின்னே எதற்கு ஓடி ஓடி சம்பாதித்தார்கள் என்றால் அப்போது தெரியவில்லை, இப்போதல்லவா தெரிகிறது என்று தத்துவம் பேசுவார்கள். நோயில் வீழ்ந்து நொடிக்கு நொடி அவஸ்தைப் பட்டு அனாதையாகச் செத்துப் போவார்கள்.

பூமி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எல்லாமும் இருக்கிறது. ஆனால் அதை ஆளும் ஆட்கள் எங்கே போனார்கள்? தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால் அவர்கள் ஆடிய ஆட்டங்களும், அவர்களின் கடைசிக்கட்ட வாழ்க்கை முடிவுகளும் கண் முன்னே சாட்சியாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. இத்தனையும் தெரிந்தும் மனிதர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் அறிவிலித்தனமாகத்தானே இருக்க முடியும்?

அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குள் காவிரியில் பொங்கி வரும் தண்ணீரை திருப்பி விட முடியுமா? அவர் காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடக்கூடாது என்று பேசினாரே இப்போது பேசச் சொல்லிப் பாருங்களேன்.

அணையில் இத்தனை அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கக்கூடாது என்று கோர்ட்டில் அடாது செய்தார்களே இப்போது தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அந்த மழையிடம் சென்று அதிகாரத்தைக் காட்ட முடியுமா? கோர்ட்டில் வழக்குப் போட்டு, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மழையைத் தடுக்க முடியுமா? குறைந்த பட்ச மனிதாபிமானமும் இன்றி பேசியவர்களுக்கு இப்போது பிறரின் மனிதாபிமானம் தேவைப்படுகிறது அல்லவா? இதுதான் தர்மத்தின் கணக்குத் தீர்க்கும் வழி!

தண்ணீர் - உயிர் நீர். இயற்கையின் அற்புதப் படைப்பு. இயற்கையின் முன்னே மனிதர்கள் எல்லாம் அற்பத்திலும் அற்பமானவர்கள். எந்தத் தண்ணீரால் பாதிப்பு என்று பொய் பேசினார்களோ அது உண்மையாக நின்று அவர்களின் முன்னே “நாட்டியம் ஆடுகிறது”

அதைத் தரமாட்டோம் என்று பேசியவர்கள் எல்லோரும் இப்போது என்ன பேசுவார்கள்? இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தால் ஒரு மாநிலமே கடலுக்குள் சென்று விடும். இன்னொரு மாநிலமோ கதிகலங்கிப் போகும். அண்டை மாநிலங்களை நோக்கி நீளும் அவலக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அன்றைக்கு ஆணவக்குரல்கள் ஒலித்தன. இன்றைக்கு அவலக்குரல்கள் எழும்புகின்றன. ஒவ்வொரு  மாநில மக்கள்களையும் தன் சுய நலத்துக்காக பிரித்தாண்ட அரசியல்வாதிகள் இப்போது தங்கள் கட்சியினரை வைத்து எல்லாம் செய்ய வேண்டியதுதானே? ஏன் செய்ய முடியவில்லை? உதவுங்கள் என்று அலறுகின்றார்களே ஏன்?

தர்மம் நின்று கொல்லாது. சுத்தமாகத் துடைத்துப் போட்டு விடும். சென்னையில் அட்டூழியங்கள் அதிகரிக்கையில் சுனாமியும் வந்தது. மழையும் வந்தது. சுத்தமாகத் துடைத்து போட்டு விட்டுப் போனது.

இந்தியா தர்ம பூமி. அதில் தமிழகமோ ஆன்மீக பூமி. ஆடும் வரை ஆட விட்டு, பின் மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டு விடும் தர்மத்தின் கடவுள்கள் உறையும் அற்புதமான பூமி. தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழ மிகத் தகுதி வாய்ந்த அற்புதமான பூமி. வேறு எங்கிலும் தமிழகத்தைப் போன்ற வாழ்விடம் இல்லை.  தமிழகத்துக்கு அடாது செய்தால் படாதபாடுபடுவார்கள் என்பது உண்மை.

தமிழகத்தில் தமிழராய் வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

இந்தப் பூமிப் பந்தில் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தமிழனும் வாழ்வான். வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். ஏனென்றால் அவன் தர்ம பூமியில் பிறந்தவன். அவனின் பாதை தர்மத்தின் பாதை. 

(இக்கட்டுரை யாரையும் எவரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை. உண்மையை எடுத்துச் சொல்லி இருக்கிறேன். தர்மத்தின் பாதையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழும் வரை பிறரை நிந்திக்கா வண்ணமாவது வாழலாம். நிந்தனை செய்து வாழ்பவர்கள் நித்தமும் சித்ரவதைப்பட்டு சீரழிந்து போவார்கள் என்கிறது தர்மம்)

2 comments:

பாவா ஷரீப் said...

//எந்தத் தண்ணீரால் பாதிப்பு என்று பொய் பேசினார்களோ அது உண்மையாக நின்று அவர்களின் முன்னே “நாட்டியம் ஆடுகிறது” // anna arumai

பாவா ஷரீப் said...

//வாழும் வரை பிறரை நிந்திக்கா வண்ணமாவது வாழலாம்.//

really super anna

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.